சந்தஸை வேத புருஷனின் பாதம் என்றேன். சந்தஸ் தனக்கு விஷயமாக ( subject ) எடுத்துக் கொள்கிற செய்யுளுக்கும் ‘பாதம்’ இருக்கிறது. தமிழில் ஈரடிக் குறள், நாலடியார் என்பதிலெல்லாம் வரும் ‘அடி’தான் செய்யுளின் ‘பாதம்’. நாலடியார் என்றால் நாலு அடியார்கள் என்று அர்த்தமில்லை. அடியார்கள் என்று பக்தர்களுக்கு ஏன் பேர் ஏற்பட்டது என்றால், அவர்கள் ஈச்வர சரணாரவிந்தத்திலேயே, திருவடித் தாமரையிலேயே கிடக்கிறவர்கள். ஸம்ஸ்கிருதத்திலும் ஆசார்ய பாதர், கோவிந்த பாதர், கௌடபாதர், பகவத் பாதர் என்று ஈச்வரனின் பாத ஸம்பந்தம் உடையவர்களாகவே மஹான்களைச் சொல்கிறோம். நாலடியார் என்றால், ‘நாலு அடி கொண்ட செய்யுள்கள்’ என்று அர்த்தம்.
காலுக்குத் தானே ஸம்ஸ்கிருதத்தில் பதம் அல்லது பாதம் என்றும், தமிழில் அடி என்றும் பெயர் இருக்கிறது? இங்கிலீஷிலும் ஒரு Stanza -வில் இத்தனை feet இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். அதன் மீட்டர்களும் feet -க்கு இத்தனை அக்ஷரம் என்றுதான் வகுக்கப்படுகின்றன. காலைக்குறிப்பிடும் foot என்பது division of a stanza -வுமாகும். பாதம் -அடி- foot என்று எல்லா பாஷைகளிலும் ஒரே பொருள்படும் வார்த்தை செய்யுள் அளவையாக இருக்கிறது. எதில் போனாலும், இப்படி ஜன சமுதாயம் முழுவதற்கும் ஐக்யத்தைக் காட்டுவது மனஸுக்கு ஸந்தோஷமாக இருக்கிறது.
இன்னொரு ஒற்றுமை கூட. இங்கிலீஷில் பன்னிரண்டு அங்குல நீளமுள்ள அளவை foot என்கிறார்கள்; தமிழிலும் இதை ‘அடி’ என்றே சொல்லுகிறோம்.
ஒரு மந்திரம் அல்லது ஸ்லோகத்தில் பாதம் என்பது நாலில் ஒரு பாகம். நாளில் ஒரு பாகத்தைக் கால் என்கிறோம். மனுஷ்ய சரீரத்தில் கால் என்கிற அங்கம் நாலில் ஒரு பங்காக அதாவது கால் பாகமாகவே இருக்கிறது. இடுப்பு வரை பேர்பாதி – கீழே பாதி. அந்தப் பாதி இரண்டு கால்களாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு காலும் பாதியில் பாதியான காலாகவும் [1/4] இருக்கிறது. இப்படியேதான், இடுப்புக்கு அரை என்று பேர் இருப்பதும். ‘அரைஞாண்’ என்று இடுப்பிலே கட்டும் கயிற்றைச் சொல்லும் போது, ‘அரை’ என்றால் இடுப்பு. அதுதான் மநுஷ்ய சரீரத்தின் நடுவாக இருந்து கொண்டு, அதை இரண்டு அரை [1/2] களாகவும் பிரிக்கிற அவயவம். அதனால், இப்படிப் பெயர்.
தமிழில், கால் என்றால் பாதத்திலிருந்து இடுப்புவரையுள்ள LEG என்ற முழு அவயவத்தையும், பாதம் அல்லது பதம் என்றால் FOOT என்றும் பெரும்பாலும் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ஆனால் சில இடங்களில் மட்டும் ‘கால்’ என்பதே FOOT என்ற அர்த்தத்திலும் பிரயோகமாகிறது. ‘உள்ளங்கால்’, ‘புறங்கால்’ என்னும்போது, கால் என்பது முழு LEG இல்லை; foot தான். ஸம்ஸ்கிருதத்தில் LEG, FOOT இரண்டும் பாதம்தான். ‘பாதம்’ என்றால் கால், கால் வாசி.