நம் தேசத்தில் History (சரித்திரம்) இல்லை என்று ஒரு குறை சொல்லப்படுகிறது. புராணம் சரித்திரந்தான். ஆனாலும் இக்காலப் படிப்பாளிகள் கிறிஸ்துவுக்குப் பிற்பாடு ஒரு இரண்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது தவிர மற்ற எதையும் – புராணங்களில் சொல்லியிருப்பவைகளை ஹிஸ்டரியாக மதிப்பதில்லை. புராணங்களில் ஏதோ கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்று தங்கள் ஆராய்ச்சியில் தெரிவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களுக்குப் பிடித்த ஆரிய திராவிட பிரிவினைக் கொள்கை மாதிரியான பொய் விஷயங்களுக்கு மட்டும் புராணங்களில் ஆதாரம் இருப்பதாகக் காட்டிவிட்டு, பாக்கி அதில் வருகிற அற்புதமான விஷயங்கள் (miracles), அதீந்திரியமான விஷயங்கள் (supernatural) எல்லாம் கட்டுக் கதை, புளுகு மூட்டை என்று தள்ளி விடுகிறார்கள். புலன்களுக்கு அகப்படுகிற விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாக எதுவும் யதார்த்தத்தில் நடந்திருக்க முடியாது என்கிற தீர்மானத்தில் இவர்கள் இருப்பதால், ‘மிஸ்டரி’ [மர்மமான அதிசயங்கள்] நிறைய வருகிற புராணங்களை ‘ஹிஸ்டரி’ இல்லை என்று ஒதுக்கி விடுகிறார்கள்.
இப்போது தாங்கள் எழுதி வைத்திருக்கிற சரித்திரத்தை எல்லோரும் படிக்க வேண்டும் என்று ஸ்கூலிலேயே பாடமாக வைத்துவிட்டுப் புராணத்தைக் கழித்துக் கட்டுவது குழந்தைகளுக்கு நல்லது செய்வதாகாது. புராணங்கள் குழந்தைகளுடைய உள்ளத்தை நல்ல நெறிகளில் சேர்ப்பது போலச் சரித்திரத்தில் எதுவும் இல்லை.
சரித்திரம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. படிக்கத்தான் வேண்டும். புராணங்களும் சரித்திரம்தான். அதனால் அவற்றையும் படிக்க வேண்டும் என்கிறேன்.
ஏன் சரித்திரம் படிக்க வேண்டும் என்பதற்குச் சொல்கிற அநேக காரணங்களில் ஒன்று – ” History repeats itself ” என்பது. சரித்திரம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரி நடக்கிறது என்கிறார்கள். அதனால் பூர்வத்தில் எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால் அதிலிருந்து இனி எப்படி நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். பூர்வத்தில் நடந்ததிலிருந்து எதிர்காலத்துக்குப் படிப்பினைப் பெறலாம். இப்படியிப்படிச் சூழ்நிலை உருவாகிக் கொண்டு போனால் யுத்தம் ஏற்படும், ஜனங்களின் வாழ்வு கெட்டுப் போகும், ஒரு பெரிய நாகரிகமே விழுந்து விடும் என்பது சரித்திரத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. இதனால் அதே மாதிரியான சூழ்நிலைகள் இப்போது உருவானால் அவற்றை முதலிலேயே உஷாராக இருந்து தடுத்துவிட வசதியாக இருக்கும். இது சரித்திரத்தின் ஒரு பிரயோஜனம் என்கிறார்கள்.
கல்பத்துக்குக் கல்பம் ஒரே மாதிரியாக ஸம்பவங்கள் நடக்கின்றன; ஒவ்வொரு கல்பத்திலும் ராமாயணம், பாரதம், பாகவதம், தசாவதாரம் மற்றும் எல்லாப் புராணங்களும் நடக்கின்றன என்று நம் சாஸ்திரங்களில் சொல்லியிருப்பதைத்தான் History repeats itself என்று கொஞ்சம் மாறுதலான அபிப்பிராயத்தோடு சொல்லுகிறார்கள்.
ஆனாலும் நடைமுறையில் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிற ஹிஸ்டரியைப் பார்த்து யாராவது எந்தப் படிப்பினையாவது பெறுகிறார்களா என்று பார்த்தால் அதுதான் இல்லை! செங்கிஸ்கான், தைமூர், கஜினி, மாலிக்காஃபூர் போலப் பலபேர் அவ்வப்போது தோன்றி தேசங்களைச் சூறையாடி ஹதாஹதம் செய்திருக்கிறார்கள் என்று சரித்திரத்திலிருந்து தெரிகிறது. தெரிந்து கொண்டதால் மட்டும் இப்படிப்பட்ட வெறிப் போக்குகளை நிறுத்த முடிந்திருக்கிறதா என்ன? இவர்கள் மாதிரியே ஒரு ஹிட்லரும் முஸோலினியும் வந்து மறுபடி ஹதாஹதம் செய்கிறார்கள். இன்னும் கிட்டத்தில் பிரத்தியக்ஷமாகவே பார்க்கிறோம் – ஒரு லஞ்சம், ‘கரப்ஷன்’, வேண்டியவர்களுக்குப் பட்சபாதம் காட்டுவது, வேலை கொடுப்பது என்றெல்லாம் ஒரு ராஜாங்கத்தார் பண்ணினால் அதற்கு ஜனங்களின் ஆதரவு போய்விடுகிறது என்று எலெக்ஷனில் தெரிகிறது. அப்புறம் வேறே சிலர் ராஜாங்கத்தை அமைக்கிறார்கள். ஆனால் படிப்பினை ஒன்றும் பெற்றதாகத் தெரியக் காணோம்! அதே தோஷங்களை இவர்களும் செய்ததாக ஏற்பட்டு, அடுத்த எலெக்ஷனில் அதே கதி இவர்களுக்கும் உண்டாகிறது. ஒரு குறுகிய காலத்துக்குள்ளேயே இப்படி ஏற்படுகிறது. ஆகையால் History repeats itself என்று தெரிந்து கொண்டு விடுவதால் மட்டும் அதிலிருந்து நல்ல பாடம் எதையும் படிக்க முடியவில்லை என்று தெரிகிறது. ‘ரிபீட்’ ஆகாமல் ஹிஸ்டரியை நிறுத்தும்படிச் செய்வதற்கு அதில் எதுவும் இல்லை.
தர்மத்தை நாம் ஏற்கும்படியாகச் சரித்திரத்தோடு குழைத்துக் கொடுத்தால்தான் அது நம்மை நல்வழிப்படுத்தித் தப்பான ஸமாசாரங்கள் ‘ரிபீட்’ ஆகாமல் செய்ய உபாயமாகும். புராணம் இதைத்தான் செய்கிறது.
சரித்திரத்தில் வெறுமே காலவாரியாக ராஜாக்களின் வரலாற்றைத்தான் தந்திருக்கிறது. இதிலே கொடுங்கோலர்கள் கெடுதல் அடைந்தார்களா, உத்தமமான ராஜாக்கள் உயர்ந்த கதியைப் பெற்றார்களா என்பதற்கு முக்யமில்லை. கர்ம நியதிப்படி ஈச்வரன் இவர்களுக்கு இப்படிப்பட்ட பாப புண்ய பலன்களைக் கொடுத்துத்தான் இருப்பார். ஆனால் அது இந்த ஜன்மாவிலேயே கொடுக்கப்படவேண்டும் என்பதில்லை அல்லவா? பின் ஜன்மாக்களில் இந்தப் பலன்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை விசாரிப்பது ஹிஸ்டரியின் காரியமில்லை. விசாரித்து அறிகிற சக்தியும் சரித்திரக்காரர்களுக்குக் கிடையாது. ஒரு கஜினியோ, ஹிட்லரோ இந்த பூமியில் வாழ்ந்தவரை கொடி கட்டித்தான் பறந்தார்கள் என்றாலும் உயிர்போனபின் அவர்களுக்கு நரக வாஸம் கிடைத்தது; அல்லது ரொம்பவும் நீசமான மறு ஜன்மா ஏற்பட்டது என்றால் இதையும் புராணம் விசாரித்துச் சொல்லும். புராண கர்த்தாக்களுக்கு அந்த சக்தி உண்டு; இதைச் சொல்கிற லக்ஷ்யமும் உண்டு. ஹிஸ்டரி நிபுணர்களுக்கு இந்த இரண்டும் இல்லை. அதனால்தான் ஹிஸ்டரியில் பார்க்கிறவர்களில் அநேகரின் ஜீவிதத்திலிருந்து பாப புண்யங்களைப் பற்றி நாம் படிப்பினை பெற முடிவதில்லை.
புராணமும் சரித்திரந்தான் என்றாலும் அது பாப-புண்யங்களில் ஜனங்களுக்கு பாடம் கற்பித்து அவர்களை தர்மத்தில் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் ‘ஸெலக்ட்’ பண்ணிக் கொடுக்கிறது. தர்மசாலிகளாக இருந்ததால் அந்த ஜன்மாவிலேயே உயர்வை அடைந்தவர்கள் யாரோ, தர்மத்தை விட்டதால் அந்தப் பிறவியிலேயே கெடுதலை அடைந்தவர்கள் யாரோ, அப்படிப்பட்டவர்களின் கதைகளையே புராணங்கள் பெரும்பாலும் ‘ஸெலக்ட்’ பண்ணி நமக்குக் கொடுக்கின்றன. இல்லாவிட்டால் அடுத்த ஜன்மாக்களைச் சொல்லி அதில் பாத்திரங்கள் பாப-புண்ய பலன்களை அடைந்ததைச் சொல்லும். பாப-புண்ய பலன்களில் நம்மைச் சேர்க்காத புராணக் கதை எதுவுமே கிடையாது. ஆகையால், “பழைய சரித்திரங்களைப் படிப்பதனால் அந்தப் பழைய அநுபவங்கள் இனிமேல் நடக்க வேண்டியதற்கு வழிகாட்டியாக இருக்கும். நல்லவர்களாக இருந்து நல்ல காரியங்களைச் செய்து நன்மையை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியிருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். கெட்டவர்களாக இருந்து உலக க்ஷேமத்துக்குக் கேடு பண்ணிக்கொண்டு முடிவில் தாங்களே அதைவிடக் கஷ்டம் அடைந்தவர்களுடைய கதைகளைப் படிப்பதால் நாம் அந்த வழியில் போகாமல் லகானை இழுத்த மாதிரி இருக்கும்” என்பதாகச் சரித்திரப் படிப்புக்குப் பிரயோஜனம் சொல்வதானால், இந்தப் பிரயோஜனத்தை வாஸ்தவத்தில் தற்கால ஹிஸ்டரியால் அடைய முடியவில்லை. புராணத்தில்தான் அடைய முடிகிறது.
‘நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே காலவாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் வளர்த்திச் சொல்லவேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் எடுத்துத் கொள்ளும்படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். ஆத்மலாபமான சரித்திரங்களையே சொல்வோம்’ என்ற அபிப்பிராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
சந்திர வம்சம், சூரிய வம்சம் என்பது போலப் புராணங்களிலும் ராஜாக்களின் பரம்பரை முழுக்கச் சொல்லியிருக்கும். இவனுக்குப் பின் இவன் என்று பெரிய லிஸ்ட் கொடுத்திருக்கும். ஆனால் அவர்களில் நாம் நல்வழிப்படப் பிரயோஜனப்படாதவர்களின் கதையை ஒரு வரி, இரண்டு வரியில் சொல்லி முடித்திருக்கும்; அல்லது பேரை மட்டும் சொல்லி விட்டிருக்கும். நாம் படிப்பினை பெறும்படியானவர்களின் சரித்திரங்களையே விஸ்தாரமாகச் சொல்லியிருக்கும். உதாரணமாக த்ருவனின் [துருவனின்] அப்பாவான உத்தானபாதன், த்ருவனுக்கு அப்புறம் அரசாண்ட அவனுடைய பிள்ளை இவர்களைப் பற்றியும் பாகவத புராணத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஏதோ இரண்டு வரி, நாலு வரிதான் இருக்கும். பக்தி, விடாமுயற்சி, மனவுறுதி முதலியவற்றுக்குப் பாடமாக உள்ள த்ருவ சரித்ரத்தை மட்டும் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது.
புராணம் பொய்யென்று இங்கிலீஷ்காரர்கள் சொல்லி நம்முடைய தேசத்தின் ஹிஸ்டரியை எழுதினார்கள். அதிலே தங்களுக்குப் பிடித்த divide-and-rule [பிரித்து ஆளும்] கொள்கைகக்கு ஸாதகமான ரேஸ் தியரி முதலான அநேக விஷயங்களை ரொம்பவும் நடுநிலையிலிருந்து ஆராய்ச்சி பண்ணினது போலவே காட்டிச் சேர்த்துவிட்டார்கள். புராணம் பொய்யென்று இவர்கள் சொன்னார்கள் என்றால், இப்போது இவர்கள் எழுதிய சரித்திரத்திலும் பொய் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு உள்ளது உள்ளபடி இந்திய சரித்திரத்தை எழுதுவதற்கு (reconstruct செய்வதற்கு) முயற்சிகள் நடக்கின்றன. இப்படிச் செய்கிறவர்களுக்கும் அநேக கொள்கைகளில் வேண்டியது-வேண்டாததுகள் ( prejudice -கள்) இருக்கலாம். அதனால் என்னதான் நடுநிலையிலிருந்து எழுதுவதாகச் சொன்னாலும், எவ்வளவு தூரத்துக்கு முழுக்க நிஜமான சரித்திரம் உருவாகும் என்று சொல்வதற்கில்லை.
பதினெட்டுப் புராணங்களை எழுதிய வியாஸாசாரியாள், அநேக ஸ்தல புராணங்களை எழுதிய பெரியவர்கள், பக்தர்களின் சரித்ரங்களை எழுதிய சேக்கிழார் முதலியவர்கள்தான் வாஸ்தவத்தில் விருப்பு வெறுப்பில்லாமல் எழுதினவர்கள்.
ஸாம்ராஜ்யங்கள், சண்டை, படையெடுப்புக்கள், ராஜவம்சங்கள் இவைதான் சரித்திரம் என்று நினைப்பது ஸரியில்லை. எல்லா விஷயங்களுக்கும் சரித்திரம் உண்டு. அரசியல் சரித்திரத்தை மட்டும் ஹிஸ்டரியில் பிரதானமாக வைத்து விட்டார்கள். தர்ம விஷயங்களைப் பிரதானமாக வைத்து அதற்கு ராஜவம்சத்தை மட்டுமின்றி மற்ற புண்ய புருஷர்கள், ரிஷிகள், ஸாமானிய ஜனங்கள் முதலியோரின் கதைகளையும், மற்ற எல்லா விஷயங்களின் சரித்திரத்தையும் துணையாக சேர்த்துத் தருவனவாகப் புராணங்களில் இருக்கின்றன. புராணங்களைப் பார்த்தால் அந்தக் கால அரசியல் மட்டுமின்றி cultural life (கலாச்சார வாழ்வு), அக்கால வித்தைகள், ஸயன்ஸ்கள் எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் முக்யமாக சொல்லப்படுவதோ தர்மங்களும் ஆத்யாத்மிக க்ஷேமமுமாகும்.