ஆதித் தமிழகத்தின் அந்தணர்கள் ; கேரளத்தில் தமிழ் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

சோழ தேசத்திலிருந்து சோழியர்கள் எனப்படும் ப்ராம்மணர்களை அழைத்துவந்து அங்கே அமர்த்தினார். இந்தச் சோழியர்கள் ஆதிகாலத்திலிருந்தே தமிழ் நாட்டைச் சேர்ந்த, தமிழ் மக்களாகவே இருந்த, ப்ராம்மணர்கள். த்ராவிட ப்ராம்மணர்கள். த்ராவிடரும் ப்ராம்மணரும் சத்ரு ஜாதிகள் இல்லை! த்ராவிட ஜாதி என்றும் ஒன்று இல்லை. த்ராவிட தேசம்தான் உண்டு. அதில் வஸித்துவரும் ப்ராம்மணர் உள்பட எல்லாரும் த்ராவிடர்கள்தான். த்ராவிட தேசத்திலிருந்து வடதேசத்துக்குப் போய் ஸெட்டில் ஆன ப்ராம்மணர்களுக்கே இன்றைக்கும் வடக்கே ‘த்ராவிட் ‘என்ற பெயர் இருக்கிறது! இப்படி ஆதியிலிருந்தே தமிழ் ஜனங்களாக இருந்தவர்கள் தான் சோழிய ப்ராம்மணர்கள். அப்புறம் வடக்கிலிருந்தும் பல ப்ராம்மணர்கள் இங்கு வந்தார்கள். ‘வடமர்’ என்று அவர்களுக்கே பேர். (கைபர் கணவாய் வழியாக என்றைக்குமே எவருமே வரவில்லை! பாரத தேசத்துக்குள்ளேயேதான் ராஜ்யத்துக்கு ராஜ்யம் இடம் மாறுவது.) ‘வடமர்’ என்று ப்ராம்மணரில் ஒரு பிரிவை மட்டும் சொல்வதாலேயே மற்றவர்கள் என்றைக்குமே ‘தென்னவர்’களாக இருந்தவர்கள்தான் என்று ஆகிறதல்லவா?

பாரத தேசம் முழுதும் ஆதியிலிருந்து ஒரே இனம்தான். ஆர்ய த்ராவிட இன பேதம் வெள்ளைக்காரன் divide and rule-ல் (பிரித்து ஆள்வதில்) கதை கட்டிவிட்டது. அந்தக் கதையை நிஜம் என்றும், நிஜமான நம்முடைய சாஸ்த்ர, புராணங்களில் இருப்பதைக் கட்டுக் கதை என்றும் எண்ணி வருகிறோம்! இது இருக்கட்டும்.

தமிழ்நாட்டு ப்ராம்மணர்கள் ஸுகஜீவிகள். வடக்கே போகப் போகக் குளிர், வெய்யில் இரண்டும் ஜாஸ்தி. மேற்கே கர்நாடகத்துக்குப் போனால்கூட ஒரே மலைத் தொடராயிருப்பதால் சீதோஷ்ணம் கடுமைதான். தமிழ் நாடு மாதிரி மித சீதோஷ்ணம் அங்கேயெல்லாம் இல்லை. அதனால் மற்ற சீமை ஜனங்கள் கஷ்டங்களுக்கு அதிகம் பயப்பட மாட்டார்கள், ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொள்வார்கள். தமிழ்நாட்டு ப்ராம்மணர்கள் அப்படியில்லை.

நான் சொல்வது பழங்கால ஸமாசாரம். தற்போது தமிழ்நாட்டில் ப்ராம்மணனைத் தீண்டாதானாகப் பண்ணி ஒதுக்கியிருப்பதிலும், இவனுக்கும் ப்ராம்மண தர்மத்திற்கு அடியோடு வித்யாஸமாக ஒரே பேராசை பிடித்துப் போயிருப்பதிலும் எந்த ஸஹாராவானாலும், ஐஸ்லாண்டானாலும் போய் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொண்டுவிடுகிறான்!

அந்தப் பூர்வ காலத்தில் ஸுகஜீவிகளாகக் காவேரி தீரத்திலிருந்த சோழியர்கள் மலையாளத்துக்குப் போனார்களா? அங்கே ஓயா மழையும், சகதியும், குறுக்கே குறுக்கே கழியுமாக (ஓடையுமாக) இருந்தது அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. கோபக்காரர் என்று பேர் வாங்கின பரசுராமரிடம் சொல்லவும் பயம். அதனால் ரஹஸ்யமாகத் திரும்பி ஓடிவந்துவிடலாமென்று நினைத்தார்கள்.

இவர்கள் இப்படி நினைப்பார்களென்று அவருக்கும் தெரியும். அதனால் என்ன நினைத்தாரென்றால், ‘இவர்களுடைய ஆசாரங்களில் எதையாவது ஒன்றை மாற்றி விடுவோம். அப்படிச் செய்துவிட்டால் இவர்கள் தாய்ச் சீமைக்குத் திரும்பிபோனால் அங்கே இருப்பவர்களுடன் கலந்து வாழமுடியாமல் போய்விடும். வேறு வழியில்லாமல் இங்கேயே இருந்துவிடுவார்கள்’ என்று நினைத்தார். ஆகையால் அவர்கள் குடுமியைப் பின்பக்கம் முடிந்து கொள்ளாமல் தலை உச்சியில் சேர்த்து ‘ஊர்த்வசிகா’ என்பதாக முடிந்துகொள்ளும்படிப் பண்ணினார். இன்றைக்கும் நம்பூதிரிகள் அந்த வழக்கத்தைத்தான் பின்பற்றுகிறார்கள்.

ஆனால், ‘இந்த ஒரு வித்யாஸம் மட்டும் சோழ தேச ஜனஸமூஹம் தங்களை ஒதுக்கிவிடும்படிப் பண்ணிவிடாது. முக்யமான அநுஷ்டானங்களில் வித்யாஸமில்லாதபோது சிகை எப்படியிருக்கிறதென்பதைக் கொண்டு மாத்ரம் யாரும் நம்மைத் தள்ளிவிடமாட்டார்கள்’ என்று அந்த ப்ராம்மணர்கள் நினைத்தார்கள். அதனால் அவர்களில் ரொம்பப் பேர் ஊர்த்வ சிகையுடனேயே சோழ தேசத்துக்குத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் நினைத்ததுபோலவே ஜனஸமூஹமும் அவர்களை ப்ரியமாக வரவேற்று வைத்துக் கொண்டது. அந்த ப்ராம்மணர்களின் பரம்பரைக்கு உச்சிக்குடுமியே தங்கிவிட்டது. ‘சோழியன் சிண்டு சும்மா ஆடாது’ என்று அப்புறம் அதை வைத்துப் பழமொழிகூட வந்துவிட்டது!

‘இதென்னடா, இப்படியாகிவிட்டதே!’ என்று பரசுராமர் பார்த்தார். இனிமேல் தமிழ்நாட்டு ப்ராம்மணர்களிடம் போகவேண்டாமென்று, தெலுங்கு நாட்டிலும் கன்னட நாட்டிலும் உள்ள கல்வி – கேள்விகளில் வல்லவர்களான ப்ராம்மணர்களை அழைத்துக்கொண்டுபோய் மலையாளத்தில் அமர்த்தினார். தமிழ்நாட்டு ஸுகஜீவிகளைப் போல அவர்கள் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியாமல் திரும்ப ஓடிவிடமாட்டார்களென்று அவருக்கு நம்பிக்கை இருந்தாலும் முன்ஜாக்ரதையாக இன்னொன்றும் செய்தார்- ‘ப்ராம்மணனுக்கு 108 ஆசாரங்கள் இருக்கின்றன. முன்பு அதில் ஒன்றை மட்டும் மாற்றியதால்தான் நம்முடைய திட்டம் தோற்றுப் போயிற்று. இப்போது 108-ல் பேர் பாதிக்கும் மேலே, 64 ஆசாரங்களை இந்த ஆந்திர-கர்நாடக ப்ராம்மணர்கள் விஷயத்தில் மாற்றிவிடுவோம். அப்போது இவர்கள் நிச்சயமாக ஊருக்குத் திரும்பிப்போய்க் கலந்து வாழமுடியாது’ என்று தீர்மானம் செய்து அப்படியே மாற்றிக்கொடுத்துவிட்டார்.

அவர் ஆசைப்பட்டபடியே அந்த ப்ராம்மணர்கள் அங்கேயே வம்சாவளியாகத் தங்கி அத்யயனம், கர்மாநுஷ்டானம் எல்லாம் சிறப்பாகச் செய்யலானார்கள்.

அவர்களைத்தான் நம்பூதிரிகள் என்று சொல்வது.

மலையாள தேசத்தின் தோற்றுவாயைப் பற்றிக் கூறுவதாகக் ‘கேரளோத்பத்தி’ என்று புஸ்தகம் இருக்கிறது. சில புராணங்களிலும் இந்த ஸமாசாரம் வருகிறது. அவற்றிலிருந்துதான் கதை சொன்னேன்.

நம்பூதிரிகளில் சோழியர்கள் கொஞ்சம் பேரே மிச்சமிருந்தார்கள். பாக்கியெல்லாம் தெலுங்கு ப்ராம்மணர்களும், கன்னட ப்ராம்மணர்களுந்தான். தெலுங்கில் ‘இல்லு’ என்றால் வீடு. கன்னடத்தில் ‘மன’ என்றால் வீடு. தமிழில் இல்லம், மனை என்று இரண்டு வார்த்தைகளும் இருக்கின்றன. நம்பூதிரிமார்களில் சிலர் தங்களைக் குறிப்பிட்ட ஒரு ‘மனா’வைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் தாங்கள் குறிப்பிட்டதொரு ‘இல்ல’த்தைச் சேர்ந்தவர்களென்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆசார்யாளின் குடும்பத்திற்கு ‘கைப்பள்ளி மனா’ என்று பேர் என்கிறார்கள்.

‘இல்லம்’ சொல்லிக்கொள்ளும் நம்பூதிரிகள் ஆந்திர தேசத்திலிருந்து வந்தவர்களென்றும், ‘மனா’ சொல்லிக் கொள்பவர்கள் கர்நாடகத்திலிருந்து வந்தவர்களென்றும் பொதுவாகக் கொள்ளலாமென்றாம், ஆதித் தமிழ்ச் சோழியர்களின் வந்தவர்களிலும் கொஞ்சம் பேராவது நம்பூதிரிமார்களில் இருந்து, இந்த இரண்டில் ஏதோ ஒரு பிரிவில் வந்திருப்பார்களென்று நினைக்க இடமிருக்கிறது. ஆசார்யாளின் ‘மனா’வும் அப்படித் தமிழ் தேசத்திலிருந்து போனதாகவே இருக்கக்கூடும் என்று நான் பண்ணியுள்ள ‘ரிஸர்ச்’ அப்புறம் சொல்கிறேன்.

ஒரு கேள்வி வரலாம்: ‘கன்னட-தெலுங்கு ப்ராம்மணர்களே நம்பூதிரிகளில் பெரும்பாலோர்; அது தவிர ஏதோ அரபிக்கடல் தீவுகளில் ஆதிவாஸிகளின் பாஷைகளைப் பேசி வந்த செம்படவர்கள்தான் மலையாளத்தில் குடியேறியவர்கள் என்றால் அங்கே உள்ள மலையாள பாஷை எப்படிப் பாதித் தமிழ், பாதி ஸம்ஸ்க்ருதம் கலந்ததாக இருக்கிறது?’ என்று கேட்கலாம்.

மலையாள பாஷை ஆயிரம், ஆயிரத்திருநூறு வருஷம் முந்தித் தோன்றியதுதான்; அதற்கு முன்னால் அங்கே தமிழேதான் இருந்தது என்று தெரிந்தவர்களும் ‘அதெப்படி தமிழே அங்கேயிருந்திருக்க முடியும்?’ என்று கேட்கலாம்.

சொல்கிறேன்: ப்ராம்மணர்களையும் செம்படவர்களையும் மட்டும் கொண்டதாக எங்கேயாவது ஒரு ஜன ஸமூஹம் ஜீவிக்கமுடியுமா? தேசத்தைக் கட்டி ஆண்டு பாதுகாக்க ராஜா-ஸைன்யம்; வியவஸாயம், மற்றும் பலவிதமான உடலுழைப்புச் செய்பவர்கள்; வியாபாரம் நடத்துபவர்கள் — ஆகியவர்களில்லாமல் எப்படி ஸமுதாய வாழ்வு ஏற்பட முடியும்? இந்தக் கார்யங்களைச் செய்ய மலையாளத்துக்குப் போய்ச் சேர்ந்தவர்கள் யாரென்றால் தமிழ் ஜனங்கள்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அந்தப் பக்கம் மலையாள தேசமென்றால் இந்தப் பக்கம் பெரும்பாலும் தமிழ்நாடுதானே? அதோடு அந்தக் காலத்திலேயே தமிழர்கள் உன்னதமான நாகரிகம் பெற்றவர்களாகவும், வீர ஸாஹஸமுள்ளவர்களாகவும், வாணிபம் முதலியவற்றில் திறமை மிக்கவர்களாகவும் இருந்தார்கள். நான் தமிழ்நாட்டு ஸுகஜீவிகள் என்று சொன்னது [சிரித்து] ‘பருப்புத் தின்னிப் பார்ப்பானை’த்தான்! மற்றவர்கள் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளக்கூடிய நல்ல உழைப்பாளிகளாகவும், த்ருடசாலிகளாகவும் இருந்தவர்களே! அதனால் பிராமணரல்லாதாரில் தமிழர்கள் தான் மலையாள நாட்டில் குடியேறியவர்கள். பொருளாதார ரீதியில் நல்ல விலை போவதாகவும், ஏற்றுமதிகள் செய்து நன்றாகக் கொழிக்க வைப்பதாகவும் உள்ள மிளகு, ஏலக்காய், தேக்கு, கொப்பரை முதலியவை யதேஷ்டமாகக் கிடைக்கும் தேசம் மலையாளம். ‘அந்நிய பதார்த்தம்’ சாப்பிடக்கூடியவர்களுக்கு நீண்ட ஸமுத்ரக் கரையிலும், தடுக்கிவிழுந்தால் வரும் கழிகளிலும் ஸம்ருத்தியாக ‘ஜல புஷ்பம்’ (மத்ஸ்யம்) கிடைக்கும். இப்படியிருந்தால் உழைப்பாளிகளாகவும், ஸாஹஸ குணமுள்ளவர்களாகவும் உள்ள ஜனங்கள் வந்து குடியேறுவார்கள்தானே? அப்படித்தான் ஏற்பட்டது. நிறையத் தமிழ் மக்கள் கேரளத்தில் குடியேறினார்கள்.

இப்படி எல்லா ஜாதியாரும் குடியேறியபின், மலையாளத்தின் இயற்கை வளத்தினால் ஸுபிக்ஷமான வாழ்க்கை ஏற்பட்டு, அது நாகரிக ஸமுதாயமாக உருவாக ஆரம்பித்தது. வைதிக வழிகளைப் பின்பற்றிய தமிழ் மன்னர்களான சேரர்கள் அந்த ப்ரதேசத்தில் ஆட்சி நடத்தி நன்றாக நாகரிக அபிவ்ருத்தி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

பெரும்பாலான மக்கள் தமிழர்களாயிருந்தால் தமிழே அங்கேயும் பாஷையாயிற்று. ஆந்த்ர-கர்நாடக நம்பூதிரிகளும் பொதுஜனத் தொடர்பினால் தமிழே கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சரித்ரகாலம் என்று சொல்லப்படுவதற்கு முற்பட்டே இதெல்லாம் நடந்திருக்கவேண்டும். அப்போதே பொருளாதார காரணத்திற்காக மற்ற ஜாதியினர் அங்கே போனார்களென்றால் ப்ராம்மணர்களும் தெய்வ ஸம்பந்தமான காரணங்களுக்காகக் கொஞ்சம் கொஞ்சம் போயிருக்கலாம். அதென்ன தெய்வ ஸம்பந்தம் என்றால், அந்த தேசத்திலும் அநேக திவ்ய லீலைகள் நடந்து, அப்படி நடந்த இடங்கள் பெரிய க்ஷேத்ரங்களாக ஆயின. பரசுராமரே இப்படிப் பல க்ஷேத்ரங்களைத் தோற்றுவித்தார். பழைய பூப்பிரதேசம் வேண்டாமென்று தமக்காகப் பரசுராமர் ஸ்ருஷ்டித்துக் கொண்ட இந்தப் புதிய பூப்பிரதேசத்தில் தாமே குடியேற்றியவர்களைத் தவிர வேறு யாரும் பழைய தேசத்திலிருந்து வரவேண்டாமென்று அவர் தடை செய்திருந்தார். ஆனாலும் கால க்ரமத்தில் அந்தத் தடை எடுபட்டுப்போய், அதாவது, பிற்பாடு பரசுராமர் எல்லோர் கண்ணுக்கும் தென்படாமல் ஏகாந்தமாகப் போய்விட்ட பின், க்ஷேத்ராடனத்துக்காகவும் Mainland-லிருந்து சில ப்ராம்மணர்கள் அங்கே போய் அப்படியே ‘ஸெட்டில்’ ஆகவும் செய்திருக்கலாம்.

சரித்ர காலத்தின் ஆரம்ப கட்டமாக வெள்ளைக்காரர்கள் சொல்வது அசோகருடைய காலத்தை. அந்த அசோகரின் சாஸனங்களிலேயே அவர் யுத்த திக்விஜயமாக இல்லாமல் தர்ம திக்விஜயமாகத் தம்முடைய கொள்கைகளைப் பரப்பிய ப்ரதேசங்களில் கேரளமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாகரிக ஸமுதாய வாழ்க்கை அப்போதே அங்கே நிச்சயமாக இருந்ததற்கு இது அத்தாட்சி.

அது தமிழ்ச் சேர ராஜ்யமாகவும், அதன் பாஷை தமிழாகவுமே இருந்தது. சிலப்பதிகாரம் பாடினவரே அந்த தேசத்தவர்தான்! தெய்வத் தமிழ் என்றே சொல்லும்படியான நல்ல தமிழில் திருமுறையும், ப்ரபந்தமும் பாடிய சேரமான் பெருமாள் நாயனாரும், குலசேகரப் பெருமாளும் மலையாள ராஜாக்கள்தான்.

ஆகவே நம்முடைய ஆசார்யாளும் தமிழ்தான் பேசியிருப்பார். அப்போது ப்ராம்மணர்களில் படிப்பாளிகள் (எல்லா ப்ராம்மண புருஷர்களுமே அப்படித்தானிருந்திருப்பார்கள். படிக்காத, அத்யயனம் செய்யாத ப்ராம்மணன் இருந்திருக்கவே மாட்டான். அவர்கள்) தங்களுக்குள் ஸம்ஸ்க்ருதத்தில் பேசிக்கொள்வதாகவும் மற்றவர்களிடம் தமிழில் பேசுவதாகவும் இருந்திருக்கும்.

ஆசார்யாள் அவதாரம் செய்து ஸநாதன தர்மப் புனருத்தாரணம் பண்ணினாலும், அப்புறம் போகப் போக மறுபடி சீரழிவு ஏற்படத்தான் செய்தது. அந்தப் போக்கில் பரசுராமர் மாற்றிக் கொடுத்த ஆசாரங்களில் சிலதை ஸாதகமாக்கிக்கொண்டு நம்பூதிரிகளில் தலைப் பிள்ளைகளாக இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் இதர ஜாதியினரோடு கலந்து வாழுவதற்கு வழி உண்டாக்கிக் கொண்டார்கள். அப்படி உறவு ஏற்பட்டபோது நம்பூதிரிகளில் ஸ்பெஷலைஸ் செய்திருந்த ஸம்ஸ்க்ருதத்துக்கும் மற்றவர்களின் தமிழுக்கும் உறவு கெட்டிப்பட்டது. அந்த உறவிலேயே மலையாளம் என்பது தனி பாஷையாகப் பிறந்திருக்கலாம்.

ப்ராம்மணர் இதரரோடு உறவு ஏற்படுத்திக்கொண்டதில் அசாஸ்த்ரீயமாகப் பல நேர்ந்தாலும், எப்போதும் நல்லதும் கெட்டதும் கலந்தே வருவதில் இதிலும் சில நல்லது ஏற்பட்டது. ப்ராம்மண ஸம்பந்தத்தால் அங்கே ஸகல ஜாதி யாருமே நல்ல படிப்பறிவும், குறிப்பாக ஸம்ஸ்க்ருத அபிமானமும் பெற்றவர்களானார்கள். எல்லாருமே சுசி ருசியாக ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரம் உடுத்திக்கொள்வது, ஆசாரத்தோடு ஆலய தர்சனம் செய்வது ஆகிய நல்ல வழக்கங்களும் ஏற்பட்டன.

(ப்ராம்மணரல்லாதார் படிப்பறிவில்லாதவர், சுத்தமில்லாதவர் என்று மட்டம் தட்டுவதாக அர்த்தமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில்களை முன்னிட்டு — குறிப்பாக, பாட்டாளி மக்களாக இருப்பவர்கள் — ரொம்பவும் சுத்தம் பார்க்கமுடியாமலாகி, அதுவே பழகிப் போய் விடுகிறது. அவர்கள் பல வருஷங்கள் படிக்கவும் முடிவதில்லை. ஸமூஹ வாழ்க்கைக்கு அவர்கள் தங்கள் பணிகளால் நிரம்ப உபகாரம் பண்ணுவதால் அவர்களுக்கு சாஸ்திரங்களிலும் சௌச விதிகளை (சுத்த ஆசார விதிகளை) இளக்கியே கொடுத்திருக்கிறது. கட்டாய வித்யாப்யாஸமும் விதிக்கவில்லை. இப்படியிருந்தும் மலையாளத்தில் இந்த அம்சங்களில் அவர்கள் நன்றாக முன்னேறியிருக்கிறார்களென்றால் அதற்கு ப்ராம்மண இன்ஃப்ளுயென்ஸ் காரணமாயிருந்திருக்கலாம் என்றுதான் சொன்னது)

என்னதான் Mainland –ஓடு தொடர்பு கொண்டிருந்தாலும் இன்றுபோல் போக்குவரவு ஸாதனங்களில்லாத அந்தக் காலத்தில் பெரிய மலைத் தொடருக்கு மறுபக்கம் இருந்த மலையாள தேசம் ஓரளவு தனித்தேதான் இருந்தது. ஆசார்யாள் காலத்தில் இப்படித் தனித்திருந்ததால்தான் அங்கே Mainland -ல் ஏற்பட்டிருந்த குழறுபடிகளின் பாதிப்பு அதிகமில்லாமல் அது கூடியவரை வைதிகமாக இருந்து, அவதாரமும் அந்த இடத்தைத் தேர்தெடுத்தது. பிறகு மலையாள பாஷை ஏற்பட்ட அப்புறமும் — ஸமீப நூற்றாண்டுகள் வரைகூட — அப்படித்தான் (மலையாள நாடு ஒதுங்கித் தான்) இருந்தது. அதனால் தங்களுக்கென்று ஒரு பாஷை ஏற்பட ஆரம்பித்ததும் அதில் ஒரு pride -உடன் (பெருமிதத்துடன்) ஸகல ஜனங்களும் அதையே தாய்மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

மலையாளக் கதை இத்தனை சொன்னதால் இன்னம் கொஞ்சமும் சொல்லிவிடுகிறேன்.

மலையாளபாஷை பிறந்த பிற்பாடு தமிழ்நாட்டு ப்ராம்மணர்கள் சில காரணங்களுக்காக அங்கே குடியேறினார்கள். ரொம்ப உள்ளே ச்ரமப்பட்டுக்கொண்டு போகாமல், அந்த எல்லைக்குள் போய்க் கொஞ்சம் தூரத்திலேயே ‘ஸெட்டில்’ ஆனார்கள். இரண்டு வழிகள் அங்கே போவதற்கு, இரண்டு வழியாகவும் போனார்கள். ஒன்றில் கோயம்புத்தூர் வழியாகப் போய்ப் பாலக்காட்டில் குடியேறினார்கள். இன்னொன்றில் தென்காசி, செங்கோட்டை தாண்டித் திருவனந்தபுரப் பக்கங்களுக்குப் போய்த் தங்கினார்கள். இவர்கள் நம்பூதிரிகள் இல்லை. ஆதியில் குடியேற்றப்பட்ட நம்பூதிரி வம்சத்தினர் நடுவில் தமிழ் பேசியிருந்தாலும் பிறகு மலையாள பாஷைக்காரராகி விட்டார்கள். இப்போது நான் சொன்னவர்கள் மலையாளம் உண்டான பிறகே அங்கே குடியேறி, இன்றைக்கும் தமிழையே தாய் பாஷையாகக் கொண்டிருப்பவர்கள். சூழ்நிலையின் இன்ஃப்ளுயென்ஸால் அவர்களுடைய தமிழ் கொஞ்சம் வித்யாஸமாயிருக்கும். உச்சரிப்பில் மலையாள ப்ராஸம் கலந்திருக்கும்.

Mainland -க்குப் போக்குவரவுத் தொடர்பில்லாமல் அந்த தேசம் தனி மரபோடு உருவாயிற்று என்னும்போது ஒன்றை மறந்துவிடக் கூடாது. ‘தனி மரபு’ என்றதால் பாரத ஸமய கலாசாரத்துக்கு வித்யாஸமானது என்று நினைத்துவிடக்கூடாது. ‘வேத நெறி’ என்ற ஒரே நதியின் ஓட்டத்தில் சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று பல துறைகள் இருப்பதுபோல1, பாரத கலாசாரம் என்ற பொதுவான கங்கையில் ஒரு கட்டமாக இருப்பதுதான் மலையாள மரபு, இன்னும் தமிழ் மரபு, வங்காள மரபு, காஷ்மீரி மரபு எல்லாமே. பாரத கலாசாரத்தை வேராகக் கொண்டுதான் வேறு வேறு கிளைகளாக இவை — மலையாள மரபும்தான் — உருவாகியுள்ளன. Mainland -ல் இருந்த ப்ராம்மணர்களைத் தானே ஆதிக் குடிகளாக அங்கே பரசுராமர் அமர்த்தினார்? பாரத தேசத்தின் வேதம், புராணம், கோவில், குளம் ஆகியவற்றைத்தானே அங்கேயும் நாட்டினார்? அப்புறம் போனவர்களும் இங்கேயுள்ள தமிழ் ஜனங்கள் தானே? அதனால் பாரத கலாசாரத்தில் தான் அது ஒட்டிக்கொண்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால், பாக்கி பாரத தேசம் பூராவும் ஸநாதன ஸமயக் கலாசாரத்தைப் பறி கொடுத்துக் கொண்டு, புதிய வழிகளில் இழுபட்டபோதுங்கூட மலையாள தேசம்தான் மலைக்கு மறுபக்கம் அந்தக் கலாசாரத்தைக் காபந்தாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. அதனாலேயே ஆசார்யாள் அவதாரமும் அங்கேயே நிகழ்ந்தது.

பிற்காலத்தில் இதற்கு நேரெதிராக நடந்ததையும் சொல்லணும். மலையாளத்துக்குக் கிழக்கே மலைத் தொடரானதால் உள்நாட்டு மாறுதல்களும் புரட்சிகளும் அதை அவ்வளவாக பாதிக்கவில்லையென்றால், அதற்கு மேற்கே என்ன இருக்கிறது? ஸமுத்ரம், அதனால் என்னவாயிற்றென்றால் மேற்கு நாடுகளிலிருந்து இதர மதஸ்தர்கள் ஸமுத்ர மார்க்கமாக வர ஆரம்பித்த காலத்திலிருந்து அவர்கள் நம் தேசத்தில் அடியெடுத்து வைத்தது மலையாளக் கரையில்தான். ஏற்றுமதி வியாபாரத்தில் கொழிக்கும்படியாக அங்கே ஏலக்காய், மிளகு, தேக்கு, சந்தனக் கட்டை எல்லாம் அபரிமிதமாகக் கிடைத்ததால் அவர்கள் அங்கேயே தங்கிவிடுவதும் வழக்கமாயிற்று. யூதர்களிலிருந்து கிறிஸ்துவர்கள், முஸ்ஸீம்கள் எல்லோருக்கும் மலையாளம் தாய் வீடாயிற்று. அவர்களுடைய மதங்களும் அதோடுகூட அங்கேயே அதிகமாக ப்ரசாரமாயிற்று. உள்நாட்டு அவைதிக மதங்களின் பாதிப்புக்கு அதிகம் ஆளாகாத ப்ரதேசமே இப்படி வெளிநாட்டு மதங்களுக்கு நிறைய இடம் கொடுப்பதாக ஆயிற்று!

வேடிக்கையாக இன்னொரு விஷயமும் சொல்கிறேன். வெளிநாட்டு மதங்களை மலையாள நாட்டினர் ஏற்றுக் கொண்டாலும், ஹிந்து மதம் என்று வரும்போது அங்கே நம்முடைய ஆசார்யாளுக்குப் பிறகு அவருடைய ஸம்ப்ரதாயம் தவிர எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் வைஷ்ணவ மதத்தையோ மத்வ மதத்தையோ பின்பற்றுபவர்கள் கிடையாது. பத்மநாப ஸ்வாமி கோவிலானாலும் ஸரி, குருவாயூரப்பன் கோவிலானாலும் ஸரி அங்கேயெல்லாமும் ஸ்ரீவைஷ்ணவ பட்டர்கள் பூஜை பண்ணுவதில்லை என்று பார்க்கிறோமல்லவா? ஆசார்யாள் தங்கள் தேசத்தைத் தேடி வந்து அவதாரம் பண்ணினாரென்ற பக்தியபிமானம்!…

ஸமீப காலத்தில் போக்குவரத்து ஸாதனங்கள், இங்கிலீஷ் படிப்பு, ஸயன்ஸ் எல்லாம் வ்ருத்தியாக ஆரம்பித்தபின் ஒதுங்கியிருந்த மலையாள ஜனங்கள் ஒரேயடியாக வெளியே வந்து தேசம் பூராவும் பரவ ஆரம்பித்து விட்டார்கள். அங்கே ஜன ஸங்கியையும் பெருகிக்கொண்டே போனது ஒரு முக்ய காரணம். இப்போது வர வர, நம்முடைய தேசம் பூராவில் மட்டுமில்லாமல் அந்நிய தேசங்களுக்கும் அவர்களே ஏராளமாகப் போகிறார்கள். கௌரவம் பார்க்காத உழைப்பு மனப்பான்மையும் தொழில் ஸாமர்த்யமும் இருப்பதால் எடுபிடி வேலை, டீக் கடை இவற்றுக்கும் வருகிறார்கள். படிப்பும் அறிவும் இருப்பதால் பெரிய பெரிய பதவிகளுக்கும் வருகிறார்கள். ஸர்வஜ்ஞரான ஆசார்யாள் அவதரித்த ப்ரதேசத்தைச் சேர்ந்த அவர்களே அப்போதிலிருந்து இப்போதும் ‘லிடரஸி’யில் (படிப்பறிவில்) முதல் ஸ்தானம் வஹித்துவருகிறார்கள்.

புது யுகத்தில், ஒரு பக்கம் பழமையான அத்யயனாதிகளை இன்னமும் காப்பாற்றுபவர்கள் அங்கேயே இருந்தாலும், அங்கேதான் இன்னொரு பக்கம் ரொம்பப் புரட்சிகரமான மாறுதல்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆலய ப்ரவேசத்திலிருந்து கம்யூனிஸ்ட் ராஜ்யம் வரை அநேகம் அங்கேதான் அங்குரார்ப்பணமாயிருக்கிறது.


1 “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க” என்ற சேக்கிழார் வாக்கை நினைவு கூர்ந்து பேசுகிறார்களெண்பது தெளிவு.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கேரள சரிதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கும்பகோணப் பூர்வீகம்?காஞ்சிஸ்ரீமடமும் கும்பகோணமும்
Next