'வேதம் என்ன சொன்னாலும் அப்படியே நம்ப வேண்டியதுதான்' என்ற தீர்மானமான அபிப்ராயமே 'ச்ரத்தை' என்றால், 'அந்த வேதத்தையும், அதன் வழி வந்த சாஸ்த்ரங்களையும் வித்யைகளையும், ஸாதனா மார்க்கங்களையும், நாமே ஸ்வயமாக படித்துப் புரிந்து கொண்டு பின்பற்றிவிட்டால் போச்சு' என்று நினைத்து விடக்கூடாது. ஏனென்றால் அந்த வேதமே சாந்தோக்ய (உபநிஷ) த்தில் 'நீயாக அப்படி ஒன்றும் பண்ணாதே!நீ ஆசார்யவானாக அதனால்தான், அதாவது குரு உபதேசமாகவே இதை அறிபவனாக ஆனால்தான் உனக்குப் புரியும்' என்கிறது. முண்டக 'உபநிஷ'த்தில் 'குருவையே சென்றைடந்து பின்பற்றிப் போ' என்கிறது. 'c உள்லோகம் என்ற இடம் தெரியாத அக்ஷேத்ரவித். அதைத் தெரிந்து கொண்ட க்ஷேத்ரவித்தாக குரு என்று இருக்கிறார். அவர் மூலமாகவே நீயும் தெரிஞ்சுக்கோ' என்று ரிக் ஸம்ஹிதையிலேயே இருக்கிறது. 'ஆசார்ய முகமாக அறிகிற வித்யைதான் ஸாதிஷ்டமாகிறது - அதாவது ரொம்ப நல்ல, best ஆன பலன் தருகிறது என்று ஸத்யகாம ஜாபாலர் அவருடைய குருவிடம் சொல்வதாகவும் சாந்தோக்யத்திலேயே வருகிறது.
எழுத்து, அதைப் படித்து மூளைக்குப் புரிகிற அர்த்தம் - இதுகளோடு வேதம் முடிந்து போய்விடவில்லை. பெரிய பெரிய அநுபவங்களைத் தருகிற சக்தி அதனுடைய அக்ஷர ரூபத்துக்குள்ளேயே இருக்கிறது. அதை உள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் முறையாக அது இருக்கிறது. அந்த சக்தி எப்படி வெளிப்படுமென்றால் ஒருத்தன் தானாகப் படித்து ஒப்பிப்பதால் வெளிப்படாது, ஸ்வய மூளை புரிந்து கொள்கிற அர்த்தத்தால் வெளிப்படாது. பின்னே எப்படி வெளிப்படும்?
மதம் என்று இருப்பது தெய்வத்தை அநுபவிப்பதற்குத்தானே? வேதந்தான் மதப் புஸ்தகம் என்றால் அதிலே அமைந்திருக்கிற தெய்வ சக்தியை எப்படிப் பெறுகிறது? - என்றால்,
முதலில் அந்த வேத வாக்யங்களை ரிஷிகள் அகண்ட ஆகாசத்திலிருந்து க்ரஹிக்கும்படி பராசக்தி அநுக்ரஹித்த போதே ஒரு 'ப்ளான்' போட்டாள் ! Five year, ten year plan இல்லை! 'அந்தப் பர மதங்களில் பெறக்கூடிய சில நல்ல ப்ரயோஜனங்களையும், கிஞ்சித் (சிறிதளவு) தெய்விகமான சக்திகளையும் அந்த மதப் புஸ்தகங்களைத் தாங்களாகவே படித்துத் தெரிந்து கொள்கிறவரும் பெற்றுவிட்டுப் போகட்டும. வைதிக மதத்திலேயுங்கூட, வேத மந்திரங்களாகவோ, தந்திர சாஸ்திர மந்திரங்களாகவே இல்லாமல் எல்லாப் பொது ஜனங்களுக்குமாக இருக்கிற ஸ்தோத்திரங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அவரவரும் தானாகவே எடுத்துக்கொண்டு பின்பற்றினாலும் பின்பற்றட்டும். இங்கேயுங்கூட ஒரு பெரியவரைக் குருவாகக் கொண்டு அவர் எடுத்து வைத்துப் பண்ணினால் ரொம்ப விசேஷந்தானென்றாலும் அதைக்கட்டாய விதியாகப் போட வேண்டாம். ஆனால் கட்டாய விதியாக குரு உபதேசம் பெற்றே பண்ணுவது என்றும் ஒன்றில் வைக்க வேண்டும். அந்த ஒன்று என்னவென்றால் அத்தனை சக்திக்கும் - லோக ஷேமத்திற்கும் ஆத்ம க்ஷேமத்திற்குமான அத்தனை நல்ல சக்திக்கும் - இருப்பிடமாக இருக்கப்பட்ட வேத மந்த்ரங்கள்தான். அதை மட்டும்
எவரொருவரும் தானாக எடுத்துக் கொள்ளும்படி விடக்கூடாது. இந்த மஹா பெரிசை ஸ்வீகரித்துக் கொள்ள வேண்டுமானால் ஒருத்தன் மஹா சின்னதாக ஆகும் படிப் பண்ணவேண்டும்' என்று அம்பாள் ஒரு ப்ளான் பண்ணினாள். ரஸ பரிதமாக (சுவை நிரம்பியதாக) நாடகம் போடுவதே அவள் குணமானதால் இப்படி விசித்ரமாக ப்ளான் பண்ணினாள்.
ஒரு மநுஷ்யன் தன்னிடம் இருக்கிற மஹா பெரிய வஸ்து புத்தி என்றுதான் நினைக்கிறான். அதைப் பற்றியே கர்வம் கொண்டிருக்கிறான். ஆனால் அதை அப்படியே த்யாகம் செய்துவிட்டு, தன்னைப் பரம எளிமையாக்கிக் கொண்டால்தான் வேதத்தின் ப்ரயோஜனத்தை அவன் அடைய முடியும் என்றே அவள் காட்ட நினைத்தாகத் தோன்றுகிறது. அறிகிற இந்த்ரியம் புத்தி. 'வேத' என்றாலும் 'அறிவது' தான். பரம ஸத்யத்தைப் பற்றி அறிவிப்பதே வேதம். ஆனால் ஸ்வய மூளையால் அதை அடைய முடியாமல் பண்ணி, மூளைக் கர்வம் பிடித்த மநுஷ்யனுக்கு பணிவைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தாள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஒன்று சேர்க்கவே முடியாமலிருப்பவற்றை ஒன்று சேர்க்கிற மஹா ஸாமர்த்யம் அவளுக்கு உண்டு - 'அகடித கடினா படீயஸீ' என்று இதைச் சொல்வது. அப்படி, பெரிசில் பெரிசான வேதத்தை, ஸ்ருஷ்டியில் உசந்து நிற்கிற மநுஷ்யன் அடங்கி, சின்னவனாகியே பெறவேண்டும் என்று திட்டம் பண்ணினான்.
என்ன ப்ளான் என்றால் முதலிலே ஈச்வர ஸ்வரூபமான அகண்ட ஆகாசத்திலிருந்து வேத மந்த்ரங்களை க்ரஹித்த ரிஷிகள் அப்படி க்ரஹிக்கும் போதே அவற்றிலிருந்த அத்தனை திவ்யசக்தியையும், அந்த சக்திக்கெல்லாம் மூலமான, முடிவான சாந்தத்தையும் அப்படியே க்ரஹித்துத் தங்களுக்குள் ரொப்பிக் கொள்ளும்படியும், அப்புறம் வருபவர்கள் அவர்களிடமும் வழிவழியாக வந்து அவர்களுடைய சிஷ்ய பரம்பரையிடமும் அந்த மந்த்ரங்களை உபதேசமாகப் பெற்றால் மட்டுமே தாங்களும் மூளையர்த்தத்துக்கு மேற்பட்ட நிஜ ப்ரயோஜனமான அந்த திவ்யசக்தி - சாந்திகளைப் பெறும் படியாகவும் வைத்தாள். அதாவது எழுத்தாலோ, வார்த்தையாலோ, ஒருத்தனுடைய ஸ்வய மூளையாலோ தத்வார்த்தங்களை ப்ரத்யட்சமாக அநுபவிப்பதற்கில்லை என்றும், ஏற்கெனவே அப்படி அநுபவித்தவன் அந்த எழுத்தையும் வார்த்தையையும் உபதேசித்து அதைக் கேட்டுக்கொண்டால்தான் காதுக்குள்ளே அந்த சப்தம் போகும்போதே ஹ்ருதயத்திற்குள்ளே அதன் லக்ஷ்யமான தத்வம் - ஒரு சக்தி அல்லது சாந்தம் - போகும்படியும் ஒரு உயிரோடு இன்னொரு உயிரை 'லிங்க்' பண்ணி வைத்தாள். அப்படிச் சொல்லிக் கொடுக்கும் உயிர் குரு, சொல்லிக் கொள்ளும் உயிர் சிஷ்யர். அப்புறம் தலைமுறை, தலைமுறை, தலைமுறைகளாக, சிஷ்யர்களே குருவாகி வேறே சிஷ்யர்களுக்கு உபதேசித்துக் கொண்டு போகவேண்டுமென்று வேத பாரம்பர்யம் உண்டாகும் படியாக ப்ளான் போட்டுவிட்டாள்! ஒவ்வொரு குருவும் தன் உயிரிலே கலந்த வேத சாஸ்த்ரங்களை அந்த உயிருடைய சக்தியோடு சைதன்யமயமாக சிஷ்யனின் உயிருக்குள்ளே பாயும்படிப் பண்ணியே தத்வார்த்தமும் அந்த உயிருக்குள் பாய்ந்து அதாவது ஸ்வய அநுபவத்தைக் கொடுக்கும்படியாகப் பண்ணினாள்.
ஆகக்கூடி, மூளையைத் தூக்கிப் போட்டு விட்டு வேதமே 'அதாரிடி' என்று நம்புவதோடு, அந்த அதாரிடியே விதித்திருக்கிறபடி, 'ஆசார்யன் மூலமே அதில் உபதேசம் பெற வேண்டும்' என்றும் நம்பி பக்தி ச்ரத்தையுடன் சரணாகதி பண்ணி, உபதேசம் வாங்கிக்கொண்டால்தான் ப்ரயோஜனம்.
வேதம் மாத்திரமில்லை, மற்ற மதங்களில் சொல்கிற தத்வங்கள்..., தத்வங்கள் வரைகூடப் போகவேண்டாம். நடைமுறை லோக விஷயங்களானாலுங்கூட ஸரி, நாமாக ஒன்றைத் தெரிந்துகொள்வதைவிட, ஒரு விஷயத்தில் அநுபவம் கண்ட ஒருத்தன் அதை எடுத்துச் சொல்லி அவனுடைய ஜீவித சக்தி அதில் கலந்து வந்து நாம் பெறுகிறபோது அது அதிக பலம் பெற்று, அதிக ப்ரயோஜனம் தருகிறது. ஆனால் மற்ற ஸமாசாரங்களில் தானாவே தெரிந்து கொண்டாலும் ப்ரயோஜனம் இல்லாமல் போகவில்லை. வேதம், அப்புறம் அதை அநுஸரித்து வந்த சாஸ்திரங்கள் ஆகியவற்றின் விஷயத்தில் மட்டும் குருமுகமாக வந்தால்தான் பலன், தானாக எடுத்துக் கொண்டால் நிஷ்பலன் என்றே இருக்கிறது! இப்படி இருக்கும்படி அம்பாள் ப்ளான் பண்ணி நடக்கிறது. 'ஏன்' என்றால், அவள் சித்தம் நமக்குத் தெரியாது! அவள் என்னமோ நினைத்துத்தான் இப்படிப் பண்ணினாள் என்று நினைப்பது கூட எவ்வளவு ஸரியோ?
அவள் என்ன நினைத்தாளோ, நினைக்கவில்லையோ, நாம் விமோசனம் பெறுகிறதற்கு வழி நம் பலத்தால் ஸாதித்துக் கொள்ள இங்கே ஒன்றுமில்லை என்ற அடக்கத்தோடு, வேதமே ப்ரமானம் என்ற நம்பிக்கை யோடு, அந்த வேதத்தை குருமுகமாகவே பெறுகிறதுதான். வேதம் என்றால் வைதிக ஸம்ப்ரதாயத்தில் வந்துள்ள ஸகல சாஸ்த்ரங்களுந்தான். குறிப்பாக, தந்த்ர சாஸ்த்ரத்தை அதில் சேர்த்தே சொல்கிறேன். அநேக தெய்வங்களைக் குறித்த மந்த்ரங்கள் நேராக வேதத்திலில்லாமல் அதில் மறைமுகமாகவே சுசிக்கப்பட்டிருக்கும். அவை நேர் ரூபத்தில் தந்த்ர சாஸ்த்ரத்தில் இருக்கிறவைதான். இவற்றையும் வேதம் மாதிரியே கண்டிப்பாக குரு முகமாகத் தன் தெரிந்து கொள்ளவேண்டும்.
நேராக வேதத்திலில்லை என்பதுகூட எவ்வளவுக்கு ஸரியோ? இப்போது வேதசாகைகளில் ஏராளமானவை நஷ்டப்பட? ஏதோ சிலதுதானே அநுஷ்டானத்திலிருக்கின்றன? நஷ்டமான அந்த சாகைகளில் இப்போது தாந்த்ரீகமாக மட்டுமே நமக்குக் கிடைக்கும் மந்த்ரங்கள் இருந்திருக்கலாமோ என்னவோ?
விஷயம், நமது மதத்தில் மந்த்ரம், தத்வம் என்றால் அவை குருமுகமாக உபதேசம் பெற்றால்தான் பலனளிக்கும் என்றே இந்த லோகத்தை நடத்தி வருகிற பெரிய சக்தியினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தத்வ சாஸ்திரங்கள் எல்லாமும் அப்படியே. குருமுகமாக அவற்றில் உபதேசம் பெற்றே பயிற்சி பண்ணவேண்டும்.
யோக சாஸ்த்ரத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். 'யோக சாஸ்த்ரம்' என்கிறபோது பதஞ்ஜலி சொல்லியிருக்கிற அஷ்டாங்க யோகத்தை மட்டுமில்லாமல், பல பெயர்களிலும் உள்ள பலவிதமான யோகங்களையும், அத்தனை yoga schools -ஐயும் சேர்த்தே சொல்கிறேன்.
இன்றைக்கு 'யோகா' என்றே எங்கே பார்த்தாலும் பேச்சாயிருக்கிறது. அதனாலேயே எங்கே முறை தப்பாக நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது.
இந்த யோகமெல்லாம் நல்ல அநுபவமுள்ள ஒரு குருவின் கண் பார்வையிலேயே, அவருடைய Cinonstant attention -லேயே இருந்துகொண்டு செய்யவேண்டியவை என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது. ஸரியான குரு கிடைத்து அவருடைய சாச்வத கவனம் பெற்றுச் செய்யாவிட்டால் பெரிய விபரீதங்களே தேஹ gF, மனோ gF இரண்டிலும் உண்டாகிவிடும். எந்த சாஸ்த்ரீய மார்க்கத்தையும் குரு முகமாக இல்லாமல் பண்ணினால் கெடுதிதான் வரும் என்றாலும், இந்த யோக மார்க்கங்களிலேயே அந்தக் கெடுதி ரொம்பவும் பயங்கரமாக இருக்கும்.