எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாடவேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது! ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது? ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது? ராமாயணம் இருந்திருக்குமா? கீதை இருந்திருக்குமா?
எனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ? சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை! இதை நான் சொல்லிக்கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா?
எதற்காக் கொண்டாடணுமென்றால், கொண்டாட்டத்தால் அவருக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை. நமக்கேதான் ச்ரேயஸ். அவரை ஸ்மரிக்கிற புண்யம் ஏற்பட்டுச் சித்தமலம் போகும். நன்றியுணர்ச்சி என்பது மநுஷ்யனாகப் பிறந்தவனுக்கு அவச்யமோ இல்லையோ? ‘நன்றி மறவாமை’ என்பதைத்தானே பெரியவர்களெல்லாம் மநுஷ லக்ஷணத்தின் உச்சியில் சொல்கிறார்கள்? ஆகையால், நமக்கு இடைக்காலத்தில் அடைப்பட்டுப்போன மோக்ஷமார்க்கத்தை மறுபடியும் திறந்துவிட்டு, ஸநாதன தர்மத்தைப் புத்துயிரூட்டிக் கொடுத்து, சிவராத்ரி என்றும் ஸ்ரீஜயந்தி என்றும் ராமநவமி என்றும் பண்டிகைகள் கொண்டாடும் ஆனந்தத்தைக் கொடுத்தவரிடம் நன்றிக்கு அடையாளமாக அவருடைய ஜயந்தியைப் பண்டிகைகளிலெல்லாம் பெரிய பண்டிகையாகக் கொண்டாடவேண்டியது நியாயந்தானே?
தற்போது இந்த ஜயந்தியின் மஹத்வம் போதிய அளவு ஜனங்களுக்கு உணர்த்தப்பட்டிருக்கவில்லை. அதனால் தனியாக எங்கேயாவது யாராவது கொண்டாடினால் பத்துப் பேர்கூடச் சேர்வதில்லை. மடத்தில் கொண்டாடினால் கூட்டம் சேர்கிறது. மக்கள்மேல் குற்றமில்லை. முக்யத்வத்தை எடுத்துச் சொல்லி உணர்த்தாதது எங்கள் தப்புத்தான்.
ஆழ்வார்களுக்கும், ராமாநுஜர், தேசிகர், மணவாள மாமுனிகள் முதலானவர்களுக்கும் பெருமாள் கோவில்களில் பிம்பம் இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மதாபிமானமும் நிறைய இருப்பதால் அந்த பெரியவர்களுடைய அவதார தினங்களில் ஆலய பிம்பங்களுக்கு விசேஷ பூஜை, புறப்பாடு, சாத்துப்படி என்று விமர்சையாகப் பண்ணுகிறார்கள். அப்பர், ஸுந்தரர் முதலான 63 நாயன்மார்களுக்கும், உமாபதி சிவம் முதலிய சைவ சமயாசார்யர்களுக்கும் இதே போல ஈச்வரன் கோவிலில் பிம்பங்களிருப்பதால் அவர்களுக்கும் விழா நடந்துவிடுகிறது. வைஷ்ணவ ஸம்ப்ரதாயமாகவோ, சைவ ஸம்ப்ரதாயமாகவோ இல்லாமல், எல்லா ஸம்ப்ரதாயங்களுக்கும் மூலமாகவும், அவை யாவற்றையும் ஒப்புக் கொள்வதாகவும் உள்ள ஸ்மார்த்த ஸம்ப்ரதாயக்காரராக நம் ஆசார்யாள் இருப்பதால்… இரண்டு கோவில்களிலேயும் அவருக்கு பிம்பமில்லை! வைதிக பூஜை உள்ளதாகவோ, அவரால் யந்த்ர ப்ரதிஷ்டை போன்ற ஏதோ ஒன்று செய்யப்பட்டு அவருடைய விசேஷ ஸம்பந்தம் உள்ளதாகவோ இருக்கிற ஒரு சில கோவில்களில் மாத்ரந்தான் ஆசார்ய பிம்பமிருக்கிறது.