ஸம்பந்தமிருப்பது நிச்சயம் என்று சிதம்பரம் கோயிலை பார்த்தாலே தெரிகிறது. அங்கு நடராஜாவின் தர்சன மண்டபத்துக்குப் பக்கவாட்டிலேயே பெரிசாகப் பெருமாள் ஸந்நிதி இருக்கிறது. கோவிந்தராஜா என்ற பேரில் அவர் ஆதிசேஷ பர்யங்கத்தில் படுத்துக் கொண்டிருக்கிறார். ஒரே இடத்தில் நின்றபடி சிவ-விஷ்ணுக்கள் இருவரையும் தர்சித்துக்கொண்டு இரட்டிப்பு ஸந்தோஷத்துடன் அப்பைய தீக்ஷிதர் “மாரமணம், உமாரமணம்” என்று ஸ்தோத்ரித்திருக்கிறார்1. ‘மாரமண’ என்றால் லக்ஷ்மீபதி. ‘உமாரமண’ என்றால் உமாபதி என்று புரியும்.
ஆக இரண்டு பேருக்கும் ஸம்பந்தமிருப்பது தெரிகிறது.
என்ன ஸம்பந்தம்?
ரொம்பவும் நெருங்கின ஸம்பந்தம். ஹ்ருதய பூர்வமாக என்றால் அஸலே ஹ்ருதய பூர்வமான ஸம்பந்தம் அந்த இரண்டு பேருக்கும்தான் இருக்கிறது!
எப்படியென்றால், நடராஜ மஹாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்திலேயே நாட்டியம் செய்கிறார்!
இந்த நாளில் ஆராய்ச்சி என்று செய்பவர்கள், ‘திருவாரூர் த்யாகராஜா கோயிலில் நிறைய விஷ்ணு ஸம்பந்தமான சின்னங்கள் இருகின்றன. அதோடு, ‘ராஜா’ என்று வருகிற பேர்கள் பெரும்பாலும் விஷ்ணுவின் பேர்களாகத்தானிருக்கின்றன – ரங்கராஜா, வரதராஜா, கோவிந்தராஜா, இப்படி. ஆகையால் அது முதலில் பெருமாள் கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்புறம் சைவர்களுக்கு ரொம்பவும் ஆதிக்யம் ஏற்பட்ட காலத்தில்தான் அதை சிவன் கோயிலாக மாற்றியிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள்.இதையே மாற்றி நாச்சியார்கோயிலிலுள்ள பெருமாள் கோயில் விஷயத்தில், அது முதலில் சிவன் கோயிலாக இருந்தது, அப்புறம் வைஷ்ணவர்களுக்கு ஆதிக்யம் ஏற்பட்ட காலத்தில் விஷ்ணுவாலயமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த ஆராய்ச்சி எல்லாம் ஸரியில்லை. அந்தந்த ஸ்தல புராணக் கதையையோ, பொதுவான ஸமய சாஸ்த்ர தத்வங்களையோ விளக்கிக் கோயில்கள் எழுப்பியிருப்பதைப் புரிந்துகொள்ளாததாலேயே இப்படி முடிவு சொல்கிறார்கள். வாஸ்தவத்தில் அவை ஆதியிலிருந்து இப்போதுள்ளபடிதான் இருந்திருக்கின்றன. நாச்சியார்கோயில் விஷயம் இப்போது நமக்கு ஸம்பந்தப்பட்டதல்ல.
திருவாரூரை எடுத்துக்கொண்டால் அந்தக் கோயில் விஷ்ணுவின் ஸ்வரூபமாகவே கட்டப்பட்டிருப்பது. அந்த ஸ்வரூபத்திலே ஹ்ருதய ஸ்தானம் எங்கே இருக்குமோ அங்கேதான் த்யாகராஜ மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
நடராஜ போலவே த்யாகராஜாவும் நடனமூர்த்திதான். ஆனால் அது நமக்குத் தெரியாமல் அவருடைய பிம்பத்தில் முகம் தவிர பாக்கி எல்லா பாகமும் மூடி வைத்திருக்கிறது.
ஆனால் நடராஜாவின் நடனத்திற்கும் த்யாகராஜாவின் நடனத்திற்கும் வித்தியாஸமுண்டு. நடராஜா அவராகவே இடது காலைத் தூக்கி ஆனந்த நடனம் செய்கிறார். த்யாகராஜா தாமாக டான்ஸ் பண்ணவில்லை. விஷ்ணுமூர்த்தியின் ஹ்ருதயத்தில் இருப்பவரல்லவா அவர்? அதனால் மஹாவிஷ்ணு ச்வாஸிக்கும்போது அவருடைய வக்ஷஸ்தலம் ஏறியிறங்குவதற்கேற்ப த்யாகராஜா அசைவதில் தானாக ஒரு நடனம் அமைந்துவிடுகிறது.
மகாவிஷ்ணுவின் ஹ்ருதய கமலத்தில் சிவன் நடனமாடுகிறார் என்பதைக் குறிப்பதாக ச்ருதியிலேயே ‘நாராயாணோபநிஷத்’தில் மந்த்ரங்கள் இருக்கின்றன. முதலில் நாராயணனே விராட் ஸ்வரூபம், விச்வத்திலுள்ள அத்தனை சிரஸுகளும், அத்தனை கண்களும் அவருடையதுதான் என்று ஆரம்பித்து அத்ந விராட்டின் ஜீவரூபத்தில் தலைகீழான பத்மகோசம் (தாமரை மொக்கு) மாதிரி ஹ்ருதயம் இருப்பதைச் சொல்லி, அதன் மேல் பாகத்தில் உள்ள தஹராகாசம் என்பதில் பரமாத்ம ஸ்வரூபம் விளங்குவதாக வர்ணித்திருக்கிறது-வெளியிலே நாம் பார்க்கும் விசாலமான ஆகாசம் ‘பேரம்பலம்’ என்பது. அதுவே உள்ளே சின்ன ஆகாசமாக இருப்பதைத்தான் ‘தஹராகாசம்’ என்றும் ‘சிற்றம்பலம்’ என்றும் சொல்வது. “ஞான ஆகாச’மான ‘சித் அம்பரம்’, ஆகாச க்ஷேத்ரம் சிற்றம்பலம் என்கிற சித்ஸபை, தாண்ட மூர்த்தியான நடராஜ சிவன் என்றிப்படி எல்லாம் சிதம்பரத்தில் ஒன்றுக்கொன்று ஸம்பந்தருடைய ஆத்மா தத்வங்களாக இருக்கின்றன.
1“ஹரிஹர அபேத ஸ்துதி”