அதற்கு முன்னாடி சுகரைப் பற்றி சிறிதாவது தெரிந்து கொள்ள வேண்டும். அவரைப்போல அத்வைதாநுபூதிக்கு இன்னொரு மூர்த்தி கிடையாது. அவரைக் கிஞ்சித் ஸ்மரிப்பதே பெரிய சாந்தி. ஜீவ்ய காலத்திலேயே அஞ்ஞானத்தை அடியோடு அழித்து ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரத்தில் இருந்துகொண்டிருக்கிற ஜீவன் முக்தர்களில் ஒருத்தர் மாத்ரமில்லை, அவர். இந்த ஜீவன் முக்தர்களிலும் பெரும்பாலோர் பிறக்கும்போது பூர்வ ஸம்ஸ்கார லேசமாவது இருந்து, அதனால் கொஞ்சமாவது அஞ்ஞானத்தினால் மூடப்பட்டவர்களாக இருந்து, அப்புறம் தங்கள் ஜீவ்ய காலத்தில் ஸாதனா பலத்தினாலும் அநுக்ரஹ பலத்தினாலும் அந்த அஞ்ஞான மூட்டம் நீங்கப்பெற்று ப்ரஹ்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் சுகரோ பூர்வ ஸம்ஸ்காரம், அதை இந்த ஜன்மாவில் கழித்துக்கொண்டு அதற்கப்புறம் ஞானம் பெறுவது என்றில்லாமல், பிறக்கிறபோதே ஜீவன் முக்தராக இருந்தவர்!
சுகர் பிறக்கும்போதே ஆத்ம ஞானியாகப் பிறந்தவர். யத்னமே கிடையாது! அநுஷ்டானம் எதுவும் பண்ணாமலே அநுபூதிமானாக இருந்தவர். கர்ம சேஷம்தான் பிறப்புக்குக் காரணமானாலும் இவரோ கர்ம சேஷமே இல்லாமல் பிறந்தவர்.
கர்மாவை அனுபவிக்கதானே பிறப்பு? சாஸ்த்ரோக்த கர்ம முதலானது பண்ணித்தானே கர்ம சேஷத்தினால் ஏற்பட்ட சித்த கலுஷத்தை (அழுக்கை)ப் போக்கிக்கொண்டு அப்புறம் ஞானம் பெறமுடியம்? அப்படியிருக்க இவர் எப்படிப் பிறக்கும்போதே ஜீவன் முக்தரான ஞானியாக இருக்க முடிந்தது? இதற்கு நாம் சொல்லக்கூடிய ஒரே காரணம், அஞ்ஞானம் என்பதே தொடாத ஒரு ஜீவனை லோகத்திற்குக் காட்ட வேண்டுமென்றே ஈச்வரன் இப்படி ஒரு ஜீவனை பிறப்பித்திருக்க வேண்டும் என்பதுதான்! வேறே ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரே அஞ்ஞான பிண்டங்களாக இந்த ஜீவ லோகத்தைப் பண்ணியுள்ள அவனுக்கு அப்படியே மாறுதலாக ஒன்றிரண்டாவது பார்க்க வேண்டுமென்று இருக்காதா? அப்படிப்பட்டவர்களைக் காட்டி அஞ்ஞான பிண்டங்களுக்கும் எதோ கொஞ்சமாவது ‘இப்படியும் ஒரு பிறவி பிறப்பிலிருந்து சஞ்சலமேயில்லாத நிறைந்த நிறைவான பரிபூர்ண ஸ்திதியிலிருக்கிறது; இப்படி ஒரு ஸ்திதியும் இருக்கிறது’ என்று புரிய வைக்க வேண்டுமென்றே சுகர் மாதிரியும் ஒன்றிரண்டு ஸ்ருஷ்டித்திருக்கலாம்.
ஒன்றிரண்டுதான்! சுகர் ஒன்று. இரண்டாவது வாமதேவர் என்பவர். அல்லது அவர் (வாமதேவர்) ஒன்று, இவர் (சுகர்) இரண்டு என்று கால க்ரமத்தையோட்டிச் சொல்லலாம். ஏனென்றால் வாமதேவர்தான் சுகருக்கு முந்தி இருந்தவர். அவரைப்பற்றி ஐதரேய உபநிஷத்திலேயே சொல்லியிருக்கிறது. கர்ப்பவாஸம் செய்யும் காலத்திலேயே அவர், “ஸமஸ்த தேவதைகளுடைய கோடிக்கணக்கான ஜன்மங்களையும் தெரிந்துகொண்டுவிட்டேன். இதற்குமுன் எப்படி இருந்தேன் தெரியுமா? இரும்புக் கோட்டைகளைப் போலக் கணக்கில்லாத ஜன்மாக்கள் என்னைக் கட்டியிருந்தன. இப்பொழுது எனக்குச் சிறகு முளைத்துவிட்டது; ஒரு பெரிய பருந்துக்கு, கருடனுக்கு முளைத்ததுபோல் முளைத்துவிட்டது. அதனால் கட்டுக்களை மீறிப் பறந்து வந்துவிட்டேன்” என்று சொன்னதாக இருக்கிறது1. இப்படிச் சொல்வதிலிருந்து அவருக்குக்கூடப் பூர்வ ஜன்மங்களின்பந்தம் இருந்து அப்புறமே ப்ரக்ருத (நிகழ்கால) ஜன்மாவின் கர்ப்ப காலத்தில்தான் ஒரு flash மாதிரி ப்ரஹ்மஞானம் ஸித்தித்ததாகத் தெரிகிறது!
பிறப்பிலிருந்தே — கர்ப்பமாகத் தோன்றிய நாளிலிருந்தே – முக்தர்களாக இருந்தவர் சுகர், அவரைப் போலவே வாமதேவர் என்று சொல்ல வந்தேன்.
ஸமீப நூற்றாண்டுகளில் ‘ஜீவன்முக்தர்’ என்று சொன்ன மாத்ரத்தில் நினைக்கும்படியாக இருந்தவர் ‘ப்ரம்மேந்த்ராள்’ என்கிற ஸதாசிவ ப்ரம்மம். அவர் சுகப்ப்ரம்மத்தை ஸ்துதித்து ‘குரு ரத்ன மாலிகா’வில் ஒரு ச்லோகம் சொல்லியிருக்கிறார்:
ஜனனி-ஜடராதிவ ச்யவந் யோ
ஜகதோ நாத்ரவத்-ஆத்மவித்-விபத்ப்ய: |
அநஹந்தம்-அஹம்-தம்-ஆத்மவந்தம்
பகவந்தம் சுகம்-ஆச்ரயே ப்ரசாந்தம் ||
லளிதமானஅடுக்குச் சொல்லாக, “அநஹந்தமஹம் தமாத்வந்தம் பகவந்தம் சுகமாச்ரயே ப்ரசாந்தம்” என்று இருக்கிறது! ‘ அஹந்தையில்லாதவரும், ஆத்மாவை அறிந்தவரும், உத்தமமான சாந்த நிலையிலிருப்பவரும், பகவத் ஸ்வரூபமுமான அந்த சுகரை நான் ஆச்ரயிக்கிறேன்’ என்று அர்த்தம். இது பின்பாதி.
முன்பாதிக்கு என்ன அர்த்தமென்றால்: தாயாரின் வயிற்றிலிருந்து நழுவும்போதே தம்முடைய ஆத்மாஞான விசேஷத்தினால் இந்த ஜகத்திலுள்ள எந்த உபத்ரவத்தப் பார்த்தும் மனஸின் கட்டு விட்டுப் போகாதவர் என்று அர்த்தம்.
‘ஜநநீ ஜடராத்” – ‘பஜகோவிந்தத்தில் ‘ஜநநீ ஜடரே சயநம்’ என்றே ஆசார்யாள் சொன்னதன் நினைவில் சொன்னதுபோல இருக்கிறது! .
பாகவதத்தில் சுகரைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள ஒரு ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டால் அவருடைய மஹிமை முழுதையும் சொன்னதாகிவிடும்: .
யம் ப்ரவ்ரஜந்தம்-அநுபேதம்-அபேதக்ருத்யம்
த்வைபாயநோ விரஹகாதர ஆஜூஹாவ |
புத்ரேதி தந்மயதயா தரவோ (அ) பிநேது :
தம் ஸர்வ-பூத-ஹ்ருதயம் முநிம்-ஆநதோஸ்மி || (அவதாரிகை 1-2-2)
‘யம்’ – ‘எவரை’ என்று ஆரம்பித்து, ‘தம்’-‘அவரை’, ‘ஆநதோஸ்மி’ – ‘நமஸ்காரம் பண்ணுகிறேன்’ என்று முடித்திருக்கிறது. ‘எவரை’, ‘அவரை’ என்று சொல்லியிருப்பது சுகாசார்யாளத்தான். ஆனால் ச்லோகத்தில் தேடித் பார்த்தால் அந்தப் பெயரையே காணோம்! ‘ஸர்வ பூத ஹ்ருதயம் முனிம்’ என்றே குறிப்பிட்டிருக்கிறது. ஸர்வ பூதங்களுக்கும் ஆதாரமான பரப்ரம்ம ஸ்வரூபமாக் இருக்கும் ஒருவர்தானே ஸர்வ பூத ஹ்ருதயத்திலும் வஸிக்கக்கூடிய முனிவராக இருக்க முடியும்? சுகர் ஒருத்தரைதானே அப்படி முக்யமாக நினைப்பதாயிருக்கிறது? ப்ரஹ்மஞானிகள் பலபேர் இருந்தாலும் சுக ப்ரஹ்மம் என்று அவரொருத்தரைத்தானே சிறப்பித்துச் சொல்கிறோம்! ஸர்வ பூத ஹ்ருதயராக இருக்கப்பட்டவரை, ஒரே ஒரு சரீரத்தில் மட்டும் உள்ள ஜீவனாக வைத்து நாமகரணம் செய்த ‘சுகர்’ என்ற பெயரால் குறிப்பிடுவது அகண்டத்தை ரொம்பவும் குறுக்கிக் கண்டமாக்கினாற் போலத்தான் என்பதாலேயே பெயர் குறிப்பிடவில்லை என்று தோன்றுகிறது. நாம-ரூபம் கடந்தவர் என்று காட்டுவதாக நாமத்தைச் சொல்லாமல் விட்டிருக்கிறது.
ஆனாலும் அடையாளம் காட்டாமலும் விடவில்லை. (ச்லோகத்தில்) ‘த்வைபாயனம்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது. ‘புத்ரேதி’ என்று இன்னொரு வரத்தை இருக்கிறது. த்வைபாயனர் என்பது வ்யாஸர். தீவில் (த்விபத்தில்) பிறந்ததால் அப்படிப் பெயர். அவரால் ‘புத்ரா’ என்று (‘புத்ரேதி’) கூப்பிடப்பட்டவர். அந்த ஸர்வ பூத ஹ்ருதயர் என்று அடையாளம் காட்டியிருக்கிறது. வ்யாஸ புத்ரர் என்றால் சுகர்தான் என்று புரிந்துக்கொண்டு விடுகிறோம்.
‘யம்’ என்றதற்கப்புறம் ‘ப்ரவ்ரஜந்தம்’ என்று இருக்கிறது. அப்படிஎன்றால் இருந் இடத்திலில்லாமல் ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டே இருப்பவர் – வீடு, வாசல் என்பதாக ஸ்வக்ருஹம் என்று ஒன்று இல்லாமல் அதைவிட்டு ஓடுபவர் என்று அர்த்தம். அதனால்தான் ஸந்நியாஸத்தில் உசந்த வகையை ‘ப்ரவ்ரஜ்யை’ என்றும் சொல்வது. இப்படி சுகர் வீட்டை, வாசலைவிட்டு ஓடுகிறார் என்று ச்லோகம் சொல்கிறது. அப்புறம் அவருக்கு ‘அநுபேதம்’, ‘அபேத க்ருத்யம்’ என்று இரண்டு அடைமொழி கொடுத்திருக்கிறது. ‘அநுபேதம்’ என்றால் உபநயனம் ஆகாதவர். ‘அபேத க்ருத்யம்’ என்றால் சாஸ்த்ரோக்த கர்மா மற்ற கார்யங்கள் ஆகிய எல்லாவற்றிலிருந்து விடுபட்டவர். பூணூல் போடுவதற்குமுந்தியே ஸகல கர்மானுஷ்டானத்தையும் கடந்த ஞானியாகிவிட்டவர்.
மற்றவர்கள் யாரையாவது பற்றி இப்படிச் சொல்லியிருந்தால் ரொம்பவும் உயர்வாக நினைப்போம். ஆனால் சுகர்’ விஷயத்திலோ இப்படிச் சொல்வது சித்தே முந்தி (சிறிது முன்பு) நாம் அவரை தெரிந்துகொண்டஉயர்ந்த நிலையிலிருந்து இறக்கிவிட்டதாகவே தோன்றுகிறது! ‘ குரு ரத்னமாலிகா’வில் என்ன பார்த்தோம்? தாயார் கர்ப்பத்திலிருந்தே நழுவும்போதே, அதாவது குழந்தையின் சரீரம் பூமியில் படுவதற்கு முன்பே அது பூலோக இன்ப துன்பங்கள் எதானாலும் கலக்கப்படாத ஞானத்தைப் பெற்றிருந்தது என்று பார்த்தோம். அப்படியிருந்த குழந்தை சில வருஷங்கள் வளர்ந்தபிறகுதான் ‘அநுபேதம்’ – பூணூல் போடப்படாத பாலன் – என்று குறிப்பிடப்படும். பச்சைக் குழந்தைக்கும்கூடப் பூணூல் போடாததால் ‘அநுபேதம்’தான். ஆனாலும் குறிப்பிட்டு அப்படிச் சொன்னால், ‘கிட்டத்தட்ட பூணூல் போடுகிற வயஸு; ஆனாலும் போடவில்லை’ என்றே அர்த்தம் கொடுக்கும். ‘இன்னும் ரிடையர் ஆகாதவர்’ என்று ஒருத்தரைப் பற்றிச் சொல்கிறோம். அப்போது அவர் கிட்டத்தட்ட ரிடையர் ஆகிய வயஸுக்காரர் என்றுதானே எடுத்துக் கொள்கிறோம்? ஸமீபத்தில்தான் ஸர்வீஸில் சேர்ந்தவர், முப்பது நாற்பது வயஸானவர் ஆகியோரும் ரிடையராகதவர்கள்தான் என்றாலும் அப்படிச் சொல்வதில்லையல்லவா? ‘உபநயன ஸம்ஸ்காரமாகாதவர்’ என்றால் கிட்டத்தட்ட அந்த வயஸுக் கட்டத்திளிருப்பவர் என்றே அர்த்தம். அந்த நாளில் கர்ப்பத்தைக் கூட்டி எட்டு வயஸிலேயே ப்ராம்மணப் பிள்ளைகளுக்குப் பூணூல் போட்டிருப்பார்கள். ரொம்பவும் மேதா விலாஸம் தெரிகிற குழந்தையாயிருந்தால் ஐந்து வயஸியேகூடப் போட்டுவிடலாம் என்று ஸாஸ்த்ரம். வ்யாஸாசார்யாள் அப்படித்தான் போட உத்தேசித்திருப்பாரென்றால்கூட அநுபேதர் எனப்படும் சுகருக்குக் கிட்டத்தட்ட ஐந்து வயஸிருக்க வேண்டும். பிறக்கும்பொழுதே ஞானியாயிருந்தவரை, ஐந்து வருஷம் தள்ளியே ஞானி என்று குறிப்பிட்டால் அது அவரை இறக்கிச் சொல்வது போலத்தானே?
அப்படியில்லை என்று காட்டத்தான் ‘அநுபேதம்’ என்று சொல்வதற்கு முன்னாடியே ‘ப்ரவ்ரஜந்தம்’ என்று சொல்லியிருக்கிறது. வ்யாஸாசார்யாளின் ஆச்ரமத்தையும், அது இருந்த அரண்யத்தையும் விட்டுவிட்டு சுகர் ஓடியதை ‘ப்ரவ்ரஜந்தம்’ என்ற வார்த்தை தெரிவிக்கிறது. பின்னால் வருவதிலிருந்து அவருக்கு ஸரியாக ஓட முடியாமல் வ்யாஸாசார்யாள், “புத்ரா, புத்ரா!” என்று கதறிக்கொண்டு பின்தங்கிப் போனதாகவும் தெரிகிறது. ஒரு குழந்தை இந்த அளவுக்குக் கைகால் வளர்ந்து ஓடும் சக்தி பெறுவதற்கு நாலைந்து வயஸாவது ஆகவேண்டாமா? கர்ப்பத்திலிருந்து விழும்போது அப்படி ஓடமுடியுமா? அதனால்தான், பிறந்ததிலிருந்தே பரிவ்ராஜகராக ஓடுகிற எண்ணம் கொண்ட ஞானியாகத்தான் சுகர் இருந்தாரென்றாலும், அந்த என்னத்தைக் கார்யமாக்கிக் அவர் புறப்பட்ட ஸமயத்தைக் குறிப்பிடும்போது அவரை “உபநயனமாகாதவர்” என்று சொல்லியிருக்கிறது.
எல்லாம் மாயை, இதையே இன்னொரு தினுஸில் சொன்னால், எல்லாம் ப்ரம்மம் என்று தெரிந்துகொண்டுள்ள ஞானி எந்த இடத்தையும் விட்டு எங்கேயும் போகவேண்டாம்தான். ஆனாலும் ஒரே இடத்தில் இருந்தால் அங்கே வஸிப்பவர்கள் அந்த இடத்துக்கே அவர் சேர்ந்தவர், அந்த இடம் அவருக்குச் சேர்ந்தது, அவர் தங்களைச் சேர்ந்தவர், தாங்கள் அவரைச் சேர்ந்தவர்கள் என்று தப்பான அட்டாச்மென்ட்களைக் கல்பித்துக் கொள்வார்கள். அப்படி கூடாது என்று தான் ஞானி பரிவ்ராஜகனாத் திரிவது.
கால், கை முளைக்கும்வரை சுகர் பொறுத்துப் பார்த்தார். அப்புறம், புறப்பட்டுவிட்டார். தகப்பனாரான வ்யாஸாசார்யாள் மஹா பெரியவர்தான் என்றாலும் இன்னும் பிள்ளையைப் போல ப்ராஹ்மீ ஸ்திதியிலேயே ஆணியறைந்த மாதிரி நிற்கவில்லை. புத்திர வாத்ஸல்யம் என்ற மாயை அவரைத் தொட்டுக் கொண்டுதான் இருந்தது. இதை வளரவிடப்படாது என்று புத்ரர் நினைத்தார். ‘உபநயனம் பண்ணுவதற்கு அனுமதித்து விட்டோமோ, அப்புறம் (ப்ரஹ்மசர்ய) ஆச்ரம தர்மப்படி நடக்கத்தான் வேண்டிவரும். கர்மாவில் பற்றேயில்லாத நாம் அத்யயனம், ஸமிதாதானம், பிக்ஷாசர்யம் எல்லாம் பண்ணியாக வேண்டிவரும். இப்படி நம்முடைய ஸஹவாஸத்தை நீடிக்கவிட்டால் தகப்பனாரின் பாசமும் ஜாஸ்தியாகிக் கொண்டேதான் வரும். நம்மை எதுவும் கட்டமுடியாவிட்டாலும், அவர் கட்டில் நன்றாக அகப்பட்டுக் கொள்வார். அதனால் இப்போதே வீட்டைவிட்டு ஓடிவிடவேண்டும். தகப்பனார் ரொம்ப துக்கபடத்தான் செய்வார். ஆனால் இன்னம் தள்ளிப் போட்டுக்கொண்டு போகப்போக (அவருக்கு) பந்தமும் வலுவாகி, (நம்மைப் பிரிகிற) துக்கமும் ஜாஸ்தியாகிக் கொண்டுதானே போகும்? அதனால் இப்போதே ஓடிப்போயிடணும்’ என்று ஓட ஆரம்பித்தார்: “யம் ப்ரவ்ரஜந்தமநுபேதமபேதக்ருத்யம்”.
நாம் ஒரு இடத்திற்குப் போகிறோமென்றால் , அங்கே நமக்கு ஏதாவது கார்யம் இருக்கவேண்டும்.அந்தக் கார்யம் முடிந்துவிட்டால் அங்கேயிருந்து புறப்பட்டு விடுவோம். உபந்யாஸம் கேட்பதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். நான் பேசி முடித்தபின் உட்கார்ந்த்திருப்பீர்களா? புறப்பட்டு விடுவீர்கள். ஒரு ப்ரஹ்ம ஞானியைப் புத்ரனாகப் பெற்று லாலனம் (சீராட்டல்) செய்யவேண்டுமென்ற பாக்கியம் வ்யாஸருக்கு இருந்தது. சுகரை அப்படிப் பெற்று நிறைய லாலனம் பண்ணியாயிற்று. இனிமேலேயும் அவர் அங்கேயே இருந்தால் பாக்யம் போய், பாச பந்தம்தான் உண்டாகும். அதனால் வந்த கார்யம் ஆகிவிட்டதென்று வ்யாஸாச்ரமத்தை விட்டு சுகர் புறப்பட்டுவிட்டார். எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்கள், ஸத்துக்கள், ஸாதகர்கள் அவரை தர்சனம் பண்ணிப் பயனடைய வேண்டுமென்று திவ்ய ஸங்கல்பமிருந்தது. அதனால், கால் போன போக்கில் ஸஞ்சாரம் பண்ணக் கிளம்பினார். ‘லோகத்துக்கு தர்சனம் கொடுக்கிற கார்யம் தனக்கிருக்கிறது’ என்று நினைத்துக் கர்த்தாவாக அவர் புறப்படவில்லை! ஒரு எண்ணமுமில்லாமல் தான் புறப்பட்டார். ஆனால் அதிலேயே திவ்ய ஸங்கல்பத்தின் நிறைவேற்றமும் அமைந்தது.
பிள்ளை ஓடுவதைப் பார்த்து வ்யாஸாசார்யாள் அவரைத் தடுத்துப் பிடித்து அழைத்து வருவதற்காகப் பின்னாலேயே ஓடினார். அவருக்கு ஈடுகொடுத்து இவரால் ஓட முடியவில்லை. அவர் எங்கேயோ போய்விட்டார்! இவர் “புத்ரா, புத்ரா!” என்று கதறிக்கொண்டு பின்னால் போகிறார். “த்வைபாயநோ விரஹகாதர ஆஜூஹாவ – புத்ரேதி”: “த்வைபாயனராகிய வ்யாஸர் பிரிவாற்றாமையால் தவிதவித்துக்கொண்டு ‘புத்ரா’ என்று கூப்பிட்டுக்கொண்டே போனார்.
அப்போது என்ன ஆயிற்று? ஒரு அதிசயம் நடந்தது.
தரவோ (அ)பிநேது:
வ்யாஸர் கூப்பிட்டுக்கொண்டே போனதற்குச் சுற்றுப்புறக் காட்டிலுள்ள மரங்களெல்லாம் பதில் குரல் கொடுத்ததைத்தான் ‘தரவோ (அ)பிநேது:’ என்று சொல்லியிருக்கிறது. ‘அபிநேது’ என்பதற்கு ஒரு புது தினுஸாகவும் அர்த்தம் பண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
‘அபிநேத்ரு’ என்றால் நடித்துக் காட்டுபவர், நடிகர், actor என்கிறார்களே, அது. ஒரு நடிகன் என்ன பண்ணுகிறான்? கதையில் வருகிற யாரோ ஒரு பாத்ரத்திற்கு ப்ரதிநிதியாக இருந்து, அவன் பண்ணவேண்டியதையெல்லாம் தான் பண்ணுகிறான். என்றைக்கோ ராமர் இருந்துவிட்டுப் போய்விட்டார். இப்போது அவர் பாட்டுக்கு ஸ்வஸ்தமாகப் பரமபதத்தில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் எங்கே பார்த்தாலும், இந்தியாவில் மட்டுமில்லாமல் ஸயாம் (தாய்லாந்து), ஜாவா முதலிய தேசங்களிலும்கூட ராமாயண ட்ராமா, ஸினிமா எல்லாம் நடந்தபடி இருக்கின்றன. யார் யாரோ ‘அபிநேத்ரு’க்களாக ராமர் வேஷம் போட்டுக் கொள்கிறார்கள். நிஜ ராமர் இப்போது ஒன்றிலும் பட்டுக்கொள்ளாமல் உச்சியில் உட்கார்ந்து கொண்டிருந்தாலும் இந்த ‘ஆக்டர்’களெல்லாம் அவருக்குப் பதில், அவருடைய ப்ரதிநிதியாக, வனவாஸம் பண்ணுகிறார்கள், ஸீதையைப் பறி கொடுக்கிறார்கள், ராவண ஸம்ஹாரம் பண்ணுகிறார்கள். ட்ராமாவிலே தசரதரோ, விச்வமித்ரரோ, அல்லது ராவணனோ “ராமா” என்று கூப்பிடுகிற போதெல்லாம் நிஜ ராமர் ஏன் என்று கேட்பதில்லை. இந்த அபிநேத்ருதான் பதில் கொடுக்கிறான்.
அந்த மாதிரி வ்யாஸர் ‘புத்ரா, புத்ரா!’ என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடியபொது சுகர் ஒன்றும் பதில் கொடுக்கவில்லை. ஆனால், அவருக்கு ப்ரதிநிதிகளாகக் காட்டிலிருந்த மரங்களெல்லாம் ‘ஏன், ஏன்?’ என்று கேட்டன! “தரவோ அபிநேது:” தருக்கள் அபிநேதாவின் கார்யத்தைப் பண்ணின. அதாவது, சுகருடைய behalf-ல் (சார்பில்) மரங்கள் respond பண்ணின (பதில் கொடுத்தன)!
அவரைக் கூப்பிட்டால் இவை ஏன் பதில் கொடுக்க வேண்டுமென்றால், அவர் யார்? ஸர்வ பூத ஹ்ருதயரானவர். ‘எல்லாம்தாம்’ என்று ஆன ப்ரஹ்மஞானி. ஆகையால் சேதனா சேதனங்களான ஸகலத்தினுள்ளேயும் அவர் நிறைந்திருக்கிறார். அதனால்,அவை எல்லாமே அவர் மயமாகி (‘தன்மயதயா’)’ ‘ஏன்,ஏன்?’ என்று பதில் குரல் கொடுத்தன.மரங்கள் மட்டுமில்லை; ம்ருகங்கள், பக்ஷிகள், மலை நதி எல்லாம்தான் பதில் கொடுத்தன. ஆனாலும் பொதுவாக உணர்ச்சியே இல்லாமல் ஜடமாயிருபதை ‘மரம் மாதிரி’ என்று தானே சொல்கிறோம்? உணர்ச்சி போய்விட்டால் ‘மரத்து போயிடுத்து’ என்றுதானே சொல்கிறோம்? அதனால் மரங்களே சுகருக்காக பதில் குரல் கொடுத்தனவென்றால் அத்தனை ஜீவ ஜட ப்ரபஞ்சமும் அவருக்கு ப்ரதிநிதியாக ப்ரதிவசனம் பேசின என்று அழுத்தமாகக் காட்டியதாகும் என்றே “தரவோ அபிநேது:” என்று (பாகவத புராணத்தை ப்ரவசனம் செய்த) ஸூத பௌரானிகள் போட்டிருக்கிறார்.
ச்லோகம் இவ்வளவு சொன்னதோடு நின்றுவிடுகிறது. வ்ருக்ஷங்கள், ம்ருகங்கள் முதலியன சுகருக்காக, சுகராக, பதில் கொடுத்தபிறது வ்யாஸருக்கு என்ன ஆயிற்று என்று அதில் இல்லை.
ஆனால் நாம் ஊஹித்துவிடலாம்.
சுகர் என்று ஒரு சரீரத்தில் இருக்கிறமாதிரி இருந்தவர் பட்டுக்கொள்ளாமல், பட்ட கட்டைபோல ஞானியாக அவர் பாட்டுக்குப் பதில் சொல்லாமல் போய்விட்டார். எத்தனை ஞானியானாலும் அவருடைய ஹ்ருதயத்தில் ஈச்வரன் ப்ரேமையைச் சுரக்காமல் விடமாட்டான்! அதனால், ஸர்வபூத ஹ்ருதயரான அவர் தம்முடைய மற்ற சரீரங்களைப் போன்ற மரம், மட்டை ஆகியவற்றின் மூலம், அழுகின்ற அப்பாவுக்கு ஆறுதலாக பதில் கொடுக்கப் பண்ணிவிட்டான். இப்படி, அந்த ஒரு வ்யக்தி விரக்தியுடன் பேசாமல் ஓடிக்கொண்டுள்ளபொது பாக்கி அத்தனை வஸ்துக்களும் ப்ரேமையுடன் பதில் சொன்னதிலேயே வ்யாஸருக்கும் ஆறுதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல், ஆத்மா ஞானமும் ஆழமாக வேரூன்றி இருக்கவேண்டும். ஒரு ரூபத்தில் மாதரம் பிள்ளை இருக்கிறதென்றால் அதைப் போகவிடப்படாது என்று பிடித்து வைத்துக்கொள்ளத் தோன்றும். அத்தனை ரூபத்திலும் இருக்கிறது என்றால்? அது எப்படிப் பிரிந்து போகும்? இவர் எங்கேயிருந்தாலும் அங்கேயும்தானே பிள்ளை இருப்பதாகும்? அதனால், அதற்காக அழவேண்டியதே இல்லைதானே? வ்யாஸரும் ஸாமானைப் பட்டவரில்லையே! ஆகையால் பிரியமுடியாததாக, எங்கும் நிறைந்திருப்பதாக ஒன்றைத் தெரிந்துகொள்ளும்போது அதை ஒரு ஊஹமாகவோ, புத்திவாதமாகவோ மட்டும் தெரிந்துகொள்ளாமல் அனுபவித்தே அறிந்திருப்பார். பிள்ளையாக அறிந்தவரை எல்லாமாகி, எங்கும் நிறைந்ததத்வமான ப்ரஹ்மமாகவே அறிந்திருப்பார். எல்லாமாகி, எங்கேயும் நிறைந்திருப்பதென்றால் அப்போது (வ்யாஸராகிய) தாமுமாகி, தமக்குள்ளேயும் அதுதான் நிறைந்திருக்கிறதென்று கண்டு கொண்டிருப்பார். அதாவது ஆத்ம ஞானத்தில் ஆழமாக வேரூன்றி இருப்பார்.
கொஞ்சங்கூட அன்போ அநுதாபமோ இல்லாதமாதிரி ஒரு ரூபத்திலிருந்துகொண்டு தகப்பனாரைப் பிரிந்து சென்று கதறக் கதற அடிக்கும்போதே, ஸகல ரூபங்களிலும் இருந்து கொண்டு அவருடைய பாச பந்தத்தைப் போக்கி, அவருடைய ஞானம் ஸ்திறமாக வலுப்படுவதற்குப் பெரிய உபகாரத்தை சுகர் செய்திருக்கிறார்!
அப்படிப்பட்டவரிடம் உபதேசம் பெற்ற சிஷ்யர் கௌடபாதர்.
அவருடைய கதையைப் பார்க்கலாம்.
அவருடைய கதைக்கு முன் அவருடைய குருவின் கதையைக் கொஞ்சம் சொல்லவேண்டும். அதோடு ஒட்டுப் போட்டுக்கொண்டுதான் இவர் கதை வரும்.
குரு என்றால் ஸந்நியாஸ குரு அல்ல. இவருக்கு ஸந்நியாஸம் தந்த குரு சுகர். அவர் கதைதான் சொல்லியாயிற்றே! சொல்லவேண்டியது அவருடைய (கௌடபாதருடைய) வித்யா குருவைப் பற்றி. லோகத்தில் ப்ரஹ்ம வித்யை ப்ரசாரமாகக் காரணமாக இருந்த கௌடபாதர் மூலம்தான் வ்யாகரண சாஸ்த்ரமும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த சாஸ்த்ரத்தை அவருக்கு உபதேசித்த வித்யா குருவைப் பற்றியே இப்போது சொல்லப் போவது.
பதஞ்ஜலி என்ற அந்த குருவின் கதையையும், அவரிடமிருந்து இவர் உபதேசம் பெற்ற கதையையும், இன்னும் பல கதைகளையும் சொல்லிக் கடைசியில் இவருடைய சிஷ்யரிடம் நம் ஆசார்யாள் சிஷ்யராகி ப்ரஹ்ம வித்யா உபதேசம் வாங்கிக்கொண்டது உள்பட எல்லா விருத்தாந்தங்களையும் “பதஞ்ஜலி சரிதம்” என்று காவ்யம் சொல்கிறது. அந்தக் கதைகள் கொஞ்சம் சொல்கிறேன்2.
1ஐதரேயோபநிஷத் II.5
2ஸ்ரீசரணர்கள் முற்றிலும் ‘பதஞ்ஜலி சரிதத்’தையே பின்பற்றாமல் வேறு புராணக் கதைகள், கர்ண பரம்பரைக் கதைகள் ஆகியவற்றையும் அநுஸரித்து உபந்நியஸித்திருப்பதாகக் காண்கிறோம்.