கடபயாதியில் ஸித்தி நாள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாள் அவதார தினத்தில் இந்த ஸங்கியையின் ஸம்பந்தத்தைச் சொல்வதற்குமுன் அவர் ஸித்தியடைந்த புண்யதினம் பற்றி ‘கடபயாதி’ சொல்கிறேன்:

ஆசார்யாள் உள்பட இந்த (காஞ்சி) மடத்தில் ஸ்வாமிகளாக இருந்தவர்களுடைய ஸித்தி தினங்களை வரிசையாகத் தெரிவிப்பதாக “புண்யச்லோக மஞ்ஜரி” என்று ஒரு புஸ்தகம் இருக்கிறது. அதில் 55வது பீடாதிபதிகள் வரை ஒவ்வொருவருடைய பேர், ஊர், ஸித்தி அடைந்த இடம், ஸித்தியான காலம் முதலியவை ச்லோகங்களாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கப்புறம், ஐந்தாறு ஸ்வாமிகளுக்கு அப்புறம் வந்த ஒரு பெரியவர் அதற்குப் ‘பரிசிஷ்டம்’ என்பதான ‘ஸப்ளிமென்ட்’ (பிற்சேர்க்கை) ஒன்று எழுதி 56-லிருந்து 60 முடியவான ஐந்து ஸ்வாமிகளைப் பற்றியும் இதே போலப் புண்யச் ச்லோகங்களைக் கொடுத்திருக்கிறார்.

(மூல நூலான ‘புண்ய ச்லோக மஞ்ஜரி’யில்) ஆசார்யாளின் ஸித்தி தினத்தைச் சொல்லும் புண்ய ச்லோகம் :

மஹேசாம்சாத் ஜாத: மதுரம் உபதிஷ்டாத்வய நய:
மஹா-மோஹ-த்வாந்த ப்ரசமந ரவி: ஷண்மதகுரு: |
பலே ஸ்வஸ்மிந் ஸ்வாயுஷி சரசராப்தே (அ) பிசகலேர்
விலில்யே ரக்தாக்ஷிண்-யதிவ்ருஷ ஸிதைகாதசி-பரே ||

(இதில்) முதல் பாதி ஆசார்ய மஹிமையைச் சொல்வது. ஈச்வராம்சமாக பிறந்தது, அத்வைதத்தைத் தம் பாஷ்யத்தால் மதுரமாக்கி உபதேசித்து, ஷண்மத ஸ்தாபனம் செய்து, அஞ்ஞான இருட்டைப் போக்கி ஞான ஸூர்யனாக ப்ரகாசித்தது ஆகியவற்றைச் சொல்லியிருக்கிறது.

பின்பாதியில் தான் நம் ஸங்கியை ஸமாசாரம் வருகிறது.

ரக்தாக்ஷி வருஷத்தில் வ்ருஷ மாஸமாகிய வைகாசியில் சுக்லபக்ஷ ஏகாதசியில் ஸித்தியடைந்தாரென்று கடைசி வரியில் plain – ஆகவே சொல்லியிருக்கிறது. ரக்தாக்ஷி என்றால் அறுபது வருஷத்திற்கொரு தடவை வருமே, எந்த ரக்தாக்ஷி — என்பதைக் கலியுகத்தில் இத்தனாவது வருஷமாக இருந்த ரக்தாக்ஷி என்று மூன்றாவது வரியில் தெளிவுபடுத்தியிருக்கிறது; ஸித்தியானபோது அவருடைய வயஸு என்ன என்றும் சொல்லியிருக்கிறது. இந்த இரண்டு எண்ணிக்கைகளையுதான் கடபயாதி ஸங்க்யையில் வார்த்தைகளாகக் கொடுத்திருக்கிறது.

‘சரசராப்தே’ (saracharaabde) என்பதில் ‘ச(sa)-ர-ச(cha)-ர என்ற வார்த்தைதான் கலியில் எத்தனாம் வருஷம் என்ற எண்ணிக்கையைச் சொல்வது. ‘ச(sa)ர’ என்றால் அம்பு. ‘ச(cha)ர’ என்றால் போவது. இப்படி ஏதோ வார்த்தைமாதிரி இருந்தாலும் உண்மையில் அது கடபயாதியில் ஒரு நம்பரைத் தெரிவிப்பதே. ‘காதி நவ’ ஸூத்ரத்தின்படிக் கொஞ்சம் கணக்குப்போட்டுப் பார்க்கலாம்.

‘ச(sa) என்பது ‘யாத்யஷ்ட’வில் ய-ர-ல-வ-ச என்று ஐந்தாவதாக வருகிறது. அதாவது அது 5. ‘ர’ என்பது ய-ர என்று இரண்டாவதாக வருகிறது. அது 2. ‘ச’ (cha) ‘காதிநவ’ வில் ka – kha – ga -ங- cha என்று வந்து 6 என்ற நம்பரைக் கொடுக்கிறது. கடைசி ‘ர’வும் 2 தான். சேர்த்துப் பார்த்தால் (‘சரசர’ என்பது) 5262 என்றாகிறது. அதைத் தலைகீழாக்கணும் அல்லவா? அப்போது 2625 என்று கிடைக்கிறது. அதாவது கலி பிறந்து 2625 வருஷமாக வந்த ரக்தாக்ஷியில் வைகாசி சுத்த ஏகாதசியில் ஆசார்யாள் அவதாரத்தை முடித்தார் என்றாகிறது.

ஒரு காலத்தைத் குறிப்பிட்ட எழுத்துக்களையே எண்களாக்கி ‘சரசர’ என்பது போன்ற வார்த்தைகளாகச் சொல்வதுபோலவே மேல் நாட்டிலும் உண்டு என்று தெரிகிறது. அதை chronogram என்கிறார்கள். ‘ரோமன் ந்யூமரல்’கள் என்று சொல்லப்படும் இலக்கங்களில் I என்பது, ‘ஒன்று’ ஆகவும் ‘ஐ’ என்ற எழுத்தாகவும் இருக்கிறது; V என்பது 5 என்ற இலக்கமாகவும், ‘வி’ என்ற எழுத்தாகவும் இருக்கிறது; X என்பது 10 என்ற இலக்காகவும் ‘எக்ஸ்’ என்ற எழுத்தாகவும் இருக்கிறது. இன்னும் இப்படிப் பல இருக்கின்றன. இப்படியுள்ள எழுத்துக்களை வைத்தே வார்த்தைகளை அமைத்து எண்ணிக்கையைக் குறிப்பிடும் chronogram -களை உண்டாக்குகிறார்களென்று தெரிகிறது.

தமிழிலேகூட ‘க’ என்றால் 1, ‘உ’ என்றால் 2, ‘ரு’ என்றால் 5 என்று இருக்கிறது. ‘அவலக்ஷணமே!’ என்பதை அவ்வை இந்த ஸ்ங்கேதத்தில்தான், ‘எட்டேகால் லக்ஷணமே’ என்றாள். அ-8; வ-1/4.

ஆசார்யாள் ஸித்தியானது கலியுகத்தின் 2625-வது வருஷம் என்று பார்த்தோம். கலி கி.மு. 3102-ல் பிறந்தது. கலியில் 2625-வது வருஷம் என்றால் கி.மு. 477 ஆகும்.

அப்போது அவருக்கு என்ன வயஸு என்பதை “பலே ஸ்வஸ்மின் ஸ்வாயுஷி” என்று சொல்லியிருக்கிறது. ‘பலே’ என்பதில் வரும் ‘பல’ என்பதில் ஒரு சிலேடை இருக்கிறது. ‘ப-ல’ என்ற இரண்டு எழுத்துக்கள் இரண்டு எண்களைக் குறிப்பதாக கொள்ளும்போது, ‘தன்னுடைய ஆயுளில் அந்த எண்ணிக்கை கொண்ட வயஸில்’ என்று அர்த்தம். ‘விலில்யே’ : லயமடைந்தார், அந்த வயதில் தமது நிஜஸ்வ ரூபமான ப்ரஹ்மத்தில் லயித்துவிட்டார். என்று அர்த்தம் கொடுக்கும்.

‘பல’ என்பதற்கு இன்னொரு அர்த்தம் ‘பழம்’ என்பது. ஒரு விதை போட்டால் அதிலிருந்து முளைவிட்டு, செடியாகி, மரமாகி, கடைசியில் முடிவான பலனாக எது வருகிறதோ அதுதான் பலம் என்னும் பழம். அப்படி, தம்முடைய ஆத்மாவாகவே உள்ள முடிவான பலனில் லயித்து விட்டார் என்பது இன்னொரு அர்த்தம். “பலே ஸ்வஸ்மின்” :தன்னிலேயே பலன், தான் தானாயிருப்பதிலேயே நிறைவு! யஜ்ஞம், தானம், தபஸ், பக்தி, ஞானம், இன்னம் என்னவெல்லாம் உண்டோ அத்தனைக்கும் பலமான தம்முடைய பரமேச்வர ஸ்வரூபத்திலேயே லயமடைந்துவிட்டார் என்று அர்த்தம்.

‘பல’ (phala) என்பது எண்ணிக்கையாக இருக்கும் போது என்னவென்று பார்க்கலாம். ‘ப’ (pha) என்பது ‘பாதி பஞ்ச’ என்றதில் pa-pha என்று 2-ம் நம்பரைக் குறிக்கிறது. ‘ல’ என்பது ‘யாத்யஷ்ட’லில் ய-ர-ல என்பதாக 3-ம் நம்பராயிருக்கிறது. இரண்டையும் சேர்த்தால் 23. இதை மாற்றிப் போட்டால் 32.

தம்முடைய முப்பதிரண்டாவது வயஸில் ஜீவ யாத்ரையை முடித்து லயமாகி விட்டாரென்று தெரிந்து கொள்கிறோம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is நாமகரணச் சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவதார நன்னாள்
Next