காஞ்சி மண்டலத்தின் விசேஷத் தொடர்பு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இதற்கு விலக்காக உள்ள ஒரே ஒரு இடம் காஞ்சீபுரம் தான். அந்த ஊர் மட்டுமில்லை; காஞ்சி மண்டலம் முழுதிலுமே ஆசார்யாளுக்கு பிம்பங்கள் இருக்கின்றன. காமாக்ஷி கோயிலில் தனி ஸந்நிதியுடன் பெரிய மூர்த்தி இருப்பதோடு ஏகாம்ரேச்வரர், வைகுண்டப் பெருமாள், வரதராஜா ஆகிய கோவில்களில்கூட ஆசார்ய பிம்பங்கள் இருக்கின்றன. இதில் இன்னும் விசேஷமாக வரதராஜா கோவிலில் தாயார் ஸந்நிதிக்குப் போகும் வழியிலுள்ள மண்டபத்திலுள்ள தூணில் வ்யாஸரும் அவருக்கு சிஷ்யராக ஆசார்யாளும் இருப்பதில் வ்யாஸர் ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டி ‘அத்வைதம்தான் ஸத்யம்’ என்று அடையாளம் தெரிவிக்கிறார்! பெரிய கோயில்களில் மாத்ரமில்லாமல் சிவாஸ்தானம், செவிலிமேடு என்னும் சிவலிங்க மேடு, புண்யகோடி ஆலயம், ஐராவதேச்வரர் கோவில் (இங்கேயும் வ்யாஸ சிஷ்யராக ரொம்பவும் யுவாவாக ஆசார்யாள் இருக்கிறார்) என்று பல இடங்களில் ஆசார்யாளின் பிம்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

காமாக்ஷியை ஸெளம்ய மூர்த்தியாக்கி ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை, காமகோடி பீட ப்ரதிஷ்டை ஆகியன ஆசார்யாள் செய்தாரென்று இங்கே அவரை அம்பாளுடன் ரொம்பவும் ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருப்பதற்கு ஏற்றாற்போல, இவற்றில் சில சில்பங்களில் தபஸ் காமாக்ஷி என்னென்ன ஆஸனங்களோடும் முத்ரைகளோடும் வழக்கமாக பொறிக்கப்படுவதுண்டோ அதே ஆஸனங்களோடும் முத்ரைகளோடும் ஆசார்யாளையும் பொறித்திருக்கிறது.

ஸாதாரணமாக ஆசார்யாளை அவருடைய நாலு ப்ரதான சிஷ்யர்களான பத்மபாதர் முதலானவர்களுடன் சேர்த்து நினைப்பதே வழக்காமாயிருந்தாலும் அவருடைய காஞ்சி வாஸத்தைச் சொல்லும் புஸ்தங்களில் அந்த நாலு பேருக்கு வேறேயான ஆறு சிஷ்யாளைச் சொல்லி அவர்கள் அவர் ஸ்தாபித்த ஷண்மதங்களில் ஒவ்வொன்றையும் தேசத்தில் நன்றாக ஸ்திரப்படுத்திவிட்டு, அவர் காஞ்சீபுரத்தில் தமது சரித்ரத்தின் கடைசி பாகத்தில் தம்முடைய மடத்திலிருந்த போது அவரிடம் வந்து தெரிவித்துக்கொண்டார்கள் என்று இருக்கிறது. அதற்கேற்க அவருடைய காமாக்ஷி ஆலய விக்ரஹத்தின் பீடத்தில் வழக்கமான நாலுக்குப் பதில் ஆறு சிஷ்யர்களின் உருவங்களிருக்கின்றன. ஸ்ரீமடத்துப் பூஜா க்ருஹத்திலும் அவருக்கு இரண்டு பக்கத்திலும் பக்கத்துக்கு மூன்று பேர்களாக மொத்தம் ஆறு சிஷ்யர்களின் உருவங்களைப் பார்க்கிறோம்.

காஞ்சியில் மாத்ரமின்றி மெட்றாஸ் வரை பூந்தமல்லி, பாப்பான் சத்திரம், மாங்காடு, திருவொற்றியூர் என்று பல இடங்களில் ஆசார்ய பிம்பங்களைப் பார்க்கிறோம்.

பொதுவாகக் கோவிலில் இடமே பெறாதவர் இங்கே மட்டும் இப்படி நிறையக் காணப்படுவது காஞ்சியில் அவர் முடிவாக வாஸம் பண்ணி ஸித்தியடைந்ததால் இங்கே அவருடைய நினைவு ஆழமாக நிலைத்துவிட்டதாலேயே எனலாம்.

ஆனாலும் பொது உண்மை கோவில்களில் ஆசார்யாள் பிம்பமில்லை என்பதே! அதனால்தான் ஊருக்கு ஊர், கோவிலுக்கும் கோவில் அவருக்கு ஜயந்தி உத்ஸவம் என்று இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது! எவரால்தான் இந்த தேசத்தில் ஆலய வழிபாடே புத்துயிர் பெற்றதோ அவருக்கு மூர்த்தியுமில்லை, விழாவுமில்லை. ஆனாலும் அவருடைய ஆத்மசக்தி மஹிமையால் தேசம் பூராவிலும் ‘ஆசார்யாள்’ என்றாலே சங்கராசார்யாள்தான் என்று ஜனங்கள் கொண்டாடுகிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தை உரிய அளவுக்கு வ்ருத்தி பண்ணித்தரவேண்டியது எங்களுடைய — மடத்தினுடைய — கடமையாயிருக்கிறது.1

ஆலய மூர்த்தியில்லாத ஆசார்யாளுக்கு ஸ்தூல மூர்த்தியாக இருப்பது அவர் ஸ்தாபித்த மடங்கள்தான். ராமாநுஜர் உள்பட நான் சொன்ன அந்த வைஷ்ணவ — சைவப் பெரியவர் எவருக்கும் அவரே ஸ்தாபித்ததாக மடம் கிடையாது. ஆலய மூர்த்திதான் இருக்கிறது.

அதனால் மடம்தான் ஆசார்ய ஜயந்தியை அதற்குரிய கௌரவத்தோடு கொண்டாடி ஜனங்களுக்கு பக்தியெழுச்சியை ஊட்ட வேண்டும்.


1 ஸ்ரீ சரணர்களின் திருவுளப்படி பதரிநாதத்திலிருந்து கன்யாகுமாரி வரை ஸ்ரீ காஞ்சி மடத்தின் ஆதரவில் அநேக இடங்களில் ஆச்சார்யர்களின் பிம்பமோ பாதுகையோ பிரதிஷ்டையாகி மக்களை அவரது புனித நினைவில் ஈர்த்து வருவதைக் குறிப்பிட வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is விமரிசையாக விழாக் கொண்டாடுக
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  காமாக்ஷி ஆலயத்தில் சங்கர ஜயந்தி
Next