வேத புருஷனுக்குக் கல்பம் என்ற ஆறாவது அங்கம் கரம் என்பார்கள்.
காரியங்களைச் செய்வதினால் கைகளுக்குக் கரம் என்று பெயர் வந்தது. செய்யும் தொழில் உடையதால், தெலுங்கிலும் கை ‘செய்’ என்று வழங்குகிறது.
காரியத்தில் ஏவும் சாஸ்திரமே கல்பம். வேதத்தையும், சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம் முதலிய எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பின்பு என்ன செய்வது? இவற்றால் ஏதாவது காரியம் செய்ய வேண்டும். மனஸில் தோன்றுகிற காரியங்களெல்லாம் பண்ணி ஸம்பாதித்த பாபங்களெல்லாம் தொலைய நல்ல காரியம் பண்ணவேண்டும். அந்த நல்ல காரியம் என்னவென்று தெரிய வேண்டும். அதற்குரிய மந்திரம், அதன் சரியான உச்சாரணம், அர்த்தம் முதலியவைகள் தெரிய வேண்டும். அந்தக் கர்மாக்களைச் செய்வதற்குப் பல திரவியங்கள் வேண்டும். அவற்றை நடத்த வீடு வேண்டும். அந்த வீட்டுக்கு வாஸ்து லக்ஷணம் வேண்டும். பின்பு அந்தக் கர்மாக்களின் பலனை ஈச்வரனுக்கு அர்ப்பணம் பண்ண வேண்டும். இவைகளைப் பற்றிய விஷயங்களைச் சொல்வதுதான் கல்பம்.
வேதத்தை அத்யயனம் பண்ணி, அதிலே உள்ள அக்ஷரங்களைப் பற்றிச் சிக்ஷையால் தெரிந்து கொண்டு, இலக்கணத்தை வியாகரணத்தால் அறிந்து, மீட்டர், அர்த்தம் என்பனவற்றையும் சந்தஸ், நிருக்தம் இவற்றால் தெரிந்துகொண்டு, ஜ்யோதிஷத்தின் மூலம் கர்மாக்களைச் செய்யும் காலத்தைத் தெரிந்து கொள்ளுவதின் பிரயோஜனம் என்னவெனில், கல்பத்தில் சொல்லியுள்ள நல்ல கர்மாக்களைப் பண்ணுவதே.
எந்தக் கர்மாவை எப்படிப் பண்ணுவது, எந்த எந்த வருணத்தார் எந்த எந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும், எந்த எந்த ஆசிரமத்தார் எதை எதைச் செய்ய வேண்டும் என்பவைகளையும், எந்தக் கர்மாவுக்கு எந்த மந்திரம், திரவியம், தேவதை என்பவைகளையும், யக்ஞங்களில் எத்தனை ரித்விக்குகளை வைக்க வேண்டும், எந்த விதமான பாத்திரங்களை உபயோகப்படுத்த வேண்டும் என்பவைகளையும், இவை போன்ற மற்றவைகளையும் சொல்வது கல்பம். நாம் ‘சடங்கு’ என்று சொல்வதையெல்லாம் கல்பமே வகுத்துக் கொடுக்கிறது. ‘ஷடங்கம்’ என்பதே ‘சடங்கு’ ஆயிற்று என்று சொன்னேன். அல்லது, கல்பம் வேதத்தின் ஆறாவது அங்கமானதால் ஷஷ்டாங்கமாகிறது. ஷஷ்டாங்கமே சடங்கு என்றாகியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
கல்ப சாஸ்திரத்தை அநேக ரிஷிகள் செய்திருக்கிறார்கள். தக்ஷிணத்தில் வெகுவாகப் பின்பற்றப்படும் கிருஷ்ணயஜுர் வேதத்திற்கு ஆபஸ்தம்பர், போதாயனர், வைகானஸர், ஸத்யாஷாடர், பாரத்வாஜர், அக்னிவேசர் என்னும் ஆறு பேர்கள் கல்பஸூத்ரங்கள் செய்திருக்கிறார்கள். ரிக்வேதத்திற்கு ஆச்வலாயனர் செய்ததே அதிகம் வழக்கிலுள்ளது. ஸாங்காயனர் என்பவரும் செய்திருக்கிறார். சுக்ல யஜுர் வேதத்திற்கு காத்யாயனர் கல்ப ஸூத்திரம் செய்திருக்கிறார். ஸாமவேதத்தில் கௌதும சாகைக்கு லாட்யாயனரும், ராணாயநீய சாகைக்கு த்ராஹ்யாயணரும், தலவகார சாகைக்கு ஜைமினியும் ஸூத்திரம் செய்திருக்கிறார்கள்.
கல்பத்தில் ஒவ்வொரு சாகைக்கும் க்ருஹ்ய ஸூத்ரமென்றும், ச்ரௌத ஸுத்ரமென்றும் இரண்டு வகை உண்டு. ‘ச்ருதி’ எனப்படும் வேதத்திலேயே பூர்ணமாக வருகிற யக்ஞம் முதலானவையே ‘ச்ரௌதம்’ என்பவை. இவை விரிவாகச் செய்யவேண்டிய பெரிய காரியங்களாகும். கிருஹத்தில், வீட்டில் இல்லாமல், வெளியே பெரிசாக யாகசாலை போட்டுக் கொண்டு செய்யப்படுபவை. இதனால் தான் கிருஹத்திலேயே பண்ணப்பட்ட மற்ற சின்ன வைதிக கர்மாக்களுக்கு “க்ருஹ்யம்” என்றே பேர் வந்துவிட்டது. கர்ப்பம் உண்டாவது முதல் தேஹம் அக்கினிக்கு ஹோமம் பண்ணப்படும் தகனக்கிரியை வரையில் செய்யப்படுகின்ற நாற்பது கிரியைகளை இவ்விரு ஸூத்திரங்களும் சொல்லும். தஹனக்கிரியையும் ஒருவகையான ஹோமம்தான்! அந்தியேஷ்டி, அதாவது கடைசி வேள்வி, என்று சொல்லுவார்கள். இந்த இஷ்டியில், வேள்வியில், தேஹமே திரவியமாக அக்னியில் ஹோமம் செய்யப்படுகிறது!
அக்னி ஹோத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு பண்ணும் ஏழு ஹவிர்யஜ்ஞம்; ஏழு ஸோமயஜ்ஞம்; ஏழு பாக யக்ஞங்கள் என்பதாக மொத்தம் 21 யக்ஞங்களைப் பிராம்மணன் பண்ண வேண்டும். இவற்றில் ஏழு ஹவிர் யக்ஞமும் ஏழு ஸோம யக்ஞங்களும் க்ருஹ்ய ஸூத்திரத்தில் வராது. இந்தப் பதினாலும் “ச்ரௌத ஸூத்திர”த்தில் வருவன. இவற்றையும் சேர்த்தே ஒருவன் செய்ய வேண்டிய 40 கர்மாக்கள் உள்ளன. இவற்றை 40 ஸம்ஸ்காரம் என்பர்.
ஸம்ஸ்காரம் என்றால் தூய்மைப் படுத்துவது.
வீட்டில் செய்வது அக்கினிஹோத்திரம். யாகசாலை போட்டுக் கொண்டு பண்ணுவது யக்ஞம். பெரிய யாகங்களை ச்ரௌத ஸூத்திரம் சொல்லும். Domestic rites என்று அகத்தோடு பண்ணுவதை க்ருஹ்ய ஸூத்ரம் சொல்லும். நான் மேலே ச்ரௌத ஸூத்ரக்காரர்களின் பேர்களையே சொன்னேன்.
நாற்பது ஸம்ஸ்காரங்களும் எட்டு ஆத்ம குணங்களும் கல்ப ஸூத்ரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் முன்பு சொன்ன பதினான்கு ஹவிர், யோம யக்ஞங்களைத் தவிர மிகுதியுள்ள இருபத்தாறும் கிருஹ்ய ஸூத்திரத்தில் சொல்லப்படும். அதில் கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப் பிராசனம், சௌளம், உபநயனம், விவாஹம், அந்தியேஷ்டி முதலியவைகள் சொல்லப்படுகின்றன. இவற்றைப் பிற்பாடு விளக்குகிறேன்.
எட்டு ஆத்ம குணங்களாவன: தயை, பொறுமை, அசூயை இல்லாமலிருத்தல், சுத்தி [தூய்மை] , பிடிவாதமின்மை, மனங்குளிர்ந்திருத்தல், லோபமின்மை, நிராசை என்பவைகள். இவை எட்டும் ஸாமான்ய தர்மங்களைச் சேர்ந்தவைகளே. அதாவது எல்லா ஜாதிக்காரர்களும் கைக்கொள்ள வேண்டியவை.
நாம் இன்ன ஸூத்ரத்திரத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று நமஸ்காரம் பண்ணும்போது சொல்லும் அபிவாதனத்தில் சொல்கிறோம். அது ச்ரௌத ஸூத்திரத்தைத்தான் குறிக்கிறது. திருஷ்டாந்தரமாக ஸாமவேதிகள் “த்ராஹ்யாயண ஸூத்திரம்” என்று சொல்கிறார்கள். த்ராஹ்யாயணர் ச்ரௌத ஸூத்திரம் மாத்திரமே செய்திருக்கிறார். வேறொருவர் (கோபிலர்) தான் கிருஹ்ய ஸூத்திரம் செய்திருக்கிறார். ஆனாலும் பூர்வத்தில் பெரிய யக்ஞ கர்மானுஷ்டானங்கள் விசேஷமாக செய்யப்பட்டு வந்ததாலேயே, இவற்றைச் சொல்லும் ச்ரௌத ஸூத்ரத்தையே தன்னுடைய ஸூத்ரம் என்று சொல்லி வந்து, இப்போதும் அதுவே அபிவாதனத்தில் நீடிக்கிறது. ஆனால் பிற்காலத்தவரான நாமோ பெரிய ச்ரௌத கர்மாக்களைப் பண்ணாமல் க்ருஹ்ய ஸூத்திரத்தில் வரும் விவாஹம் முதலியவற்றை மட்டும் பண்ணுகிறோம். க்ருஹ்ய கர்மாக்கள் லகுவாகச் செய்யவேண்டியவை. அவற்றில் சிலதே இப்பொழுது பலத்துப்போய்விட்டன.
பூர்வத்தில் ச்ரௌத கர்மாவை ஏழையாய் இருப்பவனும் யாசகம் பண்ணிச் செய்தான். பழைய காலத்தில் ‘பிரதி வஸந்த யோமயாஜிகள்’ என்று பல பேர்கள் இருந்தார்கள். அதாவது ஒவ்வொரு வஸந்த காலத்திலும் ஸோமயாகம் செய்வார்கள். ஒரு வருஷத்தின் வரவு மூன்று வருஷ செலவுக்கு போதுமானதாக இருந்தால் அந்த வரவை உடையவர்கள் ஒவ்வொரு வஸந்த காலத்திலும் ஸோமயாகம் செய்து வந்தார்கள்.
இப்பொழுது எல்லாம் கெட்டுப் போய்விட்டது. இக்காலத்து பணக்காரர்கள் கூட ஒரு வருஷ வரவுக்கு மூன்று வருஷ செலவை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வியாபார ரீதியில் உண்டான மாறுதல்களால் தனிகர் உட்பட எல்லோருக்கும் தரித்திரமும் கஷ்டங்களும் உண்டாயிருக்கின்றன. எதிலும் மிதமாக இருக்க வேண்டும்; அமிதம் கூடாது. இந்தக் காலத்து புத்தி சாமர்த்தியங்களெல்லாம் எத்தனை வந்தாலும் போதாத தரித்திரத்தில் கொண்டு போய்விடுகின்றன! ஒருவன் பணக்காரனாக இருக்கிறானென்றால் அவனுக்கும் தாங்க முடியாதபடி அபாரமான செலவுகளை வைத்துக் கொண்டிருக்கிறான். இவைகளையெல்லாம் மிதப்படுத்திக் கொண்டு நல்ல காரியங்களை செய்யவேண்டும்.
சிகை, புண்ட்ரம், கர்மாநுஷ்டானம் முதலியவைகள் ஸூத்திரத்துக்குத் தக்கபடி பலவகையாக இருக்கின்றன. சிலர் ஊர்த்வ சிகை (உச்சிக் குடுமி) வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பூர்வ சிகை (முன்குடுமி) யுடையவர்களாயிருக்கிறார்கள். அப்படியே நெற்றிக்கு இட்டுக்கொள்வதிலும் ஊர்த்வ புண்ட்ரம், த்ரிபுண்டரம் என்று பேதங்கள் இருக்கின்றன. இவைகளெல்லாம் அவரவரும் தங்களது முன்னோர்களுடைய ஆசாரப்படி அநுஷ்டிக்க வேண்டும்.
சயனம் என்று யாக சாலையில் பல கட்டுமான அமைப்புக்கள் சொல்லப்படுகிறது. அவற்றினுடைய லக்ஷணங்கள் முதலியவைகளைச் சொல்லும் “சுல்ப ஸூத்திரம்” என்று ஒரு பிரிவு கல்பத்தில் இருக்கிறது.
சுல்ப ஸூத்திரங்கள் சாமான்ய ஸூத்திரங்களென்றும் விசேஷ ஸூத்திரங்களென்றும் இருவகைப்படும். காத்யாயனர், போதாயனர், ஹிரண்யகேசர் ஆகியோர் சுல்ப ஸூத்திரம் செய்திருக்கிறார்கள். ஆண்டபிள்ளைப் பிரயோகம் என்பது இப்பொழுது பிரசாரத்தில் இருந்து வருகிறது. ஆண்டபிள்ளை என்பவர் திருப்பனந்தாளில் இருந்தவர். திருவிடை மருதூர்ப் பிள்ளையாருக்கு ஆண்ட பிள்ளையார் என்பது பெயர். அந்தப் பெயர் அவருக்கு வைக்கப்பட்டது. அவருடைய பிரயோகத்தின்படி இப்பொழுது ச்ரௌத கர்மாக்கள் நடந்து வருகின்றன. இப்பொழுது யாகங்கள் நடப்பது மிகவும் குறைந்துவிட்டது. கிருஹ்ய ஸூத்திரம்தான் கொஞ்சமாவது பிரசாரத்திலிருந்து வருகிறது. மற்ற தேசாந்தர சாஸ்திரங்களெல்லாவற்றிற்கும் அதிகப் பிரதான்யம் ஏற்பட்டிருக்கின்றது!
நம்முடைய சாஸ்திரங்கள் எல்லாம் ஈச்வர சரணாரவிந்தத்தைக் கட்டிப்பிடிக்கின்றன. எதைப் படித்தாலும் அது ஈச்வரார்ப்பணமாகவும் ஆத்ம லாபத்தைத் தருவதாகவும் இருக்கவேண்டும். நம்முடைய சாஸ்திரங்கள் எல்லாம அப்படிப்பட்டவைகளே. அவற்றிலே வேத மதத்துக்கு வெகு முக்யமாக இருக்கப்பட்ட ச்ரௌத கர்மாக்கள் (ஹவிர்-ஸோம யக்ஞங்கள்) ஒரேடியாகத் தேய்ந்து கொண்டே வந்திருப்பது ரொம்பவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
கல்ப ஸூத்திரம் செய்தவர்களான ஆபஸ்தம்பர், போதாயனர், ஆச்வலாயனர் முதலியவர்களில் த்ராஹ்யாயனர், காத்யாயனர் நீங்கலாக பாக்கி உள்ள எல்லோரும் ச்ரௌத ஸூத்ரம், க்ருஹ்ய ஸூத்ரம் என்ற இரண்டையும் செய்திருக்கிறார்கள்.
அதோடுகூட “தர்ம ஸூத்ரங்கள்” என்றும் சில இருக்கின்றன. இவற்றில் மனிதன் தனி வாழ்விலும், வீட்டிலும், சமூகத்திலும் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றிலிருந்தே பிற்காலத்தில் தர்ம சாஸ்திரங்கள் யாவும் அபிவிருத்தியாயின. பிற்காலத்தில் இங்கிலீஷ் Law -வில் கூட ஒப்புக்கொள்ளப்பட்ட மநு, மிதாக்ஷரி முதலான அநேக நீதி சாஸ்திரங்களும் இவற்றிலிருந்து உண்டானவையே. [ரிக் வேதத்தில் வஸிஷ்டர், விஷ்ணு, கிருஷ்ண யஜுஸில் மநு, போதாயனர், ஆபஸ்தம்பர், ஹிரண்யகேசி; ஸாமத்தில் கெளதமர் ஆகியவர்களுடைய தர்ம ஸூத்ரங்கள் கிடைத்துள்ளன.]
அதர்வம் அநுஷ்டானத்தில் இல்லை; அதனால் அதன் கல்ப ஸூத்ரங்களும் வழக்கில் இல்லை.
ஒவ்வொரு சின்ன காரியத்தையும் சொல்லிக் கொடுப்பது கல்பம். பிராம்மணன் செய்கிற ஒவ்வொரு சின்ன காரியமும் வேதத்தோடு சம்பந்தப்பட்டது. அப்படியிருந்தால் தான் அவன் விடுகிற ஒவ்வொரு மூச்சாலும், அவன் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியாலும் லோகத்துக்கு க்ஷேமகரமான திவ்ய சக்திகளைப் பிடித்துக் கொடுக்க முடியும். “இப்படி உட்காரு, இப்படிச் சாப்பிடு, இப்படி வேஷ்டியைக் கட்டிக் கொள்ளு” என்று ஒவ்வொன்றையும் சட்டமாக அவனுக்கு உத்தரவு போடுவது இதற்காகத்தான்.
உதாரணமாக வீடு கட்டுவதைப் பற்றிக் கூட கல்ப சாஸ்திரத்தில் இருக்கிறது. கிருஹ நிர்மாணம், வாஸ்து லக்ஷணம் என்றெல்லாம் அது விவரிக்கப்படுகிறது. இதைப் பற்றி எதற்கு சாஸ்திரத்தில் சொல்லவேண்டும் என்றால், ஒருவன் பண்ண வேண்டிய காரியத்துக்கு வீட்டின் சில்பம் (architecture, கட்டுமான அமைப்பு) அநுகூலமாயிருக்க வேண்டும். வைச்வ தேவ பலியை இன்ன மாதிரி த்வாரத்தில் (வாசலில்) போடவேண்டும் என்று விதி இருந்தால் அந்த மாதிரி வாசல் உடைய வீடு இருந்தால்தானே முடியும்? Flat -ல் முடியுமா? அநுஷ்டானங்களுக்கு அநுகூலமாக இருப்பதற்கே க்ருஹ நிர்மாணமும் கல்ப ஸூத்திரத்தில் சொல்லப்பட்டு விடுகிறது. ஒளபாஸனம் பண்ணுகிற இடம் ஒரு குறிப்பிட்ட மாதிரி இருந்தால்தான் முடியும். அந்த லக்ஷணம் சாஸ்திரத்தில் இருக்கிறது. அந்த லக்ஷணத்துக்கு ஒத்து வராத கட்டிட அமைப்பானால் அங்கே இந்தக் கர்மாவைச் செய்வதற்கே சிரமமாகிறது. ஸ்கூலில் பசங்களை உட்கார்த்தி வைத்துப் பாடம் சொல்லிக் கொடுக்கும் க்ளாஸ்-ரூம்கள் ஒரு மாதிரியாக, ஒரு விதமான பெஞ்சுகள் மேஜைகளோடு இருக்க வேண்டியிருக்கிறது. அங்கேயே அவர்கள் எக்ஸ்பெரிமென்ட் பண்ண வேண்டிய லாபரட்டரியில் எல்லாம் வித்யாஸமாயிருக்கிறது. காரியத்தைப் பொறுத்தே சில்பம் (கட்டிட அமைப்பு, furniture முதலான திரவியங்கள்) என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தம்.
நான் பூஜை பண்ணுகிறேன். அதற்கென்று தனியாக சில லக்ஷணத்தோடு இடம் இருக்க வேண்டும். பங்களா ஒன்றில் எல்லா இடமும் ஸமமாக இருக்கிறது. அப்படிப்பட்ட இடம் ஒன்றில் பூஜை செய்ய ஆரம்பித்தால் கூட்டம் அதிகமாக வந்தால் மேலே மேலே வந்து பூஜைக்குப் பக்கத்தில் வந்து விடுகிறார்கள். ஸ்திரீகள், புருஷர்கள், விழுப்பு, மடி, ஆசார அநுஷ்டானம், வர்ணாசிரம தர்மம் முதலிய பிரிவுகள் அந்தக் கூட்டத்தில் மாறிவிடுகிறது. பங்களா அப்படி மாறும்படிச் செய்து விடுகிறது. இந்த பங்களா சில்பம் யாருடையது? இந்த மாதிரி வித்தியாஸங்கள் இல்லாத வெள்ளைக்காரருடைய சில்பம்! தனித்தனியாகவும் பிரிந்து இருக்க வேண்டும்; அதே சமயம் எல்லோருக்கும் இடம் இருக்க வேண்டுமென்ற நம் ஆசாரப்படி செய்ய ஆசையிருந்தாலும் புது மாதிரியான வீட்டு ப்ளானே கலந்தாங்கட்டியாகப் பண்ணி விடுகிறது. மேடை, கூடம், உள் என்று தனித்தனி இடங்கள் இருந்தால் அப்பொழுது வருபவர்கள் தனித்தனியாக உட்கார்ந்து கொள்வார்கள். சில்பமே அவர்கள் உட்கார்ந்து கொள்ள வேண்டிய மாதிரியைச் சொல்லிக் கொடுக்கும். நம்முடைய ஸம்பிரதாயத்தை அநுஸரித்து நம்முடைய சில்பம் ஏற்பட்டிருக்கிறது. கீழே மழமழவென்று சிமென்டுத் தரையாக இருந்தால் எச்சிலை மெழுக ஜலம் விட்டால் அது பரவி எல்லா இடமும் ஒரே எச்சிலாய் விடுகிறது. அந்த சில்பம் உடையவர்கள் மேஜையின்மேல் சாப்பிடுகிறவர்கள். ஆகையால் அவர்களுக்கு எப்படி இருந்தாலும் பாதகமில்லை. நமக்குத்தான் கஷ்டமாக இருக்கிறது. இப்போது இந்த இடத்தில் நான் பூஜை பண்ணவும், பேசவும் வசதியாக இந்த மேடை இல்லாவிட்டால் எத்தனை கஷ்டமாயிருக்கும்?
நம்முடைய சில்பப்படி கிருஹ நிர்மாணம் பண்ண வேண்டும். கிருஹஸ்தன் என்பது கிருஹம் என்பதிலிருந்து ஏற்பட்ட பெயர். அவன் நம்முடைய சில்பப்படிதான் கிருஹ நிர்மாணம் செய்ய வேண்டும். அதை ஸூத்திரக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள். பற்று, விழுப்பு, மடி எச்சில் முதலியவைகளைக் கவனித்துக் கொண்டு இருக்க விரும்புகிறவர்கள் நம்முடைய சில்பத்தை அநுசரிக்க வேண்டும். மற்றவர்களின் சில்பப்படி உள்ள இடங்களில் நாம் வஸிக்க ஆரம்பிக்கிறோம். அதனால் ஆசாரங்களை அநுசரிக்க முடியாமல், முதலில், ‘இப்படியிருக்கிறதே, என்ன பண்ணுவது?’ என்று எண்ணுகிறோம். பின்பு ‘குளிர்’ விட்டு விடுகிறது! ஆசாரமே மாறிவிடுகிறது! வீட்டை விடப்பிடிக்காமல் ஆசார அநுஷ்டானத்தை விட்டு விடுகிறோம்!
கல்பம் வேதாந்தங்களில் ஆறாவதானது. இதிலே அடங்குகிற 40 ஸம்ஸ்கார விஷயங்களை பிற்பாடு தர்ம சாஸ்திரங்களைச் சொல்லும்போது கொஞ்சம் விவரமாகச் சொல்கிறேன்.
சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்ற ஆறோடு நாலு வேதங்களைப் பற்றிய ஸமாசாரங்களையும் சேர்த்து இதுவரை பதினாலு வித்தைகளில் பத்தைப் பார்த்து விட்டோம். பாக்கி நாலு இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.