யுத்த கார்யந்தானென்றில்லை, ரொம்பவும் ஸாத்விகமாக ஒரு நல்லது செய்யப் போனால்கூட ஒருத்தருக்கு உபகாரமென்று செய்வது வேறு யாராவது ஒருத்தருக்கு ஏதாவது அபகாரம் செய்துவிடுகிறது.
நான் ஒன்று நினைத்துக் கொள்வதுண்டு : — மில் துணி பஹிஷ்காரம் பண்ணிக் கதரை அபிவிருத்தி பண்ண வேண்டுமென்று காந்தி தீவ்ரமாக இருந்த காலம். சீமையிலிருந்துதான் அப்போது மில் துணி வரும். ஆகையினால் மில்துணி பஹிஷ்காரம் என்பதில். ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ என்கிறமாதிரி இரண்டு லக்ஷ்யங்கள் பூர்த்தி ஆயின: ஸ்வதேசியத்தை ஆதரித்து விதேசியத்தை பஹிஷ்கரிப்பது என்பது ஒன்று; Man-power-ஐ (மனித சக்தியை) ஆதரித்து மெஷின் பவரை எதிர்ப்பது என்பது இன்னொன்று.
இந்தக் கொள்கைகளில் எனக்கும் அபிமானம் உண்டு. அப்போது* ராமேச்வர யாத்ரை போயிருந்தோம். இந்த நல்ல ஸமயத்தில் மடத்துச் சிப்பந்திகளையெல்லாம் ஆலைத் துணியை விட்டுவிட்டுக் கதர் உடுத்தும் பழக்கத்தை மேற்கொள்ளச் செய்யவேண்டும் என்று தோன்றிற்று. அக்காலத்திலே அங்கங்கே மில்துணிகளைச் சொக்கப்பானை மாதிரி கொளுத்தி ஸ்வதேசி அபிமானிகள் விழா நடத்துவது வழக்கம். எனக்கென்னவோ, அசேதனமான துணிதான் என்றாலும் அதைக்கூட நெருப்பில் போட்டுக் கொளுத்துவது என்றால் ஹிம்ஸைமாதிரி தோன்றிற்று. இப்படியில்லாமல், ஸாத்விகமாக குளிர்ச்சியாக, ‘ஜலஸமாதி’என்று சொல்கிறார்களே, அப்படி ஆலையில் உற்பத்தியான வஸ்திரங்களை ஸமுத்ரத்தில் போட்டுவிட்டு, (மடத்துச் சிப்பந்திகள்) எல்லாரையும் கதர் கட்டிக்கொள்ளும்படிப் பண்ணலாமென்று நினைத்தேன். அப்படியே தநுஷ்கோடியில் எல்லாரும் ஸ்நானம் செய்தவுடன், மில் துணி உடுத்திக்கொண்டிருந்தவர்கள் அதை ஸமுத்ரத்திலே போட்டுவிட்டுக் கதர் கட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். மதுரையிலிருந்து இதற்காக நிறையக் கதர் வஸ்த்ரங்கள் தருவித்திருந்தோம். தலா இரண்டு ஜோடி கதர் சோமனும் (வேஷ்டியும்) மேல்வேஷ்டியும் கொடுத்தது.
கைத்தொழிலை ஆதரிப்பது manual labor (உடலுழைப்பு) என்றால் மட்டமாக நினைக்காமல் யாராயிருந்தாலும் ராட்டினத்தை சுற்றி நூற்பது, அதனாலேயே வீண்பேச்சு முதலியவற்றில் போகாமல் ஒரு டிஸிப்ளினில் வருவது, நம் தேசத்துக்கு என்று என்ன உண்டோ அதோடு த்ருப்தியாயிருந்து, விதேசச் சரக்குகளில் மோஹத்தை விட்டு நம்முடைய பண்பாட்டைக் காப்பாற்றுவது, நம் நாட்டுப் பணம் அநியாயமாக வெளி தேசத்துக்குப் போகாமல் தடுப்பது, பல ஏழைகளுக்கு ஜீவனோபாயம் கிடைக்கப் பண்ணுவது — என்று இத்தனை அம்சங்கள் மில் துணியை பஹிஷ்கரித்துக் கதரை ஆதரிப்பதில் இருக்கிறதல்லவா? அதனால் இது ரொம்ப நல்ல திட்டமாகத்தானே தெரிகிறது?
ஆனால் இப்படிப் பண்ணினால் தங்கள் வியாபாரமே போய்விடும். தாங்கள் தலையில் துணியைப் போட்டுக் கொள்ளும்படியாகிவிடும் — [சிரித்து] தாங்கள் உற்பத்தி செய்யும் துணியை விற்று லாபம் பண்ணாமல், தாங்களே தலையில் துணியைப் போட்டுக்கொள்ளும்படியாகிவிடும்! — என்று லங்காஷயர், மாஞ்செஸ்டர் மில்காரர்களெல்லாம் கூ கூ என்று கூப்பாடு போட்டார்கள். முதலில், ‘அதற்காக அப்பாவி இண்டியன்தான் அகப்பட்டானா, தலையிலே கை வைக்க?’ என்றுதான் தோன்றிற்று.
அப்புறம் யோசித்துப் பார்த்ததில், ‘வெள்ளைக்காரர்கள் வஞ்சகமாக வ்யாபார ஸாமர்த்யங்கள் செய்து அமிதலாபம் பண்ணுவதும், வ்யாபாரம் என்று ஆரம்பித்துத் தங்களுடைய வாழ்க்கை முறை, ஆட்சி, மதம் ஆகியவற்றையும் பிற தேசங்களில் விஸ்தரித்து அவற்றின் வயிற்றிலடித்துத் தங்களைப் போஷாக்குப் பண்ணிக் கொள்வதும் மஹா தப்புதான். என்றாலும், அவர்கள் தேசத்தில் கருப்பு நிலக்கரியையும் வெளுப்புச் சாக்குக் கட்டியையும் விட்டால் வேறே விளைபொருள் கிடையாதே! ஆனதால் அவர்கள் ஆலைத் தொழில் பண்ணி ஏற்றுமதி செய்து பிற தேசங்களிடமிருந்துதானே தங்களுடைய எல்லா வாழ்க்கைத் தேவைகளுக்குமானதை ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும்? இதில் ஒரு ‘அயிட்ட’மாக வெளி தேசத்துப் பருத்தியை அவர்கள் தருவித்து நூலாய் நூற்றுத் துணியாகப் பண்ணி ஏற்றுமதி செய்வதையும் அடியோடு தப்பு என்று சொல்லமுடியாது போலிருக்கே! அவர்கள் ஆசைப்படுகிற மாதிரி, ‘இதில் தாங்களே ஏகபோக்கியம் பெற்று அமிதலாபம் எடுக்கவேண்டும்; அந்தந்த தேசத்து நெசவாளிகள் நாசமாகப் போனாலும் போகட்டும், தாங்கள் தான் வ்ருத்தியாக வேண்டும்’ என்பது ந்யாயமே இல்லையென்றாலும், ஏதோ ஒரு அளவு, ஒரு quota அவர்களுக்கும் விட்டுக்கொடுத்து அவர்கள் மில்களை நடத்தவிட்டால்தானே அந்த ஜனங்களும் வாழமுடியும் போலிருக்கிறது?’ என்று தோன்றிற்று.
இங்க்லாண்ட் மாதிரியேதான் இன்னும் சில தேசங்களும், ஏற்றுமதி பண்ணினால்தான் அவற்றைச் சேர்ந்த ஜனஸமூஹங்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கும். அதைக் கொண்டுதான் அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான பண்டங்களை இறக்குமதி செய்துகொள்ள முடியும். ஆனபடியால் இந்தியா, சைனா மாதிரி பெரிய தேசங்களில் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் ஸ்வேதசியமாகவே பண்ணிச் சமாளித்துக்கொண்டுவிடுவது, self-sufficiency (தன்னிறைவு) பெற்று ரொம்பவும் அத்யாவச்யமான இறக்குமதியோடு நிறுத்திக்கொண்டு விடுவது என்று வைத்துவிட்டால் ஏற்றுமதியையே நம்பி உயிர் வாழ்கிற தேசத்து ஜனங்கள், பாவம், என்ன பண்ணுவார்கள்? லங்காஷயர்க்காரன் கூ கூ என்று கத்துவதில் அடாவிடி இருக்கத்தான் செய்கிறதென்றாலுங்கூட, நாமும் ஸ்வதேசியக் கொள்கையில் ரொம்பக் கடுமையாக இருந்தால் அதனால் ‘ஜெனுவி’னாகவே சிலபேர் கஷ்டத்துக்கு ஆளாகும்படிதானே ஆகும் போலிருக்கிறது?’ என்று தோன்ற ஆரம்பித்தது.
அதற்கப்புறம் என்னைப் பொறுத்தமட்டில் மில் துணி வேண்டாம் என்று வைத்தது வைத்ததுதான் என்று ஆக்கிக் கொண்டுவிட்டாலும் மற்றவர்கள் விஷயமாக எதுவும் ‘கம்பெல்’ பண்ணவேண்டாமென்று விட்டுவிட்டேன்.
எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நம் தேச ஜனங்களின் தொழில் கெட்டுப்போகப்படாது. நம் பணம் அந்யாயமாக வெளியூருக்குப் போய் அவன் கொழுக்கப்படாது — நம்மை இளைக்கப்பண்ணி அவன் கொழுக்கப்படாது — என்பதற்காக ஒரு நல்ல ஏற்பாடு செய்தால், அதனாலுங்கூட ‘ஜெனுவி’னாகவே எவனாவது பாதிக்கப்படுகிறான்!
வெளி தேசக்காரன்தான் என்றில்லை, கதர் கதர் என்று அதையே ஆதரிப்பதென்றால் உள்ளூரிலேயே கைத்தறிக்காரன், மில்காரன் தன் தொழில் போச்சு என்று அழுகிறான், ஆக்ஷேபம் பண்ணுகிறான்.
கைத்தொழிலுக்கு நல்லது செய்யப் போனால் ஆலைத் தொழிலுக்குக் கெடுதல் ஏற்படுகிறது. ஆலைத்தொழிலுக்கு நல்லது செய்யப்போய் அதில் வேலை செய்கிற ஆயிரம் பேருக்கு நல்லது ஏற்படுத்தும்போதோ பத்தாயிரம், இருபதாயிரம் கைத்தொழில்காரர்களின் வயிற்றிலடிக்க வேண்டி வருகிறது!
இத்தனை லிஜிஸ்லேஷன்கள் (சட்டங்கள்) கொண்டுவரப் பட்டிருக்கின்றனவே, இவை அத்தனையும் யாருக்கோ நல்லது செய்யும் உத்தேசத்தில் கொண்டுவந்ததுதானே?ஆனால் எந்த லெஜிஸ்லேஷனாவது எதிர்ப்பு இல்லாமல் பாஸாகி இருக்கிறதோ?வாக்-அவுட், டெமானஸ்ட்ரேஷன், ஹர்த்தால் என்று போகிற அளவுக்கல்லவா எதற்கும் ஆப்போஸிஷன் வருகிறது?
என்ன அர்த்தம்?
எந்த நல்ல திட்டம் கொண்டுவந்தாலும் அதுவும் யாருக்கோ கெடுதல் செய்கிறது என்றுதான் அர்த்தம்!
அத்தனை அரசியல் கட்சிகளும் நல்லது செய்யத்தான் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம். அரசியல் கட்சிகளை மட்டும் சொல்வானேன்? அத்தனை மத ஸம்ப்ரதாயங்களும் நல்லதற்காகவேதான் ஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் கட்சிக்குக் கட்சி மதத்துக்கு மதம் சண்டையான சண்டை என்றால், யார் சொல்வது நல்லது, யார் சொல்வது கெட்டது? ஸமூஹ விஷயத்தில் (லௌகிகமாக) இதுதான் நல்லது என்று ஒரு வழியை மட்டும் வைக்கமுடியாததால் தான் இத்தனை கட்சிகள் தோன்றியிருக்கின்றன. அப்படியே ஆத்மார்த்தமாகவும் இதுதான் நல்லது என்று ஸர்வ ஜன ஸம்மதமாக ஒன்றைக் காட்ட முடியாததால்தான் இத்தனை மதங்கள் தோன்றியிருக்கின்றன. எந்தக் கட்சியானாலும் மதமானாலும் அதனால் யாருக்கோ லோக ரீதியான வாழ்க்கையிலோ, மனோரீதியான அநுபவத்திலோ கஷ்டம் ஏற்படுவதால்தான் எதிர்ப்பு, சண்டை, குஸ்தி ஏற்படுகிறது!
ஸநாதனிக்கு நல்லது பண்ணினால் சீர்திருத்தவாதி லபோ லபோ என்கிறான். சீர்திருத்தவாதிக்கு ஸாதகமாகப் பண்ணினால் ஸநாதனி சபிக்கிறான்; இவன் சபிப்பது மட்டுமில்லை, ‘ரிஷிகள் எல்லாம் சபிப்பார்கள். தெய்வ சாபமே வந்துவிடும்!’ என்கிறான்!
ஒரு பாஷையை அபிவ்ருத்தி செய்தால் இன்னொரு பாஷை க்ஷீணிக்கிறது!
பண்ணையாளுக்கு நல்லது பண்ணினால் நிலச் சொந்தக்காரனுக்குக் கெடுதலாகிறது.
முன்னேறிய வர்க்கம், பின்னேறிய வர்க்கம் என்று பிரிவு செய்திருப்பதில் ஒன்றுக்கு நல்லது பண்ணுவதில் இன்னொன்று படும் அவஸ்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
‘இது நல்லது’ என்று ஒரு கட்சி, ‘அப்படியில்லை’ என்று இன்னொரு கட்சி என்பதாகப் பிரிந்து நிற்பதற்கிடமில்லாமல், ஸர்வ ஜனங்களும் ஏக மனதாக, ‘இது நல்லது தான்; இந்த ஸத்கார்யத்தினால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது’ என்று நினைத்துப் பண்ணுகிறவற்றில் கூட ஒரு அஞ்சு, பத்து பெர்ஸென்டாவது கெடுதி வந்து சேராமலிருப்பதில்லை.
கோவில் கட்டுவதைவிட நல்ல கார்யம் லோகத்தில் இல்லை. அதிலேகூட பெரிய பெரிய பாறாங்கல்லுகளைக் கொண்டுவந்து இறக்குவது, அவற்றை தூக்கி நிறுத்தி கோபுரம் கட்டுவது என்கிறபோது மாடுகளுக்கும், ஆள்களுக்கும் முழி பிதுங்கி முதுகு ஒடிகிற மாதிரி ச்ரமம் ஏற்படுகிறது. ரதோத்ஸவத்தில் தேர்க்காலில் அரைபட்டு எவனோ ஒருத்தன் உயிரைவிடுகிறான்.
கோவில் கட்டுவதுகூட, ஸர்வஜன ஸம்மதமான நல்லது என்று இக் காலத்தில் சொல்லமுடியாது. ‘எதற்குக் கட்டணும்? இருப்பதையும் இடிக்கணும்’ என்று அதற்கும் எதிர்க்கட்சி இருக்கலாம்! ஆஸ்பத்திரியும் ஸ்கூலும் வைப்பதுதான் இப்போது ஸர்வ ஜன ஸம்மதம். வாஸ்தவமாகவே ஜனங்களின் சரீர உபாதைகளைப் போக்குவதும், அவர்களுக்குக் கல்வியறிவு தருவதும் உத்தமமான பணிகள் தான். சாஸ்த்ர, புராணங்களிலும் இவற்றை நிறையச் சொல்லியிருக்கிறது. ஆனாலும் இவைகூட முழுக்க, unmixed-ஆக நல்லது மட்டுந்தான் செய்பவையா என்று யோசித்துப் பார்த்தால், இல்லை என்றே தெரியும். துஷ்டத் தனமான மனப்போக்குள்ள ஒருத்தன் நோயாளியாக இருப்பதாலேயே தான்பாட்டுக்கு முடங்கிக் கிடப்பான். நல்லது செய்வதாக நினைத்து அவனுக்கு வைத்யம் பார்த்து த்ருடசாலியாக ஆக்கபோக, அவன் கன்னக்கோலையோ, கத்தியையோ தூக்கிக்கொண்டுபோய் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிடுவான். எதுவும் தெரியாமல் ஸாதுவாகத் தன்பாட்டுக்கு ஏதோ ஒரு மூட்டை தூக்கிப் போட்டுவிட்டுக் கஞ்சி காய்ச்சிக் குடித்துக்கொண்டிருப்பவனுக்கு அறிவு ப்ரகாசம் உண்டாக்குவதாக நினைத்து கல்வி தரப்போக, அவன் இல்லாத குயுக்தி எல்லாம் செய்யக்கற்றுக்கொண்டு, ஃபோர்ஜரிப் பத்திரம் எழுத ஆரம்பிக்கலாம்!
நல்லதையெல்லாம் தள்ளிவிட்டுக் கெடுதலை மட்டும் பார்த்துப் பெரிசு படுத்துவதற்காகச் சொல்லவில்லை. எதிலும் கெடுதல்தான் ஜாஸ்தி என்றும் சொல்லவரவில்லை. அஞ்சு பெர்ஸென்ட், பத்து பெர்ஸென்ட் என்று (கெடுதலைக் குறைவாகத்) தானே முதலிலேயே சொன்னேன்? இன்னம் குறைவாக ஒரு பெர்ஸென்ட், அரை பெர்ஸென்ட் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுவோம். ஆனாலும் கார்யம் என்று வந்தால் நூறு பெர்ஸென்டும் நல்லதாகவே இருக்கமுடியாது என்பதுதான் உண்மை என்று நிரூபணம் ஆகிறதா இல்லையா?
‘ஐயோ நாம் அப்படி நினைத்துப் பண்ணினோம்; இப்படி விபரீதமாக முடித்துவிட்டதே!’ என்று எத்தனை ஸந்தர்பத்தில் நினைத்திருக்கிறோம்?நல்லதென்று நினைத்துப் பண்ணுவது கெட்டதில் முடிகிறதைத்தானே இது காட்டுகிறது?
ஸ்வராஜ்யம் வாங்கிக் கொடுத்த காந்தியைப் போல நமக்கு நல்லது பண்ணினவரே இல்லை என்று விழாக்கள் கொண்டாடித் தலைவர்களெல்லாரும் புகழாரம் சூட்டுகிறார்கள். ஆனாலும் அவரோ ஸ்வராஜ்யம் வந்து ஐந்தாறு மாஸங்களுக்குள் அஸாஸினேட் ஆவதற்கு (கொலை செய்யப்படுவதற்கு) முந்தியே, தேசம் இரண்டாகப் பிரிந்ததில் லக்ஷக்கணக்கில் ஜனங்கள் கொன்றுகொண்டு ரணகளரியானதைப் பார்த்து மனஸ் தாங்காமல் ‘இதற்காகத்தானா ஸ்வயராஜ்யம் வந்தது?’ என்று புலம்பும்படியாயிற்று! ஸ்வதந்த்ர இந்தியாவில் அந்த ஐந்தாறு மாஸம் ஜீவிப்பதற்குள்ளேயே அவர் மனஸுக்கு ஏற்காத அநேக விஷயங்கள் நடந்து அவர் பட்டினிகூடக் கிடக்க வேண்டியதாயிற்று.
நல்லது பண்ணப் போய் எப்படி பயங்கரமாகக் கெட்டது புறப்பட்டுவிடுகிறது என்பதை நன்றாக தெரிவிப்பதாக ‘கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது!’ என்று பழமொழியே இருக்கிறது.
இன்னொரு பழமொழி: ஒரு ப்ரச்னையைத் தீர்க்கப் பரிஹாரமாக நினைத்து என்னவோ ஒன்று பண்ணுகிறோம். அப்போதைக்கு மூலமான ப்ரச்னை தீர்த்த மாதிரியிருக்கிறது. ஆனால், போகப் போக, நாம் பண்ணின பரிஹாரத்திலிருந்தே எதிர்பார்க்காத கஷடங்கள் உண்டாகின்றன! வியாதி தீரச் சாப்பிடும் மருந்தே அப்புறம் அதைவிடப் பெரிய வியாதியை ஏற்படுத்துவதையும் பார்க்கிறோம். “Remedy worse than disease” என்கிறார்கள்!
இதையெல்லாம் பார்த்துவிட்டு, ‘சும்மாக் கிடப்பது தான் ச்லாக்யம், நல்லது பண்ணுகிறேன் என்று ஆரம்பிக்கப் போனால் நல்லதற்கில்லாததெல்லாம் கிளம்பிவிடுகிறது’ என்பதைத் தெரிவிப்பதாக ‘சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி’ என்றே பழமொழி இருக்கிறது!
ஊர் ஸமாசாரமெல்லாம் சொன்னேன். ஸொந்த ஸமாசாரமாக இரண்டு சொல்கிறேன் :
ஒரு ஊரில் (ஸ்ரீமடத்தின் ஆதரவில்) அன்னதானம் செய்தது. ரொம்பப் பேர், ஏழைகள், வயிறாரச் சாப்பிட்டு விட்டு, மனஸ் குளிர்ந்து வாழ்த்திக்கொண்டு போனார்கள். (சமையல் வகைகள்) எல்லாம் நிறையப் பண்ணியிருந்தும், மூட்டை அரிசி வடித்திருந்தும், கொஞ்சங்கூட பாக்கியில்லாமல் எல்லாம் ஜனங்கள் வயிற்றுக்குப் போச்சே என்று ரொம்ப த்ருப்தியாக இருந்தது. த்ருப்தி என்றால் என்ன? ‘நாமாக்கும் பண்ணிவிட்டோம்’ என்ற ‘ஈகோ’தான்!
பாத்ரம், பண்டம் எல்லாம் தேய்த்து, அடுத்த ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்த ஸமயம். அப்போது ஒரு பத்துப் பதினைந்து ஏழை ஜனங்கள் — ஸ்தீரிகள், குழந்தைகள் உள்பட — லொங்கு லொங்கு என்று ஓடிவந்து, “சோறு, சோறு” என்று கேட்க ஆரம்பித்ததுகள். எட்டு, பத்து மைல் தாண்டி எங்கேயோ இருக்கிறவர்கள். அன்னதான ஸமாசாரம் அவர்கள் காதுக்கு லேட்டாகத்தான் போயிருக்கிறது. உடனே, பாவம், வெய்யிலில் அத்தனாம் தூரம் ஓடி வந்திருக்கிறதுகள்! இங்கேயானால் பருக்கை சாதம் இல்லை! அண்டா, குண்டான் எல்லாம் வண்டியிலே ஏற்றிக் கொண்டிருக்கிறது! அப்போது அவர்களுக்கு உண்டான ஏமாற்றத்தைச் சொல்லிமுடியாது.
ஆயிரம் பேருக்குப் போட்டு ஏதோ நாம் ப்ரமாத உபகாரம் பண்ணிவிட்டோமாக்கும் என்று த்ருப்திப்பட்டது அத்தனையும் இந்தப் பத்துப் பதினைந்து பேருக்குப் பண்ணிய அபகாரத்தில் ஓடியே போய்விட்டாற்போலிருந்தது!
ஏதோ பழம், கிழம் கொடுத்து, சில்லறை கொடுத்து, அவர்களை ஸமாதானம் பண்ணி அனுப்பிவைத்தது. அவர்கள் ஸமாதானமானார்களோ இல்லையோ, இங்கே (தம்மையே குறிப்பிட்டு) ஸமாதானமாகவில்லை!’ பாவம்! வயிறார நல்ல சாப்பாடு கிடைக்குமென்று இந்தப் படைபதைக்கிற வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து குஞ்சும் குழந்தையும் பெண்களுமாக ஏமாந்து போச்சுகளே!’ என்று தானிருந்தது!’ ஆயிரம் பேர் சாப்பிட்டுவிட்டும் போனார்களே என்றால், நேற்றுவரைக்கும் அவர்களுக்கு நாமா போட்டோம்? நாளைக்கு நாமா போடப்போகிறோம்? அதே மாதிரி இன்றைக்கும் அவர்கள் எப்படியோ வயிற்றைக் கழுவிக் கொண்டிருப்பார்கள். ஆனால், ‘போடுகிறோம்’ என்று நாம் அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பினதால் தானே இந்தப் பத்துப் பதினைந்து பேர் வழக்கமாகத் தாங்கள் இருக்கிற இடத்தில் காய்ச்சிக் குடிப்பதை, அல்லது பிச்சை எடுத்துத் தின்னுவதை விட்டுவிட்டுப் பசியும் பட்டினியுமாய் வெய்யிலில் இத்தனாம் தூரம் ஓடிவந்து ஏமாந்து போகும்படி நேர்ந்திருப்பது? ஆக, கூட்டல், கழித்தல் பார்த்தால், உபகாரம் பெரிசா, அபகாரம் பெரிசா? ‘என்று தோன்றிற்று.
தானத்திலெல்லாம் உசந்ததாகச் சொல்லப்படும் அன்னதானத்தில்கூட இப்படி நல்லதோடு கஷ்டமும் கலந்து வருகிறது!
எதற்குச் சொல்கிறேனென்றால்: நாம் ஒருத்தனுக்கு உபகாரம் பண்ணுவதே நேராக இன்னொருத்தனுக்கு அபகாரமாக ஆகாதபோதுகூட, எப்படியோ சுற்றி வளைத்துக்கொண்டு போய் யாருக்கோ கஷ்டம் கொடுத்து, அதோடு, ‘உபகாரம் செய்கிறேன்’ என்று அக்ஷதை போட்டுக்கொண்டு கிளம்பின நாமும் மனஸ் வருத்தப்படும்படியாகலாம் என்று காட்டுவதற்குத்தான்!
அதாவது, எந்த உபகாரமானாலும் அத்தனை ஜனங்களுக்கும் செய்ய எவருக்கும் ஸாத்யமில்லை. எவராவது நம்முடைய உபகாரத்தை எதிர்பார்த்து ஏமாந்து மனமொடிந்து போகும்படியாகவும்தான் ஆகிறது. கோடீச்வரனானால்கூட ஸத்கார்யங்களுக்கு அவன் கொடுக்க ஆரம்பிக்கும்போது புற்றீசல் மாதிரி (நன்கொடை) கேட்டுக் கொண்டு பலபேர் வருகிறபோது, ஏதோ ஒரு இடத்தில் அவன் ‘இல்லை, போ’ என்று கையை விரிக்கும்படியாகிறது. இவன் (புதிதாக வருபவன்) கேட்கிற cause உசந்ததாகத் தான் இருக்கிறது. இவனுக்கு முன்னாடி யாரோ மோசக்காரர்கள்கூட ஏமாற்றி வாங்கிப் போயிருக்கிறார்கள். ஆனாலும் இவனுக்குக் கொடுப்பதற்கில்லாமல் ஏமாற்றத்தோடு அனுப்பிவைக்க நேருகிறது.
ஆஸ்பத்திரி, ஸ்கூல் என்று வைக்கும்போது, ‘Bed இல்லை;’ ஸீட் இல்லை’என்று சொல்லி, ரொம்பவும் நோயாளியாக உள்ள ஒருவனை, நல்ல புத்திசாலியான குழந்தை ஒன்றை ஏமாற்றி, மனஸை வருத்தித் திருப்பியனுப்பும்படியாகவும் ஏற்படுகிறது.
ஒரு உயிரைக் காப்பாற்றுவது எத்தனை உத்தமமான கார்யமாகத் தெரிகிறது? அதிலேகூடக் கெடுதல் வருகிறது!
ஸொந்த ஸமாசாரத்தில் இன்னொன்று சொல்கிறேன்:
ஒரு ஊரிலே நாங்கள் முகாம் போட்டிருந்த ஜாகை ரொம்ப பழைய நாள் கட்டிடமாக இருந்தது. ஓட்டுக் கட்டிடம். நடுவிலே முற்றம். கட்டிடக் கூரையின் உத்தரம் அநேகமாக உளுத்துப்போயிருந்தது. அதிலே, ‘விர்ர்’ ‘விர்ர்’என்று சத்தத்துடன் பறக்கிற பெரிய வண்டுகள் துளை போட்டுக்கொண்டு வாஸம் பண்ணிக்கொண்டிருந்தன. அவை அப்பப்போ முற்றத்திலே வந்து விழுந்து புரளும். இப்படி ஒரு வண்டு குப்புற விழுந்தபின் அதனால் மறுபடி நேராக நிமிர்ந்து புரள முடியவில்லை. எப்படியாவது புரண்டு பறந்து போய்விடணுமென்று அது காலை உதைத்துக் கொண்டு ரொம்ப ப்ரயத்தனம் பண்ணியும், முடியவில்லை. அப்போது-அந்த முற்றத்திலே சாரி சாரியாகக் சுட்டெறும்புகள் போய்க்கொண்டிருந்தன. அதுகள் இந்த வண்டு இப்படி வயிறு மேலேயும் முதுகு கீழேயுமாக ஒன்றும் பண்ணிக்கொள்ள முடியாமல் காலை உதைத்துக்கொண்டு கிடப்பதைப் பார்த்ததும், இதுதான் ஸமயம் என்று அதனிடம் வந்து மொய்த்துக்கொண்டு ‘வெடுக்கு’ ‘வெடுக்கு’ என்று அதன் கால்களைப் பிய்ப்பதற்காகக் கடிக்க ஆரம்பித்தன. வண்டு ஸஹிக்கமுடியாமல் அவஸ்தைப்படுவது தெரிந்தது. பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
வண்டைப் புரட்டி ஒரே நேரே போட்டால் அது பறந்து போகுமே, ஒரு உயிர் பிழைத்துப் போகுமே என்று நினைத்தேன்.
அப்படியே வண்டைப் புரட்டிப் போட்டது.
ஆனால் என்ன நடந்ததென்றால், அது தன் உயிர் தப்பினால் போதுமென்று உத்தரத்துத் துளைக்குப் பறந்து போய்விடவில்லை.
என்ன பண்ணிற்று என்றால், பழி தீர்த்துக்கொள்கிற மாதிரி அந்த எறும்புகளையெல்லாம் பிடித்து ‘லபக்’ ‘லபக்’ என்று தின்ன ஆரம்பித்துவிட்டது!
ஒரு உயிருக்கு உபகாரம் பண்ணப் போன லக்ஷணம் இத்தனை உயிர்களுக்கு அபகாரமாக முடிந்தது! ‘நாம் ஏதோ ஒரு ப்ராணியைக் காப்பாற்றி நல்லது பண்ணி விட்டோமாக்கும்’ என்ற ‘ஈகோ’வுக்கு ஒரு அடி போட்ட மாதிரி, பல ப்ராணி வதைக்குக் காரணமாகும்படியாயிற்று.
ஸாதுவான ஒரு மானைப் புலியிடமிருந்து காப்பாற்றினால்கூட, அந்தப் புலிக்கு சாகபக்ஷணம் (மரக்கறி போஜனம்) செய்யமுடியாதபடி ஈச்வரனே வைத்திருப்பதால், மானுக்குச் செய்யும் உபகாரம் புலியைப் பட்டினி போட்டுக் கஷ்டப்படுத்துவதாக ஆகிறது! அதுவும் ஒரு உயிர்தானே? அது வேண்டுமென்றா தன்னைத் தானே துஷ்ட ப்ராணியாகப் படைத்துக் கொண்டிருக்கிறது? இது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், மஹா துஷ்டனாக, லோக கண்டகனாக இருக்கிற ஒரு ராவணனை பகவானே அவதாரம் பண்ணிக் கொல்கிறானென்றால்கூட அப்போது பரம ஸாத்வியாக, உத்தமியாக இருக்கப்பட்ட ஒரு மண்டோதரியின் மாங்கல்யத்தைப் பறித்து அவளைக் கதறக் கதற அடிப்பதாக இருக்கிறது.
*1922-ல்