திரிகரணத்திற்கும் திருத்தொண்டு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அவருடைய லோகோபகாரத் தொண்டு அதோடு முடிந்துவிடவில்லை. மனோ – வாக் – காயம் என்று மூன்று சொல்கிறோமல்லவா? மூன்றுக்குமே பரமோபகாரம் பண்ணுவதான மூன்று ஆதார சாஸ்த்ரங்களை இயற்றிக் கொடுத்த ஒருவர் உண்டென்றால் அது பதஞ்ஜலிதான்! இது அவருடைய தனிப் பெருமை! இப்படி த்ரிகரணசுத்திக்கும் அவர் பெரிய உதவி செய்திருப்பதைச் சொல்லி, அவருக்கு நமஸ்காரம் தெரிவிக்கும் ச்லோகம் இருக்கிறது.

யோகேந சித்தஸ்ய, பதேந வாசாம்,

மலம் சரீரஸ்ய ச வைத்யகேந |

யோ (அ)பாகரோத் தம் ப்ரவரம் முநீநாம்

பதஞ்ஜ லிம் ப்ராஞ்ஜலி – ராநதோஸ்மி ||

‘மும்மலம் அறுப்பது’ என்று சைவர்கள் ஒரு அர்த்தத்தில் சொல்கிறார்கள். பதஞ்ஜலியும் இன்னொரு அர்த்தத்தில் ‘மும்மலம் அறுப்ப’தற்கே மூன்று துறைகளில் புஸ்தகங்கள் எழுதியிருக்கிறார்.

மலம் என்றால் அழுக்கு. அது மனஸ், வாக்கு, காயம் மூன்றுக்கும் ஏற்படக்கூடியது. அழுக்கு இருப்பது இந்த மூன்றுக்கும் ரோகம். அது போனால்தான் ஆரோக்யம். டாக்டர் கேட்கிற முதல் கேள்வி மல விஸர்ஜமாயிற்றா என்பதுதானே?

மனஸுக்கு ஏற்படுகிற மலம் தப்பான சிந்தனைகள், அது போனால்தான் ஈஸ்வராநுபவம் கிடைக்கும்.

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி

என்று மாணிக்கவாசகர் சொல்கிறார்.

தப்பான சிந்தனை மட்டுமே மலம், நல்ல சிந்தனை என்பது அமலமான ஸத்வஸ்து என்று ஆரம்ப நிலைகளில் இருக்கும். அப்புறம், ‘தப்பானது, நல்லது என்ற பேதமில்லாமல் சிந்தனை என்றும், சித்தம் என்றும், மனஸ் என்றும் ஒன்று இருப்பதே மலம்தான். மாயையால் ஆத்மாவுக்கு ஏற்பட்ட அழுக்குதான் மனஸ். அதனால் எதையுமே சிந்திக்காதபடி மனஸை அழித்துப் போட்டால்தான் ஆத்மாநுபவம் ஏற்படும்’ என்று தெரியும். ‘சித்த மலம்’ என்று மாணிக்கவாசகர் சொல்லும்போது இப்படித்தான். சித்தத்துக்கு ஏற்படும் தப்புச் சிந்தனையான மலத்தைச் சொல்லாமல், சித்தத்தையே ஆத்மாவுக்கு ஏற்பட்ட மலமாகச் சொல்லியிருக்கிறார். அந்த மலம் ஈஸ்வராநுக்ரஹத்தில் அகன்று சிவமாவதுதான் ஆத்ம ஸ்வரூபமாக நிற்பது.

சித்த மலம் போக நன்றாக அலம்புவதற்கு ஏற்பட்டதே யோகம். ‘யோகேந சித்தஸ்ய’ என்று ஆரம்பித்திருப்பது இதைத்தான்.

யோக ஸாதனைக்கு ஆதார நூலாக உள்ள ‘யோகஸூத்ர’த்தை எழுதியதே பதஞ்ஜலிதான். அதனால் ‘பாதஞ்ஜல யோக ஸூத்ரம்’ அல்லது வெறுமனே ‘பாதஞ்ஜலம்’ என்று மட்டுமே அது சொல்லப்படுகிறது.

மனஸை அடக்கிப் பரமாத்மாவோடு சேர்க்கை ஏற்படுத்தித் தருவதாலேயே அதற்கு யோகம் என்று பெயர்.

இன்றைக்கும் மேல்நாட்டினர் உள்படப் பலர் சாஞ்சல்யமயமான ஸம்ஸார வாழ்க்கையிலிருந்து சாந்தியைத் தேடிக் கொண்டுபோய், “Yoga” தான் இதற்கு ஸரியான வழி என்று ரொம்பவும் நுணுக்கமாக, scientific-ஆகப் பதஞ்ஜலியின் ஸூத்ரத்தில் விளக்கியிருக்கிறது என்று கொண்டாடவும் கேட்கிறோம்.

பலவிதமான யோகங்கள் இருந்தாலும் பதஞ்ஜலி ஏற்படுத்தியதற்கே “ராஜ யோகம்” என்று பட்டம் கொடுத்திருக்கிறது.

இது அவர் பண்ணிய தலையான பணி. ஜீவாத்மாவைப் பரமாத்மாவோடு சேர்த்து வைக்கிற பணி. த்ரிகரணங்களில் இது மனஸ் என்பதற்குப் பண்ணியது: “யோகேன சித்தஸ்ய”.

அடுத்தது வாக்(கு).

அதற்காகத்தான் வ்யாகரண மஹாபாஷ்யம். முன்னேயே சொன்ன விஷயம்.

“பதேந வாசாம்” என்று சொல்லியிருப்பது இதைத்தான்.

‘சித்த மலத்தை யோக ஸூத்ரத்தாலும் (யோகேந சித்தஸ்ய), வாக்கின் மலத்தை மஹாபாஷ்யத்தாலும் (பதேந வாசாம்) போக்கினார் (அபாகரோத்)’ என்று சொல்லியிருக்கிறது.

‘யோகேந’ என்று (யோகத்தைச்) சொன்னதுபோல ‘வ்யாகரணேந’ என்று (வ்யாகரணத்தைச்) சொல்லவில்லையே – என்று தோன்றலாம், ‘பதேந’ என்று சொல்லியிருக்கிறதோல்லியோ? ‘பதம்’ என்றாலே வ்யாகரணம், இலக்கண சாஸ்த்ரம் என்று அர்த்தம். ‘பதாநுசாஸனம்’ என்றும் நீட்டியும் சொல்வார்கள். பதம் என்றாலே போதும். “பதம் வ்யாகரணம் ப்ரோக்தம்”: இலக்கண நூல் ‘பதம்’ என்று கூறப்படுகிறது. இலக்கணம் எதற்கு? பாஷையை ஒழுங்குபடுத்தி விதிகளைத் தருவதற்குத்தான். பாஷை என்பது சொற்களைத்தானே தாய்ச்சரக்காகக் கொண்டது? சொல்தானே பதம்? அதனால் பதம் என்றாலே இலக்கணந்தான்.

ஸம்ஸ்க்ருதப் புஸ்தகங்கள், சாஸனங்கள் முதலானவற்றில் பெரியவர்களாக இருப்பவர்களைக் குறிப்பிடும்போது அவர்களுடைய குடும்பம் பெரியவர்கள், வம்சம், ஆசார்யர், அவர்கள் இருந்த இடம் ஆகியவற்றின் பேரையும் (எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ) சொல்லி, அந்தப் பெரியவரைக் குறிப்பிடும்போது, “இதி ஸ்ரீமத் பத-வாக்ய-ப்ரமாண – பாராவார – பாரீண” என்று நீளமாக ஒரு அடைமொழி கொடுத்திருக்கும். நிஜமாக ஒருவர் வித்வத்தில் பெரியவராக இருந்தால் அவர் இந்த அடைமொழிக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும்; பெற்றும் இருப்பார்.

‘பத-வாக்ய-ப்ரமாண’ என்பதில் ‘பதம்’ என்றால் வ்யாகரணம்தான். ‘வாக்யம்’ என்றால் மீமாம்ஸை, அதாவது பூர்வ மீமாம்ஸை. மீமாம்ஸா சாஸ்திரம் வேத வாக்யங்களை எடுத்துக்கொண்டு அலசி அலசி அர்த்தம் விசாரிப்பதால் ‘வாக்யம்’ என்று அதற்கே பேர். ‘ப்ரமாணம்’ என்பது ந்யாயம். அதாவது தர்க்க சாஸ்திரம். இதனால் இது இப்படி என்று ப்ரமாணங்களைக் காட்டிக் காட்டியே அது விதிகளை வகுப்பதால் ‘ப்ரமாண சாஸ்த்ரம்’ என்று பேர் பெறுகிறது – “பத-வாக்ய-ப்ரமாண…”

“பாராவார – பாரீண”: ‘பாராவாரம்’ என்றால் ஸமுத்ரம். ‘பாரீண’ என்றால் கரை கடந்தவர்.

சேர்த்துப் பார்த்தால் “பத வாக்ய ப்ரமாண பாராவார பாரீண” என்பதற்கு, “வ்யாகரணம், மீமாம்ஸ, தர்க்கம் என்ற கடல்களின் கரைகடந்த புத்திமான்’ என்று அர்த்தம்.

சதுச் – சாஸ்த்ரங்கள் என்று தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை, வேதாந்தம் ஆகிய நான்கைச் சொல்வார்கள். அதில் முதல் மூன்றைத்தான் கொஞ்சம் வரிசை மாற்றி ‘பத-வாக்ய-ப்ரமாணம்’ என்று, ஒரு வித்வத் ச்ரேஷ்டருக்கு அவச்யம் பாண்டித்யம் இருக்க வேண்டிய மூன்று சாஸ்த்ரங்களாகச் சொல்லியிருக்கிறது.

‘பதேந வாசாம் (மலம் அபாகரோத்)’: ‘பதத்தினால் பதஞ்ஜலி வாக்கின் மலத்தை அகற்றினார்’ என்கிற இடத்தில் பதம் என்பது அவர் எழுதிய வ்யாகரண புஸ்தகத்தைக்குறிக்கிறது என்பதற்காகச் சொன்னேன்.

ஸம்ஸ்க்ருத பாஷா விசேஷங்களை ரொம்பவும் நுணுக்கமாகப் புரியவைத்து அவர் இலக்கண நூல் செய்திருப்பதற்கு விசேஷமான சிறப்பு உண்டு. ஸம்ஸ்க்ருதம் தேவ பாஷை என்றால் தேவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிற பாஷை என்று அர்த்தம். இங்க்லாண்டில் இருக்கும் இங்கிலீஷ்காரர்கள் பேசுவதை இங்கிலீஷ் என்கிறோம். ப்ரான்ஸிஸ், ஜெர்மனியில், ஜப்பானில், இங்கே பெங்காலில், மஹாராஷ்ட்ராவில், மலையாளத்தில் உள்ள ப்ரெஞ்சுக்காரர்கள், ஜெர்மானியர்கள், ஜப்பானியர்கள், பெங்காலிகள், மராட்டியர்கள், மலையாளத்தார்கள் பேசுகிற பாஷைகளை அந்தந்த தேசம், அந்தந்த ஜனக்கூட்டம் ஆகியவற்றின் பெயரை வைத்தே ப்ரெஞ்ச், ஜெர்மன், ஜப்பானீஸ், பெங்காலி, மராட்டி, மலையாளம் என்றெல்லாம் சொல்கிறோம். ஹிந்தியில் வ்ரஜபாஷா, மைதிலீ என்றெல்லாம் பிரிவுகள் இருக்கின்றனவென்றால் அவையும் வ்ரஜம், மிதிலா என்ற இடங்களை வைத்து ஏற்பட்ட பேர்கள்தான். அம்மாதிரி தேவ பாஷை என்றால் தேவலோகத்தில் தேவர்கள் பேசுவது என்று அர்த்தம். இங்கிலீஷ்காரன் நம்மை ஆண்டால் அவனோடு பேசுவதற்காக நாம் இங்கிலீஷ் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறதல்லவா? அப்படியே லோகம் முழுவதையும் ஸூக்ஷ்மமாக இன்ன துறைக்கு இன்னார் என்று ஆள்வது தேவர்களேயாகையால் அவர்களுடைய பாஷையையும் நாம் ஸரியாக, முறையாகத் தெரிந்துகொள்ளத்தானே வேண்டும்? கர்மாநுஷ்டானங்களில் வரும் மந்த்ரங்களையும், ச்லோகம் முதலானவற்றையும் நாம் ஸரியாகத் தெரிந்துகொண்டு சொல்வது தேவர்களோடையே நாம் பேசுவதுதான்! இதற்கு வ்யாகரண ஞானம் அத்யாவச்யம் அல்லவா?

ஞானம் மொழி கடந்தது. பக்தியை, அதாவது அன்பை, எந்த மொழியிலும் வெளிப்படுத்தலாம். ஆனால் நாம் சாஸ்திர கர்மாவும் நிறையச் செய்தேயாக வேண்டிய நிலையில்தானே இருக்கிறோம்? அதனால் சாஸ்திரங்கள் அமைந்துள்ள ஸம்ஸ்க்ருதத்தை ஸரிவரத் தெரிந்துகொள்ளத்தானே வேண்டும்?

தவிரவும், பழுதேயில்லாத அக்ஷரங்களைக் கொண்ட ஸம்ஸ்க்ருதத்தை வ்யாகரண விதியறிந்து உச்சரிப்பதே ஒரு மந்த்ரயோகமாகி நமக்கு நாடி சுத்தியையும், அதன் வழியாகச் சித்த சுத்தியையும் தரும்.

இவற்றோடு, நவீன ஸயன்ஸுக்கு ஆங்கில ஞானம் அவச்யம் என்பது போலவே ஆத்ம சாஸ்த்ரங்களை அறியவும், பாரத கலாசாரத்தின் ஸகல அம்சங்களையுமே அறியவும் ஸம்ஸ்க்ருத ஞானம் அவச்யமாகிறது. இதனாலெலலாந்தான் ‘மஹாபாஷ்ய’த்திற்கு உயர்வு.

மனோ வாக்குகள் ஆச்சு. காயம் பாக்கி இருக்கிறது. சரீரத்திற்கு ஏற்படும் மலத்தை அகற்ற அவர் என்ன செய்திருக்கிறார்?

மலம் சரீரஸ்ய ச வைத்யகேந

சரீரத்திற்கு அழுக்கு வியாதிகள் தான். வ்யாதியில்லாமல் ஆரோக்யமாக இருந்துகொண்டிருப்பதுதான் த்ரிகரண சுத்தியில் சரீர சுத்தியாகும். இதற்காகப் பதஞ்ஜலி அநுக்ரஹித்ததுதான் வைத்ய சாஸ்த்ரம். “மலம் சரீரஸ்ய ச வைத்யகேந”.

ஆயுர்வேதத்தின் ஆதார சாஸ்த்ர புஸ்தகம் அவர் எழுதியதுதான். “சரகம்” என்று அதற்குப் பேர். அவருக்குச் சரகர் என்று பெயர் உண்டாதலால் அவர் எழுதியது ‘சரகம்’. ஆத்ரேயர் என்று அவருக்கு இன்னொரு பேர் இருப்பதை வைத்து, அதை “ஆத்ரேய ஸம்ஹிதை” என்றும் சொல்வதுண்டு.

சரீர ஸம்பந்தமான அவருடைய வைத்ய நூலுக்குப் “பதஞ்ஜலி” என்ற பெயரை வைத்து ‘டைட்டில்’ இல்லை. மனஸு ஸம்பந்தமாகவும், அவர் எழுதிய மற்ற இரண்டு நூல்களில் “பதஞ்ஜலி” என்ற பெயரில் மட்டும்தான் அவரைக் குறிப்பிட்டிருக்கிறது.

த்ரிகரண சுத்திக்கும் உசந்த சாஸ்த்ரங்களைக் கொடுத்துள்ள அவர் காய சுத்திக்குக் கொடுத்திருக்கும் வைத்ய சாஸ்த்ரத்திலேயே த்ரி-தாது சுத்தி என்பதாகப் பித்தம், வாதம், கபம் என்ற மும்மலங்கள் நீங்க வழி சொல்லியிருக்கிறார்!

தப்பாக நினைக்காமல் சித்தத்தைத் திருத்தி, அப்புறம் நிறுத்தியே விடுவதற்கு யோக ஸூத்ரம்; தப்பாகப் பேசாமல் திருத்துவதற்கு மஹா பாஷ்யம்; தப்பாகக் கார்யம் செய்யாமல் திருத்துவதற்கு சரகம் என்றிப்படி மூன்று உத்தம நூல்களைக் கொடுத்திருக்கிறார். (உடம்பு ஸரியில்லாவிட்டால் கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியால், கார்யம் செய்ய முடியாமலாகிச் செய்வதெல்லாம் தாறுமாறாகத் தானே போகிறது? இதைத் திருத்தி நல்லபடி ஆக்கத்தான் வைத்ய சாஸ்த்ரம்.)

இந்த மூன்று நூல்களில் மஹாபாஷ்யத்துக்கு முதநூலான பாணினி ஸூத்ரங்களுக்கு ‘அஷ்டத்யாயி’ என்று பெயர் – எட்டு அத்யாயமிருப்பதால். பதஞ்ஜலியே முதநூலாகச் செய்த யோக ஸூத்ரங்கள் ‘அஷ்டாங்க யோகம்’ என்பதைக் குறித்தது – அந்த ஸாதனையில் எட்டு அங்கங்கள் இருப்பதால். வைத்ய சாஸ்த்ரமாகவும் ‘அஷ்டாங்க ஹ்ருதயம்’ என்று ஒன்று உண்டு. ஆனால் அது இவருடைய சரக ஸம்ஹிதையல்ல. (வாக்படர் என்பவர் எழுதிய தனி நூல்.)

த்ரிகரணத்தாலும் தப்பு செய்யாமல் திருத்தித் தந்த பரமோபகாரி பதஞ்ஜலி மஹர்ஷி. அவை ஒவ்வொன்றின் அசுத்தியையும் நிவ்ருத்தி செய்தவர். “அபாகரோத்” என்பதற்கு ‘நிவ்ருத்தி செய்தார்’ என்று அர்த்தம்.

அப்படிப்பட்டவரை “முநீநாம் ப்ரவரம்” என்று சொல்லியிருக்கிறது. முநிச்ரேஷ்டரை ‘முனிவரர்’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அந்த முனிவர்களிலும் முன்னால் நிற்பவராதலால் இவர் முனி ப்ரவரர்! ஆசார்ய பரம்பரையின் ப்ரவரம் சொல்வதாக ஆரம்பித்தேன்; அதிலே ப்ரவரராக இவர் வந்து நிற்கிறார்!”

இப்படியாகப்பட்ட பதஞ்ஜலிக்கு விசேஷமாக அஞ்ஜலி தெரிவித்து வணங்கி நிற்கிறேன்” என்று ச்லோகம் முடிகிறது:

பதஞ்ஜலிம் ப்ராஞ்ஜலிர் – ஆநதோஸ்மி

இந்த மூன்று நூல்களைப் பற்றி இன்னும் ஒரு விசேஷம் சொல்கிறேன்: எந்த சாஸ்த்ரமானாலும் அதற்கு மூன்று விதமான நூல்கள் உண்டு – ஸூத்ரம், பாஷ்யம், வார்த்திகம் என்று மூன்று. ஸூத்ரம் தான் basic text – ஆதாரமான அடிப்படை நூல். சாஸ்த்ரக் கோட்பாடுகளை மிகச் சுருக்கமாக அதில் கொடுத்திருக்கும். அதைப் புரியும்படியாக விளக்கி எழுதுவதே பாஷ்யம். பாஷ்யத்திலும் கடினமாக உள்ள இடங்களை இளக்கிக் கொடுத்து, கொஞ்சம் சொல்லி விட்டதையும், சொல்லாமலே விட்டதையும் விளக்கி விஸ்தாரம் செய்வதே வார்த்திகம். சில சாஸ்த்ரங்களில் இந்த மூன்றில் ஸூத்ரத்திற்கு அதிக ப்ரக்யாதி இருக்கும்; அதையே ‘அதாரிடி’யாக வைத்துக்கொள்வார்கள். சிலதில் பாஷ்யத்திற்கு, சிலதில் வார்த்திகத்திற்கு என்று க்யாதியும் ‘அதாரிடி’யும் இருக்கும். மூன்றுக்குமே ஸம ப்ரக்யாதி, மூன்றில் இரண்டிற்கு ஸம ப்ரக்யாதி என்றெல்லாமும் இருப்பதுண்டு.

பதஞ்ஜலி செய்த மூன்று நூல்களில் யோகத்துக்குச் செய்தது ‘ஸூத்ரம்’; வ்யாகரணத்துக்குச் செய்தது ‘பாஷ்யம்’; வைத்யத்துக்குச் செய்தது ‘வார்த்திகம்’.1 இவற்றின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஸூத்ரமோ, பாஷ்யமோ, வார்த்திகமோ எதுவானாலும் அந்தந்த சாஸ்த்ரத்திலும் அதுதான் அதாரிடி, அதற்குத்தான் ஜாஸ்தி ப்ரக்யாதி என்றிருப்பதேயாகும்! யோக சாஸ்த்ரத்தில் பாதஞ்ஜல ஸூத்ரம்தான் முதலிடம் பெறுகிறது. அந்த ஸூத்ரத்திற்கு வ்யாசர் எழுதியுள்ள பாஷ்யத்திற்கோ, வ்யாச பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிச்ரர், விஞ்ஞானபிக்ஷு ஆகியவர்கள் எழுதியுள்ள வார்த்திகத்திற்கோ அவ்வளவு ப்ராபல்யமில்லை. வ்யாகரணத்தை எடுத்துக்கொண்டால் பாணினியின் ஸூத்ரம் எத்தனை ‘லாஜிக’லாகவும் ஒன்றும் விட்டுப் போகாமலும் தேவபாஷா மர்மங்களுக்கு ரூல்கள் பண்ணி விளக்கியிருக்கிறது என்று எல்லாரும் அதிசயப்பட்டாலும் அதைப் புரிந்துகொள்ள மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதை ம்ருதுவாக்கி இளக்கி, விளக்கிக் கொடுக்கும் பதஞ்ஜலியின் பாஷ்யத்திற்கே அதிக ப்ரக்யாதி இருக்கிறது. அதுவே ‘அதாரிடி’ என்று காட்டுகிறதுபோல, வேறே எந்த சாஸ்திரத்திலும் உள்ள பாஷ்ய நூல்களுக்கு இல்லாத அடைமொழியாக இது ஒன்றுக்கே ‘மஹா’ போட்டு ‘மஹா பாஷ்யம்’ என்று சொல்லப்படுகிறது! வைத்ய சாஸ்த்ரத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் அதிக க்யாதி, அதிக ப்ரசாரம், அதாரிடி பெற்றிருப்பது வார்த்திக க்ரந்தமான “சரகம்”தான்! ஆதிவைத்ய நூல்களில் இன்னொன்றாக இருப்பது ஸுச்ருதர் என்பவர் செய்தது. ரணசிகித்சிஸையைக் குறிப்பாக விளக்கும் அந்த நூலில் சொல்லியுள்ள ஸர்ஜரி முறைகள், ஸர்ஜிகல் கருவிகள் ஆகியவற்றைப் பற்றி ‘அறிஞருலகம்’ எனப்பட்ட சிலபேர் கொண்டாடிப் பேசினாலும், நடைமுறையில் பார்த்தால் ரணசிகித்சிஸையில் இந்த முறை எடுபட்டுப் போய் இங்கிலீஷ் முறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. சரகத்தில் உள்ளபடி உள்ளுக்கு மருந்து சாப்பிடுவது தான் ஆயுர்வேதம் என்றே பெயர் பெற்று நடைமுறையில் இருக்கிறது.

நடனம் என்றால் அதற்கு பரத சாஸ்த்ரம், அரசியல் என்றால் அர்த்த சாஸ்த்ரம் என்பது போல வைத்யம் என்றால் சரகம், வ்யாகரணம் என்றால் மஹா பாஷ்யம், யோகம் என்றால் பாதஞ்ஜல ஸூத்ரம் என்று அவருடைய புஸ்தகங்களே ப்ரதான க்ரந்தங்களாகப் புகழ்பெற்றிருக்கின்றன. ஒரு விதத்தில் மூன்றுமே வைத்ய புஸ்தகங்கள்தான்! வாக்கு மலம் போக வைத்யம் பண்ணுவது மஹாபாஷ்யம். மனோமலம் போக வைத்யம் பண்ணுவது யோக ஸூத்ரம்.

ஆத்மாவுக்கான சாஸ்திரம் என்று பார்த்தால் யோக ஸூத்ரத்துக்கு முக்யத்வம் இருந்தாலும் அறிவுக்கான, அறிவாளிகளுக்கான வித்யை என்று எடுத்தால் இவற்றில் ஸம்ஸ்க்ருத பாஷையை முறையாகக் கற்பிக்கும் மஹாபாஷ்யத்துக்குத்தான் முக்யத்வம். அதுதான் ரொம்பப் பெரிய புஸ்தகமும். ஆத்ம சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ளவும் இலக்கணம் அவச்யம்தானே?

யோகத்துக்கு எதிர் ஸித்தாந்தங்களுண்டு. அத்வைதமே கொஞ்சம் அப்படித்தான் என்றேன். மஹாபாஷ்யமோ ஸகலுருக்கும் ஸம்மதமானது.

ஆகையினால் சிதம்பரத்தில் ஏராளமான சிஷ்யர்களைச் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு மஹாபாஷ்ய பாடம் சொல்லித் தருவது என்றே பதஞ்ஜலி ஆரம்பித்தார். நடராஜாவின் உடுக்குச் சப்தத்திலிருந்தே பாணினி சப்தங்களை க்ரஹித்து வ்யாகரண ஸூத்ரங்களைச் செய்தார். அதற்கு வ்யாக்யானம்தானே மஹாபாஷ்யம்? அதனால் அது சிதம்பரம் கோயிலிலேயே போதிக்கப்படுவது ரொம்பவும் பொருத்தமாகிவிட்டது.

பாணினியின் ஸூத்ரத்தையும், பதஞ்ஜலியின் பாஷ்யத்தையும் நடராஜ மூர்த்தியின் கையோடும், காலோடும் ஸம்பந்தப்படுத்தி வேடிக்கையாக ஒரு ச்லோகம் இருக்கிறது2.

கைக்குப் பேர் பாணி. நடராஜாவின் பாணியிலுள்ள உடுக்குச் சப்தத்திலிருந்துதானே பாணினியின் ஸூத்ரம் பிறந்தது? அதை அந்த ச்லோகத்தில் நடராஜாவின் கையிலிருந்து எழும்பும் சப்தம் வ்யாகரணத்திற்கு ஆதார நூலைத் தந்ததாகச் சொல்லியிருக்கிறது.

கால் ஸமாசாரம் என்ன? நடராஜாவின் பாதத்துக்கும் பதஞ்ஜலியின் பாஷ்யத்துக்கும் என்ன ஸம்பந்தம்?

நடராஜாவின் காலடியில் நின்று தர்சனம் செய்வதோடு பதஞ்ஜலிக்கு த்ருப்தி உண்டாகிவிடவில்லை. அதனால், நர்த்தனம் செய்கிற அந்தப் பாம்பு ரூபத்தில் பாதஸரமாகச் சுற்றிக்கொண்டு ஸந்தோஷப்படுவார். பாதஸரப் பதஞ்ஜலியின் வாயில் எப்பொழுதும் மஹாபாஷ்யம் இருக்கும்.

இதையே ச்லோகத்தில், நடராஜாவின் கையிலிருந்து எழும்பும் சப்தத்தில் வ்யாகரண ஸூத்ரம் இருப்பதுபோல காலிலிருந்து (காற்சிலம்பிலிருந்து) எழும் சப்தத்தில் அந்த ஸூத்ரத்தின் பெரிய பாஷ்யம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறது!

பிற்காலத்திலும்கூட சிவன் கோயில்களிலேயே வ்யாகரணம் போதிப்பதற்கென்று ‘வ்யாகரணதான மண்டபம்’ என்று ஒரு இடம் ஏற்பட்டது.


1 வ்யாகரண மஹாபாஷ்யம்…ஸூத்ராணி யோக சாஸ்த்ரே வைத்யகசாஸ்த்ரே ச வார்த்திகாநி தத: க்ருத்வா பதஞ்ஜலி முநி: (பதஞ்ஜலி சரிதம் V. 24-25)

2 யஞ்ஜ நாராயண தீக்ஷிதரின் “ஸாஹித்ய ரத்னாகரம்” – XI. 124 “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் ‘வியாகரணம் : வேதத்தின் வாய்’ என்ற உரையில் ‘வியாகரணமும் சிவபெருமானும்‘ என்ற பிரிவின் கடைசிப் பகுதி பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆதிசேஷன் அவதாரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஆயிரம் சீடருக்குப் அதிசயப் பாடம்!
Next