சீடன் முயற்சியும், குருவின் அருளும்
இப்படிச் சொன்னதால் ஒரு குரு எல்லா சிஷ்யர்களையும் அவர் சொல்கிறபடியே நூறு பெர்ஸென்டும் நடக்கப் பண்ணிவிடுவாரென்று அர்த்தமில்லை. ஒவ்வொரு ஜீவனுக்கும் இருக்கப்பட்ட அந்தஃகரணத்தின் பக்குவ ஸ்திதிக்கும் இங்கே இடம் கொடுக்கத்தான் வேண்டும். சிஷ்யனின் சித்த பக்வம், புத்தி தீக்ஷண்யம் ஆகியவை வித்யா ஸ்வீகரணத்தில் முக்யமான இடம் பெற்றவையாகும். அவற்றோடு விநயம் முக்யமாக வேண்டும். பரம விநயத்தினால் அப்படியே குருவுக்கு சரணாகதி பண்ணுகிறவன் விஷயத்தில்தான், அவன் மந்த புத்திக்காரனாக இருந்தால்கூட குருவின் தூண்டுதலே பூர்ணமாக வேலை செய்து பூர்ண ஞானத்தைக் கொடுப்பது. அதைத் 'தூண்டுதல்' என்று சொல்லி முடித்து விடுவதுகூட ஸரியில்லை. குருவின் க்ருபா சக்தியே, சிஷ்யனுக்கு வேலை வைக்காமல் ஞானத்தை அவனுக்குள் ரொப்பி (நிரப்பி) விடுவதாகவே சொல்லணும். அது விதிவிலக்குத்தான். ஏனையவர்களும் எந்த அளவுக்கு விநயமாகப் படிமானத்துடன் கற்கிறார்களோ அந்த அளவுக்கு குருவின் க்ருபையும் வெவ்வேறு டிகிரிகளில் அவர்களைத் தூண்டி விடும். அப்படி இல்லாதவர்களை அவர் ஏதோ தாற்காலிகமாகத் தூண்டிவிடலாம். அப்புறம் அவர்களுடைய கீழ்ப்படிதல் போதாத அந்தஃகரணம் விரைத்துக் கொண்டு தன் போக்கிலேயே எழும்பிவிடும். வித்யை ப்ரயோஜனப்படாமல் போகும்.
உபநிஷத்தைப் பார்த்தாலே தெரியும் - ப்ரஜாபதி அஸுர ராஜாவான விரோசனனுக்கும் உபதேசம் பண்ணினார், தேவராஜாவான இந்த்ரனுக்கும் உபதேசம் பண்ணினார். ஆனாலும் அஸுர ராஜா விரோசனன் தேஹாத்ம புத்தியுடன் (உடலேதான் ஆத்மா என்ற அறிவுடன்) மட்டும் நின்றுவிட்டான். இந்த்ரன்தான் தேஹாதீதமான நித்யா ஸத்ய நிஜ தத்வமாக ஆத்மாவைத் தெரிந்துகொண்டான். காரணம், குருவுக்கும் அவர் சொல்லித் தருகிற வித்யைக்கும் எந்த அளவுக்கு ஒரு சிஷ்யன் கீழ்ப்படிதலுடன் அந்தஃகரணத்தைத் திறந்து விடுகிறானோ அதைப் பொறுத்தே அவனுக்குள் தத்வம் ஏறும், ஊறும் என்பதுதான்.
சிஷ்யன் எப்படிப்பட்டவன் என்பதும் வித்யா ஸ்வீகரணத்தில் முக்யம். அதுதான் விஷயம் என்ற அளவுக்கு, கொஞ்சம் 'எக்ஸ்ட்ரீ'மாகவே பவபூதி சொல்லியிருக்கிறார்.
விதரதி குரு ப்ராஜ்ஞே வித்யாம் யதைவ ததா ஜடே
ந து கலு தயோர் - ஜ்ஞாநே சக்திம் கரோத் - யபஹந்தி வா 1
பவதி ச தயோர் - பூயான் பேத பலம் ப்ரதி தத் - யதா
ப்ரபவதி சுசிர் - பிம்ப - க்ராஹே மணிர் - ந ம்ருதாம் சய:11
என்ன சொல்கிறாரென்றால் நல்ல புத்திமானான ஒரு மாணவன் இருக்கிறான். 'ப்ராஜ்ஞன்' என்று அவனை ச்லோகத்தில் சொல்லியிருக்கிறது. "ரொம்ப ப்ராஜ்ஞன்-னு எண்ணம்" என்று நாம்கூடச் சொல்கிறோம் ப்ராஜ்ஞன்
என்றால் புத்திசாலி என்பது மட்டுமில்லை, சித்த பக்வம், அதற்குரிய விநயம்
ஆகியவையும் உள்ளவன், அப்படிப்பட்டவனுக்கும் குரு பாடம் சொல்கிறார். 'ஜடம்' என்று ச்லோகத்தில் சொல்லியிருக்கும் மந்த புத்திக்காரனுக்கும் சொல்லித் தருகிறார். கீழ்ப்படிதலிலும் இவன் ஜடம். இப்படி, வித்யாஸமான இரு தினுஸு வித்யார்த்திகளுக்கும் ஒரே மாதிரிதான் வித்யாஸம் பார்க்காமல் பாடம் நடத்துகிறார் குரு. இது ச்லோகத்தின் முதல் பாதம் (நான்கு வரிகளில் முதல் வரி) .
அடுத்த பாதத்தில் அவர் சொல்வதைத்தான் 'எக்ஸ்ட்ரிம்' என்று சொன்னேன் "ந து கலு தயோர் ஜ்ஞாநே சக்திம் கரோதி அபஹந்தி வா" என்று இங்கே சொல்கிறார். அவர்களுடைய அறிவுக்கு - ஸ்வபாவமாக அவர்களுக்குள்ள அறிவுக்கு - அவர் புதுசாகச் சக்தி ஊட்டவுமில்லை, அந்த அறிவின் சக்தியை அபஹரிக்கவுமில்லை. அதாவது சிஷ்யனின் அறிவுத் திறனை குரு கூட்டவுமில்லை, குறைக்கவுமில்லை.
இப்படி அவர் சொல்வது, ஒரு சிஷ்யனுக்கு வித்யை ஏறுவதும் ஏறாததும் முழுக்க அவனுடைய புத்தியை பொறுத்ததே என்ற அபிப்ராயத்தைக் கொடுக்கிறது. இதை 'எக்ஸ்ட்ரீம் வ்யூ' - ஒரு சார்பாகவே சற்று 'அதி'யாகப் பேசுவது - என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. சொன்னவர் ரொம்பப் பெரியவர். ஆத்ம சாஸ்த்ரம், cF சாஸ்த்ரம் எல்லாம் நன்றாகத் தெரிந்த மஹாகவி. ஆனாலும் ஒரு கவி தாம் எடுத்துக்கொண்டுள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் அந்தந்த ஸமயத்தில் ரொம்ப அழுத்தம் கொடுத்துப் பேசினாலே அது நன்றாக மனஸில் பதியும் என்பதால் எக்ஸ்ட்ரீமாகவும் சிலது சொல்கிறது வழக்கம். அந்த ஸந்தர்ப்பத்தில் அப்படிச் சொன்னால்தான் பளிச்சென்று விஷயம் நிற்கும்.
ப்ரக்ருத ச்லோகம் (தற்போது நாம் எடுத்துக் கொண்டுள்ள ச்லோகம்) 'உத்தர ராம சரிதம்' என்கிற நாடகத்தில் வருகிறது. அதிலே வால்மீகி மஹர்ஷியின் ஆச்ரமத்திலே லவ-குசர்கள் அவரிடம் வித்யாப்யாஸம் செய்கிறபோது அவர்களோடு கூடப் படித்த ஸஹவித்யார்த்தியான ஆத்ரேயி என்ற பெண் சொல்கிற வசனமே இந்த ச்லோகம். "லவ - குசர்கள் பாடத்தை அப்படியே பூர்ணமாக க்ரஹித்துக் கொண்டார்கள். அதற்கான 'ப்ரஜ்ஞா' என்ற நல்லறிவாற்றலும், 'மோ' என்பதான விஷயத்தை மறக்காமல் ஸ்திரமாகக் காப்பாற்றிக் கொள்கிற சக்தியும் அவர்களுக்கு இருந்தது. அல்ப ப்ரஜ்ஞையும் அல்ப மேதஸுமே உள்ள என்னால் அவர்களோடு தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் வால்மீகி ஆச்ரமத்தை விட்டு விட்டு அகஸ்த்யரிடம் கல்வி கற்கப் போகிறேன்" என்று அவள் சொல்லிக் கொண்டு போகும்போது இந்த ச்லோகம் சொல்கிறாள். குரு ஒரே மாதிரி, ஒரே க்ளாஸில், மாணவர்களை ஒன்றாகவே சேர்த்து வைத்துக் கொண்டே பாதித்த போதிலும் ப்ராஜ்ஞர்களான லவ-குசாள்தான் பூர்ணமாக க்ரஹித்துக் கொண்டார்கள், தன்னால் முடியவில்லை என்று சொல்லும் அந்த ஸந்தர்பத்தில் லவ-குசாள் பெருமையும் தன்னுடைய சிறுமையும் பளிச்சென்று தெரியும்படி அவளைக் கவி பேச வைக்க வேண்டியிருந்தது. அதனால் குருவான வால்மீகி மஹர்ஷியின் 'பார்ட்' என்ன என்று காட்டாமல் - குருவின் க்ருபைக்கு சிஷ்யனுடைய அறிவைத் தூண்டிக் கொடுக்கும் 'பார்ட்' உண்டு என்பதை இங்கே கொண்டு வராமல் - சிஷ்யர்களின் தரத்தைப் பொறுத்தே
வித்யாப்யாஸம் என்ற அபிப்ராயத்திற்கு மாத்திரம் அழுத்தம் தந்து
சொன்னால்தான் கவியின் உத்தேசம் பூர்த்தியாகும் என்பதனால் அப்படிச் சொன்னார்.
இப்படி, 'சிஷ்யனின் அறிவை குரு கூட்டவுமில்லை, குறைக்கவுமில்லை' என்று வருவது இரண்டாம் பாதம்.
அடுத்த பாதம்:பவதி ச தயோர் - பூயாந் - பேத:பலம் ப்ரதி தத் யதா. (பொருள் விளக்கம்) குரு எல்லாருக்கும் ஒரே மாதிரி சொல்லிக் கொடுத்தாலும் பலனை, ரிஸல்டை, பார்த்தால் ப்ராஜ்ஞ சிஷ்யனுக்கும் ஜட சிஷ்யனுக்கும் இடையே ரொம்ப வித்யாஸமாக இருக்கிறது. 'பேத பலம்' என்றால் வித்யாஸமான ரிஸல்ட் ப்ராஜ்ஞன் வித்யயையை நன்றாக ஸ்வீகரித்துத் தேர்ச்சி பெறுகிறான், ஜடனோ பழையபடி ஒன்றும் தெரியாத மண்டுவாகவே இருக்கிறான். இதுதான் 'பேத பலம்'. 'ப்ரதி தத் யதா' - 'இது எப்படி இருக்கிறதென்றால்' என்று மூன்றாம் பாதத்தை முடித்துவிட்டு நாலாம் பாதத்தில் ஒரு உவமை கொடுக்கிறார்.
விஷயம் ரஸமான முறையில் மனஸுக்குள் தைப்பதற்குக் கவிகள் கையாள்கிற யுக்தி, உவமை கொடுப்பதுதான். 'உபமா' என்று மூலப் பெயர். அதுவே தமிழில் 'உவமை' என்றாயிற்று. அதில் உபமானம், உபமேயம் என்று இரண்டு அங்கங்கள். எடுத்துக்கொண்ட விஷயம் - உபமேயம். எதை ஒப்புக் காட்டி அது விளக்கப்படுகிறதோ அது உபமானம்.
இங்கே உபமேயம் என்னவென்றால்:குரு என்று ஒருத்தர், அவருடைய சிஷ்யர்களில் ப்ராஜ்ஞன் என்ற ஒருத்தனும் ஜடன் என்று ஒருத்தனும், அந்த இரண்டு பேரில் முதலில் சொன்னவன் நன்றாகக் கிரஹித்துக் கொள்வதும் மற்றவன் 'Iv' பண்ணிவிடுவதும்.
இத்தனைக்கும் நாலாம் பாதத்தில் உபமானம் கொடுத்திருக்கிறார்:
ப்ரபவதி சுசிர் - பிம்ப - க்ராஹே மணிர் - ந ம்ருதாம் சய:
(பொருள் விளக்கம்) ஒரு வஸ்து இருக்கிறது. அது பிம்பம். அதன் ரூபத்தைச் சில வஸ்துக்கள் தங்களுக்குள் வாங்கிக் கொண்டு ப்ரதிபலிக்கின்றன. இப்படி ரிஃப்ளெக்ட் ஆன ரூபத்திற்கு ப்ரதிபிம்பம் என்று பெயர். சரி, எல்லா வஸ்துக்களும் இப்படி ஒரு பிம்பத்தை ப்ரதிபலிக்கின்றனவா? இல்லை. பளபளப்பான வஸ்துக்கள் மட்டுமே ப்ரதிபலிக்கின்றன. அவற்றிலேயே பளபளப்பின் டிக்ரி வித்யாஸத்தைப் பொறுத்து ப்ரதிபிம்பத்தின் தெளிவான ரூபமும் ஏற்ற இறக்கங்களோடு உண்டாகிறது. எல்லாவற்றையும்விட, நல்ல சுத்தமான கண்ணாடிதான் ஒரு பிம்பத்தை அப்படியே அது இருக்கிற ரூபத்திலேயே ப்ரதிபலிக்கிறது. பவபூதியின் காலத்தில் சுத்த ஸ்படிகம் - பளிங்கு என்பதுதான் - கண்ணாடியாக இருந்தது. அது ஒரு தினுஸு மணிதான். "தோர்பிர்யுக்தா ஸ்படிகமணி மயீம் அக்ஷமாலாம் ததாநா" என்று ஸரஸ்வதியின் த்யான ச்லோகத்தில் வருவது தெரிந்திருக்கலாம். ஸ்படிகம் - மணி. சுத்தமான அந்த ஸ்படிகமணியைத்தான் 'சுசிர்-மணி:' என்று சொல்லியிருக்கிறது. 'சுசிர்' என்று முதலில் வந்து அப்புறம் 'பிம்ப க்ராஹே' என்பது குறுக்கிட்டபின் 'மணி:' என்று வருகிறது கவிதாரூபம் அழகாக இருப்பதற்காக இப்படிப் பிரித்து, குறுக்கே வேறே வார்த்தையைப் புகுத்திக் 'கம்போஸ்' பண்ணுவார்கள்.
'பிம்ப க்ராஹே' என்றால் 'பிம்பத்தை க்ரஹிப்பதில்' - அதாவது 'பிம்பத்தைத்
தனக்குள்ளே வாங்கிக் கொண்டு ரிஃப்ளெக்ட் பண்ணுவதில்'. இப்படிப் 'பண்ணுவதில்' இரண்டு விதமான மீடியம்களுக்கு இடையே உள்ள வித்யாஸத்தைத்தான் உபமானமாகக் கொடுக்க வருகிறார். ஒரு மீடியம் சுசியான மணி. அது பிம்பத்தைத் தத்ரூபமாக க்ரஹித்துவிடுகிறது. இன்னொரு மீடியம் களிமண்ணுக் குவியல், மண்ணாங்கட்டி என்பது. 'ம்ருதாம் சய' என்று அதைத்தான் ச்லோகாந்தத்தில் (ச்லோக்ததின் முடிவில்) சொல்லியிருக்கிறது- மண்ணாங்கட்டி எந்த பிம்பத்தையாவது ரிஃப்ளெக்ட் செய்யுமா? செய்யாதோல்லியோ? அதற்கு க்ராஹ்ய சக்தியே (கிரகிக்கும் ஆற்றலே) இல்லை.
ஒரே பிம்பந்தான். ஸ்படிக மணிக்கும் ஸரி, மண்ணாங்கட்டிக்கும் ஸரி, ஒரே மாதிரிதான் அந்த பிம்பம் தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனாலும் முன்னால் சொன்னதுதான் அதன் ரூபத்தைத் தனக்குள் வாங்கிக் கொள்கிறது, பிந்தையது அப்படி இல்லை. இப்படி ஒரே பிம்பம் ஏற்படுத்துகிற விளைவுகள் ஒன்றுக்கொன்று வித்யாஸமாக இருக்கின்றன, பேத பல'மாக இருக்கிறது.
உபமான - உபமேயங்கள் புரிகிறதோல்லியோ? குரு கொடுக்கும் போதனை என்ற உபமேயத்திற்கு பிம்பம் உபமானம். அதை உள்ளபடி க்ரஹித்துக் கொள்ளும் ப்ராஜ்ஞ சிஷ்யன் என்ற உபமேயத்திற்கு பிம்பத்தைத் தத்ரூபம் க்ரஹித்துக் கொள்ளும் சுத்தமான ஸ்படிகமணி உபமானம். அப்படி க்ரஹிப்பதற்கு சக்தியில்லாத ஜடன் - உபமேயம். அவனுக்கு உபமானம் - மண்ணாங்கட்டி. 'களிமண் மூளை' என்கிறோமே, அது!
சின்னஞ் சிறிய மணியும் ஒரு பெரிய பிம்பத்தைத் தெளிவாக ப்ரதிபலிக்கிறது. குவியலாகவே மண்ணாங்கட்டியைக் கொட்டினாலும் - 'சய:' என்று வருவதற்குக் குவியல் என்று அர்த்தம், அது ஒரு சிறிய பிம்பத்தைக்கூட ப்ரதிபலிக்க முடியாது.
'வயஸில் சின்னவர்களான லவ-குசர்கள் வால்மீகி பகவான் சொல்லிக் கொடுத்த பெரிய பெரிய தத்வார்த்தங்களையும், 'மணி' என்பதற்கேற்க சிஷ்ய 'மணி'களாகவே முழுக்க க்ரஹித்துக் கொண்டார்கள். அவர்களைவிடப் பெரியவளான என் மண்ணாங்கட்டிப் புத்தியில் சின்ன விஷயம்கூட புகவில்லை (புகவில்லை) ' என்று, ஒரு பக்கம் அந்த இரண்டு பாலகர்கள், மறு பக்கம்தான் என்று சிஷ்யர்களையே வைத்து அவள் பேசியதால்தான் குருவுடைய தூண்டுதல் சக்தி பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் விட்டது.
வாஸ்தவத்தில், சிஷ்யனுடைய ஸ்வய பக்வமும், ஸ்வய ப்ரயத்னமும் ரொம்ப ரொம்ப முக்யந்தான் என்றாலும் குருவும் தாம் கற்பிப்பது சிஷ்யனின் மூளைக்குள் இறங்குவதற்கும், அப்புறம் அந்தஃகரணத்திலேயே இறங்கி அந்தப்படியே அவன் வாழ்க்கையில் அநுஷ்டிப்பதற்கும் கொஞ்சமோ நஞ்சமோ தூண்டிவிட்டு, துணையாகக் கூடேயும் போவார்.
மண்ணாங்கட்டி வேறே ஒரு பிம்ப ரூபத்தை உள்ளே வாங்கிக் கொண்ட ப்ரதிபூரம் காட்டாதுதான். ஆனாலும்... ஸ¨ர்ய பிம்பம் ஜகஜ்ஜோதியாக ப்ராகசிக்கிறது. அந்த பிம்பத்தை ஒரு மணி - ஒரு கண்ணாடி - உள்ளே வாங்கிக் கொண்ட ப்ரதிரூபம் காட்டுகிறது. அதோடு மாத்திரமில்லாமல், ஸ¨ர்யனின்
ப்ரகாசத்தை வெளியிலேயும் ரிஃப்ளெக்ட் பண்ணுகிறது. அதாவது ரூபத்தின்
ப்ரதிரூபம், ப்ரகாசத்திற்கு ப்ரதிபலனம் (ப்ரதிபலிப்பு) என்று இரண்டும் கொடுக்கிறது. களிமண் நிச்சயமாக ப்ரதிபுரம் காட்டாது. கண்ணாடி மாதிரி பளீரென்று ப்ரதிபலிக்கவும் செய்யாது. ஆனாலுங்கூட... நாம் ஒரு இருட்டு ரூமில் இருக்கிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள். எதிரே ஒரு மண் சுவர் வெளிச்சம் பார்க்க இருக்கிறது. அது மண்ணாங்கட்டியின் விஸ்தாரந்தான். அதன்மேலே ஸ¨ர்ய வெளிச்சம் படுகிறது. அப்போது அதற்கும் ஒரு ப்ரகாசம் ஏற்படத்தானே செய்கிறது? அதிலிருந்து நம்முடைய இருட்டு ரூமுக்குக்கூடக் கொஞ்சம் Reflected Light கிடைக்கத்தானே செய்கிறது? இருட்டிலே வெளிச்சம் கிடைப்பதற்கு இப்படி Opaque - அதாவது ஒளி ஊடுருவாத - வஸ்துக்களைக்கூட வெயிலிலோ அல்லது வேறு ஒரு ப்ரகாசத்திலோ குறிப்பிட்ட கோணங்களில் பிடித்தே இருட்டுப் பகுதிக்கு லைட் reflect ஆகும்படி செய்வதுண்டுதானே?
ஸ¨ர்யன் தன் ரூபத்தையே ஒரு மீடியத்தின் உள்ளே பாய்ச்சுகிறான், அதுவே வெளியிலே தன் ப்ரகாசத்தைப் பரப்பும்படியாகவும் செய்கிறான். இன்னொரு மீடியத்தின் உள்ளே போகாமல், மேல் பரப்பிலே தன் ப்ரகாசத்தை மட்டும் பரப்பி, அதுவுங்கூட அந்த ப்ரகாசத்தை ஒரளவுக்கு வெளியிலே பரப்பும்படிச் செய்கிறான். அந்த மாதிரி, நல்ல ஞானப்ரகாசமுள்ள குருவானால் என்ன களிமண் மண்டையானாலும் அவனுக்கும் புத்தியில் மேலெழுந்த வாரியாகவாவது கொஞ்சம் அறிவு ப்ரகாசம் - அறிவொளி - ஊட்டி.... 'ஊட்டி' என்று உள்ளே போகிற ஒன்றாகச் சொல்ல முடியாதுதான், 'அறிவொளி பரப்பி' என்று வேண்டுமானால் சொல்லலாம்!... அப்படிப் பண்ணி, அவனால் பிறத்தியாருக்குங்கூட அந்த விஷய அறிவொளி கொஞ்சம் கிடைக்குமாறு செய்துவிடுவார். உத்தம சிஷ்யனாயிருந்தாலோ, மணியின் உள்ளுக்குள்ளேயே பிம்ப ரூபம் பதிகிறது போல, அவனுடைய அந்தராத்மாவிலேயே தன்னுடைய ஸகல அறிவும், அதோடு குணங்களும், சக்திகளும் கூடப் பதியும்படிப் பண்ணி, அவனால் வெளியிலும் நன்றாகவே ஞானப்ரகாசம் பரவுமாறு செய்வார்.