அவதார நன்னாள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸித்தி தினத்திலிருந்து அவதார தினத்துக்குத் திரும்பலாம். கி.மு. 477-ல் ஸித்தி. அப்போது 32 வயஸு என்றால் அவதாரம் கி.மு. 477 ப்ளஸ் 32-ல். அதாவது கி.மு. 509-ல் ஆசார்யாளின் அவதாரம்.

ஸித்தி ரக்தாக்ஷி வருஷம் என்றும், அவதாரம் நந்தன வருஷம் என்றும் புஸ்தகங்களில் இருக்கிறபடியே கி.மு. 477 ஒரு ரக்தாக்ஷியாகவும், கி.மு. 509 ஒரு நந்தனவாகவும் இருக்கின்றன. தற்போது நடக்கிற 60 வருஷ ஸைகிளில் இந்த (ரக்தாக்ஷி, நந்தன) வருஷங்கள் வருவது கிறிஸ்து சகாப்தப்படி எந்தெந்த வருஷம் என்று பார்த்து அறுபது அறுபதாகப் பின்னால் தள்ளிக் கணக்குப் போட்டுப் பார்த்தீர்களானால் தெரியும்.

ஒருவர் பிறக்கும் மாஸம், பக்ஷம், திதி ஆகியவற்றைக் கடபயாதி ஸங்க்யையில் குறிப்பிட்டே அவருக்கு நாமகரணம் செய்வதாக மலையாளத்தில் ஒரு வழக்கமுண்டு.

அங்கே ராஜாக்களுக்கு அவர்களுடைய ஜன்ம நக்ஷத்ரத்தையே பேராகச் சொல்வதுண்டு என்று தெரிந்திருக்கலாம். இப்போது (1960-ல்) இருக்கும் மஹாராஜா சித்திரைத் திருநாள். அதாவது சித்ரா நக்ஷத்ரத்தில் பிறந்தவர். இவருக்கு முந்தி இருந்தவர் மூலம் திருநாள். அதற்கும் முந்தி விசாகம் திருநாள் இருந்தார். ஸ்வாதித் திருநாள் பெயர் செம்மங்குடி ஸ்ரீநிவாஸய்யரால் எல்லாருக்கும் தெரிந்தது. அவர் ஸ்வாதி நக்ஷத்ரத்தில் பிறந்தவர். திருவனந்தபுரம் மஹாராஜாவாக இருந்ததோடு ஸாஹித்ய கர்த்தாவாகவும் இருந்தார். இதெல்லாம் நக்ஷத்ரத்தை மாத்ரம் அப்படியே குறிப்பிட்டு வைத்த பெயர். இப்போது நான் சொன்னது ஸங்கேதமாக மாஸம்-பக்ஷம்-திதிகளை வைத்து நாமகரணம் செய்வது.

ஆசார்யாளுக்கு இந்த முறையில் பேர் வைக்க அப்பா, இன்னும் ஊர்ப் பெரியவர்கள் எல்லோரும் நினைத்தார்கள். அவர் பிறந்தது வைகாசி, அதாவது, இரண்டாவது மாஸம். அது சுக்லபக்ஷம், இரண்டு பக்ஷங்களில் சுக்லபக்ஷம் ஒன்று, க்ருஷ்ணபக்ஷம் இரண்டு. ஆசார்யாள் ஜனனம் ஒன்றாவது பக்ஷம். அன்றைக்கு திதி பஞ்சமி. அதாவது, ஐந்து. ஆகவே, 2-1-5. அதையே தலைகீழாக்கி 5-1-2 என்பவற்றைக் கடபயாதி முறையில் குறிப்பிடும் அக்ஷரங்களைச் சேர்த்து அவருக்குப் பெயராக வைத்துவிட வேண்டும் என்று நினைத்தார்கள். அது ‘சரசர’ என்று (2625-ஐ) சொன்ன மாதிரி தெளிவாக அர்த்தம் தராத எழுத்துத் தொகையாக இருக்கப்படாது; “பல” என்று (32-ஐயும், பலனையும் ஒருங்கே குறிப்பதாகச்) சொன்னது போல் அர்த்தமுள்ள வார்த்தையாகவும், அதாவது வாஸ்தவத்திலேயே மநுஷர்களுக்கு வைக்கும் தெய்வப் பெயராகவும் இருக்கவேண்டும் என்றும் நினைத்தார்கள்.

அப்படி ஸெலக்ட் பண்ணியதுதான் “சங்கர” என்பது.

2-ம் மாஸம், 1-ம் பக்ஷம், 5-ம் திதி என்பதைத் திருப்பி 5-1-2 என்பதற்கான எழுத்துக்களைக் கொண்டுதானே இந்தப் பெயரை வைத்ததாகச் சொன்னேன்? அதெப்படி என்று பார்க்கலாம். ‘சங்கர’ என்பதில் மெய்யெழுத்தான ‘ங்’கை நீக்கிவிடவேண்டும். இந்த ஸங்க்யையில் எப்போதும் மெய்யெழுத்துக்கு வால்யூ கிடையாது. அதைத் தள்ளிவிட வேண்டும். அப்படிச் செய்தால் ச-க-ர என்று மூன்று எழுத்துக்கள் நிற்கின்றன. ‘ச’ என்பது ‘யாத்யஷ்ட’ பிரகாரம் ய-ர-ல-வ-ச என்று 5-ஐக் குறிப்பிடுகிறது. அதுவே பஞ்சமித் திதி. ‘க’ என்பது ‘காதிநவ’ வில் முதலாவது எழுத்து. அதனால் அது 1-ஒன்றாவது பக்ஷமான சுக்லபக்ஷத்தைக் காட்டுவது. ‘ர’ என்பது ‘யாத்யஷ்ட’ ப்ரகாரம் ய – ர என்பதாக 2. அதுதான் இரண்டாவது மாஸமான வைகாசி.

பரமேச்வரன் இப்படியொரு ஸமயத்தில் போய்ப் பிறந்தாலே, தான் லோக சங்கரனாக விளங்கப் போவதற்குப் பொருத்தமாகப் பேர் வைப்பார்கள் என்று திட்டம் போட்டே அவதார தினத்தை அமைத்துக் கொண்டிருக்கிறான்!

சங்கர ஜயந்தி எல்லா ஜயந்திகளிலும் விசேஷம்தான் என்று ‘ப்ரூவ்’ பண்ணுவதுபோல, ஜயந்தியே “சங்கர” என்று அமைந்திருக்கிறது!

சங்கர ஜயந்தி; ஜயந்தியே ‘சங்கர’!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கடபயாதில் ஸித்தி நாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'சம்'மைச் செய்வது;பிரத்யக்ஷசான்று
Next