ஹார்மோனியத்திலும், நாயனத்திலும், புல்லாங்குழலிலும் காற்றைப் பலவிதமாக அளவுபடுத்திச் சில இடைவெளிகளால் விடுகிறதால்தானே சப்தம் உண்டாகிறது? நம் தொண்டையிலும் அப்படிப்பட்ட அமைப்பு இருக்கிறது. தொண்டை மட்டுமில்லை; நாபிக்குக் கீழே மூலாதார ஸ்தானத்திலிருந்து சுவாஸம் என்கிற காற்றின் கதியைப் பல தினுசில் அளவு படுத்திக் கொண்டு வருவதால்தான் நாம் பேசவும் பாடவும் முடிகிறது. பகவான் பண்ணின இந்த மநுஷ்ய வாத்யம் ஹார்மோனியம், நாயனம் முதலியவற்றை விட சிரேஷ்டமானது. எப்படியென்றால், அவற்றில் வெறும் ஒலிகளை மட்டுந்தான் எழுப்ப முடியும். அ, க, ச, ங மாதிரியான அக்ஷரங்களை எழுப்ப முடியாது. மநுஷ்யனுக்கு மட்டுமே இந்தத் திறமை இருக்கிறது. மிருகங்களும் கூட ஏதாவது ஒரிரண்டு விதமான சப்தங்களைத்தான் போடமுடிகிறதே தவிர, இப்படி இத்தனை ஆயிரம் அக்ஷரங்களை எழுப்ப முடியாது.
மநுஷ்யனுக்கு மட்டுமே இந்த ஆற்றலை ஈச்வரன் தந்திருக்கிறான் என்பதாலேயே அதன் முக்கியத்துவத்தை அறியலாம். இவ்வளவு முக்கியமான ஒன்று, இப்போது நாம் பண்ணுகிற மாதிரி விருதாப் பேச்சில், அரட்டையில் வீணாகக் கூடாது. இதை வைத்துக் கொண்டு தேவ சக்திகளைப் பிடிக்க வேண்டும். அதனால் உலக நலனை உண்டாக்க வேண்டும்; நம் ஆத்மாவை உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த மூன்று காரியங்களையும் செய்யும் சப்தங்களாகத்தான் வேத மந்திரங்களை ரிஷிகள் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டால் உச்சாரணத்துக்கே இத்தனை மதிப்பு கொடுத்து சிக்ஷா சாஸ்திரம் என்ற ஒன்று ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது புரியும். அதிலே ரொம்பவும் மைன்யூட்டாக [நுணுக்கமாக] இன்றைய பாஷா சாஸ்திர நிபுணர்களும், ஸயன்டிஸ்ட்களுங்கூட ஆச்சரியப்படும் படியாக, அடிவயற்றிலிருந்து ஆரம்பித்து இன்னின்ன மாதிரிக் காற்று புரளும்படியாகப் பண்ணி, அது இன்னின்ன இடத்திலே பட்டு, வாய்வழியாக இப்படியிப்படி வரவேண்டும் என்று அக்ஷரங்களை அப்பழுக்கில்லாமல், அக்யூரேட்டாக நிர்ணயம் பண்ணிக் கொடுத்திருக்கிறது.
காற்றானது இப்படி நமக்குள்ளே பல விதமாகச் செல்கிறபோது அதுவும் ஒரு தினுசில் யோக ஸாதனையாகவே ஆகிறது. ச்வாஸ கதியினால் நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால்தான் நம்முடைய உணர்ச்சிகள், சக்திகள் எல்லாம் உருவாகின்றன என்றும், ‘அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உண்டு’ என்றபடி இதே சலனங்கள் வெளி லோகத்திலும் அநேக விதமான அதிர்வுகளை ஏற்படுத்தி உலக வியாபாரத்தை உண்டாக்குகிறது என்றும் முன்னேயே சொன்னேனல்லவா? இதனால்தான் மூச்சையடக்கி யோக ஸித்தி பெற்ற மஹான்களுக்கு உள்ள அதே சக்தி மந்திர ஸித்தி பெற்றவர்களுக்கும் உண்டாகிறது. யோகம் என்று நாம் பொதுவிலே சொல்வது ராஜ யோகம் என்றால், இதை மந்திர யோகம் என்றே சொல்லலாம்.
மந்திரங்களில் ஒவ்வொரு அக்ஷரமும் இப்படி உண்டாக வேண்டும், அதன் ஸ்வரம் இப்படியிருக்கவேண்டும், ‘மாத்திரை’ என்பதான அதன் நீளம் இப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் சிக்ஷா சாஸ்திரம் விளக்குகிறது. ‘மாத்திரை’ என்பதில் குறில் நெடில் என்பன போன்ற விஷயங்கள் விளக்கப்படும்; குறிலுக்கு ‘ஹ்ரஸ்வம்’ என்றும், நெடிலுக்கு ‘தீர்க்கம்’ என்றும் பேர். வார்த்தைகளை ஸந்தி பிரிக்காமல் சேர்த்துச் சொல்கிறதற்கான guidance முதலான அநேக விஷயங்கள் – அத்யயனம் செய்கிறவர்களுக்கு உறுதுணையான விஷயங்கள் – சிக்ஷா சாஸ்திரத்தினாலேயே தெரிய வருகின்றன.
‘க’ மாதிரியான ஒரு சப்தம் கழுத்துக்கும் தொண்டைக்கும் நடுவேயிருந்து இப்படி வரவேண்டும்; இன்னொன்றிலே மூக்காலும் (nasal) வரவேண்டும் (அதாவது ஞ மாதிரியானவை); இன்னின்ன பல்லிலே நாக்குப் பட்டு வரவேண்டும் (‘த’ முதலிய சப்தங்கள்) ;இன்னின்ன மேலண்ணத்தில் நாக்குப் பட ஒலிக்க வேண்டும் (‘ல’ போன்றவை) ; முழுக்க உதட்டை மடித்து வரவேண்டிய சப்தம் (‘ம’) ; பல்லும் உதடும் சேர்ந்து உண்டாக்க வேண்டியது (‘வ’- labio-dental என்று சொல்கிறது) – என்றிப்படி ரொம்பவும் நுட்பமாக அக்ஷர லக்ஷணங்களைச் சொல்லியிருக்கிறது. இது ரொம்பவும் scientific -ஆக [விஞ்ஞான பூர்வமாக] இருக்கிறது. இப்படியிப்படி அங்கங்களையும் தசைகளையும் மூச்சையும் இயக்கினால் இன்ன அக்ஷரம் வரும் என்று சிக்ஷா சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடியே நாம் நடைமுறையில் செய்து பார்த்தால் இருக்கிறது. ஸயன்ஸாக இருந்துகொண்டே இது மந்திர யோகமாக, சப்த யோகமாகவும் இருக்கிறது.