பாரத தேசத்தில் அப்போது பரவியிருந்த அவைதிகச் சூழ்நிலையிலுங்கூட வைதிக அநுஷ்டானங்களைக் கூடிய மட்டும் விடாமலிருந்த பிரதேசத்திலேயே, ஸத்துக்களாகவுள்ள ஒரு ப்ராம்மண தம்பதிக்குத்தான் பிள்ளையாகப் பிறப்பதென்று ஸ்வாமி ஸங்கல்பித்திருந்தார். அது மலையாள தேசம் என்றும், அதில் காலடி என்பதே அவதார ஸ்தலம் என்றும் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
அந்த உத்தம தம்பதியின் பேர் சிவகுரு, ஆர்யாம்பாள் என்பதும் சில பேருக்குத் தெரிந்திருக்கலாம்.
நீளமாக நீண்டுகொண்டு போகும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மறுபுறம், மேற்கு ஸமுத்ரத்துக்கும் மலைத் தொடர்களுக்கும் இடையில் இருப்பது மலையாள தேசம். கேரளம் என்பது அதன் ஸம்ஸ்க்ருதப் பெயர். ஒரு பக்கம் மலையும் மறுபக்கம் ஆழமும் (ஆழி என்றால் ஸமுத்ரம் தானே?) இருப்பதால் மலையாழ(ள)ம். கேரம் என்றால் தென்னை. ஒரே தென்னஞ்சோலை மயமாக அந்த ப்ரதேசம் இருப்பதால் கேரளம்.
மலைத்தொடருக்கும் ஸமுத்ரத்துக்கும் இடையில் குறுகலாக இப்படி அது உண்டானதற்கு ஒரு கதை உண்டு.
பரசுராமர் 21 தலைமுறை க்ஷத்ரிய ராஜாக்களை ஸம்ஹாரம் செய்து அவர்களுடைய ராஜ்யங்களை எடுத்துக் கொண்டாரென்று தெரிந்திருக்கலாம். லோகம் முழுக்க அவர் கைக்கு வந்துவிட்டது. அதேஸமயம் அவருக்கு விரக்தியும் பச்சாதாபமும் ஏற்பட்டது. ‘ப்ராம்மண ஜன்மா எடுத்தும் ஸாத்விகமாக ஊருக்கு நல்லது பண்ணாமல் பழி, கொலை என்று நிரம்பப் பண்ணிவிட்டோமே! நடந்தது நடந்துவிட்டது என்றிருக்கலாமானாலும் இப்போது இந்தப் பெரிய ராஜ்யத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஏற்கெனவே செய்ததற்காக ப்ராயச்சித்தம், தபஸ் பண்ணுவதைவிட்டு ராஜாவாகி ராஜ்யபாரம் வேறு வஹிப்பதா? அது கொஞ்சங்கூட ஸரியில்லை’ என்று நினைத்தார். அதனால் தம் கைக்கு வந்துவிட்ட லோகம் முழுவதையும் கச்யப மஹரிஷிக்கு தானம் செய்துவிட்டார். அவருக்கு ஏன் தானம் செய்யணுமென்றால் அவரிடமிருந்துதான் எல்லா உயிரினங்களும் பிறந்தன. மநுவின் வம்சமாக வந்த நாம் மநுஷ்யர். அந்த மனுவின் பிதா விவஸ்வான். விவஸ்வானுக்குப் பிதா கச்யபர்தான். அதனால் அவரே மனிதகுலத்தைத் தோற்றுவித்தவர். அது மட்டுமில்லை. தேவர், தைத்யர், தானவர், ராக்ஷஸர், நாகர் ஆகிய எல்லோருக்குமே அவர்தான் பிதா. ப்ரஜாபதிகள் என்று பல பேர் இருந்தாலும் ஜீவ ஸ்ருஷ்டி பெருகுவதற்கு விசேஷ உபகாரம் செய்த அவரைத்தான் கச்யப ப்ரஜாபதி என்று குறிப்பிட்டுச் சொல்வது. அதனால், ‘இந்த ஜீவ குலத்தையெல்லாம் அவரே கட்டி மேய்க்கட்டும்; அல்லது என்ன பண்ணுவாரோ பண்ணிக்கொள்ளட்டும்’ என்று அவருக்குப் பரசுராமர் பூமியை தத்தம் செய்துவிட்டார்.
உங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது, அதை நீங்கள் ஒருவருக்கு தானம் செய்து விடுகிறீர்கள் — என்றால், அப்புறமும் அந்த வீட்டில் நீங்கள் இருந்துகொண்டிருக்கமுடியுமா? அந்த மாதிரிதான் இப்போது பரசுராமர் நினைத்தார். ‘தானம் என்று இவருக்கு பூமியைக் கொடுத்த பிறகும் நாம் இங்கே வாஸம் செய்வது ஸரியில்லை. தேசத்தை விட்டு வெளியேறிப்போய், புதுசாக வாஸ யோக்யமாக ஒரு இடம் உண்டாக்கிக்கொண்டு அங்கே தபஸ் இருப்போம்’ என்று நினைத்தார். அவரால் நடக்கவேண்டியிருந்த கார்யத்தை ஞான த்ருஷ்டியில் அறிந்த கச்யபரும் அந்த ரோஷக்காரருக்கு ரோஷமூட்டி அவர் நினைத்தபடியே செய்ய வைப்போமென்று நினைத்து, “தத்தம் பண்ணிவிட்ட ஸொத்தில் பாத்தியதை கொண்டாடாதே. இந்த நிலப்பரப்பின் எல்லையைத் தாண்டிப் போய்ச் சேரு” என்று விரட்டினார்.
பரசுராமர் புறப்பட்டார். நிலப்பரப்புக்கு எல்லையாயிருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏறி ஸஹ்யம் என்ற பர்வத உச்சிக்குப் போனார். அக்காலத்தில் அந்த மலையை ஒட்டினாற்போலவே மறுபக்கம் மேற்கு ஸமுத்ரம் இருந்தது. அதாவது, மலைக்கு அந்தண்டை மலையாளதேசம் இல்லை. ஜலம் தான் இருந்தது. ஸமுத்ரராஜாவிடம் அவர், “இதுவரை பூலோகத்திலுள்ள நிலப் பரப்பில் இனிமேல் நான் வஸிப்பதற்கில்லாமலாகிவிட்டது. தேவலோகத்துக்குப் போகவும் முடியாமல் ஸப்த சிரஞ்ஜீவிகளில் ஒருவனான நான் இந்த பூலோகத்திலேயே இருந்துகொண்டு லோக க்ஷேமத்திற்காகத் தபஸ் செய்துகொண்டிருக்கும்படி ஈச்வராக்ஞை இருக்கிறது. அதனால் இப்போது நீதான் ஒரு உபகாரம் செய்யணும். என்னவென்றால் இந்த மலைக்கு அந்தப் பக்கம் கொஞ்சம் விலகிப்போய், நான் வஸிப்பதற்குக் கொஞ்சம் நிலப் பரப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ராமர் அணை கட்டுவதற்காக அலையை அடக்கிக் கொண்டவர் ஸமுத்ர ராஜா. பரசுராமருக்கும் உபகாரம் செய்ய நினைத்தார். ‘இவரோ மஹா கோபக்கார ப்ராம்மணர். அதனால் நாம் எவ்வளவு தூரம் விலகிப் போனாலே இவருக்கு த்ருப்தி உண்டாகுமோ அதற்குக் குறைவாகச் செய்தோமானால் சண்டைக்கு வருவார்’ என்றும் நினைத்தார். பரசுராமரிடம், “தங்கள் கையில் தாங்கள் தபஸிருந்து பரமேச்வரனிடமிருந்து பெற்ற பரசு (கோடரி) இருக்கிறதல்லவா? அதை ஸமுத்ரத்தில் வீசி எறியுங்கள். எவ்வளவு தூரத்துக்கு ஜலம் எழுப்பித் தெறிக்கிறதோ அவ்வளவு தூரமும் நான் பின்வாங்கிக்கொண்டு தங்களுக்கான பூமி வெளிப்படும்படி செய்கிறேன்” என்று சொன்னார்.
அப்படியே மஹாசக்தரான பரசுராமர் மலையுச்சியிலிருந்து ஸமுத்ரத்தின்மேல் பரசுவை வீச அது ஸமுத்ரத்தில் விழுந்து பல மைல் தூரத்துக்கு வடக்குத் தெற்காகவும், அதைவிடக் குறைவாகக் கிழக்கு மேற்காகவும் ஜலம் எழும்பித் தெறித்தது. அந்தப் பரப்பளவு முழுவதிலுமிருந்து ஸமுத்ரம் பின்னுக்குப் போய்விட்டது. பூமி வெளி வந்தது.
அதுதான் மலையாள தேசம்.
பரசுராம க்ஷேத்ரம் என்றே அதற்குப் பெயர் இருக்கிறது. இன்றைக்கும் அங்கேதான் பரசுராமன் என்று பெயர் வைத்துக்கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
முதலில் அங்கே செம்படவர்கள்தான் வந்து குடியேறினார்கள். அங்கங்கே தீவுகளில் அவ்யவஸ்திதமான (ஒழுங்கு முறை செய்யப்படாத) பாஷைகளைப் பேசிக்கொண்டு வாழ்ந்துவந்த செம்படவர்கள் இங்கே வந்து சேர்ந்தார்கள்.
பரசுராமர் அதை நல்ல வைதிகமான புண்யபூமியாக்க வேண்டுமென்று நினைத்தார். இத்தனாம் பெரிய நிலப்பரப்பு ஏற்பட்டுள்ளபோது தாம் ஒருத்தர் தபஸ் பண்ணிக் கொண்டிருந்தால் மாத்ரம் போதாது, ஏராளமாக ஸத்பிராமணர்களைக் குடியேற்றி வைதிகாநுஷ்டானங்கள் வளரும்படிச் செய்யணும் என்று நினைத்தார்.