நக்ஷத்திரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் உள்ள வித்தியாஸம் என்ன? நம்முடைய ஸூர்யனைச் சுற்றி வருகிறவையே க்ரஹங்கள். ஸூர்ய மண்டலத்தைச் சேராதவை நக்ஷத்திரங்கள். நம்முடைய கண்ணுக்கு தெரிகிற அடையாளம் ஒன்று இருக்கிறது. வைரத்தை ஆட்டிக்கொண்டே இருந்தால் அது பளபளவென்று அசைந்து ஜ்வலித்துக் கொண்டே இருக்குமல்லவா? அதைப் போல நக்ஷத்திரங்கள் அசைவோடு ஜ்வலித்துக் கொண்டிருக்கும். கிரஹங்கள் அசையாமல் ஜ்வலிக்கும்.
சூரியனும் நக்ஷத்திரங்களுந்தான் ஸ்வயம் பிரகாசம் உடையவை. [அதாவது அவையே இயற்கையாகப் பிரகாசமுள்ளவை.] க்ரஹங்கள் இப்படிப்பட்ட இன்னொரு ஸ்வயம் பிரகாச வஸ்துவினால்தான் தாங்களும் பிரகாசிக்கின்றன. [அவற்றுக்கு இயற்கை ஒளி கிடையாது.] நக்ஷத்திரங்களில் பலவிதமான வர்ணங்களில் டால் அடிக்கும். பட்டை தீர்த்த வைரத்தில் நீலம், பச்சை, முதலிய நிறங்கள் ஜ்வலிப்பது போல அவை இருக்கும். க்ரஹங்களான குருவும் சுக்கிரனும் கொஞ்சம் பெரிய நக்ஷத்திரங்களைப் போல இருக்கும். ஆனால் அவற்றில் தளதளப்பு இராது. நக்ஷத்திரங்கள் தளதளவென்று இருக்கும். சூரியனும் அப்படித்தான் இருக்கும். சூரியனைக் கொஞ்சம் உற்று கவனிக்க ஆரம்பித்தால் சுற்றிலும் காணப்படுகின்ற பிசிர் போய்விடும். அப்புறம் கண்ணாடியில் தட்டையாகச் செய்யப்பட்ட ஒன்று ஜலத்தில் மிதப்பது போல் தளதளவென்று தோன்றும். அசைவு இருக்கும். சந்திரன் இந்த மாதிரி இருக்காது. ஸூர்யனுக்கு உள்ளே ஒளி அசைவு உள்ளது என்பதற்கு ஒரு நிரூபணம் சொல்கிறேன். கூரையில் ஒரு துவாரம் வழியாக ஸூர்ய வெளிச்சம் வருகிறது. நிலாவும் வருகிறது. ஸூர்யனின் வெயிலானதால்தான் இந்தக் கதிர் ஆடுகிறதைப் பார்க்கிறோம். சந்திர கிரணம் அசையாமலே இருக்கும். மற்ற க்ரஹங்களும் சந்திரன் மாதிரியே. நக்ஷத்திரம் சிறியதாக இருந்தாலும் ஒளியிலே அசைவு இருக்கும். நக்ஷத்திரம் பெரியதாக இருந்தால் VIBGYOR என்று சொல்லப்படும் ஏழு நிறங்கள் இந்த அசைவில் தோன்றும் – வைரத்திலிருந்து கலர்கள் கொட்டுகிற மாதிரியே!
சூரியனுக்கு ஸப்தாச்வன் என்பது ஒரு பெயர். அவனுடைய தேரில் ஏழு (ஸப்த) குதிரைகள் (அச்வங்கள்) உண்டு என்று அர்த்தம் சொல்வார்கள். ‘ஒரே அச்வந்தான், அதற்கு ஏழு பேர்கள் இருக்கின்றன’ என்று சொல்வதும் உண்டு. ‘அச்வம்’ என்பதற்கே ‘கிரணம்’ என்று அர்த்தம் உண்டு. சூரியனுக்கு ஏழு தினுஸான வர்ணங்களை வெளிவிடும் கிரணங்கள் இருக்கின்றன என்பதுதான் தாத்பர்யம். ஒரே கிரணந்தான் ஏழு தினுசாகப் பிரிந்து கலர்களாகிறது. விப்ஜியார் என்பதும் அதுதான். ஒரே கிரணத்திற்குத்தான் ஏழுபேர் என்று ஸ்பஷ்டமாக வேதத்தின் தைத்திரீய ஆரண்யகத்திலேயே இருக்கிறது: ஏகோ அச்வோ வஹதி ஸப்தநாமா. ஒரே வெண்மைதானே refraction என்ற ஒளிச்சிதறலில் ஏழு வர்ணமாகிறது?
நக்ஷத்திரமே ஸ்வயம் பிரகாசமுடையது. கிரஹமானது வேறு ஒன்றிடமிருந்து ஒளியைக் கடன் வாங்கிக் கொள்கிறது – சந்திரன் ஸூர்யனிடமிருந்து வாங்கிக் கொள்கிறது போல!
நக்ஷத்திர ஒளி அசைவதால்தான் “அது கண்ணைச் சிமிட்டுகிறது”; Twinkle twinkle little star” – என்பது. கிரஹங்கள் கண்ணைச் சிமிட்டின என்று யாராவது எழுதினால் தப்பு.
நக்ஷத்திரங்கள் கிழக்கே உதயமாகி மேற்கே அஸ்தமிக்கும். கிரஹங்களும் மேற்கே போகும். ஆனால் நித்தியம் கொஞ்சம் கிழக்கே நகர்ந்துகொண்டே போகும். கிழக்கே ஓடும் ரயிலுக்குள் ஒருத்தன் மேற்கே நடக்கிறதுபோல், ஏழு கிரஹங்களும் கிழக்கே நகர்ந்து கொண்டே போகும். இவற்றின் ஸ்திதிகளை ஜ்யோதிஷ சாஸ்திரம் சொல்லுகிறது.