மற்றவர்கள் சொல்வதெல்லாம் இருக்கட்டும். அதெல்லாவற்றையும்விட ஆசார்யாலே எங்கேயாவது தான் ஈச்வராவதாரம் என்று சொல்லியிருந்தால் அதற்கு ரொம்ப ரொம்ப ‘வால்யூ’ அல்லவா?
ஆசார்யாள் அடக்கமே உருவமாக இருந்தவர். ஆகையால் எத்தனையோ க்ரந்தங்கள் செய்திருந்தும் தம்மைப் பற்றி ஒன்றுமே சொல்லிக் கொள்ளாதவர். மற்றவர்கள் சொல்லியே அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் அவர் பிறந்த காலம், அவர் ஏற்படுத்திய ஸ்தாபனங்கள், அவர் எழுதிய புஸ்தகங்ககள், போன ஊர்கள், ஸந்தித்த மனிதர்கள் ஆகியவற்றைப் பற்றி பலவாறான அபிப்ராயங்கள் உண்டாகியிருப்பது. தான் ப்ரம்மஞானம் பெற்ற ஜீவன்முக்தர் என்பதைக்கூட அவர் ரொம்பவும் லேசாக, ஒரு ஸூசனையாக மாத்ரமே ஸூத்ரபாஷ்யக் கடைசியில் கோடி காட்டியதோடு விட்டிருப்பவர்1. அதனால் அவர் வெளிப்படையாக, “நான் அவதாரம்” என்று சொல்லிக் கொள்வாரென்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனாலும் மறைமுகமாக அப்படி அவர் தெரிவிப்பதாக ஒன்று இருக்கிறது.
தங்களை அடக்கி வைத்துக்கொண்டிருந்த ஆசார்யாள், ராமர் போன்ற அவதாரங்கள் தானென்றில்லை, நன்றாக பகவத் சக்தியை காட்டிய க்ருஷ்ணர் போன்றவர்களும் நரலீலை ருசிக்கவேண்டுமென்பதற்காக அவதாரத்வத்தைச் சில சமயம் முழுக்க ஒழித்து வைப்பதாகவும், சில ஸமயம் மறைமுகமாகத் தெரிவிப்பதாகவும், சில சமயத்தில் மட்டுமே வெளிப்பட ப்ரகடனம் பண்ணுவதாகவும் பார்க்கிறோம்.
(தான்) அவதாரந்தான் என்று காட்டவேண்டியதாக சில ஸந்தர்ப்பம் நேரிடும். அப்போதும்கூட அவதார விளையாட்டின் ருசி போகப்படாது என்பதால் உடைத்துச் சொல்லாமல் ஜாடை மாடையாகத் தெரிவித்து, குறிப்பாலுணர்த்தி விட்டு விடுவதுண்டு. இப்படியொன்று ஆசார்யாள் சரித்ரத்தில் நடந்தது.
அவருடைய குருவான கோவிந்த பகவத்பாதரிடம் வ்யாசாசார்யாள், “ஈச்வரனே அவதாரம் பண்ணப் போகிறான். லோக வழக்கை ஒட்டியும், லோகத்திற்கு வழிகாட்ட வேண்டியதை முன்னிட்டும் அந்த அவதார புருஷன் உன்னிடம்தான் சிஷ்யனாவதற்கு வருவான். அவனுக்கு உபதேசம் பண்ணு” என்று சொல்லி அனுப்பி வைத்திருந்தார். அதன்படியே அப்புறம் பாலசங்கரர் அவரிடம் போனார். ‘இதுதான் ஈச்வராவதாரமா?’ என்று நிச்சயப்படுத்திக் கொள்ள நினைத்து அவர் “நீ யார்?” என்று இவரைக் கேட்டார்.
அப்போது, அவரிடம் உண்மையைச் சொல்லித் தானாக வேண்டுமென்பதால் ‘நீ, நான், அவன், அது எல்லாம் ப்ரம்மம்தானே? இதைத் தெரிந்துகொண்டு ப்ரஹ்ம ஸ்வரூபமாக இருப்பவனே தாம்’ என்று ஆசார்யாள் பதில் சொன்னார். பத்து ச்லோகங்களாக அந்த பதிலைச் சொன்னார். “தசச்லோகி” என்று அதற்குப் பேர். அதில் ஒவ்வொரு அடியையும் முடிக்கும்போதுதான் ‘தாம் சிவனே’ என்றும் தெரிவித்துக்கொண்டார். கைலாஸத்தில் ஜடாதரனாக, கங்காதரனாக ஒரு ரூபத்தில் உள்ள சிவன் என்று உடைத்துச் சொன்னால், அது அழகில்லை, கௌரவமில்லை. ஆனால் ப்ரம்மத்தையே சிவம் என்று ‘சாந்தம் – சிவம் – அத்வைதம்’ என்று உபநிஷத்தில் சொல்லியிருக்கிறதே: ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்பதையே ‘சிவோஹம்’ என்று சொல்லும் வழக்கமிருக்கிறதே — அந்த விதத்தில் சொல்லிவிடுவோமேன்று நினைத்தார். ஒவ்வொரு அடியையும்,
“தத்-ஏகோ (அ)வசிஷ்ட: சிவ: கேவலோ (அ)ஹம்”
என்று முடித்தார்!
குறிப்புணர்ந்து கோவிந்த பகவத்பாதாலும், ‘(இது) வ்யாஸர் சொன்ன ஆசாமிதான்’ என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, அவதார விளையாட்டு கலகலத்துப் போகாமல் தாம் குரு, அவர் சிஷ்யர் என்கிற பாவங்களை வருவித்துக் கொண்டு உபதேசம் பன்னினாரென்று கதை போகிறது.
நாம் கதையை விட்ட இடத்துக்குப் போகலாம்.
பரமேச்வரன் தக்ஷிணாமூர்த்தியாக இருந்துகொண்டு தர்ம ஸம்ஸ்தாபனம், அத்வைத ஸ்தாபனம் செய்வதற்காக அவதாரம் பண்ணுவதென்று ஸங்கல்பம் செய்துகொண்டு, ஆனாலும் பத்ததியை அநுஸரித்து, தேவர்கள் வந்து ப்ரார்த்தித்துக் கொள்ளட்டும் என்று ஆலமரத்தின் கீழேயே மௌனமாகக் காத்துக் கொண்டிருந்தார்.
முன்னேயே சொன்னேன், இரண்டு ப்ரார்த்தனைகள் செய்யப்பட்ட பின்னரே அவதாரம் நிகழ்வதாக ஒரு பத்ததி என்று. ஒன்று தேவர்கள் ஸ்வாமியை அவரிருக்கும் திவ்ய லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்பாடு செய்வதற்காகச் செய்யும் ப்ரார்த்தனை; இன்னொன்று, பூலோகத்தில் அவரை அவதார புத்ரனாக வரவேற்பதற்காகத் தகுந்த யோக்யாதாம்சங்களுள்ள ஒரு ஸதிபதி பண்ணுகிற ப்ரார்த்தனை என்று சொன்னேன்.
நம் ஊரில் வெள்ளம், பஞ்சம், இப்படி ஏதோ ஒரு உத்பாதம். தலைநகரில் உள்ள ராஜாங்கத் தலைவருக்குத் தன்னாலேயே இதற்கான நிவாரணம் தர வேண்டுமென்ற கடமையும், கவலையும் இருக்கும். ஆனாலும் நம்மூர் கவர்னரோ, மந்த்ரியோ ‘ரிப்போர்ட்’ கொடுத்த அப்புறதான் அவர் ‘ஆக்ஷன்’ எடுப்பது என்று பத்ததி இருக்கிற தோல்வியோ? இப்படித்தான் பூலோகத்தில் ஏற்படும் அதர்ம உத்பாதம் பற்றி தேவர்கள் ‘ரிப்போர்ட்’ கொடுத்த அப்புறமே ஸ்வாமி ஸரி செய்வதற்காக அவதரிப்பது.
லோக நிர்வாஹத்தில் முக்யமான அதிகாரியாக ஸ்வாமி நியமித்திருக்கிற ப்ரஹ்மா, மற்ற அதிகாரிகளான தேவர்களை அழைத்துக்கொண்டு ‘ரிப்போர்ட்’ கொடுப்பதற்காக தட்சிணாமூர்த்தி உட்கார்ந்து கொண்டிருந்த ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தார்.
1ஆசார்யர்களின் ப்ரஹமஸூத்ர பாஷ்யம் IV-1-15, இவ்விடத்தில் ப்ரம்ம ஞானம் ஸித்தித்த பிறகும் ஒருவர் உடலோடு உயிர் வாழமுடியுமா என்னும் விஷயம் விவாதத்தால் தீர்க்கக்கூடிய உண்மையல்ல என்று சொல்லி, உடல் தரித்துள்ளபோதே ஒருவர் தாம் ப்ரம்மஞானம் பெற்றிருப்பதை உள்ளத்தில் நிச்சயமாக உணர்கிறாரெனில் அதை ஆக்ஷேபிக்கப் பிறரொருவருக்கு எப்படி ஸாத்தியமாகும்?’ என்று வினவுகிறார். ஞான ஸித்தியே முக்தி, அதைப் பெற்ற பின்பும் உடலில் உயிர் வாழ்பவனே ஜீவன்முக்தன் என்பதற்கு ஆசார்யாளும் விவாதம் மூலமே பல காரணம் காட்டி, முடிவில் இப்படிச் சொல்வது தமது சொந்த உதாரணத்தையே அவர் குறிப்பாலுணர்த்துகிறாரென்று ஐயமறத் தெரிவிக்கிறது.