வேத பாஷ்யம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அர்த்தம் தெரியாமலே வேதத்தை அத்யயனம் பண்ணி அந்த சப்தத்தை ரக்ஷித்து வந்தாலும் போதும், மந்திர சக்தி வாய்ந்த அந்த சப்தமே க்ஷேமத்தைக் கொடுத்து விடும்; அர்த்தம் தெரியாமலும், ஒரு நம்பிக்கையின் பேரில் வேதாத்யயனம் பண்ணுவதுதான் வீர்யவத்தரம் – என்றெல்லாம் நடுநடுவே சொல்லியிருக்கிறேன். அதனால் அது தான் என் பூர்ணமான அபிப்ராயம் என்று அர்த்தமில்லை! வேதத்துக்கு அர்த்தம் தெரிந்து கொள்வதென்றால் அதற்கு ஏகப்பட்ட காலம் படிக்க வேண்டியிருக்கிறது. அத்யயனத்துக்கு அப்புறமும் இத்தனை வருஷம் ஒருவனைப் பாடசாலையில் கட்டிப்போடுவது என்றால் சிரமம்தான். அதனால்தான் அர்த்தம் தெரிந்துகொண்டுதான் வேதாத்யயனத்தை ரக்ஷிக்க வேண்டும் என்றால் ரொம்பப் பெரிசாக எதிர்ப்பார்த்து அடியோடு ஒன்றுமே நடக்காமல் போய்விடப் போகிறதே, அத்யயனத்துக்குக்கூட யாருமே வராமல் போய்விடப் போகிறார்களே என்று நினைத்து பாதி ஸீரியஸாகவும், பாதி விளையாட்டாகவும், ‘அர்த்தமே வேண்டாம்; [வேத] சப்தமே போதும்’ என்று சொல்லி வந்தேன்.

வாஸ்தவத்தில், சப்தத்தை மட்டும் ரக்ஷித்துத் தருகிறவர்களாவது நிறைய இருக்கவேண்டும்; அதோடுகூட வேத மந்திரங்களுக்கு அர்த்தத்தையும் தெரிந்து கொண்ட சிலராவது இருக்கும்படியாகவும் பண்ணத்தான் வேண்டும். இதனால்தான் வேதபாஷ்யத்தில் ரொம்பவும் அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

வேதத்துக்கு விசேஷமான அர்த்த கௌரவம் இருப்பதால்தான் அநேக மஹான்கள் அவற்றுக்கு பாஷ்யம் என்கிற பேரில் விரிவாக அர்த்தம் (உரை) எழுதியிருக்கிறார்கள். அவை வீணாகப் போகவிடலாமா?

நாம் நம் அகங்களில் விவாஹம் முதலான பல காரியங்கள், சிராத்தம் முதலான பித்ரு காரியங்கள், இன்னம் சில ஹோமங்கள், ஆவணியவிட்டம் (உபாகர்மம்) முதலான வைதிக காரியங்கள் என்று பலவற்றைப் பண்ணுகிறோம். இவற்றின்போது வாத்தியார் சொல்லிக் கொடுக்கிற மாதிரி அநேக வேத மந்திரங்களைச் சொல்கிறோம். அடியோடு இந்தக் கர்மாக்களை விட்டுவிடுகிற துர்பாக்கிய ஸ்திதி ஈச்வராநுக்ரஹத்தில் இதுவரை ஏற்படவில்லை. ஆனாலும் முன்னைக்கு இப்போது தினந்தினமும் கர்மாக்கள் க்ஷீணித்துக் கொண்டுதான் வருகின்றன. இதற்கு ஒரு முக்யமான காரணம், சொல்கிற மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாததுதான். அர்த்தம் தெரியாமலே, வாத்தியார் சொன்னதை ஒப்பிக்கிறது என்றால் இந்தக் காலத்தில் படிப்பாளிகளாக இருக்கப்பட்ட நாகரிகக்காரர்களுக்கு அதிலே ஈடுபாடு இருப்பதில்லை. அர்த்தம் தெரியாவிட்டாலும், சிரேயஸ் என்று நம்பிக்கையோடு சொல்கிற சிரத்தையை இந்தக் காலத்தில் எதிர்ப்பார்க்க முடியாது. வாஸ்தவத்திலும், ஒவ்வொரு சடங்குக்கும் வெவ்வேறு மந்திரம் இருப்பதாலேயே அததற்கும் பொருத்தமான அர்த்தத்தோடுதான் அவை இருக்கின்றன என்று ஆகிறது. அந்த தாத்பரியத்தைப் தெரிந்து கொண்டால், அவற்றில் பலவற்றுக்கு scientific basis [விஞ்ஞான பூர்வமான ஆதாரம்] இருப்பதாகத் தெரிகிறது; இன்னும் பல மந்திரங்களுக்கு emotional appeal [உணர்ச்சி பூர்வமான கவர்ச்சி] இருப்பது அவற்றுக்கு அர்த்தம் தெரிகிறபோதுதான் வெளியாகிறது. இப்படி அர்த்தம் தெரிந்தால் ஈடுபாடு உண்டாகிறது. இதனால் தான் ஈடுபாடே இல்லாமல் மொண மொண என்று எதையாவது சொல்வதை ‘திவச மந்திரம்’ என்றே சொல்கிற வழக்கம் வந்துவிட்டது! ஆகையால், இனிமேலாவது திவஸ மந்திரம் உள்பட எல்லாவற்றுக்கும் அர்த்தம் தெரியும்படியாகப் பண்ண வேண்டும்.

எப்படிப் பண்ணுவது? முதலில் வாத்தியாருக்கு அர்த்தம் தெரிய வேண்டும். இப்போது பெரும்பாலான வாத்தியார்களுக்கே அர்த்தம் தெரியவில்லை. ஒரு கர்த்தா அல்லது யஜமானன் ‘பண்ணி வைக்கிற’ வாத்தியாரை, “இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. இப்படியிருந்தால், பண்ணுகிறவனுக்கு சிரத்தை எப்படிக் குறையாமல் இருக்கும்?

இன்றைக்கு உள்ள பல நடுத்தர வயசுக்காரர்களுக்கு, “நாம் சொல்லும் மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன?” என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கிறது என்றே எனக்கு நம்பிக்கை. அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளாமல், வெறும் சப்தத்தைக் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிறது என்பதாலேயே அவர்களுக்குக் கர்மாவில் சிரத்தை குறைகிறது என்பது என் அபிப்பிராயம். ஆதலினால் வைதிக விருத்தியை (உபாத்யாயத் தொழிலை) மேற்கொள்ள இருக்கிறவர்களுக்கு வேத பாஷ்யத்திலும் நல்ல ஞானத்தை ஏற்படுத்தி, அவர்கள் அர்த்தம் சொல்லும்படியாகப் பண்ண வேண்டும் என்று பிரியாஸை எடுத்திருக்கிறோம்.

அர்த்தம் தெரியாமல் வேதம் சொல்கிற பிராம்மணனை [வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றான) நிருக்தத்திலேயே சபித்திருக்கிறது.

நமக்கெல்லாம் அர்த்தம் தெரியவேண்டும், கர்மாக்களில் சிரத்தை ஏற்படவேண்டும் என்பதற்காகவேதான், அநேகம் பெரியவர்கள் வேதங்களுக்கு பாஷ்யங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ மத்வாசாரியார்கூட ரிக்வேத முதல் காண்டத்தின் முதல் நாற்பது ஸூக்தங்களுக்கு பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஸ்கந்த ஸ்வாமி என்பவரும் ரிக்வேத பாஷ்யம் செய்திருக்கிறார். கிருஷ்ண யஜுர் வேதத்துக்கு பட்ட பாஸ்கரரின் பாஷ்யம் இருக்கிறது. சுக்ல யஜுஸுக்கு மஹீதரரின் பாஷ்யம் இருக்கிறது. ஸமீப காலத்தில் கூட தயானந்த ஸ்ரஸ்வதி, அரவிந்த கோஷ், அரவிந்த கோஷின் வழியை அநுஸரித்து கபாலி சாஸ்திரி என்று பல பேர் பாஷ்யம் செய்திருக்கிறார்கள்.

இப்படி பல இருந்தாலும் ஸ்ரீ ஸாயணாசாரியாள் பண்ணின வேதபாஷ்யந்தான் வெள்ளைக்காரர்கள் முதற்கொண்டு authoritative (அதிகார பூர்வமானது) என்று ஒப்புக்கொள்ளும்படியாக விசேஷமாகப் பிராசித்து வருகிறது. பதினாலாம் நூற்றாண்டிலே தோன்றி விஜயநகர ஸாம்ராஜ்ய ஸ்தாபனம் பண்ணி, ஆதிசங்கர பகவத் பாதாளின் மடங்களை புது ஜீவனோடு புனருத்தாரணம் பண்ணின மஹா புருஷரான ஸ்ரீ வித்யாரண்ய ஸ்வாமிகள்தான் இந்த ஸாயணாசார்யர்கள். ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்கிற நாலில் யஜுஸிலேயே கிருஷ்ண யஜுஸ், சுக்ல யஜுஸ் என்று இரண்டு இருப்பதால் மொத்தம் ஐந்துவேதம் ஆகிறது. இந்த ஐந்து வேதங்களுக்கும் ஸாயனர் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். அவருக்கு முன்னாலும் பலர் வேத பாஷ்யம் பண்ணியிருந்தாலும், இப்படி ஐந்து வேதங்களுக்கும் பண்ணினவர் அவர் ஒருத்தரே. இதோடு, பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலான சாஸ்திரங்களிளும் பல க்ரந்தங்களை இயற்றியிருக்கிறார். ஒரு சாம்ராஜ்யத்தில் மந்திரி மாதிரி நிர்வாகப் பொறுப்பு வகித்துக் கொண்டே இத்தனை அத்யாத்ம நூல்களையும் ஒருத்தர் பண்ணினார் என்று நினைத்தாலே ஆச்சரியமாயிருக்கிறது.

அவர் பண்ணின வேத பாஷ்யந்தான் ஆரம்பத்திலிருந்து வெகுவாகப் பிரசாரத்தில் இருந்தது. இனிமேலே அது போய் விடுமோ என்ற பெரிய விசாரம் உண்டாயிற்று. வேத அத்யயனம் செய்தவர்களானால், மேலே பாஷ்யம் படித்து அர்த்தம் தெரிந்து கொள்ளாமலே உபாத்யாய வ்ருத்திக்குப் போய் விடுவதாகவும், காவியங்களை (சாஸ்திரங்களையும் கூடத்தான்) வாசிப்பவர்களோ அத்யயனம் கூடப் பண்ணாமல் நின்றுவிடுவதாகவும் ஆகி வந்ததால், வேதபாஷ்யம் வரவர ரொம்ப மங்கிக்கொண்டு வந்தது. அந்த சமயத்தில் தான் முன்னே சொன்னபடி இதை ரக்ஷிப்பதற்காக ஷஷ்டியப்த பூர்த்தி ட்ரஸ்ட் ஏற்படுத்தப்பட்டது.

முதலில் இந்த ட்ரஸ்டின் ஆதரவில் பரீக்ஷைகள் ஆரம்பிக்கிறபோது, வேத பாஷ்யம் என்பது பிரசாரத்தில் இல்லாமல் புஸ்தகத்தில் மட்டுந்தான் இருந்தது. புஸ்தகத்தை வாங்க ஆளே இல்லையே என்று பிரசுரித்தவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயம் அது. இந்த ட்ரஸ்ட் ஏற்பட்டபின் நாங்களே பாஷ்யம் படிப்பவர்களுக்கு உபகாரச் சம்பளம், ஸம்மானம் இவற்றோடு புஸ்தகமும் வாங்கிக் கொடுத்து விடுவதால், நீண்ட காலமாக விலை போகாத புஸ்தகங்கள் எல்லாம் விற்பனை ஆயின. பிரஸ்களில் பாஷ்ய புஸ்தகம் ஸ்டாக் இல்லாமல், இனிமேல் வாசிப்பவர்களுக்கு புஸ்தகத்துக்கு என்னடா செய்வது என்று நாங்கள் கவலைப்படும் படியாக நிலைமை மாறிற்று! பராசக்தியின் அநுக்ரஹத்தால் தான் இப்படி ஆயிற்று. அந்த அநுக்ரஹ பலம் இருக்கிற வரை, புஸ்தகம் இல்லாததால் பாஷ்யம் படிப்பது நின்று போச்சு என்ற ஸ்திதி ஒருநாளும் ஏற்படாது. இப்போது இருப்பதும் போதாது. இன்னும் நிறையப் பேர் வேதபாஷ்யம் படிக்க வரவேண்டும்.

நாம் ஒரு விவாஹம் செய்கிறோம், உபநயனம் செய்கிறோம், ஸீமந்தம் செய்கிறோம் என்றால், அதற்கு இரண்டு நாள் முந்தி பாஷ்யக்ஞரான வேத பண்டிதரை வ‌ரவழைத்து, அதிலே பிரயோகமாகிற ம‌ந்திரங்களுக்கு என்ன அர்த்த‌ம், சடங்குகளுக்கு என்ன‌ தாத்பரியம் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவெண்டும். கர்மாவைப் பண்ணுகிறபோதே கேட்டுத் தெரிந்து கொள்வதென்றால் பொழுது இருக்காது. முன்னாடியே தெரிந்து கொண்டால்தான் மனஸிலும் ஊறும்; கர்மா பண்ணுகிறபோது அதில் மனஸாரப் பிடிப்பும் இருக்கும்.

இப்போது நடக்கும் கல்யாணங்க‌ளில் ஒரு மாஸத்துக்கு முன்கூட அவகாசம் இருப்பதில்லை. யார் Band வைக்கலாம், யார் டான்ஸ் வைக்கலாம், எப்ப‌டி ஊர்வல‌ம் விடலாம் என்று ஏற்பாடு பண்ணுவதற்கே காலம் போதமாட்டேன் என்கிறது! எதுதான் இத்தனைக்கும் உயிர்நிலையோ, எதை வைத்துதான் கல்யாணமோ அந்த ம‌ந்திரங்களையும், அவற்றைச் சொல்லி நடத்தி வைக்கும் வைதிக‌ர்களையுந்தான் கடைசி பக்ஷமாக வைத்திருக்கிறோம்! யாருக்காவ‌து சிரத்தை ஏற்பட்டு, அவகாசமும் கிடைத்து, தான் செய்யவேண்டிய கர்மாக்களின் மந்த்ரார்த்தங்களை தெரிந்து கொள்ளப் பிரியப்பட்டால், அதைச் சொல்லி விளக்குவதற்குச் சிலரையாவது தயார்ப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில்தான் வேதபாஷ்யம் சொல்லிக் கொடுத்து பரீக்ஷைகள் நடத்துகிறோம்.

விவாஹம், உபநயனம் என்று ஒரு கர்மாவின் பெயரைச் சொல்லிப் பத்திரிகை போட்டு அதற்காக ஊர் கூட்டி, பந்துக்களை வரவழைத்து, ஆயிரக்கணக்கில் செலவும் செய்கிறோம். ஆனால் அந்த கர்மாவுக்கு உரிய கவனத்தைச் செலுத்துவதில்லை! அதன் அர்த்தம் என்ன, தாத்பரியம் என்ன என்பதையே தெரிந்துகொள்ள முயலுவதில்லை என்றால் அது சரியேயில்லை.

அர்த்த‌ம் தெரிந்து செய்தால்தான் பலன் ஜாஸ்தி என்று சொல்லியிருக்கிறது. கர்மாவை விட்டுவிடுகிற துணிச்சல் வராமல் இன்னமும் பண்ணிக் கொண்டிருக்கிறவர்கள், அர்த்தத்துக்கான முக்யத்வத்தைக் கொடுக்கத்தான் வேண்டும். கர்மாவை விட்டுவிட்டால் தப்பு என்று ஏதோ ஒரு பயம் இருப்பதால்தானே, இன்னமும் செய்து வ‌ருகிறோம்? அதே மாதிரி, இதற்கு அர்த்தம் தெரியாமல் செய்தாலும் தப்பு என்ற பயம் ஏற்பட்டு, பண்டிதர் மூலமாக அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கர்மாவை செய்கிறவர்கள் அர்த்த‌ம் தெரிந்து செய்தாலே அதன் பலனுக்குள்ள வீரியமும் ஜாஸ்தியாகிறது. யதேவ வித்யயா கரோதி….ததேவ வீர்யவத்தரம் பவதி– என்று [சாந்தோக்ய உபநிஷத்தில்: I.1.10] சொல்லியிருப்பதை நம்ப வேண்டும்.

கர்த்தாவாக ஒருவன்தான் இந்த மந்திரத்தைச் சொல்லிக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான்; அல்லது பூணூல் போட்டுக் கொள்கிறான்.பாக்கி வந்திருக்கிறவர்கள் விருந்து, பேச்சுக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி, மேளம் என்று இவற்றிலேயே ஸந்தோஷப்பட்டுவிட்டுப் போய்விடலாமா? கூடாது. நம் எல்லாருடைய உயர்ந்த மரியாதைக்கு உரிய வேத மந்திரங்கள் சொல்லப்படும்போது அதைக் கவனித்து கௌரவம் செய்ய வேண்டும். அதுவே மற்றவர்களுக்கும் சிரேயஸைத் தரும். மற்றவர்களும் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு விட்டால், கர்த்தாவாக இல்லாமல் வெறுமே கேட்டால்கூட, அவர்களுக்கும் புண்ணியம் ஏற்படும்.

அச்வமேத யாகம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அதைக் கர்த்தாவாக, யஜமானனாக இருந்து கொண்டு செய்கிற யோக்யதையும், அதிகாரமும் எல்லா ராஜாக்களையும் ஜயித்து அடக்கிய ஸார்வபௌமனான ஒரே ஒரு மஹாராஜாவுக்குத் தான் உண்டு. இதனால் எந்த ஒரு காலத்தை எடுத்துக் கொண்டாலும், அப்போது லோகம் பூராவிலும் ஒரு ராஜாதான் இந்த யாகம் செய்யக்கூடிய அதிகாரியாகிறான். இந்த அச்வமேத யாகத்துக்கோ வேறெந்த கர்மாவுக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான புண்ய பலன்களை சொல்லியிருக்கிறது. “ஒரு தலைமுறையை எடுத்துக் கொண்டால், லோகம் முழுதிலும் ஒருத்தனுக்குத்தான் இத்தனை புண்ணியமும் சேரும்படி இருக்கிறதே! வேதத்தில் இப்படி ரொம்பவும் பக்ஷபாதம் செய்து மற்ற அத்தனை பேருக்கும் இந்தப் புண்ணியம் இல்லாமல் செய்திருக்கிறதே! இத்தனை பலம், படை வசதி, திரவிய வசதி இருக்கிறவனுக்குத்தான் உயர்ந்த புண்யங்கள் அத்தனையும் [கிடைக்கும்] என்றால், அவனை விட நல்ல சீலங்களோடு இருக்கிற மற்றவர்களுக்கு வஞ்சனை செய்த மாதிரியல்லவா இருக்கிறது? வேதம் எங்கேயாவது இப்படிச் செய்யுமா?” என்று தோன்றுகிறது.

வாஸ்தவத்தில் வேதம் இப்படிப் பக்ஷபாதம் பண்ணவே இல்லை. வேத கர்மா ஒன்று பண்ணினால், கர்த்தாவுக்கு விசேஷ பலன் உண்டாகிற போதே, லோகம் முழுதிற்கும் அது நல்லதைப் பண்ணத்தான் செய்யும். இங்கே இருட்டாக இருக்கிறது என்று நான் ஒரு லைட் போட்டுக் கொண்டால் அது எனக்கு மட்டுமா வெளிச்சம் கொடுக்கிறது? இன்னம் பத்துப் பேருக்கும் கொடுக்கிறதோ இல்லையோ?

கர்த்தாவுக்கு விசேஷமான் பலன், மற்றவர்களைவிடக் கூடுதலான பலன் என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றவர்கள்கூட அவன் மாதிரிக் கூடுதலான பலனை–அவனுக்கு ஸமமான பெரிய பலனை–பெறுவதற்கு ஒரு வ‌ழியும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது; வேதத்திலேயே சொல்லியிருக்கிறது. ஒரு ராஜா அச்வமேத‌ம் பண்ணுகிறான் என்றால், மற்றவர்கள் அப்ப‌டிச் செய்ய‌ முடியாவிட்டாலும், எப்ப‌டி செய்வ‌து என்ற கிரமத்தை தெரிந்து கொள்ளலாம் அல்லவா? அந்த‌ மந்திரங்களைத் தாங்களும் கவனிக்கலாமல்லவா? அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாமல்லவா? இப்ப‌டியெல்லாம் செய்துவிட்டால் மற்றவர்களுக்கும் யாகம் செய்த‌ பூர்ண ப‌லனே உண்டாகி விடுகிறதாம். இப்ப‌டி வேதத்தில் அச்வ மேத ப்ரகரணத்திலேயே சொல்லியிருக்கிறது.

இதே ரீதியில் கல்யாணமாகட்டும், அபர காரியமாகட்டும் [ஈமச்சடங்காகட்டும்] எதிலும் கலந்து கொள்கிறவர்களும் அர்த்த ஞானத்தோடு மந்திரங்களை கவனித்து வந்தாலே, அவ‌ர்களுக்கும் மஹத்தான புண்ணியம் கிடைக்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பிராம்மணர் கடமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஷடங்கங்கள்
Next