ஆசார்யாளின் பாகுபாடு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

கர்மாநுஷ்டான விஷயமாகவோ ஆசார்யாள் செய்திருக்கவேண்டிய பௌத்த மத கண்டனத்தில் பெரிய பாகத்தைப் பூர்வ மீமாம்ஸகரான குமாரில பட்டர் பண்ணிவிட்டார்! ஆசார்யாளுக்குக்குக் கர்மா என்பது முதல் படிதான். அது சித்தத்தைப் பரிசுத்தி செய்வதற்கு மாத்ரமே. அப்படி பரிசுத்தியான பிறகு ஞான விசாரம் பண்ணி, ஞானத்தினால்தான் மோக்ஷமடைய முடியும் என்பது ஆசார்யாள் கட்சி. அதனால் முதல் படியிலேயே அடியெடுத்து வைக்க வொட்டாமல் புத்தமதம் தடுக்கிறதே என்ற அளவுக்குத்தான் அவர் சண்டைபோடுவது. குமாரில பட்டருக்கோ கர்மாநுஷ்டானம் முதல்படி மட்டுமல்ல. அதுதான் முழு மார்க்கமுமே! ஞானம் என்பது வேண்டவே வேண்டாம், கர்மாவினாலேயே மோக்ஷம் என்பது அவர் கட்சி. அதனால் அவருக்குத்தான் புத்தமதத்திடம் முழு அபிப்ராயபேதம் கர்மா விஷயமாக இருந்தது. பௌத்தம் வைதிக கர்மாவை ஆக்ஷேபிப்பதை அவர் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் அலசிக் கண்டனம் செய்தார். ஜைமினியின் மீமாம்ஸா ஸுத்ரங்களுக்கு சபர ஸ்வாமி என்பவர் செய்துள்ள பாஷ்யங்களுக்கு குமாரில பட்டர் எழுதியுள்ள வார்த்திகங்களில் இந்தக் கண்டனம் நிறைய வருகிறது.

ஸ்வாமி வேண்டியதில்லை என்ற பௌத்தக் கொள்கையை உதயனரும், கர்மா வேண்டியதில்லை என்ற அவர்களுடைய கொள்கையைக் குமாரிலரும் நன்றாகத் தாக்கித் தகர்த்தது போக பாக்கிதான் ஆசார்யாள் செய்ய வேண்டியிருந்தது.

உதயனர் ஆசார்யாளுக்குக் கொஞ்ச காலம் பிற்பட்டு வந்தவர். குமாரிலர் ஆசார்யாளுக்கு ஸுமார் ஐம்பது வருஷம் முந்திப் பிறந்திருக்கலாம். அவருடைய கடைசிக் காலத்தில் யுவாவாக இருந்த ஆசார்யாள் அவரை ஸந்தித்திருக்கிறார். அந்தக் கதையெல்லாம் பின்னால் சொல்கிறேன். அதாவது குமாரிலபட்டர் ஆசார்யாளின் senior contemporary.

ஈச்வரன் ஆசார்யாளாக அவதரிப்பதற்கு ஸுமார் ஐம்பது வருஷம் முந்தியே ஈச்வர குமாரனான குமாரஸ்வாமி குமாரில பட்டராக அவதரித்து அப்பாவின் கார்யத்தில் கணிசமான பங்கைத் தாமே செய்து முடித்து விட்டார்!

ஆனாலும், ரொம்ப விசித்ரமாகத் தோன்றும் — பௌத்த கண்டனத்தில் ஆசார்யாளின் கார்யத்தை வெகுவாகக் குறைத்து உபகாரம் பண்ணிய மீமாம்ஸகர்கள், நையாயிகர்கள் (ந்யாய மதஸ்தர்கள்) ஆகியவர்களைத்தான் ஆசார்யாள் நிரம்பக் கண்டித்தது! ந்யாய மதமும் பல ஆத்மாக்களைச் சொல்லுவதால் ஒரே ஆத்மாவாக நிறைந்துவிடும் அத்வைத மோக்ஷத்தைச் சொல்லவில்லை. அதனால் அதைக் கண்டிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்தக் கண்டனம் அவ்வளவு அதிகமில்லை. ஆசார்யாள் அதிகம் கண்டித்தது மீமாம்ஸையைத்தான். அதற்கடுத்தபடி அவர் நிறையக் கண்டித்தது ஸாங்க்ய மதத்தை. ப்ரம்மம் – மாயை என்று வேதாந்தம் சொல்கிற மாதிரியே அது புருஷன் – ப்ரக்ருதி என்று சொல்கிறமாதிரித் தோன்றும். ஆனாலும் அது வேதாந்த தாத்பர்யத்திற்கு விரோதமாகப் போவதே. அதே ஸமயத்தில் அதன் வேறு சில கொள்கைகள் வேதாந்தத்திற்கும் ஸம்மதமானவை. இப்படி இருப்பதாலேயே அது எபப்டி அத்வைதத்துக்கு வித்யாஸப்படுகிறதென்றும், அந்த வித்யாஸங்களிலுள்ள குறைபாடுகள் என்னவென்றும் நன்றாக இனம் பிரித்துக் காட்டி விளக்க வேண்டியிருந்தது. அதனால் ஸாங்க்யத்தையும் மீமாம்ஸைக்கு அடுத்தபடி ஆசார்யாள் நிறையக் கண்டனம் செய்தார். ஆனாலும் ஸாங்க்யம் அறிவாளிகளில் சில பேரோடு மட்டும் முடிந்துபோகும் ஒரு தத்வ சாஸ்த்ரம்தான். அது நமக்கு இங்கே விஷயமில்லை. ஜனங்களின் நித்யப்படி நடைமுறை வாழ்க்கையிலேயே கலந்து வருவதான கர்மாநுஷ்டானங்களைக் கொண்ட மீமாம்ஸைதான் ஸமூஹத்தை பாதிப்பது. அதனால் அவதாரத்தின் கார்யங்களில் அதுதான் முக்யமானது. ஒரு ஸ்டேஜ்வரை கர்மாநுஷ்டானம் இருந்தே ஆக வேண்டும். அது இல்லாவிட்டால் ஜீவனையும், ஸமூஹத்தையும் ஒழுங்குமுறையில் கொண்டுவரவே முடியாது. ஆனால் கடைசி ஸ்டேஜ் வரையிலும் அதுவேதான் என்றும் பண்ணி விடக் கூடாது. ஒரு ஸ்டேஜ் ஆன பின் அதுபோயே ஆக வேண்டும். அப்போதுதான் ஸத்ய ஸத்யமான ஆத்மாவில் சேரமுடியும். அதனால் ரொம்பவும் நுட்பமாக அலசி ஆராய்ந்து பார்த்து, எதுவரை எந்த அளவில் கர்மாநுஷ்டானங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று நிர்ணயிக்கவும் வேண்டும்; அதையே லக்ஷ்யமாக்கிவிடுவதில் என்னென்ன தப்புக்கள் என்பதையும் ஸவிஸ்தாரமாக எடுத்துச் சொல்லித் தள்ளவும் வேண்டும். நன்றாக இப்படிப் பாகுபாடு பண்ண வேண்டும். மீமாம்ஸையில் கார்யமாக அநேகம் இருப்பதை எடுத்துக்கொள்ளும்போதே ஸித்தாந்தமாக அதில் இருப்பதில் உள்ள ஏராளமான குறைபாடுகளையும் புரிய வைத்துத் தள்ளும்படிச் செய்யவேண்டும். இப்படிச் செய்தவரே நம் ஆசார்யாள். கர்மாநுஷ்டானம்தான் ஸாதாரண ஜனங்களுக்கு முடிந்தது, ஸாதகர்களுக்கும் அதுதான் ஆரம்பப் படி என்பதால் ஆசார்யாள் ச்ரௌத-ஸ்மார்த்த கர்மாக்களை ஆதரித்து ஊக்கி வளர்த்தாலும், ஞானத்தை மீமாம்ஸை அடியோடு தள்ளிவிட்டுக் கர்மாவே எல்லாமும் என்று பிடித்துக் கொண்டிருந்ததால் ஞானத்தையே மோக்ஷமார்க்கமாகக் கொண்ட ஆசார்யாள் அதையே அதிகம் கண்டனமும் செய்ய வேண்டியிருந்தது.

காலில் அடி, நடக்க முடியவில்லை என்றால் மருந்து போட்டுக் கட்டிக்கொண்டால்தான் விந்தி விந்தியாவது நடக்க முடியும். அப்படித்தான் ஜன்மாந்தர கர்மாவால் அடிபட்டு நாம் மோக்ஷமார்க்கத்தில் நடக்க முடியாதபோது கர்மாநுஷ்டானத்தால் மருந்துக் கட்டுப்போட்டுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வழியில் போக ஆரம்பிப்பது. அதற்காக, ‘கால் நன்றாக ஸரியாகிக் கட்டைப் பிரித்துப் போட்டு வேகமாக நடப்பதென்பதே கூடாது; எப்பவும் கட்டுப்போட்டுக்கொண்டேதான் விந்தி விந்திப் போக வேண்டும்’ என்றால்? கட்டிக் கட்டி வைப்பதிலேயே கட்டுப் புண் வந்து புரையோடி அடியோடு நடக்க முடியாமல்தான் போகும். ‘கட்டுப் போனபின் ஞான மார்க்கத்தினால்தானே லக்ஷ்யமான மோக்ஷத்திற்கு ஸுகமாக, வேகமாகப் போய்ச் சேரமுடியும்? இவர்கள் (மீமாம்ஸகர்கள்) இப்படி இடைஞ்சலாகப் பண்ணுகிறார்களே!’ என்பதால் ஆசார்யாள் அவர்களை நன்றாகக் கண்டனம் செய்ய வேண்டியிருந்தது.

பழம் தரவில்லையென்று குமாரஸ்வாமி அப்பாவைப்படுத்தி உருட்டி ஸந்நியாஸியாகப் போனாரல்லவா? அப்பாக்காரர் அவருக்குக் கீழ்ப்படிந்து போகும்படி ஆயிற்றல்லவா? பதிலுக்கு இப்போது அவர் ஸந்நியாஸமே கூடாது என்று வாதம் பண்ணும் மீமாம்ஸகரானபோது அப்பா அவரை நன்றாகக் கண்டனம் பண்ணி ஜயித்துக் காட்டிவிட்டார்! அவர் (குமாரஸ்வாமி) இன்னொரு ஸமயத்தில் ப்ரம்மாவை ஜெயிலில் போட்டு, அதன் தொடர்ச்சியாக அப்பாக்காரர் தன்னிடம் தலைவணங்கி உபதேசம் வாங்கிக்கொள்ளவும் பண்ணினார். இப்போது அப்பா அந்தப் ப்ரம்மாவையே அவருக்கு (குமாரிலபட்டருக்கு)ப் பக்க பலமாக மண்டனமிச்ரர் என்று அனுப்பினார். குமாரில பட்டருக்குக் கடைசிக் காலத்தில் தாமே ஞானோபதேசம் பண்ணினார்.

மண்டனமிச்ரர் எழுதியதாக மீமாம்ஸைப் புஸ்தகம் எதுவும் கிடைக்கவில்லை. ‘மீமாம்ஸாநுக்ரமணிகா’ முதலான புஸ்தகங்கள் எழுதிய மண்டனமிச்ரர் இவரில்லை என்றும், இதே பேருள்ள இன்னொருவர் என்றும் பண்டிதர்கள் அபிப்ராயபடுகிறார்கள். அவர் அத்வைத புஸ்தகமாகவும் ‘ப்ரஹ்ம ஸித்தி’ என்று ஒன்று எழுதியிருக்கிறார். ஆச்சர்யாள் கொள்கைகளுக்கு அது கொஞ்சம் வித்தியாசமாகப் போகும். நம் கதையில் வருகிற மண்டனமிச்ரர் பிற்காலத்தில் ஆச்சார்ய சிஷ்யராகி ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டபின் எழுதிய அத்வைத புஸ்தகங்கள் தான் நமக்குக் கிடைதருக்கின்றனவே தவிர அவர் பூர்வத்தில் மீமாம்ஸா விஷயமாக எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனாலும் கார்ய ரூபத்தில் அவர் நிறைய யஜ்ஞாதி அநுஷ்டானங்கள் செய்தும், மாற்று ஸித்தாந்திகளுடன் வாதச் சண்டைகள் போட்டும் அந்த மார்க்கத்தை நன்றாக வ்ருத்தி செய்து கொடுத்திருக்கிறார். ஆசார்யாள் அவரையும் ஜயித்து, அதோடு நிற்காமல் அவருக்கு ஸந்நியாஸம் கொடுத்துத் தம்முடைய ப்ரதான சிஷ்யர்களில் ஒருவராகவே ஆக்கிக்கொண்டார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கடவுட் கொள்கையை நிலைநாட்டியது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கர்ம மார்க்கக்காரர்களின் அவதாரத்திற்குக் காரணம்
Next