(ஜைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஒன்று மாதிரியே இணைத்துப் பேசுவது வழக்கம். ஜைனர்களில் வஸ்த்ரமில்லாமலிருக்கும் பிரிவினரே ஜாஸ்தி. ‘ச்ரமணர்’ எனப்படும் அவர்களைத் தமிழில் சமணர் என்றும் அமணர் என்றும் சொல்வார்கள். அதனாலேயே நிர்வஸ்திரமாயிருப்பது ‘அ(ம்)மணம்’ எனப்படுகிறது. அமணர்களுடைய லக்ஷ்யத்தை பௌத்தர்களின் நிர்வாணத்தோடு ஒன்று படுத்தியே, அம்மணமாயிருப்பதை நிர்வாணம் என்றும் சொல்வதாயிற்றோ என்னவோ?
நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், ‘தீபத்தை ஊதி அணைப்பது’. ஒரே சூடாக தஹித்துக்கொண்டு, ப்ரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவது தான் நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே எதையும் பண்ண முடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத்தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதுங்கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்தபிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்கிறார்கள். அக்னி அணுகளாலானது அல்ல. (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர, அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்தான் என்று நினைத்து விடக்கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத்தான் அடியோடு ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவதுதான் நிர்வாணம் பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. அக்னியின் சின்னப்பொறி மேலே பட்டால்கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த சின்னப் பொறியே பெரிய ஜ்வாலையாகி ஊரையெல்லாம் கொளுத்திவிட முடியும். காற்று, ஜலம் முதலான எந்த பூதத்துக்கும் இத்தனை வீர்யம் இல்லை. ஆனாலும் இப்படியிருக்கும் அக்னியைத்தான் அடியோடு ரூபமில்லாமல் அழிக்க முடிகிறது! காற்றை அழிக்க முடியுமா?
ஜீவாத்ம பாவம் என்று ஒன்று கண், காது, மூக்கு முதலான அநேக அவயவங்களைக் கொண்ட சரீரத்தின் நூறு லக்ஷம் அநுபவங்களைப் பெற்றுக்கொண்டு ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. மனஸு, சித்தம், புத்தி, அஹங்காரம் என்ற நாலைக் கொண்ட அந்தஃகரணம் என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தான் ஒரு ஜீவன் என்ற பாவம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நாலையும் கொஞ்சங்கூட அடக்கிக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தஃகரணத்தின் ஆசைகளை சரீர அவயங்களின் மூலம் அநுபவித்துக் கொண்டே போவதாக இருக்கிறது. ‘சரீரமே நான்’ என்று நினைப்பதான ஜீவாத்ம பாவம் ஆணிவேர் விட்டுக்கொண்டு ஆழமாக ஏற்பட்டு விடுகிறது. ரொம்ப வீர்யத்துடன், அக்னியைப் போல, வறுத்தெடுப்பதாக அது இருக்கிறது. அப்படிப்பட்ட அதை அடியோடு அழித்துவிடுவதும் அக்னியை அணைப்பது போலத்தான் என்பதாலேயே இதற்கும் ‘நிர்வாணம்’ என்று பேர் கொடுத்தார்கள். கொஞ்சங் கொஞ்சமாக ஸாதனா மார்க்கத்தில் முன்னேறித்தான் அந்த நிலையை அடைய முடியுமானாலும் கடைசிப் படியில் ஈச்வராநுக்ரஹம் என்பது ஒரு புயல் காற்று அடித்து தீபத்தை க்ஷணத்தில் அணைப்பது போலத்தான் ஒரே வீச்சில் ஜீவாத்ம பாவத்தை அழிக்கும். அதனால் ‘நிர்வாணம்’ என்று பெயர் கொடுப்பது ரொம்பவும் பொருத்தமாகிறது.
‘நிர்வாணம்’ என்று புத்தர்தான் முதலில் சொன்னாரென்று ஒரு தப்பபிப்ராயம் இருக்கிறது. அவருக்கு முந்தியே ‘லிபரேஷ’னை (ஆத்மாவின் முடிவான விடுதலை நிலையை) நம் சாஸ்த்ரங்களில் அப்படி (‘நிர்வாணம்’ என்று) சொல்லியிருக்கிறது. கீதையில் பகவான், ஸ்தித ப்ரஜ்ஞனை (ஞான நிலையிலேயே ஊன்றியவனை) வர்ணித்து முடிக்கிறபோது “ப்ரஹ்ம-நிர்வாணம்-ருச்சதி” (ப்ரம்ம நிர்வாணத்தை அடைகிறான்) என்றே சொல்லியிருக்கிறார்1. அப்புறம், ‘தனக்குள்ளேயே அடங்கி ஸுகித்துக் களித்துக் கொண்டு உள்ளோளியிலேயே முழுகிப்போன யோகி உயிர் வாழும்போதே ப்ரம்மமாயிருந்து ப்ரம்ம நிர்வாணம் அடைகிறான்’ என்று ‘ஸந்நியாஸ யோகம்’ என்ற அத்யாயத்தில் சொல்கிறார்:
யோ (அ)ந்த: ஸுகோ (அ)ந்தராராம-ஸ்ததாந்தர்-ஜ்யோதிரேவ ய: |
ஸ யோகீ ப்ரஹ்ம-நிர்வாணம் பரஹ்மபூதோ (அ)திகச்சதி ||2.
வித்யாஸம் என்னவென்றால் புத்தர் ‘நிர்வாணம்’ என்று மட்டும் சொல்லியிருக்க பகவான் ‘ப்ரஹ்ம நிர்வாணம்’ என்கிறார். முக்யமான வித்யாஸம். புத்தர் ‘நிர்வாணம்’ என்று மாத்திரம் சொல்வதால் ஜீவாத்ம பாவம் அடிபட்டு, அழிவுபட்டு, ஒரே சூன்யமாய் விடுவதை மட்டுமே குறிப்பிடுகிறார். இப்படி ஜீவாத்மா அழிந்துபோய் ஒரே சூன்யமாகிவிடாமல், ஜீவாத்ம பாவம் அழிந்தாலும் பரமாத்மாவான ப்ரம்மமாகவே ஆகிவிடுகிறான் என்ற பரிபூர்ண நிலையைக் குறிக்கத்தான் பகவான் ‘ப்ரஹ்ம நிர்வாணம்’, ‘ப்ரஹ்ம நிர்வாணம்’ என்று ஒவ்வொரு தடவையும் சொல்கிறார்.)
சுகர் ஸந்நியாஸி என்பவனுக்கு ஏற்பட்ட காவி வஸ்த்ரமும் போட்டுக்கொள்ளாமல் திகம்பரராக இருந்தவர் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
விசேஷம் என்னவென்றால், அவர் தம்மளவில் ஸ்த்ரீ-புருஷ பேதம் தெரியாத பரிசுத்த நிலையில் நிர்வஸ்திரமாயிருந்தது மட்டுமில்லை. இந்த பேத உணர்ச்சி நிறையவுள்ள இதர ஜனங்களுங்கூட அவருடைய ஸாந்நித்ய விசேஷத்தினால் தாங்களும் அந்த தோஷம் இல்லாதவர்களாகி விடுவார்கள்.
ஒரு கதை உண்டு. அவர் பூணூல் போடுவதற்கு முந்தியே பரிவ்ராட்டாக ஓடினார், பின்னாலேயே வ்யாஸர், “புத்ரா, புத்ரா!” என்று ஓடினார் – என்று சொன்னேனல்லவா? பால்யத்திலேயே அப்படி அவர் (சுகர்) ஓடியிருக்கக்கூடும் என்று நான் சொன்னாலும், இந்தக் கதைப்படி அவர் நல்ல யௌவன ப்ராயம் வந்தபின்தான் அப்படிப் போனது…… வ்யாஸர் தனக்கு ஸத்புத்ரன் வாய்க்க வேண்டுமென்ற தாபத்தோடு, பிரார்த்தனையோடு யாகாக்னிக்காக அரணிக் கட்டையைக் கடைந்து கொண்டிருந்தார்; அந்த அக்னியிலேயே சுகர் ஜ்யோதி ஸ்வரூபமாக உத்பவித்தார்; உத்பவிக்கும்போதே யுவாவாக இருந்தார் – என்றும் அபிப்ராயமுண்டு. ஆக, கட்டிளம் காளை உருவத்தில் அவர் பாட்டுக்கு வஸ்த்ரமில்லாமல் போய்க் கொண்டிருந்தார்.
வழியில் ஒரு இடத்தில் ஸ்திரீகள் ஸ்நானம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் சுகர் நிர்வஸ்திரமாக வருகிறார். அவர்களும் அந்த மாதிரியே இருக்கிறார்கள். ஆனால் அவர் அப்படி இருப்பதும் ஸரி, தாங்கள் அப்படி இருப்பதும் ஸரி, இரண்டுமே அந்தப் பெண்டுகளுக்கு கொஞ்சங்கூட விகல்பமாகத் தெரியவில்லையாம்! லஜ்ஜையே உண்டாகவில்லையாம்!
சுகர் மேலே போய்விட்டார்.
ஒரு நிமிஷம் கழித்து வ்யாஸாசார்யாளும் அந்த வழியிலேயே ஓடி வந்தார். இவர் நல்ல வ்ருத்தர். மரவுரி, மான் தோல் எல்லாம் போட்டுக்கொண்டு உடம்பை நன்றாக மூடிக் கொண்டிருப்பவர்.
இவரைப் பார்த்தவுடன் அந்த ஸ்திரீகளுக்கு ரொம்பவும் வெட்கமேற்பட்டு, துணிகளை வாரிப் போட்டுக் கொண்டார்களாம்!
“அதென்ன? என் குமாரன், காலைப் பருவத்துக்காரன் போனபோது நீங்கள் பாட்டுக்கு ஸ்நானம் பண்ணிக்கொண்டிருந்தீர்கள்! நான், கிழவன், வருகிறபோது வெட்கம் தாங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள்?” என்று வ்யாஸர் கேட்டாராம்.
“வயஸு என்னவாயிருந்தாலென்ன? அவருடைய நிர்மலம் தான் எங்களையும் தொட்டுடுத்து. அவர் ஸந்நிதியிலே எங்களுக்கும் பேத உணர்ச்சி தெரியலை” என்று அவர்கள் பதில் சொன்னார்களாம்!
சுகர் மாதிரியானவர்களுக்கு வ்யவஸ்தை விதிகள் ரூல்கள் எதுவுமில்லை.
நாலு ஆச்ரமங்களில் முடிவானது ஸந்நியாஸம். அதனால் அதற்கும் ரூல்கள் உண்டு; இப்படித்தான் பண்ணனும், இப்படிப் பண்ணப்படாது என்று அநேகம் உண்டு. ஒரு ரூலுக்கும் உட்படாத ப்ரம்ம ஸ்வரூபமாகவே இருந்தவர் சுகர். அதனால் ஸந்நியாஸாச்ரமத்திற்கும் மேலே போய்விட்டவர்களுக்கு ஜாதி ஆசாரங்களாகிய ரூல்களும் கிடையாதலால், ஆச்ரமங்கள், வர்ணங்கள், ஆகியவற்றைக் கடந்துவிட்ட அவர்களை ‘அதிவர்ணாச்ரமிகள்’ என்று சொல்வார்கள். அத்யாச்ரமிகள் என்றும் சொல்வதுண்டு. ஆச்ரமதைக் கடந்தவர் என்றாலே வர்ணத்தையும் கடந்தவராகத்தான் இருக்க வேண்டும். அதனால் இப்படி (அதிவர்ணாச்ரமி என்பதற்குப் பதில் அத்யாச்ரமி என்று) சொன்னாலே போதும்.
குரு பரம்பரையில் தக்ஷிணாமூர்த்திக்கு அடுத்ததாக மஹாவிஷ்ணுவுக்கு முன்பாக, தத்தாத்ரேயரைச் சொல்லும் வழக்கம் உண்டு. அமூர்த்தியான பர்ப்ரஹ்மமாக இருக்கப்பட்ட தக்ஷிணாமூர்த்தி, அப்புறம் த்ரிமூர்த்தி ஸ்வரூபமான தத்த(ஆத்ரேய)ர், அதற்கப்புறம் த்ரிமூர்த்திகளில் வரும் மஹாவிஷ்ணு, ப்ரம்மா என்று குரு பரம்பரை போகிறது. த்ரிமூர்த்திகளில் விட்டுப்போன சிவனும் தக்ஷிணாமூர்த்தியில் வந்துவிடுகிறார். அப்புறம் இந்தப் பரம்பரைக்கு நடுநாயகமாக, ஒரு ஹாரத்தின் நடுவிலுள்ள ரத்னப் பதக்கம் மாதிரியாக உள்ள ஸ்ரீ சங்கர பகவத் பாதாளும் சிவன்தான்…
(நான்) சொல்ல வந்தது, சுகரைப் போல அதி வர்ணாச்ரமியாக குரு பரம்பரையில் வருகிற இன்னொருவர் தத்தர் என்பது. மும்மூர்த்தியும் சேர்ந்தவர் என்றாலும் அவர் தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, ப்ரம்மா ஆகியவர்கள் தெய்வங்களாகவே இருப்பதுபோல இல்லாமல் பூலோகத்தில் அவதூத ஸந்நியாஸியாகத் திரிந்து கொண்டிருந்தவர். ‘ஸந்நியாஸி’ என்றால் அஸல் ஸந்நியாஸாச்ரமி அல்ல, அந்த மாதிரி, உடைமைகளையெல்லாம் உதறிவிட்டு ஸதாவும் ஸஞ்சாரம் செய்துகொண்டிருந்தவர். வாஸ்தவத்தில் அவரும் ஸந்நியாஸிக்குரிய முண்டனம், காஷாயம் இல்லாமல் அதிவர்ணாச்ரமியாக ஜடையுடன், திகம்பரராக இருந்தவர்தான்.
உள்ளுக்குள்ளே ஸதாவும் ப்ரம்மாநுபவத்திலேயே இருக்கும் அதிவர்ணாச்ரமி வெளியில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உடைமைகளை ஆண்டுகொண்டு ராஜாவாகக் கூட இருக்கலாம். ஒரே இடத்தில் ஜன்மா பூரா வஸிக்கலாம், எதுவும் பண்ணலாம். ஆனாலும் தத்தரும் சுகரும் அப்படி இல்லாமல் ஸந்நியாஸிகளைப் போல எல்லா உடைமைகளையும் விட்டவர்கள்; ஒரே இடத்திலில்லாமல் ஸஞ்சாரம்செய்துகொண்டேயிருந்தவர்கள். “யம் ப்ரவ்ரஜந்தம்” என்று ச்லோகத்தில் ஆரம்பித்தபடி ஸந்நியாஸிகளுக்கே உரிய பரிவ்ராஜக வ்ருத்தியை (ஓரிடத்தில் தங்காமல் இடம் பெயர்ந்துகொண்டே இருப்பதான வாழ்க்கை முறையை) சுகர் மேற்கொண்டிருந்தார். தத்தாத்ரேயரும் அப்படித்தான்.
ஞானாசார்யர்களாக நமஸ்கரிக்கத் தக்கவர்களில் ஸநகர், ஸநந்தனர், ஸநாதனர், ஸநத்குமாரர் என்று ஸஹோதரர்களாக நாலுபேர். அந்த நாலு பேரையும் ஒன்று சேர்த்து பகவானின் (விஷ்ணுவின்) 24 அவதாரங்களில் ஒன்றான குமாராவதாரம் என்பார்கள். ‘குமாரர்’ என்று சொன்னதற்கு காரணம் நாலு பேரில் கடைசியானவரின் பேர் ஸநத்’குமாரர்’ என்றிருப்பது. இன்னொரு காரணம் இந்த நால்வர்தான் ஸுப்ரஜைகளாக ப்ரஹ்மாவுக்கு முதல் முதலில் தோன்றிய புத்ரர்கள் – அதாவது ப்ரம்ம ‘குமாரர்கள்’ – என்பது. எண்ணிய மாத்ரத்தில் மானஸ புத்ரர்களாக இவர்களை ப்ரம்மா ஸ்ருஷ்டித்துவிட்டார். (குமார அவதாரம் என்று சொல்வதற்கு) மூன்றாவது காரணம் இவர்கள் அன்று போல் என்றும் குமாரர்களாகவே இருப்பது. தக்ஷிணாமூர்த்தியும் சுகரும் என்றும் யுவாவாக இருப்பவர்கள். மார்கண்டேயரையும் ‘என்றும் பதினாறு’ என்கிறோம். ஸநகாதி நால்வரோ யௌவனம் என்கிறவரை கூடப் போகாமல் என்றும் அஞ்சு வயஸு பாலர்களாகவே, குமாரர்களாகவே இருப்பவர்கள். மஹாஞானிகளாக, சுகர் மாதிரியே ஸ்த்ரீ புருஷ பேதம் தெரியாதவர்களாக, பிறந்தவுடனேயே நிவ்ருத்தி மார்க்கத்திற்குப் போய் ப்ரஹ்ம ஞானிகளாகிவிட்டவர்கள். மற்றவர்களுக்கும் ஞானம் அருளியவர்கள். அத்வைத ஸம்பிராதய மடங்களில் வ்யாஸ பூஜை பண்ணும்போது குரு பரம்பரையில் வரும் அத்தனை பேருக்கும் பூஜை செய்கிறோம். அவற்றில் பரஸ்பர ஸம்பந்தம் உடைய சில பேரை ஐந்தைந்து பேர் கொண்ட பஞ்சகங்களாக group பண்ணிப் பூஜிக்கிறோம். அந்தப் பஞ்சகங்களில் ஒன்றில் இப்போது சொன்ன ஸநகாதி நால்வரோடு ஸநத்ஸுஜாதர் என்பவரையும் சேர்த்து ஐந்து பேராக்கிப் பூஜை பண்ணுகிறோம். இவர்களும் சாஸ்த்ரோக்தமாகச் சொல்லப்படும் ஸந்நியாஸாச்ரமம் வஹித்தவர்களல்ல. மொட்டைத் தலையும், காஷாயமும் இல்லாதவர்கள். சுகரையும், தத்தரையும் போலத்தான் இவர்களும் நிர்வஸ்த்ரமாக ஸஞ்சாரம் பண்ணிக்கொண்டேயிருப்பார்கள். குழந்தைகளாக இருப்பதால் அதில் பாமரர்களுக்கும்கூட விகல்பம் தெரியாது. இவர்களையும் அதிவர்ணாச்ரமிகளில்தான் சேர்க்க வேண்டும்…..
மொத்தத்தில் விஷயமென்னவென்றால் குரு பரம்பரையில் சுகர் வரையில், சுகர் உள்பட எவருமே ஸ்ம்ருதிகளில் சொல்லியிருக்கும்படியான ரூல்களுக்கு உட்பட்ட ஸந்நியாஸ ஆச்ரமம் வஹித்தவர்கள் அல்லர். ஆனாலும் ப்ரஹ்ம ஞான ஸ்வரூபங்களாக இருந்ததால் ப்ரம்மவித்யைக்கு ஆசார்ய புருஷர்களாக இருந்தார்கள்.
கலியில் க்ருஹஸ்தாச்ரமத்திலிருந்து கொண்டு ஞானோபதேசம் செய்வது ஸரி வராது என்று பார்த்தோம். அப்படியே தான் அதிவர்ணாச்ரமமும். அதிவர்ணாச்ரமிக்கு இருக்க வேண்டிய ஸ்திரமான ப்ரம்மாநுபவத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்படாமல், அவனுக்கு ஆசாரங்கள் எதுவும் வேண்டியதில்லை என்றிருப்பதை மட்டும் எடுத்துக்கொண்டு, மனம் போனபடிச் செய்கிற வேஷதாரிகள் தங்களை அதிவர்ணாச்ரமிகளாகச் சொல்லிக்கொண்டு புறப்படக்கூடிய யுகம் இது. தற்காலத்தில் மனஸுக்கு வேதனை தருவதாக இப்படி அங்கங்கே கேள்விப்படுகிறோம். அதனால் அதிவர்ணாச்ரமி என்றால் அவநம்பிக்கை, அவமரியாதை, பரிஹாஸம் எல்லாமும் தோன்ற இடம் கொடுத்திருக்கிறது. எனவே கலியில் அதிவர்ணாச்ரமிகள் குரு பரம்பரையில் வருவதற்கில்லை என்றுதான் சுகாசார்யாளுக்கு அப்புறம் விதிவத்தாக ஸந்நியாஸாச்ரமம் வாங்கிக்கொண்டவர்களின் பரம்பரை கௌடபாதரிலிருந்து தொடங்கியது.
இப்படிச் சொன்னதால் ‘ரூல்’படியான ஸந்நியாஸாச்ரமம் என்பதே கௌடபாதரிலிரிந்துதான் ஆரம்பிததாக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. அது கௌடபாதருக்கு முன்பே ஆதியிலிருந்து இருந்ததுதான். நான்கு ஆச்ரமங்கள் என்பது ஆதியான வேத காலத்திலிருந்தே இருப்பது. வேதத்தில் ஸம்ஹிதை – ப்ராஹ்மணம் – ஆரண்யகம் – உபநிஷத் என்று நாலு இருப்பதே வரிசை க்ரமமாக ப்ரஹ்மசாரியின் அத்யயனம் – க்ருஹஸ்தனின் யஜ்ஞாநுஷ்டானம் – அரண்யத்தில் போய் இருந்துகொண்டு தத்வவிசாரத்தோடு வானப்ரஸ்தன் செய்யும் கர்மாநுஷ்டானம் – அரண்யத்தில் போய் இருந்துகொண்டு தத்வவிசாரத்தோடு வானப்ரஸ்தான் செய்யும் கர்மாநுஷ்டானம் – கர்மாவை விட்டுவிட்டு ஸந்நியாசி செய்கிற சுத்தமான தத்வ விசாரம் என்ற நாலைக் காட்டுவதுதான். (இப்படி வேத முறையை நன்றாகப் புரிந்து கொண்டு சொல்லியிருப்பது யாரென்றால் பால் டாய்ஸன் (Paul Deussen) என்கிற ஜெர்மனிக்காரர்! அவருக்கு நம் ஆசார்யாளின் ஸி த்தாநதத்தில் எல்லையில்லாத ஈடுபாடு!) ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் யாஜ்ஞவல்கியர் பத்னிகளை விட்டுவிட்டு ஸந்நியாஸியாகப் புறப்பட்டதைப் பார்க்கிறோம். ‘நாரத பரிவ்ராஜக உபநிஷத்’ என்பது போல, ஸந்நியாஸத்திலே எத்தனை வகை உண்டு என்று விவரித்துச் சொல்வதற்காகவே பத்துப் பதினைந்து உபநிஷத்துக்கள் இருக்கின்றன – ‘அவதூதோபநிஷத்’, ‘ஸந்நியாஸோபநிஷத்’ என்றெல்லாம் இருக்கின்றன. முதல் மநுஷ்யனைப் பிறப்பித்தவர் மநு. அவரே எப்படி வாழ்க்கை நடத்தவேண்டுமென்று அவனுக்குச் சொல்லிக் கொடுப்பதற்காக மநு ஸ்ம்ருதி என்றும் மநு தர்ம சாஸ்த்ரம் என்றும் சொல்லப்படும் நூலைப் பண்ணினார். அதிலும் அப்புறம் வந்த மற்ற ஸ்ம்ருதிகளிலும் நான்கு ஆச்ரமங்களைச் சொல்லித் துரீயாச்ரமமாக (நான்காவது ஆச்ரமமாக) ஸந்நியாஸத்தை விதித்திருக்கிறது. துரீயாச்ரமத்திலிருந்து தான் துரீய பதம் (விழிப்பு, கனவு, உறக்கம் மூன்றும் கடந்த நான்காவதான ஸமாதி நிலை) பெறவேண்டுமென்று ஸ்ம்ருதிகள் (தர்ம சாஸ்த்ரங்கள்) விதித்திருக்கின்றன. பல தர்ம சாஸ்த்ரங்களைப் பார்த்து, அவற்றில் சொல்லியுள்ள விஷயங்களைத் தொகுத்துக் கொடுப்பதாக ‘நிபந்தன க்ரந்தங்கள்’ என்று இருக்கின்றன. அவற்றில் ஸந்நியாஸ தர்மங்களை விரிவாகச் சொல்வதாக விச்வேச்வர ஸ்ம்ருதி என்பது இருக்கிறது. விச்வேச்வர ஸம்ஹிதை என்றும் சொல்வது. ஆனபடியால் ஜீவ ஸ்ருஷ்டி ஏற்பட்ட நாளாகவே விதிவத்தான ஸந்நியாஸிகள் உண்டு. அத்வைத ஸம்ப்ரதாயத்தையே முற்றிலும் தழுவியர்களாகவோ, ஓரளவு தழுவியர்களாகவோ ஸந்நியாஸியாகவும் அத்யாச்ரமியாகவும் இருந்த பூர்விகர்கள் சிலரைப் பற்றி ஆசார்யாளே பாஷ்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனாலும் ஆசார்யாளின் குரு பரம்பரையில் (அவருக்கப்புறம் அவருடைய சிஷ்ய பரம்பரையில் வந்துள்ள நம் எல்லோருக்குமே அதுதான் குரு பரம்பரையாகிவிட்டது; அதில்) அவருடைய பரம குருவான கௌடபாதரும் குருவான கோவிந்த பகவத்பாதரும்தான் விதிவத்தாக ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு சாஸ்த்ர ப்ரகாரம் அந்த ஆச்ரமத்தின் ஆசரணைகளை நடத்தியவர்கள்.
ஸநகாதியர், தத்தர், சுகர் முதலியவர்கள் ஸந்நியாஸத்திற்கும் மேலே போன மஹா பெரியவர்களாதலால், ஸந்நியாஸ தீஷை கொடுக்கும் அதிகாரம் அவர்களுக்கும் உண்டு. அப்படித்தான் சுகரிடமிருந்து கௌடர் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டது….
குடீசகர், பஹூதகர், ஹம்ஸர், பரமஹம்ஸர் என்று நாலு வகையாகக் கூறப்படும் ஸந்நியாஸிகளில் அத்வைத ஸந்நியாஸிகள் நாலாவதான உத்தமப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதாவது ‘பரம ஹம்ஸர்கள்’. ஓரிடத்திலேயும் ஸ்திரவாஸம் செய்யாமல் ஸஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களைப் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகர்கள்‘ என்று சொல்வது வழக்கம்.
ஆசார்யாளைக்கூட அப்படித்தான் சொல்வது. அவருடைய மடங்களில் வருகிற ஸ்வாமிகளையும்தான். ‘மடம்’ என்ற ஸ்தாபனத்திலிருந்துகொண்டு லோகத்திற்கு தர்மங்களை எடுத்துச் சொல்லும் குருக்களாக இருப்பதால், குரு பீடம் என்பதிலிருந்துகொண்டு ‘ஆபீஸ்’ பண்ணும் ஸந்நியாஸிகளாக இருப்பதால் – அதாவது லோகப் பொறுப்பு என்பதே இல்லாத ஸந்நியாஸியாயில்லாமல் லோகத்தில் தர்மம் வளர்வதற்குப் பாடுபடும் பொறுப்பைப் பெற்றிருப்பதால் – இங்கே பரமஹம்ஸ பரிவ்ராஜகர்களுக்கான விதிமுறைகளில் சில மாறுதல்கள் பண்ணியிருக்கிறது. ஸந்நியாஸ உபநிஷத்துகளிலும், ஸ்ம்ருதிகளிலும், மற்ற பழைய புஸ்தகங்ளிலும் சொல்லியிருப்பதற்குக் கொஞ்சம் வித்யாஸமாக நாம் ஆசார்யாளிடம் பார்க்கிறோம், அவருடைய மடங்களைச் சேர்ந்த ஸ்வாமிகளிடம் பார்க்கிறோமென்றால் அதற்குக் காரணம், இவர்கள் ஒரு பொறுப்பும் இல்லை என்று விட்டவர்களாக இல்லாமல், லோகத்தில் தர்மாபிவிருத்திக்குப் பொறுப்புப் பெற்றவர்களாக இருப்பதுதான்.
இந்த விஷயம் இருக்கட்டும். நான் சொல்ல வந்தது பரமஹம்ஸ ஸந்நியாஸிகளையும் அத்யாச்ரமிகளையும் பற்றியது. ஸந்நியாஸத்தையும் கடந்தவரே அத்யாச்ரமி என்றாலும் பழைய சாஸ்த்ரங்கள் சிலதில் பரமஹம்ஸர்களையே நாம் அத்யாச்ரமி என்று சொல்கிறவரைப் போலத்தான் வர்ணித்திருக்கிறது. அவற்றில் பரமஹம்ஸ ஸந்நியாஸிகளையே வஸ்த்ரம், தண்ட – கமண்டலம் ஆகியவற்றையும் விட்டுவிட்டவராகத் சொல்லி, சுகர், தத்தர் முதலியவர்களையும் இந்த கோஷ்டியிலேயே சேர்த்திருக்கிறது.
பரமஹம்ஸ ஸந்நியாஸிக்கு அப்புறம் துரீயாதீதர், அவதூதர் என்று இரண்டு பிரிவுகளைச் சொல்லி இவர்களை அத்யாச்ரமிகள் என்று குறிப்பாக வேறுபடுத்திக் காட்டும் வழக்கம் வந்தபிறகும்கூட அத்யாச்ரமிகளைப் ‘பரமஹம்ஸ பரிவ்ராஜகர்கள்’ என்று சொல்வது நீடித்து வந்திருக்கிறது. ஆசார்யாளே ‘சாந்தோக்ய பாஷ்ய’த்தில் ஒரு இடத்தில்3 “பரமஹம்ஸ பரிவ்ராஜகை: அத்யாச்ரமிபி:” என்று சொல்லியிருக்கிறார். (“பரம்ஹம்ஸ பரிவ்ராஜகர்களான அத்யாச்ரமிகளால்” என்று அர்த்தம்.)
அதாவது, யதி தர்மங்கள் என்னும் ரூல்கள் உள்ள நாலாவது ஆச்ரமியே ஸந்நியாஸி. இந்த ரூல்களும் நழுவிப் போய் நாலாவது ஆச்ரமத்திற்கும் மேலே போனவனே அத்யாச்ரமி என்று வித்யாஸம் பார்க்காமல் இரண்டு பேரையும் ஒன்றாகிக் குறிப்பிடும் வழக்கம் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறது. ஸம்ஸார ஆசையையும் இஹ லக்ஷ்யத்தையும் விட்டுவிட்டு ஒருத்தன் கிளம்பிவிட்டானென்ற பிறகு, அப்படிக் கிளம்பின எல்லாரையும் ஒன்றாகவே சொல்லிவிடலாமென்று ஏற்பட்டிருக்கிறது.
விவிதிஷா ஸந்நியாஸம், வித்வத் ஸந்நியாஸம் என்று இரண்டை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. யதி தர்ம ரூல்களுக்குக் கட்டுப்பட்டுத் துரீயாச்ரமம் என்று ஆரம்பிப்பவனே, அந்த ஆச்ரமத்தில் முன்னேறி முன்னேறி ரூலையும் விட்டு அத்யாச்ரமியாக ஆவதை இந்தப் பாகுபாடு தெளிவு செய்து காட்டுகிறது. ‘விவிதிஷா’ என்றால் ஒன்றை அறிய ஆசைப்படுவது, மனஸாரத் தாபப்படுவது. ஸமாதி நிலை, ஆத்ம ஸாக்ஷாத்காரம், ப்ரஹ்மானந்தம் என்றெல்லாம் சொல்லபடுவது என்னவென்று அறிய ஒருவர் ஆசைப்படுகிறார், தாபப் படுகிறார். இப்படியொரு ‘விவிதிஷா’ அவருக்கு இருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் உள்ள மட்டும் மேலே சொன்ன லக்ஷ்யத்துக்கே டெடிகேட் பண்ணிக்கொண்டு ப்ரயாஸைப்பட முடியாது என்று அவர் feel பண்ணுகிறார். அதனால் க்ரமமாக சாஸ்த்ரங்களில் சொல்லியுள்ளபடி ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு தண்ட, கமண்டல காஷாயதாரணம், மற்ற யதி தர்ம ரூல்கள் ஆகிய எல்லாவற்றையும் பண்ணுகிறார். இதுதான் விவிதிஷா ஸந்நியாஸம்.
இப்படி ஸந்நியாஸியாகி ஆத்ம சாஸ்த்ரங்களைப் படித்து விசாரம் பண்ணிக்கொண்டு முன்னேறும்போது ஸமாதி நிலை பற்றிச் சொல்லியிருப்பதெல்லாம் நிஜமானவைதான் என்ற நிச்சயம் அவருக்கு ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சம் அந்த அநுபவம் வந்து தொட்டுவிட்டுப் போகிறது. தொடும், ஆனால், போயும் விடும்! கரையோரத்தில் ஸமுத்ர அலை கொஞ்சம் காலைத் தொட்டுவிட்டுப் போய்விடுகிற மாதிரிதான்! ஸமுத்ரத்தில் அப்படியே முழுகி நனையவில்லை!
கேள்வியறிவில் பிறந்த ஆசையானது இப்படிக் கொஞ்சமாவது அநுபவ அறிவாகவே ஆகும்போது விவிதிஷா போய் ‘வித்வத்’ உண்டாகிறது.
ருசி கண்டுவிட்டதால் அப்படியே அந்த ரஸத்திலேயே முழுக்க முழுகிப் போகவேண்டுமென்று அவருக்குத் தோன்றுகிறது. அச்சமயத்தில் யதி தர்ம ரூல்படிப் பார்த்துப் பார்த்துப் பண்ணிக்கொண்டிருப்பதுகூட நிதித்யாஸனம் என்பதான தீவிர ஆத்ம விசாரத்துக்கு இடைஞ்சல் பண்ணுவதாக நினைக்கிறார். அதனால் தண்ட, கமண்டல, காஷாயாதிகளையும், மற்ற யதி தர்ம ரூல்களையும் விட்டுவிடுகிறார். அதுதான் ‘வித்வத் ஸந்நியாஸம்’ என்பது.
ஸாக்ஷாத்காரம் என்னவென்று அறியாத நிலையில் அறிய ஆசைப்பட்டு மேற்கொள்வது விவிதிஷா ஸந்நியாஸம். அதன் ‘டேஸ்ட்’டைக் கொஞ்சம் அறிய ஆரம்பித்தபின் பூர்ணமாக அறிந்து அதையே சாச்வதமாக்கிக் கொள்வதற்காக ‘ரூல்களைக் கொண்ட ஸந்நியாஸ’த்தையும் விட்டுவிட்டு அத்யாச்ரமத்திற்குப் போவது வித்வத் ஸந்நியாஸம்.
“ஸந்நியாஸத்துக்கு ஸந்நியாஸம்” என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. பக்குவமாகாத ஒருத்தன் ஏதோ கொஞ்சம் விரக்தி மாதிரித் தோன்றியதில் வீட்டை விட்டுப் புறப்படுகிறான். ‘விட்டு விடுவது’தான் ஸந்நியாஸம். அப்படி ஸந்நியாஸியாகிறான். அப்புறம் விரக்தி போன இடம் தெரியவில்லை! பழைய ஆசைகளெல்லாம் திரும்புகின்றன. “போதும் ஸந்நியாஸம்” என்று ஸந்நியாஸத்தை விட்டுவிட்டு அகத்துக்கே திரும்பிவிடுகிறான். இதுதான் “ஸந்நியாஸத்துக்கு ஸந்நியாஸம்!”
அமாவாஸைத் தர்ப்பணம் பண்ணுவதை ஒருத்தன் நிறுத்திவிட்டால் “தர்ப்பணத்துக்குத் தர்ப்பணம் பண்ணி விட்டான்” என்று சொல்வதுண்டு! அப்படி, ஸந்நியாஸத்துக்கு ஸந்நியாஸம்!
ஆனால் ஒரு அத்யாச்ரமி ஸந்நியாஸ தர்மத்தை விடும்போது அவர் ஸம்ஸாரத்துக்குத்திரும்புவதற்காக அப்படிப் பண்ணவில்லை. யதி தர்மத்தை விடுவது அவருக்கு முக்யமில்லை; நோக்கமில்லை. ஸமாதி நிலையில் சேர்ந்திருப்பதுதான் அவருடைய நோக்கம். ஸந்நியாஸ ஆசரணையை அவர் விடுவது அதன் லக்ஷ்யமான அநுபவத்தில் சேர்வதற்கே. ஸந்நியாஸத்திலிருந்து கீழே வராமல், அதற்கு மேலே போவதற்காக விடுகிறார். அதனால்தான் ‘அதி’ – ஆச்ரமி என்பது.
இப்படிச் சொன்னதால் அநுபூதி வாய்க்க ஆரம்பிக்கும் நிலையில் எல்லா ஸந்நியாஸிகளுமே துரீயாச்ராமத்திலிருந்து அத்யாச்ரமத்துக்குப் போகத்தான் செய்வார்கள். அப்படித்தான் செய்யணும் என்று இல்லை. க்ருஹஸ்தாச்ரமியாகவே இருந்துகொண்டும்கூட ஜனகர் ஜீவன் முக்தராக இருந்திருக்கிறார். ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் ப்ரஹ்மசர்ய ஆச்ரமியாக இருந்துகொண்டே அத்வைதாநுபூதிமானாக இருந்திருக்கிறார். இப்படி இந்த (இரண்டு) ஆச்ரமங்களில் ரொம்ப அபூர்வமாகச் சிலர் இருந்திருக்கிறார்களென்றால், விதிவித்தான, ரூல்களைக் கொண்டதான ஸந்நியாஸாச்ரமத்தில் இருந்துகொண்டோ, ஏராளமான மஹான்கள் ஜீவன் முக்தர்களாக இருந்திருக்கிறார்கள். ‘டாண்’ என்று ஒரே flash-ல் ஒரு ஸந்நியாஸிக்கு ஸாக்ஷாத்காரம் சாச்வதமாகக் கூடும்போது, அதற்கப்புறம் அதை எதுவும் கலைக்க முடியாதென்பதால், மூச்சு விடுகிறமாதிரி involuntaryயாகவே (அநிச்சையாகவே)ஆச்ரம விதிகளை அவரால் விடாமல் அநுஸரித்து வரமுடியும். இப்படி பலபேர் உண்டு. ஒரேவீச்சில் இல்லாமல், ஸமாதி கூடுவதும் கலைவதுமாக இருந்து, போகப் போக ஸ்திரப்பட்டவர்களிலேயும்கூடப் பலர் ரூல்களை விடாமல் அவற்றின்படியே பண்ணிக்கொண்டு போனவர்கள்தான். இதெல்லாம் பேச்சினால் புரியவைக்கும் விஷயமில்லை. அவரவர் அநுபவத்தையும், ஈச்வரன் அவர்களைக் கொண்டு லோகத்துக்கு என்ன மாதிரி உதாரணம் காட்ட நினைக்கிறான் என்பதையும் பொருத்தே ஒரு மஹான் அத்யாச்ரமியாகவோ, தேஹம் விழுகிறவரை விதிவத்தான ஸந்நியாஸாச்ரமியாகவோ இருப்பது அமையும்.
எந்த விதி – நிஷேதமும் தேவைப்படாதவனாகவும் ஸகல விதி – நிஷேதங்களையும் முறித்துப் போட்டு உயரே போனவனாகவும் பரிபூர்ண ஸ்வதந்த்ரனாக உள்ள ஒரு ஞானியை லோகத்துக்குக் காட்ட வேண்டுமென்று ஈச்வரன் நினைக்கும்போது ஒருவரை அதிவர்ணாச்ரமியாக்கிக் காட்டுகிறான். சாஸ்த்ரக் கட்டுப்பாடு ரொம்பவும் அவச்யம் என்று ஜனங்களுக்குப் புரியவைக்க நினைக்கும்போது அவனே ஒரு ப்ரஹ்ம ஞானியை சாஸ்த்ர விதிகளின்படியே நடந்து காட்டும் ஸந்நியாசியாக இருந்து காட்டப் பண்ணுகிறான்.
தத்தாத்ரேயரையும் சுகரையும் போன்ற அத்யாச்ரமிகளான குருமார்கள் ப்ரஹ்மவித்யா பரம்பரையில் தோன்றியிருந்தாலும், கட்டுப்பாடுகள் ஒரேயடியாகக் குலைந்து கிடக்கும் இந்த யுகத்தில், எந்தக் கட்டுப்பாடுமில்லாதவரான அத்யாச்ரமியிடமிருந்து ஜனங்கள் கட்டுப்பாடு இல்லாமலிருப்பதைத்தான் எடுத்துக்கொள்வார்கள், அவருடைய உள்ளநுபவத்தை எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான் கௌடரிலிருந்து ஆச்ரமக் கட்டுப்பாடுள்ளதான ஸந்நியாஸத்தை தழுவியவர்களாகவே நம்முடைய குரு பரம்பரை அமைந்தது.
லோகத்திற்கு வழிகாட்ட வந்த ஆசார்யாள் சாஸ்த்ரோக்தக் கட்டுப்பாடுகளுள்ள ஸந்நியாஸாச்ரமியாகத்தான் இருக்க வேண்டும்; அதுமட்டும் போதாது; அவரும், வழிகாட்டியாக மட்டும் இல்லாமல் வழியைப் பின்பற்றுபவராக, தாமும் (அத்யாச்ரமியிடமிருந்து இல்லாமல்) ஸந்நியாஸி ஒருவரிடமிருந்தே தீக்ஷை பெறவேண்டும்; இந்த சாஸ்த்ர மரியாதையை வலியுறுத்துவதற்காக, அவருடைய குருவுங்கூட இப்படியே ஸந்நியாஸியிடமிருந்து ஆச்ரமம் பெற்றவராகவே இருக்க வேண்டும் – என்கிற ரீதியில்தான் கௌடபாதரிலிருந்து விதி – நிஷேதங்களோடு கூடிய நான்காவது ஆச்ரமிகளாக குரு பரம்பரை அமைந்திருக்கிறது.
ஒரு விஷயம் சொல்லப்போனால் ஒன்பது விஷயம் அகப்படுகிறது! புதையலாக அகப்படுவதால் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே போவோம்:
அத்யாச்ரமிகளைப் பரமஹம்ஸ பரிவ்ராஜகர் என்று ஆசார்யாள் சொல்வது எங்கேயென்றால்: இந்த்ரனைப் பல வருஷங்கள் திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்துவிட்டு அப்புறம் ப்ரஜாபதி அவனுக்கு ஆத்ம தத்வத்தை உபதேசித்ததாக சாந்தோக்யோபநிஷத்தில் இருக்கிறது. உபதேச ஆரம்பத்தில் ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போதுதான் இந்த விஷயம் சொல்லியிருக்கிறார். “எல்லா ஆசை அரிப்புக்களையும் துறந்தவர்களாகவும், வேறு நாட்டமில்லாமல் ஆத்ம ஞானம் ஒன்றுக்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும், வேதாந்த விஞ்ஞானங்களிலேயே பூர்ணமாக ஈடுபட்டவர்களாகவும், ப்ரஜாபதி நான்கு ப்ரகரணங்களாக இங்கு கூறியுள்ள ஸம்ப்ரதாயத்தை அநுஸரிப்பவர்களாகவும் உள்ள பரம பூஜ்யர்களான பரமஹம்ஸ பரிவ்ராஜகர்களாகிய அத்யாச்ரமிளாலேயே இந்த ஆத்ம வித்யை அறியக்கூடியது. தற்காலத்திலும்கூட இப்படிப்பட்டவர்களே இந்த வித்யையை சிஷ்யர்களுக்கு உபதேசிக்கிறார்கள். இந்த யோக்யதாம்சங்கள் இல்லாத வேறு யாரும் உபதேசிப்பதில்லை” என்கிறார்4.
உபநிஷத்தில் நாலு ப்ரகரணங்களாக வரும் ப்ரஜாபத்ய வித்யையை உபதேசிக்கும் ஞானிகள் ஆசார்யாள் காலத்திலும் இருந்திருக்கிறார்களென்று இங்கே ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. அதாவது, அவருடைய அவதாரத்திற்கு முன்பு வேத தர்மம் அடியோடு அணைந்துவிடாமல் முணுக்கு முணுக்கு என்றாவது ப்ரகாசித்துக் கொண்டுதானிருந்திருக்கிறதென்று நிதர்சனமாகிறது. ஆத்மாநுபவம் இல்லாமலே போலி பண்ணிக் கொண்டிருப்பவர்களும், ஞானவழி என்று சொல்லிக்கொண்டே நம்முடைய ஆத்ம சாஸ்த்ரங்களுக்கு வித்யாஸமாக ப்ரசாரம் செய்துகொண்டிருந்த பௌத்தர் முதலானோரும் அப்போது நிறைய இருந்தாலும் கொஞ்சமாவது வைதிகமான ஸத்குருக்களும் ஸம்ப்ரதாய பரம்பரையில் வந்தவர்களாக இருந்துதானிருக்கிறார்கள்.
இப்படியிருந்தவர்களில் அத்யாச்ரமிகளும் இருந்திருக்கிறார்கள், துரீயாச்ரமிகளும் இருந்திருக்கிறார்கள். ஆசார்யாள் குருமுகமாக துரீயாச்ரமம் பெற்றுக்கொள்ள நிச்சயித்தபோது, லோகத்தில் சாஸ்த்ர மரியாதை இருக்கப் பண்ணவேண்டுமென்று நினைத்து, சாஸ்த்ர விதிகளையும் விட்டுவிட்ட அத்யாச்ரமிகளிடம் போகாமல், சாஸ்த்ரோக்தமாக நடக்கும் துரீயாச்ரமியான கோவிந்த பகவத்பாதரிடமே போய் தீக்ஷை வாங்கிக்கொண்டிருக்கிறார்.
இதேமாதிரி கோவிந்த பகவத் பாதரும், கௌடபாதரும் தம்தம் குருக்களிடமிருந்து ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டவர்கள். சுகர் ஸந்நியாஸி இல்லை. அவர் ‘அநுபேத’ராகப் பூணூல் இல்லாமலிருந்தாரென்றால், அது பூணூலை அறுத்துப் போட்டுவிட்டு ஸந்நியாஸியானதால் அல்ல. பூணூல் போடுவதற்கு முன்பே அவர் அத்யாச்ரமியாகப் புறப்பட்டுவிட்டதால்தான்!
கௌடபாதர், கோவிந்த பகவத்பாதர் இருவருமே ஸந்நியாஸிகளாயிருந்தாலும் பின்னவர்தான் ஸந்நியாஸ நாமம் என்று புதிதாக ஒரு பெயர் பெற்றவராயிருக்கிறார்.
1 II. 72
2 V. 24 இதற்கடுத்த 25-வது, 26-வது ச்லோகங்களிலும் ‘ப்ரம்ம நிர்வாணம்’ என்று சொற்றொடர் வருகிறது.
3 VIII-12-1 பாஷ்யம் முடியுமிடம்.
4தஸ்மாதிதம் த்யக்த–ஸர்வ–பாஹ்யைஷணை: அநந்ய–சரணை: பரமஹம்ஸ–பரிவ்ராஜகை: அத்யாச்ரமிபி: வேதாந்த–விஜ்ஞான–பரைரேவ வேதநீயம் பூஜ்யதமை: ப்ரஜாபத்யம் சேமம் ஸம்ப்ரதாய–மநுஸரத்பி: உபநிபத்தம் ப்ரகரண சதுஷ்டயேந | ததா அநுசாஸதி அத்யாபி த ஏவ நாந்யே |(“சாந்தோக்ய பாஷ்யம்”: VIII. 12. 1. முடிவுப்பகுதி)