நடைமுறை: காரியம் செய்வது; லக்ஷ்யம்: சும்மாயிருப்பது : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆக, ஸ்வாமி — தக்ஷிணாமூர்த்தி — என்ன நினைத்தாரென்றால், ‘ஜனங்களால் ஒன்றும் பண்ணாமலிருக்க முடியவில்லையே; அப்படியிருக்க அவர்களுக்குத் தெரியவில்லையே! அதனால் — அதற்காக மட்டுமே — அவர்களுக்கு நிறைய வைதிக சாஸ்த்ரோக்தமான கார்யங்களை நாம் கொடுக்க வேண்டும் என்றாலும், ஒன்றும் பண்ணாமல் சும்மா இருக்கும் ஸ்திதியைத்தான் லக்ஷ்யமாக எப்போது பார்த்தாலும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும்’ என்று உத்தேசம் பண்ணினார்.

நடைமுறை லோகம் கார்யத்தினால்தான் நடக்கிறது என்பதைத்தான் அதற்கு (கார்யம் செய்வதற்கு) ஜஸ்டிஃபிகேஷனாகச் சொல்வது. ஆனாலும் நடைமுறை என்பதெல்லாமே இல்லாமலிருப்பதுதானே பரம ஸத்யமான லக்ஷ்ய நிலை? மோக்ஷமென்கிற நிலை? ஆத்மா ப்ரஹ்மமேதான் என்று தெரிந்துகொள்ளும் பரம லக்ஷ்யமான நிலை? அந்த அசலமான ஸ்திதியில் ‘நடை’ ஏது? ‘முறை’ என்பதும் ஒன்றுக்குமேல் வஸ்துக்கள் உள்ளபோது அவற்றை ஒரு ஆர்டரில் ஒழுங்கு பண்ணவதுதான். இருப்பதே ஒன்றுதான், வேறே வஸ்துவே இல்லை என்னும்போது, ‘முறை’ எங்கேயிருந்து வரும்? ‘நடை-முறை’ என்பது அடிப்பட்டுபோன ஸ்தானம்தான் நிஜமான நிலை. அங்கே இரண்டாவது ஆஸாமி, கருவி, கரணம் எதுவுமில்லாததால் கார்யமே கிடையாது.

நடைமுறை லோகம் மாயையும் மனஸும் இருக்கும் வரைதானே? இது அத்தனையும் அஞ்ஞானம்; மனஸைப் போக்கிக்கொண்டு மாயையிலிருந்து விடுபடுவதுதான் ஞானம் என்னும்போது, ‘நடைமுறை லோகம் கார்யத்தினால்தானே நடக்கிறது? கார்யத்தை விடு என்றால் எப்படி?’ என்று கேட்பதே அஸந்தர்பந்தானே? நடைமுறையில் கார்யத்தை விடச்சொல்வதும் அஸந்தர்பம். லக்ஷயத்தில் கார்யத்தை விடாமலிருக்கச் சொல்வதும் அஸந்தர்பம். ‘கர்மயோகம்’ என்று பெரிசாக ப்ரஸங்கம் பண்ணின பகவானும் இது நடைமுறையை உத்தேசித்தே ஏற்பட்ட ஆரம்பநிலைதான் என்று சொல்லி முடிகிற லக்ஷ்யத்திலே ஆரோஹணித்தவனைப் பற்றி, “அவனுக்குக் கார்யமே கிடையாது; தஸ்ய கார்யம் ந வித்யதே* என்று ஒரே தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

ஆகவே எவ்வளவுதான் கார்யத்தை விதித்தாலும் அதெல்லாம் லக்ஷ்யம் இப்போது அஸாத்யமாயிருப்பதால் அதை ஸாத்யமாக்கிக் கொள்வதற்காகச் செய்யும் பூர்வாங்க முயற்சிதான், அதாவது ‘பஹிரங்க ஸாதனம்’ என்று சொல்வதுதானே தவிர, ‘அந்தரங்க ஸாதன’மாக இருப்பது கார்யம் நின்றுபோன ஞானம்தான், ‘சும்மா – நிலை’தான். இப்படி, கார்யத்தை விதிக்கும்போதே சும்மாயிருப்பதையும் சேர்த்து சொல்வதற்காக அவதாரம் எடுக்கவேண்டுமென்று ஸ்வாமி நினைத்தார்.


* கீதை III.17

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is செயலற்றுப் போக வழியாகவே செயல்களும்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கர்த்தாவின் அஹம்பாவம் நீங்கவே நல்லதிலும் கெடுதல்
Next