‘சம்’மைச் செய்வது; பிரத்யக்ஷச் சான்று : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பரமசிவாவதாரமானதால் சிவநாமாவான ‘சங்கர’. வைசாக-சுக்ல-பஞ்சமி அவதார தினம் என்று காட்ட ‘சங்கர’. ‘சம்’ என்ற உசந்த சாந்தத்தை உண்டாக்குவதால் ‘சங்கர’. ப்ரேமையினால் விளையும் உசந்த சாந்தம்.

மூன்றாவதாக சொன்னது எத்தனை நிஜமென்பதற்கு இப்போது நாம் கூடியிருக்கும் இந்தக் கூட்டமே ப்ரத்யக்ஷமான ஸாக்ஷி. அத்தனை பேருக்கும் எத்தனை சாந்தியாயிருக்கிறது? ப்ரேமை நிரம்பியிருக்கிறது? அவர் நேரில் இல்லை. மறைந்து போய் 2500 வருஷமாகப்போகிறது. ஆனாலும் நினைக்கும்போதே, நினைக்கும்போதெல்லாம், பரம சாந்தியைத் தரும் பரம புருஷனாக இருக்கிறார்! இதே மாதிரி ஸினிமாவிலும் கூட்டம் சேர்கிறது. ஆனால் சாந்தி உண்டா? ப்ரேமை உண்டா? இல்லை. காமத்தில் கிளறிவிட்டு அசாந்தி உண்டுபண்ணுவதாகவே இருக்கும். அரசியல் கூட்டம் என்றாலும் நிறைய ஜனங்கள் சேர்கிறார்கள். ப்ரேமை உண்டா? சாந்தி உண்டா? இல்லை. எந்தக் கட்சியை யாவது, கொள்கையையாவது திட்டி க்ரோதத்தைக் கிளறிவிடுவதாகவே இருக்கும். ஹர்த்தால், டெமான்ஸ்ட்ரேஷன் என்று ஊரின் சாந்தியையும் குலைப்பதற்குத் தூண்டுவதாகவே இருக்கும். இங்கே இத்தனை உத்ஸவப் பரபரப்பிலும் மனஸுக்குள் பரம சாந்தியாயிருக்கிறது. “சம் கரோதீதி சம்கர:” — இன்பத்தில் பெரிய இன்பமான ‘சம்’ என்னும் சாந்தியை உண்டுபண்ணுவதால் சங்கரர் என்ற பேர் — என்பதற்கு proof — ஆக இந்தக் கூட்டமே இருக்கிறது! இதைவிட பாக்யம் என்ன இருக்கிறது? பணத்திலும் பதவியிலும் இது இல்லை. அவை ஏற ஏற, இருக்கிற சாந்தியும் போய்விடும்! ஆசார்யாளை நினைத்தால் க்ஷணமானாலும் சட்டென்று ஒரு சாந்தி! நினைக்கணுமே! அதற்காகத்தான் உத்ஸவம் பண்ணுங்கள், எல்லாவற்றையும் விடப் பெரிய உத்ஸவமாகப் பண்ணுங்கள் என்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அவதார நன்னாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பக்தியும் ஹ்ருதயமும்
Next