‘சந்தத் தமிழ்’ என்ற வார்த்தையைக் கேட்கிறோம். சந்தத் தமிழில் பாடி இறைவனை துதிக்க வேண்டும் என்று அடியார்கள் வேண்டுகிறார்கள். சந்தம் என்ற இந்த வார்த்தைக்கு மூலம்தான் “சந்தஸ்”.
“சந்தஸ்” என்றால் வேதம் என்று முன்பு அர்த்தம் சொல்லியிருக்கிறேன். ஸ்ருஷ்டி என்ற அச்வத்த விருக்ஷத்துக்கு வேதங்கள்தான் இலைகள் என்று கீதையில் பகவான் சொல்கிற போதும் “சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி” என்றே சொல்கிறார் – ‘வேதம்’ என்பதற்குப் பதில் ‘சந்தஸ்’ என்கிறார். ஆனால் வேத ஷடங்கங்களில் வேத புருஷனுக்குக் காலின் ஸ்தானத்தில் இருக்கிறதும், இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கிறதுமான “சந்தஸ்” என்ற வித்யாஸ்தானம் “வேதம்” என்ற அர்த்தத்தைச் சொல்வதல்ல.
இங்கே “சந்தஸ்” என்பது செய்யுளிலக்கணம், பாவிலக்கணம் என்றே பொருள்படும்.
ரிக்வேதம், ஸாமவேதம் இரண்டும் முழுக்கச் செய்யுள்களாக இருப்பவை. யஜூஸில் “ப்ரோஸ்” உண்டாயினும் அதுவும் ‘பொயட்ரி’யோடு கலந்து கலந்துதான் வருகிறது. இப்படி சந்தஸ்கள் நிறைந்ததாகவே வேதம் இருப்பதால் தான், அதற்கே சந்தஸ் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
நாம் ஸூட் போட்டுக் கொள்வதானால் தையற்காரன் அளவெடுத்துக் கொண்டு போகிறான். அதன்படி துணியை வெட்டித் தைக்கிறான். அளவு எடுக்காவிட்டால் தைக்க முடியாது. இதேபோல் நம் எண்ணங்களுக்குச் செய்யுள் ரூபம் கொடுக்கிறபோது, எண்ணத்தையே ஒரு உருவமாகக் கொண்டு வரவேண்டுமானால் அதற்குப் போட வேண்டிய டிரெஸ்தான் செய்யுள். அதற்கு அளவு வேண்டும் அல்லவா? சட்டை இத்தனை இன்ச் நீளம், இத்தனை இஞ்ச் அகலம் என்கிற மாதிரி செய்யுளுக்கும் இத்தனை அடி, இத்தனை எழுத்து என்றெல்லாம் நிர்ணயம் செய்து தரவேண்டும். அப்படிச் செய்வதுதான் “சந்தஸ்” என்ற சாஸ்திரம்.
சந்தம் என்றும், metre என்றும் சொல்லும் செய்யுள் அளவைகளை அதுவே வகுத்துக் கொடுக்கிறது.
பிங்களர் என்பவர் செய்த “சந்தஸ் ஸூத்ரம்” தான் இப்போது அதற்கு முக்யமான நூலாக இருக்கிறது.*
வேத புருஷனுக்குப் பாதமாக இருப்பது சந்தஸ் என்னும் அங்கம். மந்திரத்தின் ரிஷியைச் சொல்லி மூக்கைத் தொடுவார்கள்; தேவதையைச் சொல்லி ஹ்ருதயத்தைத் தொடுவார்கள். செய்யுள் உருவில் உள்ள வேத மந்திரங்களெல்லாம் சந்தஸ்; மற்ற, அதாவது வேதத்தில் வராத, செய்யுள்களை ச்லோகம் என்று சொல்வார்கள். வசனத்தை ‘கத்யம்’ என்றும், சந்தஸை ‘பத்யம்’ என்றும் ஸம்ஸ்கிருதத்தில் சொல்வதுண்டு. தமிழில் நாம் செய்யுள் என்பதைத் தெலுங்கிலும் பத்யம் என்பார்கள். இங்கிலீஷில் பொயட்ரி என்று சொல்வார்கள்.
வேதச் செய்யுளுக்கே ‘சந்தஸ்’ என்று பெயர் இருப்பதோடு, ‘சந்தஸ்’ என்றால் எந்தச் செய்யுளுக்கும் இருக்கவேண்டிய சந்தம் அல்லது metre என்ற வ்ருத்தமும் [விருத்தமும்] ஆகும். செய்யுளில் பலவிதமான வ்ருத்தங்கள் இருக்கின்றன. ச்லோகங்களும் விருத்தங்களே. அநுஷ்டுப் விருத்தம் என்பது ஒன்று. புராண ச்லோகங்களும் ராமாயண ச்லோகங்களும் அந்த விருத்தங்களே. விருத்த லட்சணம்தான் சந்தஸ்.
ஒவ்வொரு விருத்தத்திற்கும் இவ்வளவு பாதம் இருக்க வேண்டும், ஒவ்வொரு பாதத்திற்கும் இவ்வளவு எழுத்துக்கள் இருக்கவேண்டும் என்ற நியமம் உண்டு. “ஆர்யா” என்று ஒரு சந்தஸ் இருக்கிறது. அதற்கு மாத்திரைக் கணக்கு உண்டு. அதாவது இவை குற்றெழுத்து, நெட்டெழுத்துக் கணக்கு உள்ள சந்தஸ்களாகும். இவற்றில் ‘ராம’ என்பது இரண்டெழுத்து என்ற கணக்குப் பண்ண மாட்டார்கள். ‘ரா’ என்கிற நெடிலுக்கு இரண்டு மாத்திரை, ‘ம’ என்ற குறிலுக்கு ஒரே மாத்திரை என்று மாத்ரா ரீதியிலேயே கணக்கு பண்ணி, ‘ராம’ என்றால் மூன்று மாத்திரை என்பார்கள். குறில் நெடில் வித்யாஸம் பார்க்காமல் ஒவ்வொரு செய்யுளிலும், ஒவ்வொரு பாதத்தில் இத்தனை எழுத்து இருக்கவேண்டும் என்பதாக நிர்ணயிக்கப்பட்ட சந்தஸ்களே அதிகம். அவற்றைத்தான் குறிப்பாக ‘விருத்தம்’ என்பது. ‘ஆர்யா’ சந்தஸைப் போல குறில்-நெடில் வித்யாஸம் பார்த்துப் பாதத்துக்கு இவ்வளவு மாத்திரை இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டவற்றுக்கு ‘ஜாதி’ என்று பெயர்.
*வேத அட்டவணைகளான ‘ரிக் ஸர்வ அநுக்ரமணி’, ‘அதர்வ வேதீய ப்ருஹத் ஸர்வ அநுக்ரமணிகா’, ‘ப்ருஹத் தேவதா’ முதலான நூல்களிலும், ரிக் ப்ராதிசாக்யத்திலும் ஆங்காங்கே வேதத்தின் மீட்டர்கள் விவரிக்கப்படுகின்றன. மற்ற காவிய, இலக்கிய சந்தங்களைப்பற்றி ‘சந்தோமஞ்சரி’, ‘வ்ருத்த ரத்னாகரம்’ முதலிய நூல்கள் விரிவாக கூறுகின்றன.