மொழி ஆராய்ச்சியும் சமய சாஸ்திரமும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

சிக்ஷை, வியாகரணம், இதற்கப்புறம் சொல்லப் போகிற சந்தஸ், நிருக்தம் ஆகிய இந்த நாலு வேதாங்கங்களும் பாஷா சம்பந்தமான சாஸ்திரங்கள்தான்.

“நம் மதத்துக்கு ஆதாரமான சாஸ்திரங்கள் என்று சொல்லி விட்டு, இப்படி மொழி ஆராய்ச்சியாகவும் (linguistic research ) இலக்கணமாகவும் (Gramamar) இன்னும் prosody என்கிற செய்யுள் இலக்கணமாகவும் சொல்லிக் கொண்டே போகிறேனே! மதநூல் என்றால் ஸ்வாமியைப்பற்றி, வழிபாட்டு முறைகளைப் பற்றி, பக்தி ஞானாதிகளைப் பற்றி, தத்துவங்களையும் கோட்பாடுகளையும், வாழ்க்கை தர்மங்களையும் பற்றிச் சொன்னால்தானே சரியாயிருக்கும்?” என்று தோன்றலாம்.

‘வேதம்’ என்கிற விஷயத்தில் இப்படிப்பட்ட மதவிஷயமாகவே கருதப்படும் சமாசாரங்கள் நிறைய வந்தன. இனிமேல் சொல்லப் போவதில் கல்பம், மீமாம்ஸை, நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் முதலியவற்றிலும் இவ்விஷயங்கள் வரும். ஆனால், நடுவே இப்படி மத சம்பந்தமில்லாத மாதிரித் தோன்றுகிற பாஷா சாஸ்திரங்களும் வருகின்றன.

ஏனென்றால், வேத மதத்தின்படி எல்லாமே தெய்வ சம்பந்தமானதுதான். அதனால் இது மதவிஷயம், இது மதவிஷயமில்லை என்றே இல்லை. சரீர ஸெளக்யத்தைச் செய்கிற வைத்யம் (ஆயுர்வேதம்) , யுத்தம் போட உதவுகிற தநுர்வேதம் இவைகூட ஆத்மாபிவிருத்திக்கு உதவுகிறவை என்பதாலேயே வித்யாஸ்தானத்தில் சேர்த்தார்கள். பொருளாதாரம், அரசியல் இவற்றைச் சொல்லும் அர்த்த சாஸ்திரம் கூடத்தான்.

வாழ்க்கையின் ஸகல அம்சங்களையும் எப்படிச் சீர்படுத்தி நடத்தினால் ஜீவன் பரிசுத்தி பெற்று மோக்ஷ மார்க்கத்தில் செல்ல முடியுமோ, அதற்கு வழி சொல்லித் தருவதால்தான், இவை யாவும் மதப் பிரமாண கிரந்தங்களாக மதிக்கப்படுகின்றன.

இவற்றிலே பரமாத்மாவின் மிக உத்தம ஸ்வரூபமாக சப்தமே இருப்பதால் அது சம்பந்தப்பட்ட பாஷையின் ஸம்ஸ்காரத்தால் நமக்கு ஆத்ம க்ஷேமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்றே வியாகரணம், சிக்ஷை ஆகியன ஏற்பட்டிருக்கின்றன.

சப்தப் பிரம்ம வாதத்தை வியாகரணம் எடுத்துச் சொல்கிறது. ஸங்கீதத்திலே நாதப் பிரம்ம உபாஸனை என்று சொல்வதும் இதிலே போன ஒரு கிளைதான். சப்தங்களைச் சரியாகத் தெரிந்துகொண்டு பேச்சாகப் பிரயோஜனப்படுத்தும்போது அதனால் ஸமாசாரங்களை தெரிவிப்பதோடு மட்டுமில்லாமல் நம்மையே சுத்தி பண்ணிக் கொள்ளவும் இந்தப் பாஷா சாஸ்திரங்கள் ஒத்தாசை செய்கின்றன.

வியாகரணத்திற்கு நம் சம்பிரதாயத்தில் எத்தனை மதிப்புக் கொடுத்திருக்கிறார்கள் என்பது அதற்கு நடுநாயகமாக இருக்கிற பதஞ்சலியின் “மஹாபாஷ்ய”த்துக்குக் கொடுத்திருக்கிற ‘மஹா’ பட்டத்திலிருந்தே தெரிகிறது. வேத பாஷ்யம், பிரம்ம ஸூத்ர பாஷ்யம், உபநிஷத் பாஷ்யம், கீதா பாஷ்யம் என்றிப்படி பல பாஷ்யங்கள் பல ஆசார்ய புருஷர்களால் பண்ணப்பட்டிருந்தாலும் அவற்றுக்குக்கூடத் தராத ‘மஹா’ டைட்டிலை இந்த பாஷா சாஸ்திரத்துக்கே தந்து பெருமைப்படுத்தியிருக்கிறார்கள். வித்வானான ஒருவனுக்கு ஒரு ஸாம்ராஜ்யத்தையே சாஸனம் பண்ணிக் கொடுத்தால் எத்தனை ஸந்தோஷம் உண்டாகுமோ, அத்தனை ஸந்தோஷம் மஹாபாஷ்யத்தைப் படிப்பதிலேயே ஏற்பட்டுவிடும் என்று ஒரு வசனம் இருக்கிறது:

மஹாபாஷ்யம் வா படநீயம்

மஹாராஜ்யம் வா சாஸநீயம்

பழைய ராஜாங்கங்களில் வியாகரண சாஸ்திரப் பிரசாரத்தை எவ்வளவு போற்றி வளர்த்திருக்கிறார்கள் என்பதற்கு வேங்கி சாஸனம் மாதிரி சமீபத்தில் ஒரு சான்று கிடைத்தது.

முன்னே central provinces (மத்ய மாகாணம்) என்று சொல்லி, சுதந்திர இந்தியாவில் ‘மத்ய ப்ரதேஷ்’ என்கிறார்களே அங்கே, ‘தார்’ என்று ஒரு ஸம்ஸ்தானம் இருந்தது. இப்போது இந்தியன் யூனியனோடு சேர்ந்துவிட்டது. அந்த ‘தார்’ தான் கொடைவள்ளலும், கலைகளை எல்லாம் போஷித்தவனுமாகிய போஜராஜாவுடைய தலைநகரான “தாரா” என்பது. அந்த தாரா-தார் – பட்டிணத்திலே ஒரு மசூதி இருக்கிறது. அந்த மசூதியில் ஒரு பொந்துக்குள் ஏதோ ஸம்ஸ்கிருத எழுத்துக்கள் தெரிவதாக வெளியிலே தெரிய வந்தது. ஆனாலும் அந்நிய மதஸ்தர்களின் இடமாகி விட்டது. அவர்கள் அநுமதித்தால்தான் அங்கே போய் என்னவென்று பார்க்க முடியும். இதனால், எபிக்ராஃபிகல் டிபார்ட்மென்ட்காரர்களே ஒரு பத்து பதினைந்து வருஷம் ஒன்றும் பண்ண முடியாமல் சும்மா இருந்தவிட்டார்கள். அப்புறம், சுதந்திரம் வந்து சில வருஷங்களுக்கு அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக அது என்ன எனறு பார்க்க போவது போல் போய், அப்புறம் மசூதிக்காரர்களிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு, அந்த பொந்தைப் பிரித்துப் பார்த்தார்கள்.

அதிலே ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அந்தச் சக்கரத்தில் ஏகப்பட்ட ச்லோகங்கள் எழுதியிருந்தது. அதிலுள்ள எழுத்துக்கள்தான் முன்னே தெரிந்தவை. ச்லோகங்கள் சொன்ன விஷயம் என்ன என்று பார்த்தால், அத்தனையும் வியாகரணம் தான்! வியாகரணம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் சக்கராகாரமாகப் பாடல்களாக அமைத்து, ஆச்சரியப்படும்படியான chart- ரூபத்தில் எழுதி வைத்திருக்கிறது! போஜராஜா காலத்தில் ஸரஸ்வதியின் ஆலயமாக இருந்த இடத்தில்தான் இப்போது மசூதி இருக்கிறது. வாக்தேவியான ஸரஸ்வதி ஆலயத்தில் பாஷா சாஸ்திரம் இருக்கவேண்டும் என்றே வேத புருஷனுக்கு வாக்கு ஸ்தானமான வியாகரணத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த பெரிய சக்கரத்தை ஒரு பார்வை பார்த்தால் வியாகரணம் முழுக்கத் தெரிந்துவிடும் என்கிறார்கள். அதற்கு வழிபடத்தக்க பெருமை உண்டு என்பதாலேயே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அந்தக் கோயில் மசூதியாகப் போய் அநேக வருஷங்கள் கழித்து வாக்தேவியின் அநுக்ரஹத்தால் இந்தச் சக்கரம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதை எபிக்ராஃபி இலாகாக்காரர்கள் அச்சுப் போட்டிருக்கிறார்கள். இங்கிலீஷிலும் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

வியாகரணம் மாதிரியான சாஸ்திரங்களைக் கூட வெறும் லௌகிகம் என்று தள்ளாமல் பூஜார்ஹமாக [வழிபாட்டுக்கு உரித்தானதாக] வைத்து, ராஜாங்கத்தாரே போஷித்து வந்திருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸம்ஸ்கிருதம் சர்வதேச மொழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  செய்யுளிலக்கணம்
Next