ஆனாலும் — இதுதான் முக்யமான, ஸாரமான விஷயம் — ஆனாலும் இத்தனை அவர் பண்ணச்சொன்னதும் ஒன்றுமே பண்ணாமலிருக்கும் நிலைக்கு ஏற்றுவதற்காகத்தான்! கார்யம் பண்ணுவது-எத்தனை தர்ம கார்யமானாலும், ஸத்கார்யமாயிருந்தாலும், அதைப் பண்ணுவது — அதுவே லக்ஷ்யம் என்பதற்காக அல்ல. ஒன்றுமே பண்ணாமலிருக்கும் லக்ஷ்யத்தில் சேர்க்கத்தான் கர்மயோகம் என்ற அத்தனை தர்ம கார்யமும், பக்தி யோகத்தில் வரும் அத்தனை உபாஸனைகளும், ஞான யோகத்தினாலேயே வரும் ச்ரவண-மனன-நிதித்யாஸன கார்யங்களுங்கூட! அதற்கான பக்குவம் வருகிற வரைக்கும் யாராலும் சும்மாயிருக்க முடியவில்லையே என்பதனால்தான் அவரும் ஸரி, அவருக்கு முன்னால் கீதை, மற்ற ஸ்ம்ருதிகள் ஆகியவையும் ஸரி, எல்லாவற்றுக்கும் முந்தைய ச்ருதியுமே ஸரி, ‘மனம் போனபடி பண்ணித் தன்னையும் கெடுத்துக்கொண்டு, ஊரையும் கெடுக்காதே! மனஸின் கோணலை நிமிர்த்தும் படியாக, அதன் அழுக்கை அலம்பி எடுக்கும்படியாக இப்படியிப்படி கர்மாநுஷ்டானம், தர்மாநுஷ்டானம் என்று நிறையக் கார்யம் செய்’ என்று வழி சொல்லிக்கொடுத்தது.
மனஸை ஆத்மாவிலே கரைப்பதற்குப் பூர்வாங்கமாக சுத்தப்படுத்தவேண்டும். அதற்கு உபாயமாகக் கர்மாநுஷ்டானம் தவிர எதுவும் ஸாமானிய ஜனங்களுக்கு இல்லை. ஆகையால் செயலில்லாத ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்குப் போகவே ஸத் கர்மாக்களில் ஆரம்பிப்பது தவிர வேறு வழியில்லை. இதுதான் வேத சாஸ்த்ரம், கீதா சாஸ்த்ரம், ஆசார்யாளின் அத்வைத சாஸ்த்ரம் ஆகிய எல்லா சாஸ்த்ரங்களும் நைஷ்கர்ம்ய ஸ்திதியையே (செயலற்ற நிலையையே) லக்ஷ்யமாகக் கொண்டுள்ளபோதிலும் கர்ம யோகத்தை வெகுவாக வலியுறுத்தியிருப்பதற்குக் காரணம். கார்யமில்லாமல் நடைமுறை லோகமில்லை, நடைமுறையில் ஜீவர்களுக்குச் சேர்ந்துள்ள கர்மா கழியவும் அதுதான் வழி என்பதே நம்முடைய ஸகல சாஸ்த்ரங்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை.