தாம் அவதாரம் பண்ணுவதற்கு முந்தியே குமார ஸ்வாமியையும், ப்ரம்மாவையும் கர்ம மீமாம்ஸகர்களாக அவதரிக்கும்படிப் பரமேச்வரன் அனுப்பி வைத்ததற்கு ஒரு ந்யாயம் சொல்லலாம். இப்போது அவரிடம் வந்து முறையிடுவது தேவர்கள். அவர்களுக்கு ஜனங்களின் கர்மாநுஷ்டானத்தால்தான் லாபம் — தேவர்கள் ஆஹுதி பெறுவது வைதிக கர்மாவில்தான். ஞான மார்க்கத்தில் போகிறவனுக்கு தேவர்களால் ஆகவேண்டியது எதுவுமில்லை. அவன் அவர்களை உபாஸித்து ஆஹுதி கொடுப்பது கிடையாது. அதனால் தேவர்களுக்கு ஞானியைப் பிடிக்காது, கர்மாக்காரன்தான் அவர்களுக்கு ப்ரியமானவன் என்றுகூடச் சொல்வதுண்டு! ‘தேவானாம் ப்ரியன்’ என்றாலே அஞ்ஞானி என்று அர்த்தம் ஏற்பட்டிருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளலாம்!
இப்போது அவர்கள் வந்து முறையிடுகிறபோது, ‘அவர்களுக்கு உபகாரம் செய்வதான கர்மாநுஷ்டானம் அடியோடு அடிபட்டுப் போன ஞானத்தையே சொல்வதற்குத் தாம் அவதாரம் பண்ணினால் அவர்களுக்கு எங்கேயாவது ஆறுதலாக இருக்குமா? யஜ்ஞபாகம் இல்லாமல் இவர்கள் வந்து தவித்துக்கொண்டு ப்ரார்த்திக்கும்போது, நாம் அத்வைத (ஞான) த்தைச் சொல்ல அவதரிக்கிறேனென்றால் அது கருணையாகுமா, [சிரித்து] manners ஆகுமா?’ என்று ஸ்வாமி நினைத்திருப்பார் போலிருக்கிறது! ‘நடுவிலே ரொம்ப காலம் யஜ்ஞாதிகள் குறைந்துபோனதற்கு ஈடு செய்வதாக இப்போது ஒரு நாற்பது, ஐம்பது வருஷம் இவர்களுக்கு நிறைய யஜ்ஞபாகம் கிடைக்கட்டும். அதற்காக ப்ரம்மாவும், ஸுப்ரஹ்மண்யரும் போய்க் கர்ம மீமாம்ஸையை நன்றாக விருத்தி பண்ணட்டும். அதிலேயே நம் கார்யத்துக்கும் ஸாதகமாகக் கணிசமான அளவுக்கு பௌத்த நிராகரணமும் ஏற்படட்டும். அப்புறம் நாம் போகலாம்.
‘பௌத்தர்களும் ஏதோ ஒரு வழியில் ஞானம் மாதிரியே சொல்கிறவர்களானதால் நாமும் ஞானம் என்றே ஆரம்பித்தால் எது வைதிகம், எது அவைதிகம் என்று வித்யாஸம் புரியாமல் ஜனங்கள் குழம்பிப் போவார்கள். அதனால் முதலில் இவர்கள் போய்க் கர்மாநுஷ்டானத்தால் பலமான வைதிக அஸ்திவாரம் போட்டுவிடட்டும். அப்புறம் நாம் போய், ‘இந்த அநுஷ்டானங்களிலேயே ஆரம்பியுங்கள். அதனால் பக்வமான பின் ஞானத்தில் போங்கள்!’ என்று வைதிகமான ஞான மார்க்கத்தை எடுத்துச் சொன்னால் லோகம் குழப்பமில்லாமல் புரிந்துகொண்டு முன்னேற முடியும் என்று நினைத்தே ஸ்வாமி அந்த இரண்டு பேரை முதலில் அனுப்பினாரென்று வைத்துக்கொள்ளலாம்.
அதன்படி முதலில் ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியும், ப்ரம்மாவும் தங்கள் அம்சங்களால் குமாரில பட்டராகவும், மண்டன மிச்ரராகவும் பிறந்து பௌத்தத்தை நன்றாகக் கண்டித்து, கர்ம மார்க்கத்தை வளர்த்தார்கள்.