மீமாம்ஸைக் கொள்கைகள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மீமாம்ஸா மதத்துக் கொள்கை என்னவென்று இன்னம் கொஞ்சம் சொல்கிறேன். “ஸ்வாமி இருக்கிறாரா, இல்லையா?” என்ற கவலை வேண்டாம். இருந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும். நாம் பண்ண வேண்டியது வேதத்தில் சொன்னபடி கர்மாநுஷ்டானம் செய்து வருவதுதான். அந்தக் கர்மாவே பலன் தரும். காரியம் பண்ணினால் பலன் இல்லையா? நடுவில் ஸ்வாமி யென்றொருவர் எதற்கு? காரியமே பலனைத் தருகிறது. நம்மகத்துத் தோட்டத்தில் இருக்கிற வாழை இலையைப் பறித்து வருவதற்குக் கறிகாய்காரனுக்குப் பணம் கொடுக்க வேண்டுமா என்ன? இப்படித்தான் நம் கர்மாவே தருகிற பலனுக்கு ஈச்வரன் என்ற எவனுக்கோ ‘க்ரெடிட்’ கொடுப்பது என்பார்கள். க்ருஷி (உழவு) பண்ணுகிறோம். அதனால் நெல் விளைகிறது. அது மாதிரி வேதம் நமக்குத் தெரியாததைச் சொல்கிறபடி காரியம் பண்ணினால் பலனுண்டு. காரியத்துக்குப் பலன் தர ஸ்வாமி வேண்டுமென்கிற அவசியமில்லை. ஜகத்தை ஸ்வாமி உண்டு பண்ணியிருக்க வேண்டுமே யென்றால், ‘ஸ்வாமி உண்டு பண்ணுவானேன்? இப்பொழுது இருப்பது போலவே ஜகத் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறது. திடீரென்று உண்டானதாக ஏன் ஒப்புக் கொள்ள வேண்டும்?’ என்பார்கள்.

ந கதாசித் அநீத்ருசம் ஜகத் |

இந்த ஜகத் எப்பொழுதும் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. இப்படி இல்லாமல் எப்பொழுதும் இருந்ததில்லை. காரியம் பண்ணு, அதுவே பலன் கொடுக்கும். என்ஜினைச் சுற்றினால் மோட்டார் ஓடுகிற மாதிரி.

புத்திக்கு அகப்படாததை வேதம் சொல்லுகிறது. அதன்படி கர்மா பண்ணினால் பலன் உண்டாகிறது. அநாதியாக சப்தம் இருக்கிறது. அதுதான் வேதம். காலமும் ஆகாசமும் போல எப்பொழுதும் வேதமும் இருக்கிறது. நம்முடைய புத்திக்கு எட்டாததைச் சொல்ல வேதம் இருக்கிறது.

கெட்டது பண்ணினால் கெட்ட பலனும் நல்லது பண்ணினால் நல்ல பலனும் உண்டாகின்றன. காரியம் பலன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பலனை அநுபவித்துக் கொண்டு சுற்றிக்கொண்டேயிருக்கிறோம். இதற்கு ஸ்வாமி வேண்டாம். வேதம் சொன்ன வேலையைச் செய்யாமல் நாம் இருக்கக்கூடாது. அப்படியிருப்பது பாபம். அதனால் நமக்கு நரகம் கிடைக்கும்.

‘கர்மாவை நிறுத்தினால் பாபம் உண்டாகும். நித்தியமென்றும், நைமித்திகமென்றும், காம்யமென்றும் கர்மாக்கள் மூன்று விதமிருக்கின்றன. நித்திய கர்மாக்கள் எப்பொழுதும் பண்ணவேண்டியவை. ஒரு நிமித்தத்தில் பண்ணுவது நைமித்திகம். கிரஹணம் வருகிறது. அப்பொழுது ஸ்நானம், தர்ப்பணம் முதலியவை செய்யவேண்டும். யாராவது பெரியவர் நம் வீட்டிற்கு வந்தால், அவருக்கு உபசாரம் முதலியவை செய்ய வேண்டும். இவைகளெல்லாம் நைமித்திகம். ஒரு ஸந்தர்ப்பம் நேரும்போது பண்ணுவது நைமித்திகம். நித்திய-நைமித்திகங்களை எல்லோரும் அவசியம் பண்ணவேண்டும். மூன்றாவதான காம்யம் என்பது ஒரு பிரயோஜனத்தை இச்சித்துப் பண்ணவது. மழை வேண்டுமென்ற ஆசை இருக்கிறது; வருண ஜபம் பண்ணுகிறோம். பிள்ளை வேண்டுமென்ற ஆசை இருக்கிறது; புத்ர காமேஷ்டி செய்கிறோம். ஆயுளை உத்தேசித்து ஆயுஷ்ய ஹோமம் பண்ணுகிறோம். இவை காம்யம். இவைகளை ஒருவன் பண்ணித்தானாக வேண்டுமென்ற அவசியமில்லை.

இது மீமாம்ஸகர்கள் மதம். அவர்கள் சொல்லும் யுக்திகள் வேறு இருக்கின்றன.

நித்ய கர்மாவுக்கு லக்ஷணம் சொல்லியிருக்கிறார்கள். கர்மாக்கள் அகரணே ப்ரத்யவாய ஜனகம், கரணே (அ)ப்யுதயம் என்று இரண்டு வகை. செய்யாவிட்டால் உபத்திரவத்தைத் தருவது ஒன்று. செய்தால் ஸந்தோஷத்தைத் தருவது இன்னொன்று. ‘அகரணே’ என்றால் ‘செய்யாவிட்டால்’; ‘பிரத்யவாயம்’ என்றால் ‘உபத்திரவம்’. ‘கரணே’ என்பது ‘செய்தால்’; ‘அப்யுதயம்’ என்பது ஸந்தோஷத்திற்குக் காரணமான பலன். நல்ல கிருஹம், தனம் புத்திரர், கீர்த்தி, அறிவு இவைகளெல்லாம் அப்யுதயம் என்பதில் சேர்ந்தவை. வேதாந்தத்தில் ‘நிஃச்ரேயஸம்’ என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. எந்த ஸந்தோஷம் பெரிய ஸந்தோஷமோ அந்த பேரானந்தமாக மோக்ஷம்தான் நிஃச்ரேயஸம். சின்ன சந்தோஷத்துக்குக் காரணமானது “அப்யுதயம்”. இதைப்பற்றித்தான் மீமாம்ஸை சொல்லும். வேதாந்தத்தில் கூறப்பட்ட நிஃச்ரேயஸமான பெரிய ஸந்தோஷம், பேரானந்தம் பற்றி மீமாம்ஸை சொல்லாது. அது சொல்லும் ஸ்வர்கவாஸமும் அப்யுதயத்தைச் சேர்ந்ததுதான்.

வேலை என்றால் அதற்குக் கணக்குண்டு. தகுந்த பலனும் உண்டு. இது கர்ம மார்க்கம். செய்தால் நல்ல ஸந்தோஷம் உண்டாவது ஒரு வகை. செய்யாமற் போனால் உபத்திரவம் உண்டாவது ஒரு வகை.

நித்ய கர்மாவைச் செய்யாவிட்டால் உபத்திரவம் உண்டாகும்.

ஸந்தியாவந்தனம் பண்ணு என்றால், இக்காலத்தில், “செய்யமாட்டேன். அந்தப் பலன் எனக்கு வேண்டாம்” என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு மீமாம்ஸையால் ஸுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். ஸந்தியாவந்தனம் என்பது பலனுக்காகப் பண்ணும் காம்யமான (optional) கர்மா இல்லை; அதைப் பண்ணாமற் போனால் உபத்திரவம் உண்டாகும் என்று மீமாம்ஸை சொல்கிறது!

பண்ணினால் பலன் என்பது நியாயம். பண்ணாவிட்டால் உபத்திரவம் என்பது என்ன நியாயம்? ஸந்தியாவந்தனம் பண்ணாவிட்டால் தோஷம் என்கிறார்கள். பண்ணினால் ஐச்வரியம் வரும் என்று சொல்லமாட்டார்கள். செய்யாவிட்டால் உபத்திரவம் என்னும் வகையிற் சேர்ந்தது அது.

கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் முதலியவை பண்ணினால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுகிறார்கள். அவை “கரணே அப்யுதயம்” என்னும் வகையைச் சேர்ந்தவை. இது நியாயமாகப் படுகிறது.

“அகரணே ப்ரத்யவாயம்” என்பது நியாயமா? லோகத்தில் அதற்கு திருஷ்டாந்தம் உண்டா?

உண்டு.

நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;

ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், “உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்” என்றால் அவன் விடுவானா? ‘நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.’ என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது “அகரணே ப்ரத்யவாய ஜனக”த்தைச் சேர்ந்தது.

அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.

தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.

‘கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?’ என்று சிலர் கேட்கலாம்.

வேதத்தில் “தைத்திரீய ஸம்ஹிதை” (Vl-3) யில் “பிராம்மணன் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு” என்று சொல்லியிருக்கிறது. “வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிராத்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன” என்கிறது. கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.

இரண்டு ஸஹோதரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்க்கிறான். மற்றவன் வைதிகன். முதல்வனுக்குக் கச்சேரி(court)க்குப் போகிற கடன் ஏற்பட்டிருக்கிறது. அவன் கச்சேரிக்குப் போகாமல், “இரண்டாமவன் போகவில்லையே; நான் மட்டும் எதற்காகப் போகவேண்டும்?” என்றால், “நீதான் மனுப்போட்டாய்; வேலை செய்யும்படி உத்தரவு போட்டோம்; நீ வருவதாக ஒப்புக் கொண்டாய். ஆகையால், நீதான் வரவேண்டும்” என்று அதிகாரிகள் சொல்லுவார்கள். அதைப் போல நல்ல கதி வரவேண்டுமென்று நாம் முன் ஜன்மத்தில் செய்த ஸத்காரியம் என்பதான மனுப் போட்டிருக்கிறோம். அதற்கேற்றபடி கர்மாக்களைச் செய்ய வேண்டுமென்று உத்தரவாய் இந்த [நிகழ்] ஜன்மா லபித்திருக்கிறது. உத்தரவு பண்ணியவர் ஒருவர் கண்ணுக்குத் தெரியாமலே ஸர்வ ஸாஷியாக இருக்கிறார். இது வேதாந்தியின் மதம். எந்த வேலைக்காக ‘மனு’ப்போட்டோமோ அதுவே நமக்குப் பலனைத் தருகிறது என்பது மீமாம்ஸகர்கள் மதம். கர்ம பலன் தானே நடக்கும் (Automatic) என்பது இவர்களுடைய மதம்.

ஆகக்கூடி, இரண்டு அபிப்ராயங்களின் படியும் கர்மாவுக்கேற்ற ஜன்மம் நமக்கு வந்திருக்கிறது. இதற்கேற்ற கர்மாக்களை நாம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் உபத்திரவம் உண்டாகும். எங்கெங்கே பிறந்தோமோ அதற்கேற்பக் கர்மாக்களைச் செய்ய வேண்டும். லோகத்தில் ஆசார அநுஷ்டானங்கள் முறையாக இருக்க வேண்டும். வேதார்த்தங்களைத் தான் தெரிந்து கொண்டு, மற்றவர்கள் துக்கப்பட்டால் சாந்தப்படுத்திக் கொண்டு, அவர்களுடைய தொழில்களைப் போதித்துக் கொண்டு இருக்கவேண்டியது பிராம்மணன் கடமை. இம்மாதிரியே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கர்மாக்களைச் செய்ய வேண்டும். வாணியன் எண்ணைய் ஆட்டித்தர வேண்டும். சக்கிலியன் செருப்புத் தைத்துத் தரவேண்டும். பிராம்மணன் கண்டவற்றைத் தின்னாமல் தேஹம், மனஸ், ஆத்மா என்பவைகளில் பரிசுத்தனாக இருந்துகொண்டு பரமாத்மத் தியானம் பண்ணிக்கொண்டு இருக்கவேண்டும். மற்றவர்களையும் தியானம் பண்ணிக்கொண்டு இருக்கும்படிச் சொல்லவேண்டும். அதற்குத்தான் அவரவருக்கும் மானியம் ஏற்பட்டிருந்தது. பழைய காலத்தில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவனுடைய தொழிலைச் செய்வதற்காக மானியம் கொடுத்திருந்தார்கள். அந்தத் தொழிலை நிறுத்திவிட்டால் லௌகிகத்திலும் உபத்திரவம் உண்டாகும். அவனுடைய மானியத்தை பிடுங்கி மற்றொருவனுக்குக் கொடுத்து விடுவார்கள். இந்தக் காலத்தில் அந்த நிலத்துக்கு வரி போட்டு விடுவார்கள். ஆகவே சாஸ்திரப்படி அவரவருக்கான கர்மாக்களைப் பண்ணாதவர்களுக்குப் பாபம் உண்டாவதோடு லௌகிக ஸெளகர்யங்களும் இல்லாமற் போய்விடும். அந்தக் கர்மாவைச் செய்வதனால்தான் மரியாதை உண்டாயிற்று. எதற்காக, எப்படி நம்முடைய ஜன்மம் ஏற்பட்டதோ அதை அப்படியே பண்ணாமல் இருப்பதனால்தான் இப்போது நம்முடைய தேசத்தில் இந்த மாதிரி கஷ்டமான நிலைமை ஏற்பட்டுவிட்டது. அந்த அந்தத் தொழிலைச் செய்து கொண்டு வந்தால், அதனால் மற்றவர்களுக்கும் லௌகிக ஸெளகர்யங்கள் ஏற்படும். அந்த நிலை மாறிவிட்டதனால்தான் இப்பொழுது தரித்திர நிலை வந்துவிட்டது.

“அகரணே ப்ரத்யவாய ஜனக”மாகிய நித்ய கர்மாக்கள் ஸந்தியாவந்தனம் முதலியவை. நித்ய கர்மாவைப் பண்ணாவிட்டால் பாபம் உண்டாகிறது. பண்ணினால் பாபம் இல்லாமையாகிய ஒரு லாபம் உண்டாகிறது. அதற்குமேல், க்ஷேமம் உண்டாகிறது. கடனைத் தவணைப்பிரகாரம் கொடுத்தால் கடன் போய்விடுகிறதாகிய ஒரு லாபமும், அதற்குமேல் “நாணயமானவன்” என்ற நல்ல பெயரும் உண்டாகும். அந்த நாணயத்தால் வியாபார விருத்தி ஏற்படுகிறது. அதுபோல நித்திய கர்மாவினால் பாபம் இல்லாமற்போவது ஒன்று; சிரேயஸ் உண்டாவது இரண்டு; ஆக இரண்டு லாபங்கள் உண்டாகின்றன.

‘அகரணே ப்ரத்யவாய ஜநகம், கரணே அப்யுதயம்’ என்னும் இந்த இரண்டும் நமக்கும் (வேதாந்திக்களுக்கும்) உண்டு. நாமும் இவைகளை ஒத்துக் கொள்கிறோம்.

இந்த மாதிரி உள்ள கர்மாக்களை எப்பொழுதும் பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். அக்னிஹோத்ராதி ச்ரௌத கர்மாக்களையும், ஒளபாஸனம் முதலான ஸ்மார்த்த கர்மாக்களையும் தவறாமல் செய்துவர வேண்டும்.

“ஜீவனோடிருக்கிற வரையில் அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது. அதைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து கொண்டிருப்பதே போதும்” என்பது மீமாம்ஸகர் மதம். ஆனால் ஸந்நியாஸாசிரமத்தில் அக்னி ஹோத்ரம் முதலான கர்மாக்கள் இல்லை. இப்படிக் கர்மாக்களை விட்டால் அது பெரிய தோஷம் என்பார்கள். புத்தி பூர்வமாகக் கர்மாக்களை விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வது அவர்களுக்குக் கிறிஸ்துவனாகவோ துருக்கனாகவோ ஆவதைப் போன்றது. உபநிஷத் “கர்மாவைச் செய்து கொண்டு நூறு வருஷம் இருக்க வேண்டும்” என்கிறது (ஈசாவாஸ்யோபநிஷத்: 2வது மந்திரம்.) தைத்திரீய ப்ராஹ்மணம், “அக்னிஹோத்ர நெருப்பை அணைத்தால் வீரஹத்தி தோஷம் வருகிறது” என்று சொல்லுகிறது.

“கெட்ட கர்மாவைச் செய்தால் பாபம் என்பது போல நித்ய கர்மாவை விட்டாலும் பாபம். ஸந்நியாஸி என்பவன் கர்ம ப்ரஷ்டன். ஆகையால், அவனைப் பார்த்தாலும் பாபம்; பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்” என்பது மீமாம்ஸகர்கள் மதம், “பாபியைப் பார்த்தாலும், பேசினாலும், தொட்டாலும், அவனோடு சேர்ந்து பங்க்தி போஜனம் பண்ணினாலும் நமக்குப் பாபம் ஒட்டிக்கொள்ளும். அதுபோல ஸந்நியாஸியைப் பார்க்கவும் கூடாது” என்பது மண்டனமிச்ரர் முதலானவர்களின் அபிப்பிராயம்.

“வேதத்தில்தானே ஞான காண்டத்தில் ஸந்நியாஸம், ப்ரஹ்மம், மோக்ஷம், ஞானம் என்பவைகள் சொல்லப்பட்டிருக்கின்றன? அவைகளைச் சொல்லுவதும் வேதம்தானே? அப்படி இருக்க நீங்கள் அவைகளை வைகிறீர்களே?” என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

“ஞானம், ப்ரஹ்மம் என்பவை உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான். வேதம் என்பது என்ன? வேதம் சப்தம், அதாவது வார்த்தை. அது எதற்கு ஏற்பட்டது? தெரியாததைச் சொல்ல ஏற்பட்டது. அது சப்த ப்ரமாணம். கண்ணுக்கும் ஊகத்திற்கும் அகப்படாததைத் தெரிவிப்பது சப்த ப்ரமாணம். அது உபயோகமில்லாத ஒன்றைச் சொல்ல ஏற்பட்டதல்ல. எல்லா வார்த்தைகளுக்கும் இரண்டு வகைப் பிரயோஜனம் உண்டு. அதைச் செய், அல்லது அதைச் செய்யாதே என்பதுதான் சப்தத்தினுடைய பிரயோஜனம்.

“ப்ரவ்ருத்திர்வா நிவ்ருத்திர்வா நித்யேன க்ருதகேன வா|

பும்ஸாம் யேநோபதிச்யேத தத் சாஸ்த்ரம் அபிதீயதே||

“நமக்குக் காரியம் இல்லாமல் ஏதாவது வஸ்துவை மாத்திரம் சொல்லும் சப்தங்கள் வீண் வம்பைச் சேர்ந்தவை. அவை பிரயோஜனமில்லாதவை. காக்கா பறக்கிறது என்று ஒருவன் சொல்லுகிறான். அதைக் கேட்பதனால் என்ன பிரயோஜனம் உண்டாகிறது? காக்கா கருப்பு என்கிறான். அதனால் என்ன பிரயோஜனம்? நாளைக்கு ராத்திரி இங்கே உபந்நியாஸம் நடக்கும் என்றால் அதற்கு ஓர் அபிப்ராயம் உண்டு. எல்லாரும் வரவேண்டுமென்பது அதற்கு அர்த்தம். இது பிரவிருத்திப் பிரயோஜனம். கும்பகோணத்தில் நாளைக்கு உபந்நியாஸம் என்றால் இது வீண் வம்பு. இங்கிருந்து யார் போகப் போகிறார்கள்? பிரயோஜனம் இல்லாமல் எந்த வார்த்தையும் இருக்கக்கூடாது; ஒன்றிலே ஈடுபட வைக்கும் பிரவிருத்திப் பிரயோஜனமாவது, அதிலிருந்து விலக்கும் நிவிருத்திப் பிரயோஜனமாவது இருக்கவேண்டும். பஞ்ச மஹா பாதகங்களைச் சொல்லி, ‘இவற்றைப் பண்ணாதே’ என்று வேதம் சொன்னால் இது நிவிருத்திப் பிரயோஜனம். அந்தப் பாப காரியத்திலிருந்து விடுபடுவதே பயன். இந்த இரண்டுமில்லாத மற்றவை வெறுங்கதை. வேதம் இரண்டு பாகம். இன்னின்ன செய்ய வேண்டும் என்ற விதிகளையும், இன்னின்ன செய்யலாகாது என்ற நிஷேதங்களையும் சொல்லுவது ஒரு பாகம். அதுதான் கர்ம காண்டம். மற்றொரு பாகம், ஞான காண்டம் என்பது, வெறுமே கதை சொல்லும். கதைக்கு சொந்தமாகப் பிரயோஜனம் இல்லை. இந்த வேதக் கதைகள் விதியோடு சேர்ந்தால்தான் அர்த்தமாவது” என்று மீமாம்ஸகர்கள் சொல்வார்கள்.

தாதுபுஷ்டி லேஹ்யத்தைப் பற்றி ஒரு விளம்பரம் போட்டிருக்கிறது. சிங்கத்தோடு ஒரு மநுஷ்யன் குஸ்தி போடுவதுபோல அந்த விளம்பரத்தில் படம் போட்டிருக்கிறது. இந்தப் படத்தை எதற்காகப் போடுகிறான்? ‘எல்லோரும் ஏமாந்து பணத்தைக் கொடுத்து அதை வாங்குங்கள்’ என்பது தாத்பர்யம். அந்தப் படம் மாதிரி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கதைகளுக்கு விதிதான் பிரயோஜனம். இந்தக் கதையானது “அர்த்த வாதம்” எனப்படும். பல இடங்களில் நற்சாக்ஷிப் பத்திரம் (certificate) வாங்கியிருப்பதை ஒரு டாக்டர் மருந்து விளம்பரத்தில் ஏன் போடுகிறான்? இவன் மருந்தை எல்லாரும் வாங்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்கிறான். இம்மாதிரியான அர்த்தவாதங்களில் நிஜத்தோடு பொய் கலந்திருப்பதுமுண்டு. பொய்யை குணார்த்தவாதம் என்று சொல்லுவார்கள். (அநுவாதம் என்று ஒன்று சொல்லப்படும். தெரிந்ததையே அநுஸரித்துச் சொல்வது அது. நெருப்பு சுடும் என்பது தெரிந்தது. அதை மறுபடியும் சொல்லுவது அநுவாதம். மருந்தில் இன்ன இன்ன ஓஷதி இருக்கிறது என்று சொல்லுவது பூதார்த்தவாதம்.) குணார்த்தவாதம் என்பது பொய்க்கதையாவது சொல்லி விதிக்குப் பிரயோஜனப்படுத்துவது. கள் குடிக்காதே என்று சொல்லுவது விதி. கள் குடிப்பவன் உடனே தொலைந்தானென்று கதை எழுதினால் அது அர்த்தவாதம். கள் குடிக்கக்கூடாது என்பதுதான் தாத்பர்யம். கள் குடித்தால் மயக்கம் வருமென்பது அநுவாதம். ஆகக்கூடி, அர்த்தவாதமான கதைகள் எல்லாம் நம்மை விதிபூர்வமான ஒரு காரியத்தில் சேர்க்க வேண்டும்.

வேதத்தில் ஒரு யக்ஞத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணையாக ஸுவர்ணம் கொடு; வெள்ளி கொடுக்காதே என்று அங்கே சொல்லப்பட்டிருக்கிறது. யாகங்களில் வெள்ளி கொடுக்கக் கூடாதென்று தைத்திரீய ஸம்ஹிதையில் சொல்லியிருக்கிறது. இந்த இடத்தில் ஒரு நீளமான கதையைச் சொல்லி வெள்ளியைக் கொடுக்காதே என்று சொல்லுகிறது. நிஷேதத்தைக் காட்ட இந்தக் கதை சொல்லப்படுகிறது. (இன்னசெய்யவேண்டும் என்று நிர்ணயிப்பது விதி; இன்ன செய்யக்கூடாது என்பது நிஷேதம்). இந்த மாதிரியான அர்த்தவாதங்களுக்கு நேராக அதன் சப்தத்தில் பிரயோஜனமில்லை.

இந்த விஷயத்தைக் கொண்டுதான் மீமாம்ஸகர்கள் முன்சொன்ன ஞானகாண்ட ஆக்ஷேபணைக்குப் பதில் சொல்லுகிறார்கள்.

“பிரம்ம ஸ்வரூபத்தைப் பற்றித்தான் உபநிஷத் சொல்லுகிறது. அங்கே காரியத்தைச் சொல்லுகிறதேயில்லை. பிரம்மாநுபவம் என்பது காரியமே இல்லாத நிலை என்றே சொல்கிறது. வேதம் எப்பொழுது பிரமாணமாகும்? காரியத்தைச் சொன்னால்தான் வேதம் பிரமாணமாகும். இல்லாவிட்டால் வெறும் கதை சொல்கிறதற்கு ஸமானந்தான்; அர்த்தவாதந்தான். சும்மாயிருக்கிற ப்ரம்மத்தைப் பற்றிய உபநிஷத் அர்த்தவாதந்தான்.உள்ள வஸ்துவைப் பற்றி இந்த பாகம் சொல்லுகிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது உள்ள வஸ்துவா? செய்ய வேண்டிய காரியமா? ‘பிரம்மம்’ இருக்கிறது; ஆத்மா என்பதும் அதாகவே இருக்கிறது’ என்ற மாதிரி உள்ளதைச் சொல்வதில் நமக்கு எந்த காரியத்தையும் வேதம் கொடுக்கவில்லையே! யாகம், யக்ஞம் முதலியவைகளை நாம் செய்ய வேண்டும். இது மாதிரி நாம் நடத்த வேண்டிய காரியத்தைச் சொல்லத்தான் வேதம் வேண்டும். அதற்குத்தான் சப்தம் (வேதம்) ஏற்பட்டது. இருப்பதை அறிய சப்தம் வேண்டாம். இருப்பது எப்பொழுதாவது தன்னால் தெரியும். தெரியாவிட்டாலும் போகட்டும். ஆகையால் வெறுமே வஸ்துவைச் சொல்லும் வேத பாகம் அர்த்தவாதம். ஆகையினால் உபநிஷத் பிரமாணம் இல்லை. பின் எதற்காக அது இருக்கிறது? யக்ஞம் செய்பவனை உயர்த்திச் சொல்வதற்கு அது இருக்கிறது. கர்மாவுக்கு அபேக்ஷிதனான ஜீவனை ஸ்தோத்திரம் பண்ணி, அவன் கர்மாவை அதிகம் பண்ண வைப்பதற்காகத் தான் அப்படிச் சொல்லுகிறது. ஜீவனே பிரம்மம் என்று உபநிஷத் சொல்லுவது, கர்மாநுஷ்டானம் செய்பவனுக்கு ரொம்பவும் ஏற்றம் கொடுத்து ஸ்தோத்திரம் பண்ணுவது தான். எதற்கு இப்படி மிகையாக ஸ்தோத்திரம் செய்திருக்கிறது என்றால், எல்லாரையும் அந்தக் கர்மாநுஷ்டானங்களில் ஈடுபடுமாறு உத்ஸாஹப் படுத்துவதற்குத்தான். தாது புஷ்டி லேஹ்யம் சாப்பிட்டவன் சிங்கத்தோடு ஒரு நாளும் குஸ்தி போட முடியாது என்கிற மாதிரி இந்த ஜீவனும் பிரம்ம ஸ்தானத்தை அடைய முடியாது. உபநிஷத்து அப்படிப்பட்ட வெறும் கதைதான். “பிரம்மம், ஞானம், மோக்ஷம், ஈச்வரன் என்ற இந்தப் பேச்சே நமக்கு வேண்டாம். கர்மாவே நமக்கு எல்லாம். கர்மா செய்யாமல் இருப்பது தப்பு. ஸந்நியாஸியாவது தப்பு.” இதுதான் மீமாம்ஸகர்களின் அபிப்பிராயம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அர்த்த நிர்ணயம் எப்படி ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சங்கரர் தரும் பதில்
Next