பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் ஆகிய மூன்று சிஷ்யர்களுக்கும் ஸுரேச்வராசார்யாளுக்கும் வித்யாஸங்கள் உண்டு. மற்ற மூன்று பேரும் ப்ரஹ்மசர்யத்திலிருந்து நேராக ஸந்நியாஸியானவர்கள் — ஆசார்யாள் மாதிரியே. ஸுரேச்வரர் மட்டும் க்ருஹஸ்தாச்ரமும் வஹித்து அப்புறம் ஸந்நியாஸியானவர். மற்றவர்களைப் போல இல்லாமல் இவர் ஆசார்யாளைவிட வயஸில் மூத்தவர். இன்னொரு வித்யாஸம், இவர் ஆரம்பத்தில் அத்வைத ஞான மார்க்கத்தை பலமாகக் கண்டித்த மீமாம்ஸகராக இருந்துவிட்டு, அப்புறமே ஆசார்யாளிடம் (வாதச்) சண்டை போட்டுத் தோற்றுப்போய் அவருடைய ஸித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு ஸந்நியாஸியானவர். க்ருஹஸ்தராயிருந்தபோது அவருக்கு மண்டனமிச்ரர் என்று பேர். ஸுரேச்வரர் என்பது ஸந்நியாஸ நாமா. இவர் ப்ரம்மாவின் அவதாரம்.
வைதிக கர்மாநுஷ்டானங்களில் முக்யமாயிருப்பது யஜ்ஞம். அப்படிப்பட்ட யஜ்ஞத்தைச் செய்பவர்கள் நான்கு விதமான ரித்விக்குகள். அந்த நாலு பேரில் மேற்பார்வை செய்யும் ஸுபர்வைஸருக்கு ப்ரம்மா என்றே பெயர். அதனால்தானோ என்னவோ ப்ரம்மாவின் அம்சமாகப் பிறந்தவர் பெரிய கர்ம மீமாம்ஸகராக இருந்தார்!
இதேபோல் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் அம்சமும் இன்னொரு மீமாம்ஸகராகவே அவரித்தது. குமாரஸ்வாமியிலிருந்து தோன்றிய அவருக்குக் குமாரிலர் என்றே பெயர். ப்ராம்மணராதலால் குமாரில ‘பட்டர்’. ‘பட்டர்’ என்றாலே அவர்தான் என்றாகி, அவருடைய ஸித்தாந்தத்துக்கு ‘பாட்ட ( Bhaatta) மதம்’ என்றே பேர் ஏற்பட்டது. யஜ்ஞத்தில் ப்ரதானமாயிருப்பது அக்னி. அக்னிதான் ஸுப்ரஹ்மண்யர். அதனால் அவருடைய அம்சாவதாரமும் கர்ம மீமாம்ஸையை ப்ரசாரம் செய்வதாக ஏற்பட்டது போலிருக்கிறது! இவரும் முதலிலெல்லாம் அத்வைத வேதாந்தத்தை ஆக்ஷேபித்து வந்தவர்தான். கடைசியில் ஆசார்யாளின் ஞான மார்க்கத்தை ஏற்றுக்கொண்டார். ஆனாலும் சிஷ்யராகி ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ளவில்லை. ஏன் என்று அப்புறம் கதை சொல்கிறேன். இப்போதே சொல்லிவிட்டால் ஸ்வாரஸ்யம் போய்விடும்!
ஆசார்யாள் ஞானமார்க்கம், இந்த இரண்டு பேரும் கர்ம மார்க்கம், அதனால் இவர்கள் அவரை ஆக்ஷேபித்தார்கள் என்றால், “இது என்ன? தேவர்களாயிருந்தும் இவர்கள் ஸஹாயத்துக்காக அவதரித்தார்களா? சண்டை போட அவதரித்தார்களா?” என்று கேட்கலாம்.
சண்டை போட்டது வாஸ்தவம். அதே ஸமயத்தில் அதைவிட ஸஹாயமும் செய்திருக்கிறார்கள்! மற்ற சிஷ்யர்களைவிடக்கூட இவர்கள் செய்த ஸஹாயம்தான் ஜாஸ்தி என்றே சொல்லலாம். வேடிக்கை என்னவென்றால், எந்தக் கர்ம மீமாம்ஸையினால்தான் இவர்கள் ஆசார்ய ஸித்தாந்தத்திற்கு விரோதிகளாயிருந்தார்களோ அதனாலேயேதான் பெரிய உபகாரிகளாகவுமிருந்தார்கள்! எப்படியென்றால்…
பௌத்த மதத்தைக் கண்டனம் பண்ணி அகற்றுவதற்கு ஆசார்யாள் எவ்வளவு கார்யம் செய்யத் தேவைப்பட்டிருக்குமோ அதில் பாதியை இந்த இரண்டு பேருமே மீமாம்ஸையினால் பண்ணித்தான் அவருடைய கார்யத்தைக் குறைத்துப் பெரிய ஸஹாயம் செய்துவிட்டார்கள்!