குருமுகம் என்ற கட்டாயமில்லை
சாதாரணமாக எல்லா ஜனங்களுக்குமே தெய்வ சிந்தனை இருக்கத்தான் வேண்டும். மநுஷ்ய ஜீவன் அந்தப் பெயருக்கு லாயக்காக இருக்கவேண்டுமானால் தனக்கு ஜீவ சக்தியைக் கொடுத்த ஸ்வாமியைச் சிந்தித்து, அவன் அருள் வழிகாட்டுகிறபடிதான் ஜீவனம் நடத்த வேண்டும். இந்த (தெய்வ) சிந்தனை நாமே பண்ணுவதாக இருந்தால் நம்முடைய சித்தம் ஓடுகிற தாறுமாறான ஓட்டத்தில் உருப்படியாக ஒன்றும் தேறாது. அது மாத்திரமில்லாமல் நமக்கு ஸ்வாமியைப் பற்றி சொந்த அநுபவமாக என்ன தெரியும்? நமக்குத் தெரியாதவரைப் பற்றி நாம் எண்ணத்தைச் சிந்திக்க முடியும்? இங்கே, அப்படித் தெரிந்து கொண்ட பெரியவர்கள் பாடிய ஸ்தோத்திரங்கள் - தமிழ் முதலான ப்ரதேச பாஷைகளில் இருக்கிற துதிகளுந்தான் - நமக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட ஓடி வருகின்றன. பல காலமாக அவற்றை, ஸ்வாமியை சொந்தத்தில், நேரில் தெரிந்து கொண்ட எத்தனையோ பேர் சொல்லில் சொல்லி அவற்றுக்கு தெய்விக சக்தி கூடிக் கொண்டே வந்திருக்கும். அவற்றைச் சொல்வதே, அதாவது? 'ஸ்தோத்ர பாராயணம்', 'துதி ஓதுதல்' என்பதே நம்முடைய சித்தத்தை ஸ்வாமியிடம் சேர்த்து வைக்கும்.
நம் தேசம் செய்த பாக்கியம், இம்மாதிரி ஸ்துதிகள் ஒவ்வொரு தெய்வத்தையும் குறித்துக் கணக்கு வழக்கு இல்லாமலிருக்கின்றன. நம் தேசத்திலும் இந்தத் தமிழ்நாட்டில் பிறந்தவர்களின் பாக்கியம் இங்கே தோன்றிய நம் முன்னோர்கள் நம்முடைய தமிழ் பாஷையில் துதிகளை அப்படியே கொட்டி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் ஜனங்கள் அவரவரும், தாங்களே படித்துப் பாராயணம் பண்ணலாம். குருமுகமாகக் கற்றுக் கொண்டுதான் பண்ணணும் என்று கண்டிப்பு இல்லை. அநுபவம் கண்ட குரு எடுத்து வைத்துப் பண்ணினால் அது ரொம்ப விசேஷந்தான், ஸந்தேஹமில்லை. ஆனால் அப்படிக் கட்டாயமாக விதி இல்லை.
எந்த ஸ்தோத்ரம் சொல்வதானாலும் முதலில் பிள்ளையார் பற்றி ஒரு ச்லோகமாவது சொல்லிவிட்டு, அப்புறம் குரு பற்றிப்பொதுவாக உள்ள - அதாவது எந்த குருவுக்கும் 'அப்ளை' ஆகிற - ஒரு ச்லோகத்தை நாம் எந்த மஹானை குருவாக நினைக்கிறோமோ அவரை நினைத்துச் சொல்லிவிட்டு, அதற்கப்புறமே அந்த ஸ்தோத்ரம், அல்லது பிரதேச மொழித் துதியைச் சொல்வது நல்லது.
ஸ்வாமி மஹாசக்தர், மஹாபெரியவர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயமாகையால் அவரிடம் நாம் சின்னவராக நிற்பதில் விசேஷமில்லை. அப்படி நிற்பதால் நமக்கு விசேஷமாக விநய ஸம்பத் என்ற எளிமை, அடக்கம் உண்டாகி விடுகிறது. நம் மாதிரியே மநுஷ ரூபத்தில் வந்தும் பெரியவராக, தெய்வத்தன்மை நிரம்பியவராக ஆன ஒருத்தரிடம் பணிந்து நின்றால்தான் விசேஷம், அப்போதுதான் விநய ஸம்பத் உண்டாகும். வாழ்க்கையில் அந்த
ஸம்பத்தைப் போல இன்பமும், நிறைவும் தருகிற ஒன்று கிடையாது. ஆகையினால்
அதை ஒவ்வொருவரும் ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும். அதற்கு குரு வந்தனம் தான் வழி என்பதால்தான் தெய்வத்தையே ஸ்துதிக்கும் போதுங்கூட முதலில் குரு வந்தன ச்லோகம் சொல்லச் சொல்வது. இதிலே ஒரு பக்கம் விநயம். இன்னொரு பக்கம் தன்னம்பிக்கை. என்ன தன்னம்பிக்கை என்றால், நம் மாதிரி மநுஷ்யராகப் பிற்ந்த அந்த குரு தெய்வம் என்கிற அளவுக்கு உயர்ந்து கொண்டு போனார் என்பதே, நாமும்கூட அந்த திசையில் போகமுடியும் என்ற உத்ஸாஹத்தை ஊட்டுவதுதான்.
ஒரு ஸ்தோத்திரத்தை நமக்கு குரு என்று ஒருவர் கற்றுக் கொடுத்துத்தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாவிட்டாலுங்கூட, நமக்கு இஷ்டமான ஒரு மஹானை குரு ரூபமாக நினைத்து முதலில் இப்படி வழிபட்டால் ரொம்பவும் நல்லது. எந்த குருவுக்கும் பொருந்துவதாக இப்படி அநேக ச்லோகங்கள், பாடல்கள் இருக்கின்றன. ரொம்பவும் பிரஸித்தமாயிருப்பது, குருவையே ஸகல தேவதா ஸ்வரூபமாகக் காட்டிக் கொடுக்கிற ச்லோகம்
குருர் பிரஹ்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேச்வர
குருஸ் ஸாக்ஷ£த் பரப்ரஹ்ம, தஸ்மை ஸ்ரீ குரவே நம
தமிழில் திருமூலம் திருமந்திரத்தில்,
தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
தெளிவு குரு உரு சிந்தித்தல்தானே
என்று ரொம்பவும் அழகாக, மனஸ் உருகிச் சொல்கிற மாதிரிப் பாட்டு இருக்கிறது. இப்படி ஒன்றை பக்தியுடன் சொல்லிவிட்டு, ஸ்தோத்ர பாராயணமோ, துதி ஒதுதலோ நாமே ஆரம்பிக்கலாம்.
இங்கேயும் ஒரு விஷயத்தில் ஜாக்ரதை அவசியம். சில ஸ்தோத்ரங்களே மந்த்ர சக்தி பொருந்தியவையாக இருக்கின்றன. ரொம்பவும் வீர்யவித்தாகவே 'லலிதா ஸஹஸ்ரநாமம்', 'லலிதா த்ரிசதி', 'திருமுருகாற்றுப்படை' மாதிரி சில இருக்கின்றன. இப்படிப்பட்டவற்றை ஸம்பிரதாயப்படி குரு முகமாக ஸ்வீகரிப்பதே முறை. ஒரு பெரியவரிடம் போய் இவற்றை மூன்று தடவையாவது, அல்லது அதம பக்ஷம் ஒரு தடவையாவது அவர் சொல்லிக் கேட்டு அப்புறமே நாமாகப் பாராயணம் பண்ண வேண்டும். 'லலிதா த்ரிசதி' ஸமாசாரமாக இன்னும் ஒன்று அதற்கு அம்பாளின் மூல மந்திரங்களில் குறிப்பாக ஒன்றில் க்ரமமாக உபதேசம் வாங்கிக் கொண்ட பிற்பாடே அந்த ஸ்தோத்ரத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.
மந்த்ர சக்தி பொருந்திய ஸ்தோத்ரங்களையும் ஒருத்தர் படிக்கும்படியாக ஒரு மஹான் ஆஜ்ஞை பண்ணினால் அப்போது அந்த மஹானின் ஆஜ்ஞையையே குரு உபதேசமாக எடுத்துக்கொண்டு அப்படியே பண்ணவேண்டும்.
சொல்லவந்தது, பொதுவாக ஸ்தோத்ரங்களை அவரவரும் தாங்களாகவே பாராயணம் செய்ய இடமிருக்கிறது என்பதுதான்.
அப்படியேதான் வீட்டுக்கு வீடு ஒரு சின்ன பூஜையும், பொதுப்படையாக ஒரு குரு த்யானம் சொல்லி விட்டு அவரவரே ஆரம்பித்துப் பண்ணலாம். மந்த்ர,
தந்தரங்களை கலக்காத பூஜையாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். அந்த
(மந்த்ர, தந்த்ர) ஸம்பந்தம் கொஞ்சம் வந்தாலும் விதிவத்தான குருமுக உபதேசம் என்பது கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும். அப்படியில்லாத சின்ன பூஜையையுங்கூட ஒரு பெரியவர், அகத்து சாஸ்திர மாதிரி ஒருவர் எடுத்து வைத்து, 'அவர் குரு, நாம் சிஷ்யர்' என்ற பாவத்துடன் செய்ய ஆரம்பித்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம்.
எனக்கு இரண்டு தினுஸாக எண்ணம் ஓடுகிறது. ஒரு பக்கம், நமது மத ஸம்ப்ரதாயத்தில் குருவுக்குக் கொடுத்திருக்கிற முக்யத்வத்தைப் பார்க்கிறபோதும், அதோடு ஜனங்களின் தற்காலப் போக்கு ஒரு பெரியவர், பெருந்தலை என்றால் மரியாதை தராமல் இஷ்டப்படியே போவதாக இருக்கிறதே என்பதைப் பார்க்கிற போதும், ஜனங்களுக்கு எங்கேயெல்லாம் முடியுமோ, அங்கே 'குரு வேண்டும், வேண்டும்' என்று நுழைக்கவேண்டும் போலிருக்கிறது. இன்னொரு பக்கமோ, நாம் 'குரு குரு' என்று சொல்லப் போய், லக்ஷே£பலக்ஷம் பேர் இருக்கிற இந்த உலகத்தில் ஒவ்வொருத்தரும் தனக்கென்று, தான் மரியாதை பண்ணும்படியாக குரு கிடைக்கமாட்டேன் என்கிறார் என்பதால் பூஜை, புரஸ்காரம், ஸ்தோத்ர பாராயணம் எதுவுமே இல்லாமல் இருந்துவிடப் போகிறார்களே என்றும் இருக்கிறது. அதுதான் என்னால் முடிந்த 'காம்ப்ரமை'ஸைப் பண்ணிச் சொல்லிக் கொண்டுபோகிறேன்.
ஸாதாரணமாக என் மாதிரி தர்ம பீடங்களில் தலைவர்களாயிருப்பவர்கள் தர்ம சாஸ்திரத்தில் ஏதொன்றையும் விட்டுக் கொடுத்தோ, இளக்கியோ 'காம்ப்ரமைஸ்' பண்ணுவது கூடவே கூடாதுதான். ஏனென்றால் நாங்களே இளக்க ஆரம்பித்தால், சிஷ்ய வர்க்கம் அதை இளக்கிக்கொண்டே போய் சாஸ்த்ர விதி ஒரேயடியாக நீர்த்து ஆவியாப் போயே போய்விடும்!அதோடு நான் சில விதிகளில் விட்டுக் கொடுத்த மாதிரி ஒவ்வொரு தர்மபீட ஸ்வாமிகளும் சிலது சிலதுகளை, விட்டுக் கொடுப்பது என்று ஏற்பட்டு, எல்லாமே எடுபட்டுப் போய்விடும்! அதனால் நாங்கள் மூல சாஸ்த்ர வழிகளையே எவ்வளவு கண்டிப்பாகச் சொல்லவேண்டுமோ அப்படித்தான் சொல்லவேண்டும். அப்படித்தான் நானும் பாடுப்பட்டுப் பார்க்கிறேன். நான் இத்தனை 'கன்ஸர்வேடி'வாக இருக்கிறேனே என்று பல பேருக்கு வருத்தம்கூட!வருத்தம் என்பது உள்ளுரக் கோபமாகவும் இருக்கும்!வெளியிலே இப்படி வருத்தத்தைக் காட்டிக் கொள்கிறவர்கள் எத்தனை பேரோ அவர்களைப் போல பல மடங்கு ஜனங்களுக்கு உள்ளுக்குள் அப்படித்தானிருக்கும்!'காலநிலை, நம் கஷ்டம் தெரியாமல் எந்த நாள் ஸமாசாரத்தையோ இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே!' என்ற குறைப்படத் தோன்றும். எனக்கானால் தர்மஸங்கடம்! அப்படியிருந்தும், 'முடியாததை எப்படியும் ஜனங்களே விடத்தான், அல்லது இளக்கித்தான் செய்வார்கள். அதற்கு நம் வாயாலேயே அநுமதி தருவானேன்? அப்படித் தந்தால், பிற்பாடு தங்கள் சூழ்நிலை மாறினாலாவது அல்லது மாறப் பண்ணிக் கொண்டாவது அப்படியே சாஸ்த்ர விதிப்படிப் பண்ணவேண்டும் என்று
நினைக்கக் கூடியவர்களுக்கும் அந்த நினைப்பை நானே அழிப்பதாக ஆகிவிடும' என்பதால் 'கன்ஸர்வேடிவ் சாமியார்' என்று பெயர் வந்தால் வந்து விட்டுப்
போகட்டும் என்று ஏதோ ஒரு மாதிரிப் பண்ணிக் கொண்டு போகிறேன்.
ஆனாலும் சாஸ்திரங்களிலேயே இடம் இருப்பதாகத் தெரிகிற விஷயங்களில்
காலத்தை உத்தேசித்துச் சில விஷயங்கள் - ரொம்பவும் கண்டிப்பாக ஸம்ப்ரதாயத்தையே சொல்பவர்க்ள ஒப்புக்கொள்வார்களா என்று யோஜிக்கக் கூடிய சில விஷயங்களும் - சொல்கிறேன். அப்படித்தான் இப்போது குரு இருந்தே தீரணும் என்றில்லாமல் சில உபாயங்கள் இருப்பதாகச் சொன்னது.
ஒன்று வேண்டுமானால் பண்ணலாம். 'ஆபத் - தர்மம்' என்று சாஸ்திரத்திலேயே ஒன்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஆபத்துக் காலத்தில் விதிகளைக் கொஞ்சம் இளக்கிப் பண்ணுவதுதான் ஆபத் - தர்மம். லோகத்தைக் கலி புருஷன் அப்படியே 'மெடீரியலிஸம்' என்கிற பேராபத்தில் தள்ளியிருக்கிற காலமாக இதைச் சொல்லலாம். நான் இப்போது கொஞ்சம் விட்டுக் கொடுத்த மாதிரி சொல்வதை ஆபத் - தர்மமாக எடுத்துக் கொள்ளலாம்...
அஷ்டோத்தர (சத) நாமாவளிகள் தாங்களாகவே படித்துத் தெரிந்து கொண்டு அர்ச்சனை பண்ணலாம், தப்பில்லை. ஆனால் சில அஷ்டோத்தரங்களில் முதலில் பீஜாக்ஷரங்கள் என்ற மந்திர சாஸ்திர அக்ஷரங்கள் சேர்ந்திருக்கும். அப்படிப்பட்டவற்றை குரு முகமாகத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
எதையுமே குருமுகமாகக் கற்றுக்கொண்டால் 'வால்யூ' ஜாஸ்திதான் - கண்டிப்பாக அப்படி விதி இல்லாத இடத்திலுங்கூடத்தான் சொல்கிறேன். ஒன்று தோன்றுகிறது: ஆபத் - தர்மம் என்று சொன்னேன். ஆபத்துக் காலத்தில் ரொம்பவும் ஸ்ட்ரிக்டாகப் போகவேண்டாம் என்று சாஸ்த்ரமே அதை 'அலவ்' பண்ணியிருக்கிறது என்றேன். ஆனாலும் ஆபத்துப் போனவிட்டு, விலகின விட்டு அதே மாதிரி இளக்கிப் பண்ணிக்கொண்டு போகாமல், முழுக்க சாஸ்த்ர ப்ரகாரம் பண்ண ஆரம்பித்து விடணும். 'ஆபத் ஸந்நியாஸம்' என்று கேள்விப்பட்டிருக்கலாம். மரண காலம் நெருங்கி விட்டதாக ஒருவருக்குத் தெரிகிறபோது, ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு (தேஹ) வியோஹமானால் விசேஷமாயிற்றே என்று அவர் 'ஃபீல்' பண்ணுகிறாரென்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நிலையிலே அவர் (ஸந்யாஸ) ஆச்ரமம் பெறுவதற்கு ஒரு குருவைத் தேடிப்பிடித்து, ஸாங்கோபாங்கமாக ஆச்ரம ஸ்வீகாரம் பண்ணிக் கொள்ள முடியுமா? முடியாது என்பதை சாஸ்த்ரம் கவனித்துப் பரம கருணையோடு, அந்த ஸமயத்தில் ரொம்பச் சுருக்கமாக ஒரு சடங்கைப் பண்ணி அவர் தாமே -குருமுகமாக இல்லாமல் தாமே - ஸந்நிஸாயம் வாங்கிக் கொள்ளலாமென்று சொல்லியிருக்கிறது. ஆனால் அவருக்கு உடம்பு ஸரியாகி விடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவர் விதிப்ரகாரமே ஒரு குருவை அடைந்து, முன்னே தாமாக எடுத்துக்கொண்ட ஸந்நியாஸத்தை மீண்டும் குருமுகமாகப் பெறவேண்டும். அந்த மாதிரியே, சாஸ்திரம் இடம் கொடுத்து நாமாக மேற்கொள்ளும் உபாஸனைகளையும், அப்புறம் குருமுகமாகப் பெறுவது என்று வைத்துக்கொண்டால் சிலாக்கியம்.
இந்தக் கலிகாலத்துக்கென்றே ஏற்பட்ட மருந்து - தித்திப்பு மருந்து - நாம பாராயணமும், பஜனையும். இவற்றைத் தாங்களாகவே ஆரம்பித்துப் பண்ணலாம்.
ப்ரணவமும, 'நம'வும் சேர்க்காமல், 'சிவ, ராம, நாராயண கோவிந்த' முதலான, எந்த தெய்வத்தின் நாமாவையும் ஒருத்தர் தானாகவே ஜபிக்கலாம். இங்கேயுங்கூட முதலில் குட்டியாக ஒரு த்யானம் நல்லது .அந்த நாமாவைக் சொல்லி ஸ்வாமியைக்
கண்டுகொண்ட ஒருத்தரை குருவாக தியானித்தால் அதுவே ஒரு பக்கம் விநயம், இன்னொரு பக்கம் டானிக்! வெறும் நாமாவையுங்கூட ஒரு நாம ஸித்தாந்தப் பெரியவரிடம் க்ரமப்படி உபதேசம் வாங்கிக்கொண்டால் நிச்சயமாக அது விசேஷந்தான். ஆனால் அத்ற்கு ஸெளகர்யப்படவில்லையென்பதற்காக ஒத்திப் போடவேண்டாம், தானாகவே ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்கிறேன். அப்புறம் ஸெளகரியம் ஏற்படுகிறபோது ஒரு பெரியவரிடமிருந்து உபதேசமாவும் பெற்றுக் கொண்டால் விசேஷம்....