கருணாமூர்த்தியான ஈச்வரன், துர்பலர்களாகக் கஷ்டப்பட்டுக்கொண்டு தன்னிடம் முறையிட்டுக் கொண்ட தேவர்களுக்கும் அவதார காலத்தில் அவதாரத்திற்கு ஸஹாயம் செய்யும் பாக்யத்தைக் கொடுக்க நினைத்தான். அதாவது வாஸ்தவத்தில் துர்பலர்களாகிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய பலத்தைப் பெற்றே தான் அவதார கார்யத்தை ஸாதித்த மாதிரி விளையாடி, அவர்களை உசத்தி வைத்து உத்ஸாஹப்படுத்த நினைத்தான்.
த்ரிபுர ஸம்ஹார காலத்தில் ஸகல தேவர்களும் ஸ்வாமிக்கு ஸஹாயம் செய்ய எண்ணி ஒவ்வொரு உபகரணமாக வந்தார்கள். கடைசியில் அந்த உபகரணம் எதையுமே அவர் ப்ரயோஜனப்படுத்திக்கொள்ளாமல், சும்மா ஒரு சிரிப்புச் சிரித்தார். அந்தச் சிரிப்பே நெருப்பாகி த்ரிபுராஸுரர்களை பஸ்மமாக்கி விட்டது.
அப்போது அப்படி விளையாடியவர் இப்போது இப்படி விளையாட நினைத்தார்!
ஆசார்யாளின் அவதார நாடகத்தில் தேவர்களுக்கும் ஈச்வரன் இம்மாதிரி வேஷங்களைக் கொடுத்தாரென்று சில ‘சங்கர விஜயங்’களில் இருக்கிறது.
ராமர் முதலான விஷ்ணு அவதாரங்களிலும் இப்படி (தேவர்களும் உடன் அவதரித்ததாக) இருக்கிறது.
முக்யமாக, “நாலு சிஷ்யர்களோடுகூட அவதரிப்பேன்” என்று சொன்னாரல்லவா? அவர்களில் பத்மபாதர் மஹாவிஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர். ஹஸ்தாமலகர் வாயு. தோடகர் அக்னி. ஸுரேச்வராசார்யாள் ப்ரஹ்மா.
ப்ரம்மாவோடுகூட ஸரஸ்வதியும் அவதாரம் பண்ணினாள். (ஏன் என்ற விஷயத்துக்கு அப்புறம் வருகிறேன்.) இந்த அவதாரத்தில் அவளுக்கு ஸரஸவாணி என்று பெயர்.
ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் அம்சமாகக் குமாரிபட்டர் என்பவர் அவதரித்தார். இந்த அவதாரங்களில் இவர்தான் எல்லாருக்கும் முந்தி பூலோகத்துக்கு வந்தவர். ‘என்றும் இளையவர்’ எல்லாருக்கும் மூத்தவராக வந்தார்!
இந்த்ரன் ஸுதன்வா என்ற ராஜாவாகப் பிறந்தான்.
குமாரிலர், ஸுரேச்வரர் ஆகிய இரண்டு பேருக்கும் ஸ்ரீசங்கராவதாரத்தில் இருந்த ‘பார்ட்’ பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடவேண்டும். குமாரிலரோடு ஸம்பந்தப்பட்டவன் ஸுதன்வா. ஸுரேச்வரரோடு ஸம்பந்தப்பட்டவள் ஸரஸவாணி. அதனால் அவர்கள் பங்கைப் பற்றியும் இதிலேயே ஓரளவு தெரிந்துவிடும்.