ஸந்நியாஸ நாமம்: சங்கர நாம மஹிமை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டவுடன் பூர்வாச்ரமப் பேர் போய்ப் புதுப்பேர் வருகிறது. ஆதி குருவிலிருந்து சுகர் வரை எவரும் ‘டெக்னிக’லாக ஸந்நியாஸி அல்லவாதலால் அவர்களுக்கு இப்படிப் பேர் மாறவில்லை.

கௌட பாதருக்கோ ஸந்நியாஸ நாமா, பூர்வாச்ரம நாமா ஆகிய இரண்டும் தெரியவில்லை! அவர் பிறந்த தேசத்தை வைத்து அவருக்கு ஏற்பட்ட ‘கௌடர்’ என்ற பெயரொன்றுதான் தெரிகிறது.

கோவிந்த பகவத் பாதருக்குத்தான் பூர்வாச்ரமப் பேர் சந்த்ர சர்மா, ஸந்நியாஸ நாமம் கோவிந்தர் என்பதாக இரண்டும் தெரிகிறது.1

ஆசார்யாள் விஷயத்தில் அலாதியாயிருக்கிறது. அவருக்கு அப்பா-அம்மா வைத்தா பேரே சங்கரர் என்பதுதான். அதுவே ஸந்நியாஸியான பிற்பாடும் நீடித்திருக்கிறது! குருவானவர் தீக்ஷை கொடுக்கும்போது ஸந்நியாஸ நாமம் கொடுப்பார். இவருடைய குரு – கோவிந்த பகவத் பாதர் – ‘நம் சிஷ்யரோ கைலாஸ சங்கரராக இருக்கிறார். லோகத்துக்கெல்லாம் நித்ய மங்களமான ‘சம்’மைச் செய்யும் ‘லோக சம்கர’ராகஇருக்க வேண்டுமென்றே இந்த அவதாரம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், நாமகரண ஸம்ஸ்காரத்தில் பிதா வைத்த சங்கர நாமத்தை மாற்ற வேண்டாம்’ என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. அவதார காலத்தை வைத்து – அவதாரம் ஏற்பட்ட மாஸம், பக்ஷம், திதி ஆகிய மூன்றை வைத்து – ஆசார்யாளுடைய பிதா அவருக்குப் பெயர் வைக்கப் போக, அதுவே ‘சங்கர’ என்று பொருத்தமாக அமைந்துவிட்டது. அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன். அந்தப் பெயரே அவர் ஸந்நியாஸியான பிற்பாடும் தொடர்ந்து இருந்துவிட்டது.

அவர் சரீரத்திலிருந்த 32 வருஷம் மட்டுமில்லாமல், அவர் ஏற்படுத்திய மடங்களிலுள்ள சாமியார்களுக்கெல்லாமும் அந்தப் பெயரே தொடர்ந்து வந்திருக்கிறது! ஆசார்ய ஸம்பிரதாயம் ஒன்றில்தான் இப்படி இருக்கிறது! இன்றைக்கு ராமாநுஜாசார்யார், மத்வாசார்யார், சைதன்யர் – இன்னம் புத்தர், க்றிஸ்து, நபி – என்றெல்லாம் பேர் வைத்துக்கொண்டு எங்கேயாவது, யாராவது சாமியார் இருக்கிறார்களா? ஆனால் ‘சங்கராசார்யார்’ என்று பேர் வைத்துக்கொண்டு மாதரம் நாங்கள் பல பேர் இருக்கிறோம்!

அந்த நாமாவுக்கு அப்படியொரு மஹிமை இருக்கிறது!

‘அவர் பெயரை வைத்துக்கொள்ள நமக்கு என்ன யோக்யதை? அவருடைய பாதத்தின் ஒரு தூசியாக இருக்க லாயக்கு உண்டா? எதற்காக இப்படி எங்கேயுமில்லாத வழக்கமாகத் தம்முடைய கீழ்ப் பரம்பரை முழுதற்கும் தம் பெயரையே வைத்திவிட்டார்?’ என்று தோன்றிக் கொண்டிருந்தது.

ஸந்நியாஸநாமா என்றும் ஒன்று எங்களுக்கு இருக்கிறது. ‘அது மட்டும் போதாதா? ஏன் ‘சங்கராசார்யார்’ என்றும் அதோடு சேர்த்து வைத்துக்கொள்ளப் பண்ணிவிட்டார்? ‘அத்வைதம் என்பதால் தனக்கும் கீழ்ப் பரம்பரைக்கும் வித்யாஸமேயில்லை என்று இப்படி வைத்துவிட்டார்’ என்று சொன்னால் அதுவும் ஸரியாய் வரவில்லை. (ஏனென்றால்) அத்வைதம் கார்யம் இல்லாத நிலை. கார்யம் செய்வதற்குத்தான் மடாதிபதி ஆபீஸ். லோகத்தில் தர்மமும் ஞானமும் இருப்பதற்கான கார்யம் பண்ணனும் என்பதற்குத்தான் இப்படி மடமென்றும், மடாதிபதியென்றும் அவர் ஏற்படுத்தியது. சம்-கரரே நல்ல கார்யம் பண்ணுகிறவர்தான்! அதனால் அதில் நிஷ்க்ரியமான அத்வைதம் எப்படி வரும்? அப்படிக் கார்யம் பண்ணுவதைப் பார்க்கும்போது அவர் நிஜமாகவே ‘சங்கரர் என்றால் சங்கரர்தான்’ என்னும்படியாக அத்தனை நல்லதும் பண்ணினார்! 72 துர்மதங்களை நிராகரணம் செய்து ஸநாதன வேத தர்மத்தை நிலைநாட்டினார். அவர் செய்தது யானையளவு என்றால் நம்மால் ஒரு கொசு அளவுக்குக்கூட ஒன்றும் பண்ண முடியவில்லை. பின்னே ஏன் அவர், அவருடைய பெயரையே வைத்தார்?’ என்று அந்தப் பேரை வைத்துக்கொள்வது guilty-யாக, அபசாரமாகத் தோன்றிக் கொண்டிருந்ததது.

அப்புறம் கொஞ்சம் தெளிவு பண்ணிக்கொண்டேன். ‘அவருடைய நாமாவுக்கே ஒரு மஹிமை, ஒரு சக்தி உண்டல்லவா? இந்த யுகத்துக்கே நாமாவைத்தானே தலையான உபாயமாக சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது? நாம மாஹாத்ம்யத்தை விசேஷமாக வளர்த்துக் கொடுத்த போதேந்த்ராள்2 என்ன சொல்லியிருக்கிறார்? ‘சிவன் – விஷ்ணு என்றெல்லாம் ரூபம் எடுத்துக்கொண்டதும் லோக ரக்ஷணத்துக்குப் போதாது என்றே பரமாத்மா, சிவன் – விஷ்ணு முதலான நாமங்களையும் தரித்துக்கொண்டு, அந்த நாமங்களிலேயே நன்றாக விழிப்புணர்ச்சியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான்’-

‘அபர்யாப்தம் ரூபம் ஜகதவந ஏதத்-புநரிதி

ப்ரபுர்-ஜாகர்தி ஸ்ரீ ஹரி-கிரிச நாமாத்மகதயா’

என்று சொல்லியிருக்கிறாரல்லவா? அப்படி சங்கர நாமாவிலேயே ஆசார்யாளின் சக்தி குடிகொண்டிருக்கிறது. அவருடைய அவதார சரீரம் மறைந்து போய்விட்டாலும், அவர் சங்கர நாமத்துக்குள்ளே ஜீவ சக்தியோடுவிழிப்பாக இருந்துகொண்டு ரக்ஷிப்புத் தருகிறார்-ஒவ்வொரு தேவதைக்கு ஒவ்வொரு நாம மந்த்ரம் இருப்பதிபோல ஆசார்யாளுக்கு “ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர” என்பது… தம்முடைய கீழ் பரம்பரைக்குத் தம் பேரைக் கொடுத்தாவது அதன் மூலம் சக்தி கொடுக்கலாம் என்றேதான் ஆசார்யாள் இம்மாதிரி வைத்திருப்பார்’ என்று தோன்றிற்று.

‘அந்த நாமாவைத் தாங்க நமக்கு யோக்யதை உண்டா?’ என்று நினைக்க வேண்டாம்; உப்புக்குச் சப்பாணிக்குங்கூட யோக்யதை கொஞ்சமாவது உண்டாக்கத்தான் அந்த நாமாவை அவர் கொடுத்திருப்பதே!’ என்று ஒருமாதிரி ஸமாதானம் பண்ணிக்கொண்டேன்.

‘நாம் லோக யாத்ரையை முடித்த பிற்பாடும், ஸ்ருஷ்டியின் இயற்கைப்படி ஏற்ற இறக்கங்கள் இருந்துகொண்டேதான் இருக்குமாதலால் தர்மாதர்மப் போராட்டம் நடந்து கொண்டேதானிருக்கும். அதற்காக நாம் எப்போது பார்த்தாலும் அவதாரம் செய்து கொண்டிருக்கமுடியாது. லோக லீலையில் இந்தப் போராட்டத்திற்கும் இடம் கொடுக்கத்தான் வேண்டும். அது ரொம்பவும் முற்றிவிடும்போதுதான் அவதாரம் செய்யவேண்டும். மற்ற ஸமயத்திலும்கூட தர்மத்தின் கட்சிரொம்ப பலஹீனப்பட்டு விடாதபடி நம்முடைய கீழ்ப் பரம்பரையை ஆசார்ய பீடங்களில் வைத்து ஓரளவு ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு பலம் கொடுப்பதற்காக நம்முடைய பெயரையே அவர்களுக்கெல்லாமும் கொடுக்க வேண்டும்’ – என்றுதான்ஆசார்யாள் இப்படிப் புது தினுஸில் பண்ணியிருக்க வேண்டும்.

“நாமதாரணம் என்றால் பெயரைத் தாங்குவது – அப்படித் தாங்க நமக்கேது சக்தி?” என்று கேள்வி கேட்டாள் “சக்திகொடுத்துத் தாங்குவதற்கேதான் நாமத்தைத் கொடுத்திருக்கிறது!” என்று பதில் வருகிறது! ‘இத்தனை பலஹீனத்தில் இவ்வளவு வீர்யமான மருந்தை எப்படித் தாங்கிக்கொள்வது?’ என்று கேட்டால், ‘பலஹீனத்தை போக்கவேதானப்பா இந்த மருந்து!’ என்கிற மாதிரி!

சங்கர நாமத்தின் சக்தியை’ எப்படி ஆசார்யாளே ஸங்கேதமாகத் தெரிவித்திருக்கிறாரென்று சொல்ல வந்தேன். தனி மஹிமை வாய்ந்த நாமாவாக அது இருப்பதால்தான் ஆசார்யாளின் குருவும் அதை பற்றி வேறொரு தீக்ஷாநாமம் கொடுக்கவில்லை.


1 ஓர் உரையில் ஸ்ரீசரணர்கள் ஸ்ரீ கோவிந்த பகவத் பாதர் உள்பட ஆசார்யாளின் காலம் வரையில் எல்லா ஸந்நியாஸிகளுக்கும் பூர்வாச்ரமப் பெயரே தொடர்ந்து இருந்ததாகவும், ஆசார்யாளின் சிஷ்யர்களில் தொடங்கித்தான் ஸந்நியாஸத்துக்குப் பின் புதுப்பெயரிடும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். “எப்போதும் ‘ஜய கோவிந்த ஜய’ என்று ரசித்துச் சொல்வது தவிர வேறு பேச்சின்றி மௌனமாகவே இருந்ததால் அவர் (ஜய) கோவிந்த முனி என்று சொல்லப்பட்டார்” என்று கூறும் ‘ப்ராசீன சங்கர விஜய’ ச்லோகம் டி.எஸ். நாராயண சாஸ்திரியின் “The Age of Sankara” (1971 ed.) 60-ம் பக்கத்தில் காண்கிறது.

2 ஸ்ரீ காமகோடி பீடத்தின் 59-வது ஆசார்யர்களான ஸ்ரீ பகவந்நாம போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is (நிர்வாணம்)
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ராமாநுஜர் ஒற்றுமை
Next