ஸாங்கியம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸாங்கியத்தில் எதிலேயும் பட்டுக் கொள்ளாததான – ஆனால் எல்லாவற்றுக்கும் ஆதாரமான – ஆத்மாவைப் ‘புருஷன்’ என்றும், எல்லாவற்றையும் நடத்தி வைக்கிற சக்தியான மாயையை ‘ப்ரக்ருதி’ என்றும் சொல்லியிருக்கிறது. ப்ரக்ருதி உள்படப் பிரபஞ்சம் என்பது 24 தத்வங்களில் அடங்கியிருக்கிறது என்று ஸாங்கியம் சொல்கிறது. பிரகிருதி என்பது முதல் தத்வம். அதற்கு ‘ப்ரதானம்’ என்றும் ஒரு பேர். அதிலிருந்து மஹத் என்ற இரண்டாவது தத்வம் வருகிறது. மநுஷ்யனின் புத்தி மாதிரிப் பிரிகிருதியின் புத்திதான் மஹத். ‘மஹத்’திலிருந்து மூன்றாவது தத்வமாக ‘அஹங்காரம்’ உண்டாகிறது. தான் என்று தனியாக ஒன்று இருக்கிறது என்ற உணர்ச்சி (ego) தான் அஹங்காரம். அஹங்காரம் இரண்டாகப் பிரிகிறது. ஒரு பக்கம் சைதன்யமுள்ள [உயிரும் அறிவும் உள்ள] ஜீவனாகி அவனுடைய மனஸாகவும் ஐந்து ஞானேந்திரியங்களாகவும், ஐந்து கர்மேந்திரியங்களாகவும் ஆகிறது. இன்னொரு பக்கம் ஜடப் பிரபஞ்சத்திலே ஐந்து தன்மாத்ரைகளாகவும், ஐந்து மஹா பூதங்களாகவும் ஆகிறது. ஜீவனின் ஞானேந்திரியங்கள் என்பவை வெளியில் உள்ள வஸ்துக்களைப் பற்றி இவனுக்கு அறிவிக்கிற ஐந்து உறுப்புக்கள். வெளியில் உள்ளதைப் பார்க்கிற கண், முகர்கிற மூக்கு, ருசிக்கிற வாய், கேட்கிற காது, தொடுகிற சர்மம் என்கிற ஐந்தும் ஞானேந்திரியம். ஜீவனே நேராகக் காரியம் செய்ய உதவுபவை கர்மேந்திரியங்கள். இங்கேயும் வாய் இருக்கிறது. வெளியிலே உள்ள ருசியை ஜீவனுக்கு அறிவிக்க உபயோகப்பட்ட ஞானேந்திரியமான வாய் பேசுவது என்ற கர்மாவை செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது. பல காரியங்களைச் செய்ய உதவும் கை ஒரு கர்மேந்திரியம். நடக்கிற கால், மலஜல விஸர்ஜனம் செய்கிற அவயவம், ஜனனேந்திரியம் ஆகியன மற்ற மூன்று கர்மேந்திரியங்கள். ஞானேந்திரியங்களுக்கு ஆசிரயமாக சப்தம் (காது) , ஸ்பரிசம் (சர்மம்) , ரூபம் (கண்) , ரஸம் அல்லது சுவை (வாய்) , கந்தம் என்ற வாஸனை (மூக்கு) என்ற ஐந்து சூக்ஷ்மமாக இருக்கின்றன அல்லவா? இந்த ஐந்துமே தன்மாத்ரைகள். இந்த தத்வங்கள் ஜடமாக விரிந்திருக்கும் ஆகாசம் (சப்தம்) , வாயு (ஸ்பரிசம்) , அக்னி (ரூபம்) , ஜலம் (ரஸம்) , பிருத்வி (கந்தம்) என்பவை ஐந்து மஹாபூதங்கள். இப்படியாக பிரகிருதி, மஹத், அஹங்காரம், மனம், ஐந்து ஞானேந்திரியம், ஐந்து கர்மேந்திரியம், பஞ்ச தன்மாத்திரைகள், பஞ்ச மஹாபூதங்கள் என்று மொத்தம் 24 இருக்கின்றன. [1]

இந்த இருபத்து நாலையும் அத்வைத வேதாந்தமும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் ஈச்வரன் என்கிற ஒருவன் (ஸகுண ப்ரம்மம்) தான் நிர்குணமான புருஷனையும் (ஆத்மாவையும்) பிரகிருதியையும் (மாயையையும்) சேர்த்து வைக்கிறவன் என்பதை அத்வைதம் சொல்கிறதே ஒழிய ஸாங்கியம் ஈச்வரனைப் பற்றிச் சொல்லவில்லை.

அத்வைதம் முதலிய எல்லா வேதாந்த ஸம்பிரதாயங்களும் ஒப்புக் கொள்ளும் ஸத்வ-ரஜோ-தமோ குணங்களை ஸாங்கியம் சொல்கிறது. தெளிந்த சாந்தமான உயர்ந்த நிலை ஸத்வம். ஒரே வேகமும் சலனமுமாக இருக்கும் நிலை ராஜஸம் (ரஜோகுணம்) . சோம்பல், தூக்கம், ஜடத்தன்மை ஆகியன தாமஸம் (தமோ குணம்) . கீதையில் “குணத்ரய விபாக யோக”த்தில் இவற்றைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறது. “முக்குணங்களையும் கடந்த ஆத்மாவிலேயே நிலையாக நில்லு” (நிஸ்த்ரைகுண்யோ பவ) என்று கீதை ஆரம்பத்திலேயே பகவான் சொல்கிறார் (II.45). ஸாங்கியத்திலும் முக்குணங்களின் ஏற்றத்தாழ்வால்தான் எல்லா அனர்த்தங்களும் உண்டாவதாகவும், இவற்றை ஸமமாக்கி நிறுத்திவிடவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால் கீதாதி சாஸ்திரங்களைப் போல இப்படிப் பண்ணிக் கொள்வதற்கு ஈஸ்வர ஆராதனை, சரணாகதி, ஞானவிசாரம் மாதிரியான எதையும் அது சொல்லவில்லை.

புருஷனுக்குத்தான் ஜீவசைதன்யம் இருக்கிறது. பிரகருதி ஜடந்தான். அதனால் பிரகிருதி தானாக எதுவும் பண்ண முடியாது. அது 24 தத்வங்களாகப் பரிணமிப்பது சைதன்ய புருஷனின் ஸாந்நியத்தால்தான் என்றும், ஆனாலும் புருஷன் பிரகிருதி ஸம்பந்தமேயில்லாத கேவல ஞானஸ்வரூபி என்றும் ஒன்றுக்கொன்று முரணாகச் சொல்கிறது ஸாங்கியம்.

‘கேவலம்’ என்றால் பிறக் கலப்பு இல்லாமல் தன்னந்தனியாக, ஸ்வச்சமாக இருப்பது என்று அர்த்தம். இதற்கு அட்ஜெக்டிவ்தான் ‘கைவல்யம்’ என்பது. ‘கைவல்யம்’ என்பதே ஸாங்கியத்தில் மோக்ஷம் என்பதற்குக் கொடுத்துள்ள பெயர். ஜீவனானவன் இருபத்து நாலு தத்வங்களையும் தள்ளிவிட்டு, ஜடத்திலிருந்து விடுபட்டு, சைதன்யமான புருஷனின் தனித்த ஸ்வச்ச நிலைமையில் இருப்பதே கைவல்யம். (தமிழில் எப்படியோ “கேவலம்” என்றால் மட்டமானது, தாழ்வானது என்ற அர்த்தம் ஏற்பட்டு விட்டது) .

இப்படிப் புருஷன் என்கிற ஆத்மாவிலேயே நிலைத்து, மற்ற எல்லாவற்றையும் மாயை என்று தள்ளவிடுவதுதான் அத்வைதத்தின் லக்ஷயமும் ஆகும். ஆனால் அதற்கு ஆசார்யாள் கர்மா, உபாஸனை, (பக்தி) , அப்புறம் ஞான விசாரம் என்று வழிபோட்டுக் கொடுத்த மாதிரி ஸாங்கியத்தில் இல்லை. தள்ள வேண்டியதான 24 தத்வங்களின் விசாரம்தான் அதில் அதிகமிருக்கிறது.

இன்னொரு குறை. புருஷன் (ஆத்மா) காரியமில்லாத கேவல ஞானம், பிரகிருதி காரியமுள்ள ஆனால் ஞானமில்லாத, ஜீவசைதன்யமில்லாத ஜடம் என்று ஒரேடியாகப் பிரித்துவிட்டு, இந்த ஜடம் எப்படி மற்ற தத்வங்களாகப் பரிணமிக்க முடியும் என்பதற்குச் சரியாகக் காரணம் சொல்ல முடியாமல், ஜீவ சைதன்யமுள்ள புருஷனின் சாந்நியத்தால் மட்டுமே இது நடக்கிறது என்று ஸாங்கியத்தில் சொல்லியிருப்பது திருப்தியாக இல்லை. “காரியமேயில்லாதது புருஷன் என்று சொல்லிவிட்டு அதன் ஆதாரத்தில்தான் பிரகிருதி காரியம் செய்கிறது என்று சொல்கிறீர்களே! இது எப்படி?” என்று கேட்டால் ஸாங்கியர்கள், “ஒரு காந்தம் ஒரு இடத்தில் இருப்பதாலேயே இரும்புத் துண்டுகள் ஆடி அசையவில்லையா? காந்தம் அவற்றை அசைக்க வேண்டும் என்று உத்தேசிக்கிறதா என்ன? அது பாட்டுக்கு இருக்கிறது. அப்படி இருப்பதாலேயே இரும்புத் துண்டுகள் அசைகின்றன. இப்படித்தான் புருஷன் தன் பாட்டுக்கு இருந்தாலே போதும். அதன் சைதன்ய விசேஷத்தால் பிரக்ருதி ஆடுகிறது. புருஷனும் பிரகிருதியும் முடவனைப் பொட்டையன் தூக்கிக் கொண்டு போகிற மாதிரிச் சேர்ந்து காரியம் பண்ணுகின்றன. முடவனால் நடக்க முடியாது. குருடனால் பார்க்க முடியாது. அதனால் குருடன் தோள்மேல் ஏறிக்கொண்டு முடவன் வழிசொல்ல, அதன்படி குருடன் நடக்கலாம். இப்படித்தான் காரியம் பண்ண முடியாத, ஆனால் ஞான மயமான புருஷனைத் தூக்கிக் கொண்டு காரியம் செய்கிற, ஆனால் ஞான மயனான புருஷனைத்தூக்கிக் கொண்டு காரியம் செய்கிற, ஆனால் ஞானமில்லாத ஜடப் பிரகிருதி பிரபஞ்ச வியாபாரத்தைப் பண்ணுகிறது” என்கிறார்கள். இது ஏதோ கதையாக, உவமையாக நன்றாயிருக்கிறதே தவிர, அத்வைதத்தில் காரியமற்ற நிர்குணப் பிரம்மமே காரியமுள்ள ஸகுண ஈச்வரனாகவும் இருந்துகொண்டு மாயாசக்தியால் பிரபஞ்சத்தை நடத்துகிற மாதிரித் தோன்றுகிறது என்று பொருத்தமாகச் சொல்வது போல இல்லை.

அத்வைதத்துக்கும் ஸாங்கியத்துக்கும் இன்னொரு பெரிய வித்யாஸம், சுத்த ஞான ஸ்வரூபமான புருஷனைப் பற்றி ஸாங்கியம் சொன்ன போதிலும், இத்தனை ஜீவாத்மாக்களும் அந்த ஏக புருஷனே என்று அத்வைதமாகச் சொல்லாமல் அநேக புருஷர்கள் இருப்பதாகவே சொல்கிறது.

இப்படிச் சில குழறுபடிகள் இருந்தாலும் ஸாங்கியம் என்பது தத்துவங்களைக் கணக்கெடுத்துச் சொல்வதில் (‘ஸங்கியை என்றால் கணக்கெடுப்பது என்று அர்த்தம். ஜனஸங்கியை என்று ஸென்ஸஸ் எடுப்பதைச் சொல்கிறோமல்லவா? ‘ஸங்கியை’யிலிருந்து வந்ததுதான் ‘ஸாங்கியம்”) நமக்கு ஒரு ஆதார சாஸ்திரமாக இருக்கிறது.

கபில மஹரிஷி ஸாங்கிய மதத்துக்கு ஸூத்ரம் எழுதியிருக்கிறார். ஈச்வரகிருஷ்ணர் என்பவர் செய்த ஸாங்கிய காரிகையும், ஸாங்கிய ஸூத்ரத்துக்கு விஞ்ஞான பிக்ஷூ எழுதிய பாஷ்யமும் இந்த ஸித்தாந்தத்தின் முக்யமான நூல்களாகும்.[2]

கீதையில் பகவானே அநேக ஸாங்கிய கொள்கைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஸாங்கியம், யோகம் என்று இரண்டு மார்க்கங்கள் இருப்பதாக அவர் சொல்கிறபோது ஸாங்கியம் என்றால் வேதாந்தமான ஞான மார்க்கம் என்றே அர்த்தம். யோகம் என்பது கர்மயோகம்; ராஜயோகமல்ல.

ஸாங்கியத்தில் புருஷனைப் பிரகிருதியிலிருந்து பிரித்து உணரவேண்டும் என்று சொல்லி வெறுமனே விட்டு விட்ட இடத்தில் ஆரம்பித்து, எந்த மாதிரி உபாயத்தினால் என்ன ஸாதனைகளைப் பண்ணி எப்படி பிரிக்கிறது என்று ‘ப்ராக்டிக’லாக வழி சொல்லித் தருவதுதான் [ராஜ] யோக ஸாஸ்திரம். ஆனால் யோகத்திலே ஈச்வரனை ஒப்புக் கொண்டு ஈச்வர ஆராதனையையும் மனோநிக்ரஹத்துக்கு [மனம் அடங்குவதற்கு] வழியாகச் சொல்லியிருக்கிறது. சித்த ஓட்டத்தை நிறுத்துவதுதான் “யோகம்” என்ற பொதுப் பெயரில் வழங்குகிற பதஞ்ஜலி மஹர்ஷியின் ராஜயோகம். இப்போது Yoga, Yoga என்று மேல் நாடுகளில் அதுதான் கொடிகட்டிப் பறக்கிறது.

ஸாங்கியமும், யோகமும் சதுர்தச அல்லது அஷ்டாதச வித்தைகளில் சேராவிட்டாலும் அவையும் நம் சாஸ்திரங்களில் முக்கியமான இரண்டாக இருப்பதால் சொன்னேன்.

மீமாம்ஸையில் ஈச்வர பக்தி கிடையாதென்றாலும் அது வேதப் பிரமாணத்தை ஒப்புக்கொள்கிற மதம். அதே மாதிரி வேதத்தை ஒப்புக் கொண்டும், நிரீச்ரவாதம் பண்ணுவதாக ஸாங்கியம் இருக்கிறது.

பௌத்தம், அதைக் கண்டித்த நியாயம்- மீமாம்ஸை என்ற இரண்டு, மீமாம்ஸை மாதிரியே ஈச்வரனை ஒப்புக்கொள்ளாத போதிலும் சப்த (வேத) ப்ரமாணத்தை ஒப்புக் கொள்கிற ஸாங்கியம் – ஆகிய இந்த நாலிலிருந்தும் நம் ஆசார்யாள் எடுத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களை எடுத்துக் கொண்டு, கண்டிக்க வேண்டியதைக் கண்டித்துத் தள்ளிவிட்டு, இவை எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதும் இவை எல்லாம் உண்டாகக் காரணமானதுமான மூல வேதாந்தத்தையே ஸ்தாபித்தார். ஆசாரியாள் பௌத்தத்தில் முடிந்த முடிவாகச் சொன்ன உயர்ந்த ஞான நிலை, நிர்குணப் பிரம்மத்தின் ஸ்தானத்தில் ஸாங்கியத்தில் சொன்ன கேவலமான ஸ்வரூபமான புருஷன், மாயையின் ஸ்தானத்தில் அது சொல்கிற ப்ரக்ருதி, அதிலே சொல்லப்படும் 24 தத்வங்கள், மீமாம்ஸை சொல்லும் கர்மாநுஷ்டானம், நியாயத்திலே சொல்லப்பட்டுள்ள ஈச்வரன், அது சொல்லும் பிரமாணங்கள் இவற்றை யெல்லாமே ஒப்புக் கொண்டவர். ஆனால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அம்சத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு அதையே லக்ஷ்யமாக்கிவிட்டபோது அவற்றைக் கண்டித்து இந்த எல்லா அம்சங்களையும் சேர்த்து ஒழுங்கு படுத்திக் கொடுத்தார்.


[1] இதற்கு அடுத்த உரையில் ‘பதார்த்தம்’ என்ற பகுதியும் பார்க்க.

[2] ஸாங்கிய காரிகைக்கு கௌடபாதரும் (ஆசார்யாளின் பரம குருவான கௌடபாதரேதான் இவர் என்றும் அல்லர் என்றும் இரண்டு கருத்துக்கள் உண்டு), ஆசார்யாளின் ஸூத்ர பாஷ்யத்திற்கு வியாக்யானம் எழுதிய வாசஸ்பதியும் எழுதிய விரிவுரைகள் ஸாங்கிய சாஸ்திரத்தில் முக்கியமாகக் கருதப்படும் வேறு இரு நூல்களாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சங்கரரும் இதர ஸித்தாந்தங்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மீமாம்ஸையும் ஆதிசங்கரரும்
Next