சீடனின் யோக்யதையும் குருவின் கருணையும்
'ஸமுத்ரம் சூழ்ந்த இந்த பூமி பூராவையும் பாத்திரமில்லாத ஒருத்தன் தக்ஷிணையாகத் தந்தாலும் அவனுக்கு வித்யாதானம் பண்ணுவதற்கில்லை. ஏனென்றால் வித்யை என்பது பூலோகத்தைவிடப் பெரிசு' என்ற சாந்தோக்யவாக்யம் பார்த்தோம். மதுவித்தை என்பதைச் சொல்லி முடிக்கும் இடத்தில், 'இதை ஒரு அப்பா - KS ஜ்யேஷ்ட புத்ரனுக்கோ, யோக்யதையுள்ள வேறே சிஷ்யருக்கோ போதிக்கலாம்' என்று சொல்லிவிட்டு, அப்புறந்தான் முத்தாய்ப்பாக மேலே சொன்னபடிப் பூர்த்தி பண்ணியிருக்கிறது.
'யோக்யதையுள்ளவன்' என்பதற்கு உபநிஷத்தில் சொல்லியிருக்கும் வார்த்தை 'ப்ரணாய்யன்'. அப்படியென்றால், 'ரொம்பவும் நேர்மை - ஒழுக்கம் உள்ளவன்' என்றும் அர்த்தம், 'ப்ரியமானவன்' என்றும் அர்த்தம். இங்கே ஆசார்யாள் ஜ்யேஷ்ட புத்ரனை 'ப்ரியார்ஹன்', அதாவது ப்ரியம் காட்டுவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்றும், ப்ரணாய்யனை 'யோக்யன்' என்றும் சொல்லியிருக்கிறார். புத்ரனும் யோக்யனாயிருந்தால்தான் இப்பேர்ப்பட்ட வித்யோபதேசகரான ஒரு அப்பாவுக்கு ப்ரியமாகும் தகுதி பெறுவான். அதே மாதிரி, யோக்யனாயிருக்கும் சிஷ்யன்தான் அவருடைய பூர்ணமான ப்ரியத்திற்குத் தகுதி பெறுவான்.
யோக்யதை சிஷ்ய லக்ஷணத்தைக் காட்டுவது. ப்ரியம் குரு லக்ஷணத்தை - ப்ரேமையை, க்ருபையைக் காட்டுவது. இரண்டும் சேர்ந்தே சிஷ்யனுடைய லக்ஷ்ய சித்தி.
ஆகக்கூடி சிஷ்யன் மட்டுமாகவே ஸித்தியை ஸாதித்துக் கொள்வது என்று இல்லை. 'தத்-த்வோபதேசம்' என்ற ப்ரகரணத்தில் (முன்னூலுக்கு பாஷ்யமாக இன்றிச் சுயமாகவே எழுதிய நூலில்) ஆசார்யாள் தீர்மானமாகச் சொல்லியிருக்கிறார். "ஸ்ரீ குரோ: கருணாம் விநா" 'ஸத்குருவின் கருணை இல்லாமல், குரு க்ருபை இன்றேல்', என்று!
'இன்றேல்' ¢என்ன?
'எத்தனைதான் படிப்பறிவு பெற்றவனானாலும் ஒருத்தன் ஆத்மாவை அறிய முடியாது' - என்கிறார்.
ப்ரஹ்மம் என்பது என்ன, ஜீவன் என்பது என்ன, அது இரண்டும் ஒன்று என்று உபநிஷத் வாக்யம் சொல்கிறதே, அது எப்படி - என்ற விஷயங்களை அந்த ப்ரகரணத்தில் ஆசார்யாள் விசாரம் பண்ணிக் கொண்டு போகிறார். பண்ணிவிட்டு, ஆனாலும், "ஆத்மா ஸ்வப்ரகாசமாக எப்போதுமே நம்மில் நாமாக இருப்பது வாஸ்தவமேயானாலும், இப்போது நமக்குத் தெரியாத அதை எங்கேயோ உள்ள பிரம்மாயும் நம்மை அதற்கு வேறான ஜீவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிற நாம், அப்படியில்லை என்று உபநிஷத் மஹா வாக்யங்கள் சொல்வதை முன் - பின் விஷயங்களோடு கோத்துப் பார்த்து புத்தி மட்டத்தில் ஸரியாகத் தெரிந்து கொண்ட போதிலுங்கூட..."
இப்படித் தெரிந்து கொள்வதற்கு புஸ்தகப் படிப்பும் கூர்ப்பு மூளையும் இருந்தால் போதும், அப்படித்தான் இப்போது பல பேர் தெரிந்து
கொண்டிருக்கிறார்கள். ஆசார்யாள் நாளிலும் இந்த மாதிரி சில பேர்
இருந்திருப்பதாக அவர் சொல்வதிலிருந்து தெரிகிறது. அது மாத்ரமில்லை. மேற்கொண்டு அவர் இந்த மாதிரியானவர்களைப் பற்றி உபநிஷத் வார்தையாலேயே குறிப்பிடுவதைப் பார்க்கும்போது அவருக்கு முந்தைய உபநிஷத் காலத்திலேகூட அப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்களென்றும் தெரிகிறது. இப்படித் தாங்களாகவே படித்து, தங்களுடைய யுக்தியாலேயே விசாரணை பண்ணி பிரம்மமும் ஜீவனும் ஒன்றுதான் என்று மூளை மட்டத்தில் தெரிந்து கொண்டிருப்பவர்கள் அந்த லெவலுக்கு ரொம்பவும் மேலே போனால்தான் அநுபவமாக, ப்ரத்யக்ஷமாக அதை உணரமுடியும். அப்படித் தாங்களாகவே ஒருத்தரால் மேலே போகமுடியுமா?முடியாது. குருவின் ஸஹாயம் இருந்தாலொழிய, அவர் க்ருபை பண்ணினாலொழிய முடியாது. இங்கேதான் "ஸ்ரீகுரோ கருணாம் விநா" என்று ஆசார்யாள் சொல்கிறார். எத்தனை படித்து, கிடித்து, மூளை அலசல்கள் செய்தாலும் - 'ததாபி சக்யதே நைவ' - 'எத்தனை பண்ணிய போதிலும் தகுதி ஏற்படவே செய்யாது!' எதற்கு? 'அபரோக்ஷயிதும்' - 'உள்ளுக்குள்ளே தெரியாமல் வெளியிலே புத்திக்கு மட்டும் தெரிகிற ஜீவ - ப்ரஹ்ம ஐக்கிய தத்வத்தை உள்ளநுபவமாகவே உணர்வதற்கு'.