பூர்வாசார்ய பரம்பரை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவருடைய ப்ரார்த்தனைப்படி ஸ்வாமி ஆசார்யாளாக அவதரித்த கதையைச் சொல்வதற்கு முன்னாள் அவருக்கு முன்னாலிருந்த ஆசார்ய பரம்பரையைப் பற்றியும், முக்யமாக நம்முடைய ஆசார்யாளுக்கு ஆசார்யராக இருந்த கோவிந்த பகவத்பாதாள், அவருக்கு ஆசார்யராக இருந்த கௌடபாதாள் ஆகியவர்களுடைய கதைகளையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

லோக வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதி மூதாதையான ரிஷியின் பெயரில் கோத்ரம் என்று சொல்கிறோம். அந்த ரிஷிக்குப் பிள்ளை , பேரன் என்று சில பரம்பரைகள் ரிஷிகளாகவே இருந்திருப்பார்கள். அநேகமாக எல்லா கோத்ரங்களிலும் இப்படி குல மூல புருஷர்களாக மூன்று ரிஷிகளுன் பெயரை ‘த்ரயார்ஷேயம்’ என்பதாகச் சொல்வார்கள். ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் பார்கவரில் ஆரம்பித்து ஐந்து ரிஷித் தலைமுறை இருந்திருப்பதால் ‘பஞ்சார்ஷேய’மாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ‘ஏகார்ஷேயம்’ என்பதாக ஒரே ஒரு ரிஷியைச் சொல்லும் ஒன்றிரண்டு கோத்ரங்களும் இருக்கின்றன. நமஸ்காரம் பண்ணி நாம் இன்னார் என்று ‘அபிவாதனம்’ சொல்லும்போது நம் வம்சத்தின் மூல புருஷர்களான இந்த மூன்று, (ஐந்து, அல்லது ஒரு) ரிஷியின் பெயரை ‘ப்ரவரம்’ என்பதாகச் சொல்லி, ‘இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையைச் சேர்ந்தவன், இன்ன சர்மாக்காரன் (பெயரைஉடையவன்)’ என்று சொல்கிறோம். ஸந்நியாஸிகள் குடும்பத்தை விட்டு விட்டவர்காளாதலால் அவர்களுக்கு இப்படி ப்ரவரம் சொல்வது கிடையாது. ஒரு ஸந்நியாஸியை நமஸ்கரிக்கும்போது மற்றவர்களும் ப்ரவரம் சொல்லி அபிவாதனம் பண்ணக்கூடாது.

ஆதி முதல்வர்களான ரிஷிகள் பேரைச் சொல்லி இப்படி ஒரு ப்ரவரம். இன்னொரு ப்ரவரம், கல்யாணத்தின்போது வதூ-வரர்களுக்கு (கல்யாணப் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும்) சொல்வார்கள். இது அந்த வம்சத்தில் முடிவாக வரும் மூன்று பேரின் பெயர்களையும் செய்த்துச் சொல்வது. முதலில் மூல ரிஷிகளின் பெயர்களைச் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட கோத்ரத்தில் வந்த இன்னாருடைய கொள்ளுப் பேரன், இன்னாருடைய பேரன், இன்னாருடைய பிள்ளை என்று வரணுக்கும், இதேமாதிரி இன்னினாருடைய கொள்ளுப் பேத்தி, பேத்தி பெண் என்று வதூவுக்கும் சொல்லி முடிப்பது இந்த ப்ரவரம்.

ச்ரார்த்தம், அமாவாஸ்யை முதலானவற்றில் கடைசி மூன்று மூதாதைகளான தகப்பனார், பாட்டனார், கொள்ளுப் பாட்டனார் ஆகியவர்களுக்கே தர்ப்பணாதிகள் கொடுப்பது.

நம்முடைய ஆசார்யாள் பால்யத்தில் ப்ரஹ்மசாரியாக இருந்துவிட்டு அப்புறம் ஸந்நியாஸியாகிவிட்டார். ப்ரஹ்மசாரியாக இருந்தபோது அவருக்கு கோத்ர ப்ரவரம் உண்டு. அது ஆத்ரேய கோத்ரம்என்று சொல்லப்படுகிறது. அவருடைய தகப்பனார் பெயர் சிவகுரு. பாட்டனார் பெயர் வித்யாதிராஜர். கொள்ளுப் பாட்டனார் பெயர் சொல்லியிருப்பதாக நினைவில்லை.

ஆனால் தம்முடைய 32 வயஸு ஜீவிதத்தில் முக்கால் பங்கு ஸந்நியாஸியாகவே இருந்த ஆசார்யாள்விஷயத்தில் கோத்ரம், பித்ருக்களின் பெயர் ஆகியவற்றுக்கு முக்யத்வம் இல்லை. அவர் விஷயத்தில் ‘ப்ரவரம்’ மாதிரி இன்னொன்றுதான் முக்யமாகத் தெரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது. அதுதான் பூர்வாசார்யா பரம்பரை. வம்ச பரம்பரை இல்லை – அப்பா தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று போய் மூல ரிஷிகளில் முடிப்பதில்லை; ஆசார்ய பரம்பரை; குரு பரம்பரை. குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு, பராபர குரு என்பதாகச் சொல்லிக்கொண்டு ஆதிகுரு வரை போகும் “ப்ரவரம்”! இதுதான் ஆசார்யாள் சரித்ரத்தில் முக்யம். இதைக் கொஞ்சம் பார்க்கலாம்1.

ஆதிகுரு தக்ஷினாமூர்த்தியானாலும் அவர் வெளிப்பட உபதேசிக்காததால், வெளிப்பட உபதேசிக்கும் மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையைச் சொல்லி ச்லோகம் இருக்கிறது.

தக்ஷினாமூர்த்தியாகிய பரமசிவனில் ஆரம்பித்து ஆனால் மஹா விஷ்ணுவை விட்டுவிட்டு, “வந்தே குரு பரம்பராம்” என்று ஒரு ச்லோகமுண்டு. ஆனால் அதில் ஆரம்ப குரு பரமசிவன், அப்புறம் நடுமையான குரு ஆசார்யாள் அதற்கப்புறம் நம்முடைய நேர் குரு என்று மூன்று பேரை மாத்ரம் சொல்லி இப்படி ஆரம்பம், நடு, முடிவு என்று போகும் பரம்பரையில் வருகிற அத்தனை குருக்களுக்கும் வந்தனம் என்று சுருக்கி விட்டிருக்கிறது :

ஸதாசிவ-ஸமாரம்பம் சங்கராசார்யா-மத்யமாம் |

அஸ்மத்-ஆசார்ய-பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்||

இன்னும் விரிவாக ஆசார்யாளுடைய நேர் சிஷ்யர்கள்வரை எல்லார் பேரையும் சொல்லும் ச்லோகம்தான் நான் சொல்ல வந்தது. அதில் பேசாத பரமசிவனைச் சொல்லாமல் மஹாவிஷ்ணு, ப்ரம்மா என்று ஆரம்பித்திருக்கிறது.

மஹாவிஷ்ணுதான் ப்ரஹ்மாவுக்கு வேதத்தைத் கொடுத்து, அந்த மந்த்ரங்களைக் கொண்டு ஸ்ருஷ்டி செய்யப் பண்ணினார் என்றது புராணங்களிலுள்ள கதை. இந்த வேதத்திலேயேதான் முடிவுப் பகுதியாக, ‘ச்ருதிசிரஸ்’ என்பதாக உள்ள உபநிஷத்துக்களில், ஸ்ருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொண்டு மோக்ஷம் அடைவதற்கான ப்ரஹ்ம விதையும் – அதாவது அத்வைத வேதாந்தமும் – இருக்கிறது. ஆகையினால் மஹாவிஷ்ணு இந்த வித்யைக்கு முதல் குருவாகவும், ப்ரஹ்மா அவரிடமிர்ந்து அதப் பெற்றுக்கொண்ட இரண்டாவது குருவாகவும் ஆகிறார்கள். மஹாவிஷ்ணு வேதத்தை உபதேசித்த பிறகுதான் ப்ரம்மா ஸ்ருஷ்டியே செய்தாரென்பதால் அவர் (மஹாவிஷ்ணு) தானே முதல் குருவாக இருக்க முடியும்?

மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வஸிஷ்டர், சக்தி என்ற மஹர்ஷி, பராசரர், வ்யாஸாசார்யாள், சுகாசார்யாள், என்று பிள்ளை – பிள்ளை வழியே இந்த குரு பரம்பரை போய், கல்யாணமே செய்துகொள்ளாத சுகாசார்யாளுக்கு அப்புறம் கௌடபாதாசார்யார், கோவிந்த பகவத் பாதாள் ஆகிய ஸந்நியாஸிகள் வழியாக நம்முடைய சங்கர பகவத் பாதாளில் முடிகிறது…. முடியவில்லை! பகவத்பாதாளுக்கு அப்புறம் அவருடைய நான்கு பிரதான சிஷ்யர்கள், அதற்க்கப்புறம் அவர்கள் வழியாக இன்று வந்துள்ள நம்முடைய நேர் குரு வரை புண்ய பரம்பரையைக் குறிப்பிட்டு நமஸ்காரம் தெரிவித்திருக்கிறது:

நாராயணம், பத்மபுவம், வஸிஷ்டம்

சக்திம் ச, தத்புத்ர பராசரம் ச, |

வ்யாஸம், சுகம், கௌடபதம் மஹாந்தம்,

கோவிந்த யோகீந்த்ரம், அதாஸ்யா சிஷ்யம் ||

ஸ்ரீசங்கராசார்யம், அதாஸ்ய பத்ம –

பாதம் ச, ஹஸ்தாமலகம் ச சிஷ்யம் |

தம் தோடகம், வார்த்திககாரம், அந்யாந்

அஸ்மத் குரூந் ஸந்ததம் ஆனதோஸ்மி ||

ஸாதாரண ப்ரவரங்களில் முதல் மூன்று ரிஷிகளைச் சொல்லி அப்புறம் அநேகம் பேரை, எத்தனையோ ஆயிரம் வருஷங்களில் இருந்த மூதாதைகளை விட்டுவிட்டுக் கடைசி மூன்று பேரான கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா பேர்களைச் சொல்வதாயிருக்கிறது. ஆனால் இந்த (ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரையின்) “ப்ரவர”த்திலோ ஆதியிலிருந்து யாரையுமே விட்டுப் போகாமல் சொல்லி ஆசார்யாளுடைய நேர் சிஷ்யர்கள் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. அதற்கப்புறம்தான் நம்முடைய நேர் குருவரை நடுவிலிருப்பவர்களைச் சொல்லாமல் gap. ஆசார்யாளின் கதையை வைத்து, அவருடைய பூர்வாசார்ய பரம்பரை என்று பார்க்கும்போது gap-ஏ இல்லை!

மஹாவிஷ்ணு, ப்ரம்மா, வஸிஷ்டர், சக்தி, பராசரர், வ்யாஸர், சுகர், கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் என்று அவிசின்னமாக (இடைமுறிவு இல்லாமல்) ஒன்பதே பூர்வாசார்யார்கள்தான் நம் ஆசார்யாளுக்கு முன்னாள் இருந்திருக்கிறார்கள்.

இப்படிச் சொன்னால் ஒரு கேள்வி வரும்: ஸ்ருஷ்டிக்கு முன்பே மஹாவிஷ்ணு ப்ரஹ்மாவுக்கு உபதேசித்தார், அப்புறம் அநேக யுகங்களுக்கு அப்புறம், அதாவது லக்ஷக்கணக்கான வருஷங்களுக்கு அப்புறம் கலியுகத்தில் 2500 வருஷத்திற்குப் பிறகு ஆசார்யாள் உபதேசம் பெற்றார் என்று சொல்லிவிட்டு, இத்தனை லக்ஷம் வருஷத்தில் ஒன்பதே தலைமுறைதான் ஆசார்ய பரம்பரை இருந்தது என்றால் எப்படி என்று கேட்கலாம்.

வஸிஷ்டர், பராசரர், வ்யாஸர், முதலானவர்கள் நம் மாதிரி அல்ப ஆயுஸ்காரர்கள் இல்லை. ரொம்பவும் ஆதியில் ரிக்வேத ரிஷிகளிலேயே ஒருத்தராக இருந்த வஸிஷ்டர் ஸூர்ய குலத்தின் அத்தனை ராஜாக்களுக்கும் குலகுருவாக இருந்திருப்பவர். ஆகையால் இப்பேற்பட்ட தீர்க்க ஜீவிகளைப் பற்றி கேள்வி கேட்பது ஸரியில்லை. சுகாசார்யாள் உள்பட குரு பரம்பரை புராண புருஷர்களைக் கொண்டதாக இருக்கிறது. அவர்கள் யுக யுகான்தரம் ஜீவிப்பவர்களாகவும், என்றைக்குமே அழிவில்லாத சிரஞ்சீவிகளாகவுங்கூட இருந்திருப்பவர்கள். அப்புறம் வந்த கௌடபாதார், கோவிந்த பகவத்பாதர் ஆகியோரும் யோகேச்வரர்களாதலால் நூற்றுக்கணக்கான வருஷங்கள் ஜீவித்திருக்கக் கூடியவர்கள்.

புராண புருஷர்கள், mythical personalities என்று சொல்வதற்கில்லாமல் நம் ஆசார்யாளுக்கு முந்தி சரித்ர புருஷர்களாக, historial personalities என்னும்படியாக இருந்தவர்கள் கௌடபாதரும், கோவிந்த பகவத்பாதரும்தான். இவர்கள்தான் முறையே ஆசார்யாளுடைய பரம குருவும், குருவும் ஆவார்கள். ஆகையால் முதலில் இவர்களுடைய கதைகளைப் பார்க்கலாம். இந்தக் கதைகளிலும் ஆதிசேஷன், பதஞ்ஜலி என்றெல்லாம் புராண புருஷர்களின் ஸம்பந்தம் வந்துவிடுவதால் பௌராணிகமான விருத்தாந்தங்களுக்கே உரிய அதிசயங்கள், அற்புதங்கள் எல்லாமும் சேர்ந்து ஸ்வாரஸ்யமாயிருக்கும்.

குரு என்பவர்தான் நமக்கு ஸாக்ஷாததாக உபதேசிப்பவர். அந்த குருவின் குரு பரமகுரு. பரமகுருவின் குரு பரமேஷ்டி குரு பரமேஷ்டி குருவின் குரு பராபர குரு. அதற்கு முற்பட்டவர்கள் பூர்வாசார்யார்கள் என்று ஒரு மொத்தமாகச் சொல்லிவிடுவது.

ஆசார்யாளின் குரு கோவிந்த பகவத்பாதர். பரமகுரு கௌடபாதர். பரமேஷ்டி குரு சுகாசார்யாள். பராபர குரு வ்யாஸாசார்யாள். பராபர குருவுக்கு முற்பட்டுப் பராசரர், சக்தி, வஸிஷ்டர். அதற்கும் முன்னாள் ப்ரஹ்மா, மஹாவிஷ்ணு.


1குரு பரம்பரை குறித்து இதே பகுதியில் “குரு மூர்த்தியும் த்ரிமூர்த்திகளும்” என்ற உரையில் ‘குரு பரம்பரையில் ப்ரம்மா‘ என்ற பிரிவும்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவரே அளிக்கும் சான்று!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வஸிஷ்டரிலிருந்து வ்யாஸர் வரை
Next