மற்ற மதங்களில் இல்லாதது : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

உலகத்திலே பிரஸித்தமாயிருக்கும் மற்ற பெரிய மதங்களில் இல்லாதது இந்த யக்ஞம் என்கிற தத்வம்.

வேதத்தை ஆதாரமாக கொண்டதாலேயே நம் மதத்துக்கு வைதிக மதம் என்ற பெயர் இருக்கிறது. இந்த வைதிக மதத்துக்கும் லோகத்தில் இன்று இருக்கும் பாக்கிப் பெரிய மதங்களுக்கும் ஒரு பெரிய வித்யாஸம் இருக்கிறது. கிறிஸ்துவம், இஸ்லாம் முதலான மதங்களில் ஒரே ஒரு கடவுளையே அனைவரும் வழிபடுவதைத்தான் சொல்லியிருக்கிறது. வேதங்களிலும், ‘இருப்பது ஒரே கடவுள்தான்; அவனேதான் இந்த ஜீவனும்கூட’ என்று சொல்லியிருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட ஒரே பரமாத்ம வஸ்துவை ஞானமார்க்கத்தில் ஆத்ம விசாரம் பண்ணி பண்ணித்தான் அநுபவத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது. அந்த நிலை அடைவதற்கு ரொம்பவும் பக்குவம் வேண்டியிருக்கிறது. ஒரே கடவுளோடு நாம் ஐக்கியமாகி விடுகிற போது லோகமே நம் பார்வையிலிருந்து போய்விடுகிறது. அப்படிப்பட்ட நிலை வருவதற்கு நம்மை எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்வது என்றால், இந்த லோக வாழ்க்கையில் நாம் நன்றாக ஈடுபட்டிருக்கிற இப்போதைய நிலையிலேயேதான். இதிலே இருந்து கொண்டே தர்மமாக வாழ்க்கை நடத்தி, கர்மாக்களைப் பண்ணிக் கொண்டேயிருந்தால், அதனால் நாம் சித்த சுத்தி அடைந்து பக்குவமாகிக் கொண்டே போகிற போது லோகம் நம்மை விட்டுப் போய்விடும். இதற்கான தர்மங்களையும் கர்மங்களையும் வேதம் யதேஷ்டமாக நமக்குக் கொடுத்திருக்கிறது. இவற்றிலே ரொம்ப முக்கியமான கர்மாதான் யக்ஞம், யக்ஞம் என்பது. யாகம் என்று பொதுவிலே சொல்கிறது இதுதான். ‘வேள்வி’ என்று இதற்கு ரொம்பவும் பழைய தமிழ்ப் பெயர் இருக்கிறது. ஒரே பரமாத்மாவுக்காக இல்லாமல், பல தேவதைகளுக்கு ஆஹூதிகளை அர்ப்பணம் பண்ண வைப்பதே யக்ஞம். இந்த யக்ஞம் என்பதுதான், பாக்கி உலகப் பெரிய மதங்களில் இல்லாமல் நமக்கு மட்டும் இருப்பதாகும். கிறிஸ்துவம், இஸ்லாமில் உள்ள தெய்வக்கொள்கையும் இல்லாதது பௌத்தம். அந்த பௌத்தத்திலும் யக்ஞம் இல்லை.

யக்ஞத்திலே அநேக விதமான திரவியங்களை மந்திர பூர்வமாக அக்னியில் போடச் சொல்லியிருக்கிறது. இப்படிப் போடுவதற்கு ஹோமம் என்று பெயர். அக்னியில் போட்டாலும் அக்னிக்கே இந்தத் திரவியங்களை ஸமர்ப்பணம் பண்ணுவதாக அர்த்தமில்லை. அக்னியை உத்தேசித்த மந்திரங்களைச் சொல்லி அதில் போடுவது மட்டுந்தான் அக்னியைச் சேர்கிறது. ஆனால் மற்றத் தேவதைகளான ருத்ரன், விஷ்ணு, இந்திரன், வருணன், மாதரிச்வன் (வாயு) , ஸோமன் முதலானவர்களுக்கான ஆஹூதிகளையும் அக்னியில்தான் போட வேண்டும். அக்னி இவற்றைத் தானே எடுத்துக் கொள்ளாமல், இவற்றின் ஸாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைப்பான். பல அட்ரஸ்களுக்கு எழுதின கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி பல தேவதைகளுக்குமான ஹவிஸ்களை (அவிகளை) அக்னியொன்றிலேயே ஆஹூதி பண்ணவேண்டும்.

மற்ற மதங்களுக்கும் வைதிக மதத்துக்கும் இருக்கிற பெரிய வித்யாஸம் ஒரே ஒரு கடவுள் என்று சொல்லி அவருக்கு மட்டும் வழிபாடு பண்ணுவது என்றில்லாமல், பல தேவர்களுக்கு அக்னிமுகமாக ஆஹூதி பண்ணுவதுதான். தேவர்கள் என்பவர்கள் பகவத் ஸ்ருஷ்டியில் உயர்ந்த சக்தி படைத்த ஒரு இனம்.

லோகத்தில் மநுஷ்யர்களான நாம் ஒருத்தருக்கொருத்தர் சேவை செய்து கொண்டால் பகவான் பிரீ்தி அடைகிறார் என்று சொல்கிறோமல்லவா ? பூஜை, சடங்கு ஆகியவற்றை விட்டுவிட்ட சீர்த்திருத்தக்காரர்கள் கூட, ” மக்கள் சேவையே மஹேசன் சேவை” என்கிறார்களல்லவா? இதே மாதிரி பரமாத்மாவின் படைப்பினத்தைச் சேர்ந்த தேவர்களுக்கு நாம் யக்ஞத்தின் மூலம் சேவை பண்ணினாலும், அவர் அநுக்ரஹம் பண்ணி விடுகிறார்.

ஒரே கடவுள்தான், ஒரே ஸத்வஸ்துதான் அத்தனை தேவதைகளாகவும் ஆகியிருக்கிறது என்று வேதத்தில் அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு தேவதையைப் பற்றிச் சொல்லும்போதும், அதுவே பரமாத்மா என்று சிலாகித்துச் சொல்லியிருப்பதாலும் வேதம் ஒரே-கடவுட்-கொள்கை ( monotheism ) உடையதுதான் என்று தீர்மானமாகிறது. பல தேவதைகளைச் சொல்லியிருப்பதால், ‘வேதம் பல கடவுள்கள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. Polytheism- ஐச் சொல்கிறது’ என்று நினைப்பது பிசகு. ஒரே கடவுள் பல தேவதைகளாயிருப்பதைத்தான் அது சொல்கிறது. பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துவதற்காக ஒரே பரமாத்மாதான் தன்னுடைய சக்தியைக் கொண்டே இந்தத் தேவதைகள் என்ற அதிகாரிகளை உண்டாக்கியிருக்கிறார். இயற்கை என்று நாம் சொல்கிறதில் உஷ்ணம், மழை, காற்று, உணவு, ஸந்ததி, செல்வம், மநுஷ்யனின் உணர்ச்சிகள் முதலான பல விஷயங்களையும் நிர்வாகம் பண்ணுவதற்காக இந்த தேவதைகளை நியமித்திருக்கிறார். நம்மைப் படைத்தது போலவே தேவதைகளையும் படைத்திருக்கிறார். நம்மைத் தன்னிலிருந்தேதான் படைத்தார். அதாவது அவரேதான் நாமாக ஆனார். அதனால் தான் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்று அத்வைதத்தில் சொல்வது. இதே மாதிரி தேவர்களாகவும் அவரேதான் ஆகியிருக்கிறார். ஆனாலும் நாம் அத்வைதத்துக்கு நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்கிற வரையில், நம்மை வேறு வேறாக நினைத்துக் கர்மாக்களைப் பண்ணி நமக்குள் பரஸ்பர ஸஹாயம் செய்து கொள்வதால், தேவர்களையும் தனித்தனியாக நினைத்து, அவரவர்களுக்குரிய யக்ஞ ஆராதனையைப் பண்ணத்தான் வேண்டும் என்பது வேதம் போட்ட சட்டம். லோக வாழ்க்கை நமக்கும் ஸகல ஜீவகுலத்துக்கும் அநுகூலமாக இருக்க வேண்டுமானால் பிரபஞ்ச சக்திகளைப் பரமாத்மாவின் உத்தரவின்படி நிர்வாகம் பண்ணி வரும் தேவதைகளின் அநுக்ரஹம் நமக்கு இருக்கவேண்டும் என்று சொல்லி, அவர்களின் அநுக்ரஹத்தைப் பெற்றுத் தரவே அவர்களுக்குப் பிரீதியாக யக்ஞங்களைப் பண்ணவேண்டும் என்று வேதம் சொல்கிறது * . ஞானம் வந்தபின் இந்த தேவர்கள் வேண்டாம். நேராகப் பரமாத்மாவை உபாஸிக்கலாம். ஆனால் த்வைதப் பிரபஞ்சத்திலிருந்து கொண்டே, இதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளை நாம் செய்கிற காலத்தில், வேறு வேறாக தேவதைகளையும் உபாஸிக்கத்தான் வேண்டும் என்று வைத்திருக்கிறது.


* தேவஜாதியைப் பற்றிய விவரங்களுக்கு ‘தெய்வத்தின் குரல்: முதற்பகுதி’யில் ‘தேவர்கள்‘ என்ற உரை பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is யக்ஞம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேள்வியின் மூன்று பயன்கள்
Next