சங்கரர் தரும் பதில் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நம்முடைய ஆசாரியாள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்?

சப்தம் (வேதம்) ஒன்றைச் சொன்னால் அது காரியத்தில் பிரயோஜனம் ஆகவேண்டும் என்று மட்டுமில்லாமல், அந்தக் காரியமும் பிரயோஜனமாய் இருக்கிறது என்பதால்தான் மீமாம்ஸகர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆகவே காரியத்தால் ஏற்படும் பிரயோஜனந்தான் சப்த தாத்பரியமேயன்றிக் காரியமே லக்ஷ்யம் இல்லை என்றாகிறது. காரியம் இல்லாமல் இருப்பதே ஒரு பெரிய பிரயோஜனமாக இருந்தால் அப்பொழுது அந்தக் காரியமற்ற நிலையைச் சொல்லும் ஞான காண்ட சப்தத்தை அங்கீகரிக்கலாமல்லவா? அதாவது வேலை இல்லாதிருப்பதே பிரயோஜனமானால் அதுவும் சப்தத்தினுடைய தாத்பரியந்தான். சப்தத்தினுடைய தாத்பரியம் ஒரு பிரயோஜனமே யன்றி வேலை அல்ல. “ஸுராபானம் (மதுபானம்) பண்ணக்கூடாது” என்று வேதத்தில் சொல்லி இருக்கிறது. அதைக் கேட்டவுடன் என்ன காரியம் செய்வது? ஒன்றும் செய்வதற்கில்லை. அப்படியானால் அந்த சப்தத்துக்குத் தாத்பரியம் இல்லையா? கள்ளுக் குடித்துக் கெட்டுப் போகாமல் இருப்பதுதான் அதற்குத் தாத்பரியம். இப்படி ஒன்று செய்யாமல் இருப்பதை ‘அபாவம்’ என்பார்கள். நிஷேதங்களுக்கு எல்லாம் அபாவம்தான் தாத்பரியம். இம்மாதிரி ‘இதைச் செய்யாதே’ என்று வேதம் பல காரியங்களிலிருந்து நம்மை விலக்குவதையும் மீமாம்ஸகர்களே ஒப்புக் கொள்கிறார்கள். வேதத்தில் நிஷேதம் என்று விலக்கப்பட்ட காரியங்களைச் செய்யாமலே இருக்கிறார்கள். இப்படி சில காரியம் செய்யாமல் இருப்பது பிரயோஜனமாக இருக்க முடியுமானால் எந்தக் காரியமும் இல்லாமல் பிரம்மமாக இருப்பது பெரிய பிரயோஜனமாக இருக்க முடியும் என்பதை எப்படி ஆக்ஷேப்பிக்கலாம்? காரியம் ஒன்றுமே இல்லாத பரம பிரயோஜனமாக ஆத்ம ஸாக்ஷாத்காரம் இருப்பதனால் வேதாந்த சப்தங்களும் மிகவும் உபயோகம் உள்ளவையே. அவற்றை அர்த்தவாதம் என்று தள்ளக்கூடாது.

ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே

என்று பகவான் கீதையில் சொல்லி இருக்கிறார். “எல்லாக் கர்மாக்களும் போய்க் கடைசியில் ஞானத்தில்தான் நன்றாக ஸமாப்தி ஆகின்றன” என்கிறார். எல்லாக் கர்மாவும் பரமேச்வரனிடம் விநியோகம் ஆகவேண்டும். காரியமே இல்லாமல் இருப்பதுதான் பரம ப்ரயோஜனம், அதுதான் பிரம்மானந்தம். அதனால் ஜன்மமே இல்லாமல் போய்விடும். வேதத்திற்குப் பரமதாத்பரியம் அதுதான். கர்மகாண்டம் எல்லாம் ஞானகாண்டத்தில் போய் அன்வயிக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்குப் பிரயோஜனம் உண்டு.

இந்தக் கருத்தைத்தான் ஸ்ரீ சங்கராசாரியர்கள் மண்டனமிச்ரர், குமாரில பட்டர் ஆகியோரிடம் எடுத்துச் சொல்லி அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்தார். சுருக்கமாக, “கர்மத்திலும் சித்தத்தை சுத்தி செய்வதற்கான கொஞ்சம் பிரயோஜனம் இருக்கிறது என்பதாலேயே வேதமானது கர்ம காண்டத்தில் காரியத்தைச் சொல்கிறது. இப்படிக் காரியம் பண்ணினால் என்ன பிரயோஜனமோ அதைக் காட்டிலும் கோடி கோடி பிரயோஜனம் காரியம் இல்லாதிருப்பதால் ஏற்படுமானால் அதுவே வேதத்தின் நிறைந்த தாத்பரியம் ஆகும். இதுதான் ஞான காண்டத்தின் அபிப்ராயம். அதனால் கர்மாவைப் பற்றிச் சொல்கிற பாகங்களெல்லாம் சித்தமலத்தைப் போக்கி ஈச்வரனிடத்தில் கொண்டு சேர்க்க ஆரம்ப ஸ்திதியில் உதவுகின்றன என்பதாலேயே தாத்பரியம் உடையவனாக இருக்கின்றன. வறட்டுக் கர்மாவினால் மட்டும் பிரயோஜனமில்லை. கர்மா நின்று போய் பரமாத்ம ஸ்வரூபமாகவே இருக்கும் நிலையே பரமப் பிரயோஜனம். அதை அடைவிக்கும் ஸந்நியாஸ ஆச்ரமத்தின் பெருமையை வேதம் முடிவு பாகத்தில் சொல்லுகிறது. அதையே முடிவான தாத்பர்யமாக அங்கீகரிக்க அடைய வேண்டும்” என்று ஸ்ரீ ஆசார்யாள் சொல்லித்தான் மண்டனமிச்ரருக்கு ஸந்நியாஸம் கொடுத்தார்.

கர்ம காண்டத்திலேயே வேதம் சில கர்மாக்களைப் பாபம் என்று சொல்லித் தள்ளுகிறது. ஆனால் இந்தப் பாபம் பண்ணுவதால் ஏதோ இன்பம், லாபம் இருக்கிறது என்று தான் ஒருத்தன் அதைப் பண்ணுகிறான். இதைப் பண்ணாதவனுக்கு அந்த இன்பம் இல்லை. ஆனாலும் வேதம் “பண்ணாதே!” என்கிறது. ஏன்? பாபம் இப்போதைக்கு இன்பத்தை, திருப்தியைத் தந்தாலும் அப்புறம் இதைவிடப் பெரிதான ஆனந்தத்தை நமக்குச் சேர விடாமல் தடுத்து விடும். அதனால் “பண்ணாதே!” என்று தடுக்கிறது. இந்தத் தடையை ஒப்புக் கொண்டு மீமாம்ஸகர்களும் அதன்படியே பாப கர்மாக்களை யெல்லாம் விட்டுவிடுகிறார்கள். இவர்கள் பண்ணுகிற வைதிக அனுஷ்டானங்களான ஸத்கர்மாவின் பலனாகவும் இவர்களுக்கு ஒரு லாபம், ஆனந்தம் கிடைக்கிறது. இக வாழ்க்கையிலே ஸெளக்கியம் ஏற்படுகிறது. பித்ரு லோகம், தேவலோகம் முதலியன கிடைக்கின்றன. ஆனால் இவை மட்டும் சாச்வதமான ஸெளக்கியமா என்றால் இல்லை. புண்ய கர்ம பலன் தீர்ந்தவுடன் இந்த ஸெளக்கியங்களும் தீர்ந்து போகும். தேவ லோகத்துக்குப் போனாலும் புண்ணியம் தீர்ந்தவுடன் பூலோகத்தில் வந்து விழ வேண்டியதுதான். “க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விசந்தி” என்று சொல்லியிருக்கிறது [கீதை:IX.21]. தீராத ஸெளக்கியம், மாறாத நிறைந்த ஆனந்தம் என்பது உண்டென்றால் அது பரமாத்ம தத்வத்தில் அதோடு அதாகவே கரைந்து, எந்தக் காரியமும் இல்லாமல் கிடைக்கிற ஞானியொருவன் அநுபவிக்கிற நிலைதான். ரொம்பவும் அல்பமான, ரொம்பவும் குறுகிய காலத்துக்கு மட்டுமேயான இன்பத்தைத் தருகிற பாப கர்மாக்களை விட்டுவிட்டு அதைவிட உயர்ந்ததான ஸத்கர்மாவுக்குப் போகவேண்டும். அதாவது வைதிக கர்மாநுஷ்டானங்களை குறைவேயில்லாமல் செய்ய வேண்டும். ஆனால் இதனாலும் நிறைந்த நிறைவான ஆனந்தத்தை சம்பாதித்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன பிரயோஜனம்? ‘கர்மாநுஷ்டான பலனும் சாச்வத ஸெளக்கியமாக இல்லையே! அதனால் இதைப் பண்ணாமலே இருந்து விடலாமா? நேரே அந்த சாச்வத ஸெளக்கியத்துக்கே போய்விடலாமா?’ என்றால் அதுவும் நம்மால் முடியவில்லை. ஞானம் வருவது ஸுலபத்தில் ஸாத்தியமா? அதற்கு முதலில் சித்தம் சுத்தமாக வேண்டும். கர்மாதான் சித்தத்தை அலை பாயாமல் ஒரு ஒழுங்குப்படுத்திக் கட்டுகிறது. அதனால் கர்மாநுஷ்டானம் பண்ணவேண்டும். அப்படிப் பண்ணும்போது அது தருகிற ஸ்வர்க்க லோகம் முதலான இன்பங்களை உத்தேசிக்காமல், அதாவது பலனில் பற்றின்றி நிஷ்காம்யமாகப் பண்ணிவிட்டால், சித்தத்திலுள்ள மலங்கள் நீங்குகின்றன. இந்தக் கர்மாவுக்கு என்றே சொல்லியிருக்கிற பலன்கள் வேண்டாம் என்று பலதாதாவான ஈச்வரனிடமே அவற்றை அர்ப்பணம் செய்து விட்டால், அவன் இவைகளை விடப் பெரிய பலனான சித்த சுத்தியை அநுக்கிரஹிப்பான். அப்புறம் ஞானவிசாரம் பண்ண மனசு பக்குவமாகும். அதனாலே காரியமில்லாமல் தானாக இருக்கிற தனிப்பெரும் ஆனந்தத்தை அடையலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மீமாம்ஸைக் கொள்கைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதாந்த மதங்களும் மீமாம்ஸையும்
Next