காமாக்ஷி ஆலயத்தில் சங்கர ஜயந்தி : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மடத்தோடேயே ஸம்பந்தப்பட்டது காஞ்சி காமாக்ஷி ஆலயம். ஆசார்யாளுடைய சரித்ர ஸம்பந்தமும் விசேஷமாக உள்ள ஆலயம் அது. அதனால் அங்கே ஆசார்யாளுக்கு பிம்பம் இருக்கிறது. உயரமாகத் தனி ஸந்நிதி, சிலா விக்ரஹம், உத்ஸவ விக்ரஹம் எல்லாம் இருக்கின்றன. சிலா விக்ரஹம் பெரிய மூர்த்தியாக இருக்கிறது. அவ்வளவு பெரிசாக எந்த ஆசார்ய புருஷருக்குமே விக்ரஹம் இருப்பதாகத் தெரியவில்லை. புருஷாக்ருதி என்னும்படி, அதிலும் இந்த நோஞ்சான் காலத்துப் புருஷாச்ருதியாக இல்லாமல் ஆசார்யாள் இருந்த அந்தப் பூர்வகாலத்தின் த்ருடகாத்ரமான கம்பீர புருஷாக்ருதியில் அந்த விக்ரஹம் இருக்கிறது. அங்கே மாத்ரம் சங்கர ஜயந்தி உத்ஸவமும் நல்லமுறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜயந்தி உத்ஸவங்களைக் கொண்டாடுவதில் இரண்டு வகை உண்டு. கர்ப்போத்ஸவம் என்பது ஒன்று. ஜன்மோத்ஸவம் என்பது இன்னொன்று. ஜயந்திக்கு முன்னால் உத்ஸவம் ஆரம்பித்து ஜயந்தியன்று பத்தாம் நாள் உத்ஸவம் பூர்த்தியாகும்படிக் கொண்டாடுவது கர்ப்போத்ஸவம். பத்து மாஸ கர்ப்பத்துக்குப் பதிலாகப் பத்து நாள் உத்ஸவம். ஜயந்தியன்றே ஆரம்பித்து அப்புறம் பத்துநாள் உத்ஸவம் நடத்திப் புண்யாஹவாசன தினத்தில் முடிக்கிற மாதிரிப் பூர்த்தி செய்வது ஜன்மோத்ஸவம் எனப்படும்.

ஆசார்ய ஜயந்தியை கர்ப்போத்ஸவமாகப் பண்ணும் இடங்களில் சுக்ல பஞ்சமியான ஜயந்திக்குப் பத்து நாள் முந்தி என்றால், ‘க்ருஷ்ண பக்ஷத்தில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே, தேய்ப்பிறை அவ்வளவு ச்லாக்யமில்லையே’ என்று நாலைந்து நாள் தள்ளி அமாவாஸ்யையன்று ஆரம்பித்துப் பஞ்சமியோடு முடிக்கிறார்கள்.

காஞ்சி காமாக்ஷி கோவிலில் ஜன்மோத்ஸவமாகச் கொண்டாடுகிறார்கள். ஜயந்தியன்று ஆரம்பித்துப் பூர்ணிமையன்று பூர்த்தி செய்கிறார்கள். அந்த உத்ஸவம் தேவஸ்தானத் திட்டத்திலேயே நடத்தப்பட்டு வருவது. வேறெங்கேயும் இப்படி தேவஸ்தானக் கட்டளையாக ஆசார்யாளுக்கு உத்ஸவமில்லை; தனிப்பட்ட உபயதார்கள் செய்யும் உத்ஸவம்தான் நடக்கிறது.

மற்ற ஆசார்ய புருஷர்களுக்கும் அடியார்களுக்கும் அநேக ஆலயங்களில் நடக்கிறதுபோல நம் ஆசார்யாளுக்கு நடக்காத குறைக்குக் கொஞ்சம் ஈடு செய்வதாகக் காஞ்சீபுரத்தில் மாத்ரம் விமர்சையோடு உத்ஸவம் நடக்கிறது. ப்ரதி தினமும் பகவத்பாதாளின் உத்ஸவ விக்ரஹத்தைப் புறப்பாடு செய்து அம்பாள் ஸந்நிதியான காயத்ரி மண்டபத்துக்கு வெளிப்பக்கம் பீடம்போட்டு எழுந்தருளப் பண்ணி அவர் பண்ணிய ஸ்தோத்ரங்களுக்குள் மிகவும் உயர்ந்ததான ‘ஸெளந்தர்ய லஹரி’யிலிருந்து தினம் பத்து ஸ்லோகம் வீதம் அர்ச்சகர்கள் அர்ப்பணம் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ஒரு தீபாராதனை செய்கிறார்கள். பத்து நாளில் இப்படி ஸெளந்தர்ய லஹரியின் நூறு ஸ்லோகங்களும் ஒதப்பட்டு அம்பாளுக்கு அர்ப்பணமாகப் பாராயணம் செய்யப்படுகின்றன. கடைசி நாளில் ஒரு வித்யாஸம்: வெளி ப்ராகாரத்தில் சுக்ரவார மண்டபம் என்று இருக்கிறது. விடாயாற்றி உத்ஸவம் முதலானவற்றில் அம்பாளை அங்கேதான் எழுந்தருளச் செய்து தீபாராதனை நடத்துவார்கள். ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்ஸவத்தின் பத்தாவது தினத்தில் இந்த மண்டபத்திலேயே உத்ஸவ காமாக்ஷி, உத்ஸவ ஆசார்யாள் இரண்டு பேரையும் எழுந்தருளப் பண்ணிக் கடைசிப் பத்து ஸ்லோகம் சொல்லிப் பூர்த்தி செய்கிறார்கள். ஆசார்யாளுக்கு அம்பாள் ப்ரஸாதமாகப் பரிவட்டம் கட்டி மரியாதைகள் செய்து உத்ஸவத்தை முடிக்கிறார்கள்.

இதுபோல ஊர் உலகம் பூராவும் அவருக்கு நடக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is காஞ்சி மண்டலத்தின் விசேஷத் தொடர்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  மனத்தின் அர்ப்பணமும் மௌன மனனமும்
Next