சிக்ஷை என்பது வேதத்தின் ஆறு அங்கங்களில் பிரதம அங்கம். வேதத்துக்கு நாசி (மூக்கு) ஸ்தானம் சிக்ஷை. மூக்கு என்பதால் மோந்து பார்க்கிற சின்ன உபயோகத்துக்காக ஏற்பட்டது என்று [அர்த்தம்] இல்லை. மூக்கினால்தானே மூச்சு விடுகிறோம்? நமக்குப் பிராணாதாரமான சுவாஸத்தை விடுவதற்கு நாசி உதவுகிறாற்போல், வேத மந்திரங்களுக்கு உயிர் மூச்சாக இருக்கிற அங்கம் சிக்ஷை.
வேத மந்திரங்களுக்கு உயிர் எதில் இருக்கிறது? மந்திரங்களின் ஒவ்வொரு எழுத்தையும், அதன் பரிமாணம் எப்படியிருக்க வேண்டுமோ அப்படிச் சரியாக உச்சரிக்க வேண்டும். ‘அக்ஷர சுத்தம்’ என்று இதற்குப் பெயர். அதோடுகூட ஒவ்வொரு எழுத்தையும் உயர்த்திச் சொல்வதா, தாழ்த்திச் சொல்வதா, ஸமனாகச் சொல்வதா என்ற பாகுபாடும் உண்டு. இந்த மூன்றையும் முறையே உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்று சொல்வார்கள். இவை இருக்க வேண்டியபடி இருந்தால் அதற்கே ‘ஸ்வர சுத்தம்’ என்று பெயர். இப்படியாக அக்ஷர சுத்தம் ஸ்வர சுத்தம் இரண்டும் இருந்தால்தான் மந்திரங்கள் பலன் தரும். மந்திரங்களில் அர்த்தத்தைவிடக் கூட இம்மாதிரி அவற்றின் ஒலி சரியாக இருக்க வேண்டியது தான் முக்கியம். அர்த்தம் தெரியாவிட்டாலுங்கூட, மந்திரங்களின் சப்த ரூபத்தை உள்ளபடி உச்சரித்து விட்டால் அவை பலன் தந்துவிடும். ஆகையால், மந்திர ஸமூஹமாகவே இருக்கப்பட்ட வேதத்துக்கு எது மூச்சு ஸ்தானம் என்றால் சப்தரூபம்தான்.
தேள்கொட்டு மந்திரம் இருக்கிறது. அதற்கு அர்த்தம் சொல்லக்கூடாது. அதில் உள்ள எழுத்துக்களுக்குத்தான் யோக்கியதை உண்டு. சில வகையான சப்தங்களுக்குச் சில சக்தி உண்டு. திவஸ மந்திரங்களை ஸம்ஸ்கிருதத்திலே ஏன் சொல்ல வேண்டும்? இங்கிலீஷிலாவது தமிழிலாவது சொன்னால் என்ன? அப்பொழுது சப்தம் வேறாய் விடுகிறது. அந்த சப்தந்தான் பிரதானம். பில்லி சூனியம் வைக்கிறவர்களுடைய பல்லைத் தட்டிவிட்டால் அவர்கள் செய்கிறது பலிக்காது. ஏனென்றால் பல் போனபின்பு உச்சாரணத்தில் தப்பு ஏற்படும். உச்சாரணம் வேதத்துக்குப் பிரதானம். அது ஸரியாக இருக்க என்ன செய்வது? அக்ஷரத்தை இப்படியிப்படி ஒலிக்க வேண்டுமென்று நன்றாக வரையறுத்து லக்ஷணம் சொல்ல வேண்டும்.
இப்படி அக்ஷர லக்ஷணத்தைச் சொல்வதுதான் சிக்ஷை என்பது. வேதாக்ஷரங்களின் லக்ஷணத்தை வரையறை செய்து கொடுப்பதே சிக்ஷா சாஸ்திரம்.
ஒரு பாஷையில் இப்படியிப்படி உச்சரிக்கவேண்டும் (pronounce பண்ணவேண்டும்) என்று முறைப்படுத்துகிறதை phonetics என்கிறார்கள். மற்ற பாஷைகளை விட வேத பாஷைக்கு இந்த ஃபோனடிக்ஸ் ரொம்பவும் முக்கியம். ஏனென்றால் உச்சரிப்பு மாறினால் பலனே மாறிவிடுகிறதை அந்தப் பாஷையில் பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட Vedic Phonetics -ஆக இருப்பதால்தான் சிக்ஷா சாஸ்திரத்தை வேத புருஷனின் ஆறு அங்கங்களில் முதலாவதாக வைத்துள்ளார்கள். தமிழில் அதை “எழுத்திலக்கணம்” என்று சொல்லலாம்.
சிக்ஷையைப் பற்றி வேத முடியான உபநிஷத்திலேயே சொல்லியிருக்கிறது. தைத்திரீய உபநிஷத்து “சீக்ஷாவல்லி” என்பதிலேயே ஆரம்பிக்கிறது. அதன் முதன் மந்திரம் “சீக்ஷா சாஸ்திரத்தை இப்போது வியாக்யானம் பண்ணுவோமாக, அதாவது விளக்குவோமாக!” என்று ஆரம்பிக்கிறது.
இங்கேயும் சரி, மற்றும் அநேக வேத நூல்களிலும் சரி, ‘சிக்ஷா’ என்பதை நீட்டி ‘சீக்ஷா’ என்றே சொல்லியிருக்கும். ஆசார்யாள் [ஆதி சங்கரர்] தம்முடைய பாஷ்யத்திலே ‘தைர்க்யம் சாந்தஸம்” என்கிறார். தைர்க்யம் என்றால் தீர்க்கமாக ஆவது; அதாவது, குறிலாக இருக்கவேண்டிய ‘சி’ நெடிலாக ‘சீ’ என்று ஆவது. தமிழில்கூடப் ‘பொயட்ரி’யில் ‘நிழல்’ என்பதை நீட்டி ‘நீழல்’, ‘திருவடி நீழல்’ என்கிறோம். வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பேர் இல்லை என்றும், அதற்கு சந்தஸ் என்றே பேர் என்றும் முன்னே சொன்னேனல்லவா? ‘சாந்தஸம்’ என்பது அப்படிப்பட்ட சந்தஸ் பாஷையை, அதாவது வேதத்துக்கேயான விசேஷப் பிரயோகத்தைச் சொல்வது.