மலையாளத்தில் மலபார் என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆல்வாய் ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிட்டே இருப்பது காலடி க்ராமம். திருச்சூருக்குத் தென் கிழக்கில் முப்பது மைல்.
அங்கே ஓடுகிற நதிக்கும் ஆல்வாய் என்றே பெயர். பெரியாறு என்பதும் அதுதான். ஸம்ஸ்க்ருதத்தில் பூர்ணா நதி என்றும் சூர்ணா நதி என்பதும் இரண்டு விதமாகச் சொல்வார்கள்.
அந்த க்ராமத்தில் நல்ல ஆசாரம், படிப்பு, செல்வ வசதி எல்லாம் வாய்ந்த ப்ராம்மணக் குடும்பத்தில் பிறந்தவர் சிவகுரு. வித்யாதிராஜா என்பவருடைய ஏக புத்ரர் அவர். பேருக்கு ஏற்ற மாதிரி வித்யாதிராஜர் எல்லா சாஸ்த்ரங்களும் அறிந்தவராயிருந்தார். சிவாவதாரத்தின் அப்பாப் பேர் ‘சிவகுரு’ என்று பொருத்தமாக அமைந்ததுபோலவே, ‘ஸர்வஜ்ஞ’பீடம் ஏற்போகிறவரின் தாத்தாப் பேர் ‘வித்யாதிராஜர்’ என்று இருக்கிறது! வித்யை, அநுஷ்டானம் ஆகியவற்றோடு ஸொத்து ஸ்வதந்திரங்களும் நிறையப் பெற்றிருந்த குடும்பம் அது.
பொதுவாகவே மலையாளத்தில் எவருக்கும் ஸுபிக்ஷத்திற்குக் குறைச்சலில்லை. அங்கே ஒவ்வொரு வீடும் ஒரு பெரிய தோப்பு. ‘காவு’ என்று சொல்வார்கள். சபரிமலை யாத்திரையினால் இப்போது ‘ஆரியங்காவு’ என்ற பேர் அடிக்கடி காதில் படுகிறது. இப்படி அநேகக் காவுகள். திருவானைக்கா, திருக்கோடிகா என்றெல்லாம் தமிழில் ‘கா’ என்று முடிப்பதுதான் மலையாளக் காவு. இப்படி ஒவ்வொரு வீடும் பெரிய பெரிய மரங்கள் கொண்ட காவுக்குள்ளேயே இருக்கும். அதன் எல்லையை ‘அத்ருதி’ என்பார்கள். ஒரு அத்ருதிக்குள்ளேயே அந்த வீட்டுக்கான ஸகல வஸ்துக்களும் விளைந்துவிடும். வெளியே போகவே வேண்டாம். ஒரு வேடிக்கை என்னவென்றால் மூலாதாரமான, stable food என்கிற, அரிசி வீட்டுத் தோப்பில் விளைவித்துக்கொள்வதில்லை. ஆனாலும் வீட்டிலே விளைகிற மிளகை ‘எக்ஸ்சேஞ்ஜ்’ (பண்டமாற்று) பண்ணியே அரிசி ஸுலபமாகப் பெற்றுவிடலாம். மற்றபடி அத்ருத்திக்குள்ளேயே வாழை, தென்னை, பலா முதலான மரங்கள், பூசணி, காராகருணை, மரத்தின் மேலேயே படரவிட்ட மிளகுக் கொடி, எல்லாம் இருக்கும். நாள்படக் கெட்டுப் போகாமல் நேந்திரங்காயையும் கருணைக் கிழங்கையும் வறுத்து, பூசணி வடாம் பண்ணி உரி கட்டிப்போட்டு வைத்து விட்டார்களென்றால், மூன்று நாலு மாஸம் விடாமல் மழை பெய்தாலும் சாப்பாட்டு வஸ்துக்களுக்காக வெளியில் போகவேண்டியதில்லை. ஸெளக்யமாக ஆத்தோடு ‘மானேஜ்’ செய்துகொண்டு விடுவார்கள்.
அலையாமல் திரியாமல் இப்படி வீட்டிலேயே இருந்து கொண்டிருக்கலாம் என்றால் நன்றாக அத்யயன, அநுஷ்டானங்கள் செய்து வரலாம்தானே?
இந்த மாதிரி எல்லாவித ஸெளகர்யமும் பெற்று, ஆர்யாம்பா என்ற உத்தம ஸ்தரீயைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சிவகுரு என்ற ஸத்ப்ராமணர் இருந்துவந்தார். இவர் ‘கைப்பள்ளி மனா’வைச் சேர்ந்தவரென்றும், அந்த அம்மாள் ‘மேல்பாழூர் மனா’ என்பதைச் சேர்ந்தவளென்றும் அந்தப் பக்கங்களில் சொல்கிறார்கள். எர்ணாகுளத்திலிருந்து கொல்லம் போகிற வழியில் மேல் பாழூர் மனை என்று இப்போதும் இருக்கிறது.
அந்த தம்பதி இரண்டு பேரும் ஈச்வர பக்தி நிரம்ப உடையவர்கள். நல்ல சீலத்தோடும், ஆசாரத்தோடும் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அவர்களுக்கு எல்லாமிருந்தும் பெரிய குறையாகப் புத்ர பாக்யம் மட்டும் இல்லாமலிருந்தது. இப்படியிருந்தால்தானே அவர்கள் அவதாரம் ஏற்படுவதற்குத் தேவையான இரண்டாவது பெடிஷனைக் கொடுக்கமுடியும்? அதைத் தொடர்ந்து அவதாரமும் ஏற்படமுடியும்?