“பதஞ்ஜலி சரிதம்” : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பதினேழாம் நூற்றாண்டுக் கடைசியில் தஞ்சாவூர் ராஜா ஷாஹஜி, வித்வான்களுக்கென்றே தன்னுடைய ராஜ்யத்தில் ஒரு ஊர் இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, திருவிசநல்லூரில் அநேக பண்டிதர்களையும், கவிகளையும் குடியேற்றி யதேஷ்டமாக மான்யங்கள் கொடுத்தான். அப்படி மொத்தம் 46 பேருக்கு அந்த க்ராமம் ஸர்வ மான்யமாகத் தரப்பட்டு வித்யா ராஜதானியாக இருந்தது. அவர்களில் ராமபத்ர தீக்ஷிதர் என்பவர் ஒருவர், கவி. பெரியவர். நல்ல ரஸிகர். ஸாதாரணமாக இலக்கணப் புலமையும் இலக்கியத் திறமையும் ஒன்றோடொன்று சேராது என்பார்கள்.ஆனால் இவரோ இரண்டிலும் சேர்ந்தவராயிருந்தார். வ்யாகரணத்தில் (இலக்கணத்தில்) பெற்றிருந்த தேர்ச்சியால் “பிரத்யக்ர பதஞ்ஜலி” என்று பெயர் பெற்றிருந்தார்.

பதஞ்சலிதான் வ்யாகரண மஹாபாஷ்யம் எழுதியவர். அவர் கதையும் கௌடபாதர் கதையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. “பதஞ்ஜலி சரிதம்” என்பது ராமபத்ர தீக்ஷிதர் எழுதியதுதான். ‘பதஞ்ஜலி சரிதம்’ எழுதியவருக்கே ‘நிகழ்காலப் பதஞ்ஜலி’ என்று பொருள்படும் ‘ப்ரத்யாக்ர பதஞ்ஜலி’ என்று பட்டம் இருந்தது.

கவி என்ற முறையில் ச்ருங்கார நாடகாதிகள் அவர் எழுதியிருந்தாலும் உயர்ந்த பக்தியுள்ளம் படைத்தவராயிருந்தார். குறிப்பாக ராமச்சந்த்ர மூர்த்தியிடம் அவருக்குப் பரம பக்தி. “ஜானகி பரிணயம்” என்று அவர் எழுதியிருக்கும் நாடகம் ப்ரஸித்தி வாய்ந்தது. “ராம ஸ்தவ கர்ண ரஸாயணம்”, “ராம சித்ரா ஸ்தவம்”. என்றெல்லாமும் அநேக ஸ்தோத்ரங்கள் எந்த ராமாயணத்திலும் இல்லாத நூதன கல்பனைகளோடு எழுதியிருக்கிறார். தக்ஷினத்தில் விசேஷமாக நாடக க்ரந்தம் எழுதுபவர்கள் கிடையாது என்று வடக்கத்தி வித்வான்கள் சொல்லி வந்த அபக்யாதியைத் துடைக்கவே ‘ஜானகி பரிணயம்’ எழுதி நம்முடைய தென்தேசத்தின் பெருமையை நிலை நாட்டினாறேன்று சொல்லப்படுகிறது.

நமக்கு விஷயம் அவருடைய “பதஞ்ஜலி சரிதம்”. எட்டு ஸர்கங்கள் கொண்ட புஸ்தகம் அது.

ராமர் என்று சொன்னவுடன் அவருடன் இணைபிரியாத் பக்த சிரோமநியான ஆஞ்சநேய ஸ்வாமியை நினைப்பது போல நடராஜா என்றவுடன் இரண்டு பேர் நினைவு வரும். நடராஜாவின் பிம்பமானாலும், சித்ரமானாலும் எதிலும் அவருக்கு இரண்டு பக்கங்களில் இந்த இரண்டு பேரும் இருப்பார்கள். கேட்பதற்கு பயமாக “பாம்பும் புலியும் இருபக்கமும்” என்று இவர்களைத்தான் பாட்டுக்களில் சொல்லியிருக்கிறது! படங்களில் பார்த்தாலும் ஒருத்தருக்கு இடுப்புக்குக் கீழே பாதி உடம்பு பாம்பாக இருக்கும். இன்னொருத்தருக்குப் புலியாக இருக்கும். ஆனால் அந்த இருவரும் யாருக்கும் எந்த ஹிம்ஸையும் பண்ணாமல் ஸ்வாமியின் நர்த்தனத்திலேயே ஸதாகாலமும் நேத்ரத்தையும் ஹ்ருதயத்தையும் அர்ப்பணம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புலிக்கால்காரர் ‘வ்யாக்ரபாதர்’ என்பவர். அந்தப் பெருக்கே அப்படித்தான் அர்த்தம். பாம்புக் கால்காரர்தான் நம்முடைய உபகதையின் நாயகரான பதஞ்ஜலி.

சிதம்பர மஹிமையையும், ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் மஹிமையையும் விளக்குவதாக அந்தக் திருவிசநல்லூர் பண்டித கவிகளில் இன்னொருத்தரான வேங்கடக்ருஷ்ண தீக்ஷிதர் என்பவர் “நடேச விஜயம்” என்று காவ்யம் எழுதியிருக்கிறார். அதிலும் பதஞ்சலியை பற்றி ஓரளவு வருகிறது. பதஞ்ஜலியையே மையமான பாத்ரமாக வைத்து ராமபத்ர தீக்ஷிதர் எழுதியுள்ள ‘பதஞ்ஜலி சரத’மும் ‘நடேச விஜய’மும் அநேக detail-களில் (விவரங்களில்) ஒத்துபோகின்றன.

பதஞ்ஜலி ஆதிசேஷனின் அவதாரமென்று அந்தப் புஸ்தகங்களில் இருக்கிறது.

ஆதிசேஷன் மஹாவிஷ்ணுவைச் சேர்ந்தவர். திருப்பாற்கடலில் பகவானுக்குப் படுக்கையாக இருப்பவர். அந்தப் பரம வைஷ்ணவர் எப்படிப் பரம சைவராகி நடராஜாவின் இணைபிரியாத பக்தரானார்? திருப்பார்கடலிலிருந்தவர் ஏன் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தார்?

அதற்குக் காரணம் நடேச விசயத்தில் சுருக்கமாகவும் பதஞ்ஜலி சரிதத்தில் விரிவாகவும் வருகிறது.

மஹாவிஷ்ணுவேதான் ஆதிசேஷன் அப்படி அனுப்பி வைத்தது என்று வருகிறது.

அப்படியானால் மஹாவிஷ்ணுவுக்கும் நடராஜாவுக்கும் என்ன ஸம்பந்தம்?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சுக ப்ரஹ்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  திருமாலின் இதயத்தில் சிவ நடனம்
Next