பௌத்தத்தில் ஈச்வரனைச் சொல்லவில்லை என்பதற்காக உதயனர் முதலிய நையாயிகர் அதைக் கண்டித்தது ஆசாரியாளுக்கு ஸம்மதமானதே. அதே போல, வைதிக கர்மாநுஷ்டானங்கள் பௌத்தத்தில் இல்லை என்பதனால் அதைக் குமாரிலர் போன்ற மீமாம்ஸகர்கள் கண்டனம் பண்ணியதும் அவருக்கு ஸம்மதந்தான். ஏனென்றால் மீமாம்ஸகர்கள் முக்யமாகக் கொண்டிருந்த கர்மாநுஷ்டானங்கள் சித்த சுத்திக்கும், ஸமூக ஒழுங்குக்கும் அவசியம் வேண்டியனவே என்பது தான் நம் ஆசாரியாளின் அபிப்பிராயமாகும். ஆனாலும் ‘ஈச்வரன் என்ற பல தாதா வேண்டாம்; கர்மாவினால் சுத்தியானபின் ஞானத்துக்குப் போகவேண்டாம்; கர்மாவை விட்டுவிட்ட ஸந்நியாஸம் தப்பானது’ என்ற கொள்கைகளை மீமாம்ஸகர்கள் பின்பற்றியதனால் அவர்களையும் ஆசாரியாள் கண்டனம் பண்ணினார்.
மீமாம்ஸகர்களில் குமாரிலபட்டர், மண்டன மிச்ரர் இருவரும் முக்கியமானவர்கள். இவர்களில் குமாரிலபட்டரின் அந்திம காலத்தில் ஆசார்யாள் அவரை வாதத்தில் ஜயித்தார்*. இன்னொருவரான மண்டனமிச்ரரை ஜயித்து அவரைத் தனது நாலு பிரதான சிஷ்யர்களில் ஒருவரான ஸுரேச்வராசாரியராக ஆக்கினார்.
வேத மதத்துக்குள்ள பதினாலு ஆதாரங்களில் ஒன்றான மீமாம்ஸையை ஆசார்யாள் கண்டித்தார் என்றால், அது அடியோடு தப்பு என்று நிராகரணம் பண்ணினார் என்று அர்த்தமில்லை. ‘மீமாம்ஸையில் சொன்ன கர்மாக்களைப் பண்ணியாகத்தான் வேண்டும். ஆனால் மீமாம்ஸகர் போல் ஈச்வர பக்தியில்லாமல் பண்ணக் கூடாது. அந்த கர்மாவே தருகிற ஸ்வர்காதி பலன்களை ஈச்வரனுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டு, இந்த கர்மபல தியாகத்தினாலே சித்த சுத்தியை ஸம்பாதித்துக் கொள்ள வேண்டும். பலதாதா ஈச்வரன் என்று உணர்ந்தால்தான் சின்னதான, ஸ்வர்க்கம் முதலான பலன்களை விட்டு ஈச்வரன் தருகிற பெரிய பலனான சித்த சுத்திக்குப் போக முடியும்’ என்பதே ஆசாரியாளின் உபதேசம். மீமாம்ஸகர்களின் கர்மாநுஷ்டானம் முழுக்கவும் ஆசாரியாளுக்கு ஸம்மதமானதுதான். ஆனாலும் கர்மாவுக்காகவே கர்மா (end in itself) என்று நினைத்து அவர்கள் அதற்கு மேல் போகாமல் – பலதாதாவான ஈச்வரனிடம் பக்தி, அதற்கப்புறம் அந்த ஈச்வரனேதான் நாமாகி இருப்பதை அநுபவத்தில் அறிகிற ஞானம் ஆகிய இவற்றுக்குப் போகாமல் – நின்றுவிட்டது தப்பு என்று உபதேசம் பண்ணினார். கர்மாவை அவர் ஆக்ஷேபிக்கவே இல்லை என்பதால்தான் தமது சரீரத்தை விடுவதற்குமுன் கடைசியாக உபதேசித்த “ஸோபான பஞ்சக”த்தை
வேதோ நித்யம் அதீயதாம்
ததுதிதம் கர்மஸ்வநுஷ்டீயதாம்
என்று ஆரம்பித்தார். “தினமும் வேத அத்யயனம் பண்ணுங்கள். அதிலே சொல்லியுள்ளபடி கர்மாக்களை நன்றாக அநுஷ்டானம் பண்ணுங்கள்” என்று அர்த்தம்.
ஆனால் இப்படி கர்மாவுடனே நின்றுவிடக் கூடாது. அதை ஈச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இதனால் சித்த சுத்தியை உண்டாக்கிக் கொண்டு அப்புறம் ஞானோபதேசம் வாங்கிக் கொள்ளவேண்டும். அப்புறம் கர்மாவை எல்லாம் நிறுத்திவிட்டு ஸந்நியாஸியாகி அந்த உபதேசத்தையே தியானம் பண்ணி, விசாரம் பண்ணி, சொந்த அநுபவமாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாகக் கொண்டு போகிறார்.
ஈச்வரனிடத்தில் கொண்டுவிடவே, ஏற்பட்ட வேதத்தின் கர்ம காண்டத்தை, அப்படிப் பண்ணவிடாமல் வெறும் கர்மாவோடேயே நிறுத்தி, சாச்வத ஆனந்தமான அத்வைத மோக்ஷத்தில் சேர்ப்பதற்கு வழி பண்ணித் தருவதற்குப் பதில், புண்ய கர்மா செலவழிகிற வரையில் மாத்திரம் வெறும் போகபூமியான ஸ்வர்க்கத்தில் சேர்ப்பதோடு நின்றுவிடுகிறார்களே என்பதற்காகத்தான் மீமாம்ஸகர்களை ஆசார்யாள் கண்டனம் பண்ணினார்.
கர்மாக்களை விஸ்தாரம் பண்ணி அது பற்றின வேத சட்டங்களை வியாக்கியானம் செய்கிறதில் மீமாம்ஸா சாஸ்திரம் சொல்கிற அவ்வளவும் ஏற்க வேண்டியதுதான். ஏனென்றால் வேத சப்தத்தை விசாரிக்கிற போது அந்த சாஸ்திரம் இந்த சப்தப் பிரமாணத்துக்கு அப்படியே surrender (சரணாகதி) பண்ணி, அதனாலேயே அதனுடைய அர்த்தத்தை உள்ளபடி தெரிந்து கொண்டு நிர்ணயம் பண்ணி விடுகிறது. எனக்கு மீமாம்ஸையைப் பற்றி ஒன்று வேடிக்கையாகத் தோன்றுகிறது. மீமாம்ஸா சாஸ்திரம் கண்ணுக்குத் தெரிகிற ஒரு ஸ்வாமியிடம் ‘ஸரன்டர்’ செய்து, அதனாலே அவனுடைய ஸ்வரூபத்தைத் தெரிந்து கொள்ள பிரயத்னம் செய்யவில்லைதான். அதனால் என்ன? வேதம்தான் பெரிய ஸ்வாமி. வேத சப்தம் கண்ணுக்குத் தெரிகிற ஸ்வாமியாக இல்லாவிட்டாலும் காதுக்குக் கேட்கிற ஸவாமியாக இருக்கிறது. அந்த சப்தம் சொல்கிற கர்மாக்களை எதிர்க் கேள்வி கேட்காமல் பண்ணுவோம். இங்கே ஒரே ‘ஸரன்டர்’தான். இப்படி ‘ஸரன்டர்’ பண்ணி வேத வாக்கியங்களின் தாத்பரியத்தை நிர்ணயம் பண்ணுவோம்’ என்று மீமாம்ஸகர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் கண்ணுக்குத் தெரிகிற ஸ்வாமியை அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், காதுக்குக் கேட்கிற வேத ஸ்வாமியின் ஸ்வரூபத்தை (அர்த்தத்தை) நன்றாகத் தெரிந்து கொண்டு சொல்லிவிட்டார்கள் என்று நான் நினைப்பதுண்டு.
* ‘தெய்வத்தின் குரல்’ முதற்பகுதியில் “முருகனின் வடநாட்டு அவதாரம்” என்ற உரை பார்க்க