ராமாநுஜர் ஒற்றுமை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாளுக்கு ஓரளவு ஒற்றுமையாகவே ராமாநுஜருக்கும் இருக்கிறது. ஸாதாரணமாக நம்மமுடைய ஆசார்யாளின் வழிக்கு வித்யாஸமாகவே ராமநுஜாசார்யார் எதிலும் பண்ணுவார். பார்க்கப் போனால் அத்வைதத்துக்கு அவருடைய விசிஷ்டாத்வைதத்தைவிட த்வைதம்தான் நேரெதிரானது. ஆனாலும், வழிமுறைகளில் மத்வாசார்யாரைவிட ராமாநுஜர்தான் ஒரே வித்தியாஸமாகப் பண்ணியது. ப்ரஹ்மச்சர்யதிலிருந்தே ஸந்நியாஸத்துக்குப் போவது, சிகையை எடுத்துவிடுவது, யஜ்ஞோபவீதத்தை (பூணூலை) நீக்கிவிடுவது என்றெல்லாம் ஆசார்யாள் போலவேதான் மத்வரும் தம்முடைய ஸம்ப்ரதாயத்தில் வைத்தார். ஆனால் ராமாநுஜரின் வழியிலோ ஸந்நியாஸிகளுக்கு சிகையும் யஜ்ஞோபவீதமும் உண்டு. க்ருஹஸ்தாச்ரமிகள் ஸந்நியாஸி ஆகிறார்கள். நமக்கு (சங்கர மரபுத் துறவிகளுக்கு) ஏக தண்டம் என்றால் அவர்கள் த்ரிதண்டி ஸந்நியாஸிகள் என்பதாக மூன்று தண்டங்களை ஒன்றாகக் கட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பரமஹம்ஸ்யத்திற்கு (பரமஹம்ஸ ஸந்நியாஸ நிலைக்கு) சொன்ன விதிகளின்படி நம் ஸம்ப்ரதாயத்தில் தானிருக்கிறது என்று நாம் அநேக சாஸ்த்ரங்களைக் காட்டினால், அவர்கள் தாங்களும் பரமஹம்ஸர்கள்தான், தாங்கள் அப்படி இருப்பதற்கும் சாஸ்த்ர ஆதாரம் இருக்கிறது என்கிறார்கள். ஆக, ஆசார்யாள் வழிக்கு எல்லாம் வித்யாஸமாக அவர்கள் செய்கிறார்கள்.

ஆசார்யாள், மத்வர் இரண்டு பெரும் மடங்கள் ஸ்தாபித்தார்கள். ராமாநுஜர் ஸ்தாபிக்கவில்லை. எழுபத்து நாலு ஸிம்ஹாஸநாதிபதிகள் என்று வைஷ்ணவர்களிடையில் இருப்பது ஸந்நியாஸிகளின் தலைமையில் மட ஸ்தாபனம் பண்ணியது போலல்ல; அது க்ருஹஸ்த பரம்பரைகளின் வழியே ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை வளர்ப்பதற்கான ஏற்பாடு.

ஆசார்ய ஸ்ம்ப்ரதாய ஸந்நியாஸிகள் ‘தசநாமிகள்’ என்ற பத்துவிதமான ஸந்நியாஸ வகைகளில் ஒன்றைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். மத்வாசார்யாரும் தசநாமிகளில் “தீர்த்தர்” என்ற பிரிவில் ஆச்ரமம் வாங்கிக் கொண்டவர்தான் (துறவு தீக்ஷை பெற்றவர்தான்). ஆனந்த தீர்த்தர் என்பதே அவருடைய ஸந்நியாஸப் பேர். க்ருஷ்ண சைதன்யரும் அப்படித்தான். கேசவபாரதி, ஈச்வரபுரி என்பவர்களிடம் அவர் தீக்ஷை வாங்கிக்கொண்டதாகச் சொல்கிறார்கள். பாரதி, புரி என்ற இரண்டும் தசநாமிகளில் வருவதுதான். ராமக்ருஷ்ண பரமஹம்சர்கூட ஒரு ‘புரி’ ஸந்நியாஸி1யிடமிருந்துதான் ஆச்ரமம் வாங்கிக் கொண்டவர்.

ஆனால் ராமாநுஜர் மட்டும் தசநாமிப் பிரிவின்கீழ் ஸந்நியாஸியாகவில்லை. ஆரம்ப காலத்தில் அவர் ஆத்ம சாஸ்த்ரம் படிக்க யாதவ ப்ரகாசர் என்ற அத்வைதியிடமே போனார். ஆனால் குருவின் ஸித்தாந்தத்தை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அது அவர் ஆச்ரமம் வாங்கிக்கொள்வதற்கு முற்காலத்தில்தான். (அத்வைதப் புத்தகங்களைப் பார்த்தால் யாதவ ப்ரகாசர் என்று எவரைப் பற்றியும் தெரியவில்லை.)

ஆசார்யாளின் ஸித்தாந்தத்தை ஆக்ஷேபித்து, அதற்கும் (அத்வைதத்திற்கும்) பிற்பாடு ராமானுஜாசார்யார் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைதத்திற்கும் நடுவாந்தரமாக பேதாபேதம் என்ற ஸித்தாந்தத்தை பாஸ்கராசார்யார் என்கிறவர் ஸ்தாபித்திருக்கிறார். அவருடைய கொள்கைகளையே பெரும்பாலும் அனுசரித்தவராகத்தான் யாதவ ப்ரகாசர் என்று ஒருத்தர் இருந்ததாகத் தெரிகிறது. ஆசார்யாள் ஸித்தாந்தத்தைக் கண்டனம் பண்ணி, பிற்காலத்தில் ஏற்பட்ட ராமாநுஜ ஸித்தாந்தத்துக்குக் கிட்டேகிட்டே வருகிற ஒரு ஸித்தாந்தம் அவருடையது என்று தோன்றுகிறது. அவர் செய்ததாகத் தெரியவரும் ப்ரஹ்மஸுத்ர பாஷ்யம் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. பிறத்தியார் ‘கோட்’ செய்வதிலிருந்தே அவருடைய கொள்கையைப்பற்றி அநுமானிக்க முடிகிறது.

ஆசார்யாள் வர்ணாச்ரம தர்மங்களை வலியுறுத்தி நிலைநாட்டினார். ராமாநுஜாசார்யார் அவற்றை அவ்வப்போது இளக்கிக் கொடுத்ததாக ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக் கதைகளில் நிறையப் பார்க்கிறோம். ராமாநுஜ பாஷ்யங்களைப் பார்க்கும்போது அவரும் வர்ணாச்ரம தர்மநுஷ்டானத்தைத்தான் வலுவாக ஆதரித்தாரென்று தெரிகிறது. ஆனாலும் அவருடைய ஸம்ப்ரதாயஸ்தர்கள் இப்படிப் பல கதைகள் சொல்கிறதையும் கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டியிருக்கிறது. மத்வாசார்யார் நம்முடைய ஆசார்யாளைப் போலவே தீவ்ரமாக வர்ணாச்ரமங்களை விதித்தவர்.

‘ஆசார்யாளின் வழிக்கெல்லாம் முழுக்க வித்யாஸமாக ராமாநுஜர் பண்ணியது ஏன்? மத்வர் ஏன் அவ்வளவு வித்யாஸமாகப் போகவில்லை? என்று கேட்டால் ஒரு காரணம் தோன்றுகிறது. ஆசார்யாளுக்கு அடுத்தாற்போல் வந்தவர் ராமாநுஜர்தான். அவருக்கு அப்புறம்தான் மத்வாசார்யார் வந்தார். ஒவ்வொருவரும் தமக்கு முந்தி வந்தவருக்கு மாறாக ஸித்தாந்தம் பண்ணினார்கள். ஸித்தாந்ததத்தில் மட்டும் வித்யாஸம் என்று இல்லாமல் மற்ற நடைமுறைகளிலும் வித்யாஸமாகப் போனால்தான் புதுசாக வந்தவர்களை லோகத்திற்கு ஸ்வச்சமாகத் தனிப்படுத்திக் காட்டமுடியும். புதுசாக ஒரு கட்சி ஆரம்பித்தால் புதுக் கொள்கை மட்டுமில்லாமல் கட்சிக்கு புதுசாக ஒரு கொடி, ஸிம்பல, ட்ரெஸ், என்று ஏற்படுத்துகிறார்களல்லவா? அப்படி. அதனால் சங்கரரை அடுத்து வந்த ராமாநுஜர் சங்கரர் பின்பற்றிய நடைமுறைக்கெல்லாம் வித்யாஸமாகப் பண்ணினார் போலிருக்கிறது. இப்படியே ராமாநுஜரை அடுத்து வந்த மத்வர் ராமாநுஜருக்கு வித்யாஸமாகப் பண்ண நினைத்திருக்கலாம். அப்படி பண்ணும்போது, இரண்டு நெகடிவ் சேர்ந்தால் பாஸிடிவ் ஆகிவிடும் என்பதுபோல, மத்வர் மாற்றிப் பண்ணியது சங்கரரின் வழிக்கே திரும்பிவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம்.

சங்கர-ராமாநுஜர்கள் பெயர் விஷயமாக ஒரு ஒற்றுமையைச் சொல்ல ஆரம்பித்து, வேற்றுமைகளைச் சொல்லிக்கொண்டு போய்விட்டேன்! (அந்த) ஒற்றுமை என்ன? ராமாநுஜருடைய பூர்வாச்ரமப் பேர் லக்ஷ்மணர் என்பது. இளையாழ்வார் என்று தமிழில் சொல்வார்கள். ராமருக்கு இளையவர் லக்ஷ்மணர். ராமரின் உடன்பிறந்தவர். ‘அநுஜன்’ என்றால் ‘உடன்பிறந்தவன்’. ஆகவே ராமாநுஜர் என்றாலும் லக்ஷ்மணர் என்றாலும் ஒன்றுதான். சங்கரரைப் போலப் பூர்வாச்ரமப் பேர் அப்படியே துரீயாச்ரமத்தில் தொடராவிட்டாலும் அந்தப் பேரின் அர்த்தத்திலேயே ராமாநுஜர் என்ற ஸந்நியாஸ நாமமும் இருக்கிறது! அதுதான் ஒற்றுமை.

லக்ஷ்மணர் பூர்வத்தில் யார்? ஆதிசேஷனாக இருந்தவர். ராமாநுஜாசார்யாரை ஆதிசேஷ அவதாரமென்று சொல்கிறார்கள்.

நாம் ஆசார்யாளை சிவாவதாரம் என்கிறோம். வைஷ்ணவர்கள் தங்களுடைய ஆசார்யரை விஷ்ணு அவதாரம் என்று சொல்லவில்லை சேஷாவதாரம் என்கிறார்கள். மாத்வர்களும் மாத்வரை விஷ்ணு அவதாரமாகச் சொல்வதில்லை. வாயுவின் அவதாரம் என்று சொல்கிறார்கள். திரும்பத் திரும்ப அவதாரங்கள் பண்ணுவதே விஷ்ணுவின் தொழிலாகத்தான் இருந்தும் இப்படி இருக்கிறது.

சங்கர-ராமாநுஜர்களுக்கு இன்னொரு ஒற்றுமை, இரண்டு பேருக்கும் ஒரு உறவு தோன்றுகிறது! ஆசார்யாளின் குருவான கோவிந்த பகவத்பாதர் பதஞ்சலியின் அவதாரமென்றால், அந்தப் பதஞ்சலியோ ஆதிசேஷாவதாரம்! அதே ஆதிசேஷனின் அவதாரமாகத்தான் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராமானுஜரைச் சொல்கிறார்கள்!

“நம்முடைய பகவத்பாதாளுக்கும் ராமாநுஜாசார்யாருக்கும் இன்னொரு பெரிய ஒற்றுமை, இரண்டு பேருடைய ஜயந்தியும் ஒரே நாளில் வருவது! நாம் (ஜன்ம திதியான) பஞ்சமியை வைத்து ஜயந்தி கொண்டாடுகிறோம். அவர்கள் (ராமாநுஜரின் ஜன்ம நக்ஷத்ரமான) திருவாதிரையை வைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்படியும் அனேகமாக இரண்டு பேர் ஜயந்தியும் ஒரே நாளில்தான் வருகிறதைப் பார்க்கிறோம்.”

ராமாநுஜர் என்பது அவருடைய பூர்வாச்ரமப் பேருக்கே synonym என்று சொல்ல வந்தேன்.

மத்வரின் பூர்வச்ரமப் பேர் வாஸுதேவன். அப்புறம் அனந்த தீர்த்தரானார். பூர்ண ப்ரஜ்ஞர் என்றும் ஸந்நியாஸியானபின் அவருக்கு ஒரு பேருண்டு. லோகத்துக்கு ப்ரஸித்தமான பேரோ மத்வர் என்பது. வாஸுதேவன் என்ற பெயருக்கும் அவருடைய ஸந்நியாஸப் பெயர்களுக்கும் ஸம்பந்தமில்லை. கௌராங்கர் என்று பூர்வாச்ரமப் பெயர் பெற்றிருந்தவர் அப்புறம் க்ருஷ்ண சைதன்யரானார். அந்த இரண்டு பெயர்களுக்கும் ஸம்பந்தமில்லை. [சிரித்து] கௌராங்கருக்கு க்ருஷ்ணர் நேரெதிர்! கௌராங்கர் என்றால் வெள்ளை வெளேரென்று இருப்பவர்; க்ருஷ்ணர் என்றால் கறுப்பர், கருப்பண்ணசாமி!

இதிலேதான் சங்கரருக்கு ஓரளவு ஒற்றுமையாக, ராமாநுஜருக்குப் பூர்வாச்ரம – துரீயாச்ரமப் பெயர்களின் அர்த்தங்கள் ஒன்றாகவே இருக்கின்றன.

ஆசார்யாள் ஒருவருக்கே இரண்டும் வார்த்தையிலும் ஒன்றாகவே இருப்பது.

ஆக, நம் குரு பரம்பரையில் ஆசார்யாள் வரை வந்தவர்களில் கோவிந்த பகவத்பாதர் ஒருவருக்குத்தான் திருத்தமாக வித்யாஸம் பண்ணிப் பூர்வாச்ரமத்தில் ஒரு பேர், ஸந்நியாஸம் வாங்கிக்கொண்ட பிறகு இன்னொரு பேர் என்று இருந்திருக்கிறது. ஆசார்யாளுக்கு அப்புறம் அவருடைய நேர் சிஷ்யர்களிலிருந்து ஆரம்பித்து ஸந்நியாஸிகளுக்கு நிச்சயமாக வேறே பேர்தான் என்றே வைக்கப்பட்டு வந்திருக்கிறது.


1 தோதாபுரி

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஸந்நியாஸ நாமம்;சங்கர நாம மஹிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கோவிந்தரின் சிறப்பு
Next