எந்த அவதாரத்தில் பார்த்தாலும் இப்படி எதுவாவது இல்லாமலிருக்காது. “நல்லது செய்கிறேன்; தர்ம ஸம்ஸ்தாபனம் என்ற நல்லதைச் செய்கிறேன்” என்றுதானே அது வரை எல்லா அவதாரங்களும் ஏற்பட்டன? அப்படி வந்ததால், ‘செய்கிறது’ என்னும்போது நல்லதோடு கொஞ்சமாவது கெட்டதும் வந்துதான் தீரும் என்பதால், அவதாரமே யாருக்காவது கஷ்டமும் கொடுப்பதாக ஆகியிருக்கிறது. ஸத்வ ஸ்வரூபமாகிய ஸ்ரீராமசந்த்ரமூர்த்தி சத்ருவின் பத்னியைத்தான் கதற அடிக்கும்படி இருந்ததென்றில்லை; புத்ர காமேஷ்டி பண்ணி அவரைப் பெற்றெடுத்து அவரிடம் அலாதி வாஞ்சை வைத்திருந்த தகப்பனாரே அவர் நிமித்தமாகத்தான் மனஸு துடித்து ஜீவனை விடும்படி இருந்தது.
அதனால், நல்லது செய்கிறதற்கு இத்தனை அவதாரங்கள் வந்தபிறகு, இப்போது ‘கொஞ்சங் கூடக் கஷ்டத்தின் கலப்பு, கெடுதலின் கலப்பு இல்லாமலிருக்க வேண்டுமானால் அதற்கு நல்லது செய்வதுகூட ப்ரயோஜனப்படாது; ஒன்றுமே செய்யாமலிருப்பதுதான் பரம ப்ரயோஜனம்; அதில்தான் ஒருத்தருக்கும் ஒரு அபகாரமும் வரமாலிருக்கும்’ என்று காட்டுவதற்காக ஒரு அவதாரம் வந்தால்தான் ஸரியாயிருக்கும்’ என்று பரமாத்மா நினைத்தார்! எதுவும் செய்யமாலிருப்பதைச் சொல்லவந்த அந்த அவதாரம்தான் நம்முடைய பகவத்பாதாள்…
ஆசார்யாள் ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு போன போது அவருடைய தாயார் மஹத்தான துக்கத்திற்கு ஆளாகும்படிதான் இருந்தது. தபஸிருந்து — ‘பஜனம்’ என்பதாக வ்ரத உபவாஸங்களிலிருந்து — தம்மை ஏக புத்ரனாகப் பெற்றெடுத்து, தம்மைத் தவிர யாருமில்லாத விதந்துவாயு மிகுந்த அம்மாவை அழ அழ வைத்துவிட்டுத்தான் ஆசார்யாள் (ஸந்நியாஸியாகப்) புறப்படும்படியிருந்தது. அப்புறம் அவர் மண்டனமிச்ரர் என்ற பெரிய மீமாம்ஸகரை வாதத்தில் வென்று அவரைத் தம் சிஷ்யராக்கிக்கொண்டு ஸந்நியாஸாச்ரமம் கொடுத்து அழைத்துக்கொண்டு போன போது அவருடைய பத்னியான ஸரஸவாணிக்கு ரொம்பவும் க்லேசத்தை உண்டாக்கும்படி இருந்தது. இப்படி இந்த அவதாரத்திலும் சில பேருக்குச் சில கஷ்டம் ஏற்படுத்தும்படி தானே இருந்தது என்றால், [சிரித்தவாறு] இந்த அவதாரத்திலும் ஒன்றும் செய்யாமலிருப்பதை உலகுக்கு உபதேசம் செய்யவேண்டும் என்றுதானே புறப்பட்டார்? இந்த உபதேசந்தான் லோகத்துக்கு நல்லது என்று நினைத்து, அந்த நல்லதைச் செய்யத்தானே வாழ்நாள் பூரா ஸகலமும் பண்ணினார்? நல்லது, செய்வது என்று வந்துவிட்டாலே கஷ்டமும் வந்துதான் ஆகணும் என்பதால் இந்த அவதாரத்திலும் அப்படிக் கொஞ்சம் வந்துவிட்டது! ‘ஒன்றும் செய்யாமலிருப்பதுதான் பரமோபகாரம்; நல்லது பண்ணுவதுகூட யாருக்காவது கொஞ்சமாவது அபகாரம் செய்யத்தான் செய்யும் — என்பதற்கு எடுத்துக்காட்டுப் பார்க்க வேறே எங்கேயோ போகவேண்டாம்! இந்த அவதாரத்திலேயே எடுத்துக்காட்டு பார்க்கலாம். நல்லதும் பண்ணவேண்டாம் என்ற விஷயத்தை லோகத்துக்குச் சொல்வதான நல்ல கார்யத்தைச் செய்த அவதாரத்தினாலேயும் சில பேருக்குக் கஷ்டம் ஸம்பவித்திருப்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிற மாதிரி நடத்திக் காட்டினார்!
ஆக, ஒன்றும் செய்யாமலிருப்பதன் பெருமையை, — சும்மாயிருக்கிற உபகாரத்தை — நிலைநாட்டுவதற்கே இந்த அவதாரம் ஏற்பட வேண்டியிருக்கிறது. ‘நாங்கள் நல்லதைச் சொல்கிறோம்’, ‘இல்லை, நாங்கள்தான் நல்லதைச் சொல்கிறோம்’ என்று தலைக்குத் தலை சொல்லிக்கொண்டு பலபேர் புறப்பட்டு ஏகப்பட்ட மதமும் ஸித்தாந்தமுமாகப் பரப்பிக் கொண்டு, குழப்பிக்கொண்டிருந்த ஸமயத்திலே, ‘ஒரு நல்லதும் சொல்லாமல், செய்யாமல் சும்மா இருப்பதுதான் எல்லாவாற்றையும்விடப் பெரிய நல்லது; அதுதான் பெரிய பரநலம்; அதே ஸமயத்தில் ஸ்வய மோக்ஷமும்’ என்று காட்டுவதற்காக இந்த அவதாரம் ஏற்படவேண்டியிருந்தது!
நல்லது பண்ணவேண்டும் என்று நாம் தீர்மானம் பண்ணிவிட்டோமென்றால் அப்படியே ஸாதித்துக் காட்டி விட முடியுமா என்ன? பலதாதாவாக ஒரு ஈச்வரன் இருக்கும் போது அவன் மனஸ் வைத்தொலொழிய நாம் நினைக்கிறபடி ஒருத்தனுக்கு நல்லது போய்ச்சேருமா, என்ன? அவன் கர்மா எப்படியிருக்குமோ? கஷ்டம்தான் படணுமென்று அவன் தலையில் எழுதியிருந்தால் — அதாவது, அப்படி அவன் பூர்வத்தில் பாவம் பண்ணியிருந்தானானால் — நாம் நல்லது செய்வதாக என்னதான் தலைகீழாக நின்றாலும் முடியுமா?