ஸத்புத்ரன் பிறக்கவேண்டுமென்பதற்காக அந்த இரண்டு பேரும் திருச்சூருக்குப் போய் ஸ்வாமிக்கு ப்ரார்த்தனை செய்துகொண்டு பஜனம் இருக்கலானார்கள்.
திருச்சூர் வ்ருஷாசலம் என்று பேர்பெற்ற மஹா சிவ க்ஷேத்ரம். வ்ருஷம் என்றால் நந்திகேச்வரர். ரிஷபம் என்பதும் வ்ருஷம் என்பதும் ஒன்றேதான். வ்ருஷபாரூடரான ஸ்வாமி நந்தி ஒரு மலை ரூபத்திலிருக்கும் இங்கு மலைக்கு மேலே வீற்றுக் கொண்டிருக்கிறார். நந்தி பெரிய ரிஷப ரூபத்திலும் அந்தக் கோவிலில் இருக்கிறார். மலையாளத்திலுள்ள சிவாலயங்களில் மிகவும் முக்யமானதும் பெரியதும் திருச்சூர் ஆலயம்தான். ஊருக்கே நடுநாயகமாக அது அமைந்திருக்கிறது. பெரிய மைதானத்துக்கு மத்தியில் பிரம்மாண்டமான மதில்களோடு உள்ள கோவில். பிற்பாடு மைதானமாகிவிட்டாலும் ஆதியில் இந்த இடமும் ஒரு “காவு”வாகத்தான் இருந்திருக்கிறது. ஒரே தேக்கு மரமாக அங்கே இருந்திருக்கிறது. இப்போதும் அந்த இடத்திற்கு ‘தேக்கிங்காடு’ என்று பெயர் ஒட்டிக்கொண்டிருக்கிறது! ரிஷபமலை என்பதும் மலையென்று சருகலாக ஏறிப்போகிறமாதிரித் தெரியாது. மண்ணை வெட்டிக் கொட்டி ஸமமாகச் செய்தாற்போல அங்கே வ்ருத்தாகாரமாக (வட்டவடிவமாக) பூமி அமைந்திருக்கும்.
வடக்குன்னாதர் என்று ஜனங்கள் சொல்கிற வ்ருஷாசலேச்வரர், ‘ஸ்ரீகோவில்’ என்று மலையாளத்தில் சொல்லப்படும் ப்ரதானமான ஸந்நிதியில் இருப்பார். அந்த தேசத்தில் சதுரமாக ஸந்நிதி அமைத்து ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்குக் கூரைகளாக ஓடு வேய்ந்து கோயில் கட்டுவது ஸஹஜமாயிருந்தாலும் இந்த ஸந்நிதி வட்டமாகக் கட்டப்பட்டு, குடை போன்ற ஒரே தளக் கூரையுடன் இருக்கிறது. இந்தக் கோவிலிலேயே சங்கரநாராயணருக்கும் ராமருக்கும் ஸ்ரீகோயில்கள் இருக்கின்றன. இவற்றின் சங்கரநாராயணர் ஸந்நிதியும் வ்ருத்தாகாரமானது (வட்டமானது) . ஆனால் அது இரண்டு தளம் கொண்டது. ராமர் ஸந்நிதியோ இரட்டைத் தளத்துடன் சதுரமாக இருக்கிறது. சிவன் கோவிலில் இப்படி விஷ்ணு ஸம்பந்தமான ஸந்நிதிகள் இருப்பது கேரளத்தில் ஸஹஜமே. இது ஆசார்யாள் நிலை நாட்டிய தர்சனாத்வைதத்துக்கு — ஸமய ஸமரஸத்துக்கு — ஏற்றதாக இருக்கிறது. நாராயண ஸ்மரணத்துடனேயே கார்யங்களைச் செய்துவந்த சங்கரரின் அவதாரத்திற்காக வேண்டிக்கொண்ட கோவிலில் சங்கரநாராயணர் இருப்பதும் பொருத்தந்தானே? ஸ்வாமி ஸந்நிதிக்குப் பின்பக்கம் அம்பாள் ஸந்நிதி. ‘பார்வதி’ என்றே பெயர். அது தாரு மூர்த்தி (மரத்தாலான திருவுருவம்.)
மத ஸம்பந்தமான நாட்டிய நாடகங்கள் நடத்துவதற்கென்றே மலையாளக் கோவில்களில் ‘கூத்தம்பலம்’ என்ற மண்டபங்கள் உண்டு. திருச்சூர் கூத்தம்பலம்தான் அவற்றில் ரொம்பவும் புகழ் படைத்தது. மரவேலைப்பாடு மிக்கதாக அது இருக்கிறது.
திருச்சூர் என்றவுடன் ‘திருச்சூர் பூரம்’ என்பதாக ஏகப்பட்ட யானைகளில் அநேக தெய்வ மூர்த்தங்கள் எதிரும் புதிருமாக அணிவகுத்து நிற்கும் உத்ஸவம் நினைவுக்கு வரலாம். ஆனால் அதற்கும் திருச்சூர் வ்ருஷாசலேச்வரருக்கும் ஸம்பந்தமில்லை என்றால் ஆச்சர்யமாயிருக்கும். இந்தக் கோயிலுக்குப் பக்கத்திலேயேதான் தேக்கிங்காட்டில் அந்த உத்ஸவம் நடந்தாலும் இந்த ஸ்வாமி அதில் கலந்துகொள்வதில்லை. அண்டைப்புறக் கோவில்களிலிருந்து வரும் அம்பாள்கள் தான் பூர விழாவில் கலந்துகொள்வது. இந்தக் கோவிலுக்கு கிழக்கே பார்மேகாவு பகவதி கோவில் இருக்கிறது. வடக்கே திருவம்பாடி க்ருஷ்ணன் கோவிலிலும் ஒரு பகவதி இருக்கிறாள். இந்த இரண்டு பகவதிகள் ஆளுக்கொரு யானை கோஷ்டியுடன் பவனி வந்து நடப்பதுதான் பூர உத்ஸவம். அந்த யானைகள் வ்ருஷாசலேச்வரர் ப்ராகாரத்துக்குள் நுழைந்து ப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டுதான் வெளியிலுள்ள உத்ஸவ பூமிக்கு வரும். ஸ்வாமி உத்ஸவ மூர்த்தியாகப் போய் அதில் கலந்துகொள்வதில்லை. சிவராத்ரி உத்ஸவம்தான் அவருக்கு உண்டு. ரொம்ப விமரிசையக நடக்கும். அப்போதுங்கூட உத்ஸவ மூர்த்தி வெளியே வீதி உலா போவதென்பது கிடையாது.
இதைச் சொல்லும்போது இன்னொன்று நினைவு வருகிறது. ஸ்வாமிக்குப் பூஜை பண்ணும் அர்ச்சகர்களும் அவர்களுடைய முறைக்காலம் (‘டெர்ம்’) முடியும் வரையில் கோவிலைவிட்டு வெளியில் போகமுடியாது. ஒவ்வொரு அர்ச்சகருக்கும் ஒவ்வொரு டெர்ம் வரும். அந்தக் காலம் பூராவும் பூர்ண ப்ரஹ்மசர்ய நியமத்துடன் கோவிலுக்குள்ளேயேதான் ஈச்வர ஸ்மரணத்துடன் வஸித்துவருவார். முறை இன்னொருத்தர் கைக்கு மாறின பின்தான் அவர் வெளியிலே வருவது, வீட்டுக்குப் போவது. இம்மாதிரி ஆசார நியமம்தான் மலையாளத்துக் கோவில்களில் ஸாந்நித்யத்தை நன்றாகக் காப்பாற்றி வருகிறது.
திருச்சூர் கோவிலில் ஒரு விசேஷம் அங்கே மஹாலிங்கத்துக்கு எப்பொழுதும் சுத்தமான பசு நெய்யால் அபிஷேகம் பண்ணிக்கொண்டேயிருப்பது. இப்படி ஆயிரம் பதினாயிரம் வருஷமாகப் பண்ணிப் பண்ணி லிங்கமே தெரியாமல் ஒரே நெய்ப் பாறையாகத்தான் கர்ப்பக்ருஹத்துக்குள் தெரியும். நல்ல வெயில் காலத்திலும், கிட்டத்திலேயே நிறைய தீபங்கள் எரிந்துகொண்டிருந்தபோதிலும் நெய் உருகுவதில்லை! ஹிமலாயத்தில் சுற்றிலும் பனிப்பாறைகளுக்கு நடுவில் வாஸம் செய்யும் ஸ்வாமி இங்கே நெய்ப்பாறையில் அப்படியே புதைந்து வாஸம் பண்ணணுமென்று தீர்மானம் செய்துகொண்டிருப்பார் போலிருக்கிறது! பனி மலைக்குப் பதில் நெய் மலை. இன்னொரு ஆச்சர்யம் இத்தனை நெய் குன்றாகக் குவிந்திருந்தும் ஒரு ஈ, ஒரு எறும்பு அங்கே பார்க்க முடியாது!
மலையாள தேசத்தில் ஆயுர்வேத சிகித்ஸை நிறைய நடக்கிறதல்லவா? அதில் பலவித ரோகங்களுக்கு ‘புராதன க்ருதம்’ என்பதான பழம் நெய்யை மருந்துச் சரக்காகச் சொல்லியிருக்கிறது. திருச்சூர் கோவிலில் ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட நெய்கூடக் கிடைப்பதால் மலையாள வைத்யர்கள் அங்கே போய்தான் புராதன க்ருதம் வாங்கிக் கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட க்ஷேத்ரத்திற்குத்தான் போய் சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற தம்பதி பஜனம் இருந்தார்கள். பஜனை, பஜிப்பது என்று சொல்வதெல்லாம் பக்தி பண்ணுவது என்பதையே குறிக்கும் வார்த்தைகள். ‘பஜ்’ என்ற தாதுவிலிருந்துதான் பஜனை, பக்தி என்ற இரண்டு வார்த்தைகளும் வந்திருக்கின்றன. பஜனம் என்றால் ஸேவை செய்வது. குறிப்பாக ‘பஜனமிருப்பது’ என்று சொன்னால், குறிப்பிட்ட ஒரு உத்தேசத்தை வேண்டி ஒரு புண்ய க்ஷேத்ரத்திற்குப் போய் ஒரு மண்டலம், இரண்டு மண்டலம் அங்கே இருந்து கொண்டு ஜபம் – பாராயணம் செய்வது, ப்ரம்மசர்யம் முதலிய நியமங்களோடு தினமும் புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தர்சனம் பண்ணுவது, அநுமதிக்கப்பட்ட ஆலயங்களில் ஸந்நிதியிலேயே நித்திரை பண்ணுவது என்று அர்த்தம். உத்தேசப் பூர்த்தி பற்றி ஸ்வப்னத்திலே ஸ்வாமி ஆஜ்ஞை கிடைக்கும். நம்பிக்கையிருந்தால் ஸங்கேதமாகவாவது கிடைக்கும்.
இவர்கள் வ்ருஷாசலத்தில் புத்ரனை உத்தேசித்து பஜனமிருந்தார்கள். பக்தி ச்ரத்தையுடன் வேண்டியபடி இருந்தார்கள்.