‘த்ரவிட சிசு’ ஸமாசாரத்தைப் பார்ப்போம். ஆசார்யாளே த்ராவிட சிசுதான் – தமிழ்க் குழந்தைதான் – என்று சொன்னேனல்லவா? அவரேதான் குழந்தையாயிருந்த போது அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணி அற்புதமான கவிதாவிலாஸம் பெற்றாரென்று மலையாள தேசத்தில் சொல்கிறார்கள்.
காலடிக்கு ரொம்பக் கிட்டேயே மாணிக்க மங்கலம் என்று க்ராமம் இருக்கிறது. அங்கே அம்பாளுக்குக் காத்யாயனி என்ற பெயரில் கோவிலிருக்கிறது. ஆசார்யாளின் அப்பா தினமும் அங்கே போய்ப் பூஜை பண்ணுவாராம். பால் நைவேத்யம் பண்ணிப் புத்ரருக்கு கொண்டு வந்து கொடுப்பாராம்: “அம்பாள் ப்ரஸாதம்” என்று சொல்லிக் கொடுப்பாராம். குழந்தையாயிருந்த ஆசார்யாள், அப்பா கொண்டு போகும் பாலை அம்பாளே பானம் பண்ணிவிட்டு கொஞ்சம் நமக்காகப் பாக்கி வைத்து அனுப்புகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். ஒரு ஸமயம் அப்பா வெளியூர் போக நேர்ந்ததால் ஆசார்யாளே அங்கே போய்ப் பூஜை பண்ணி, “அம்மா, சாப்பிடு!” என்று சொல்லிப் பால் நைவேத்யம் செய்தாராம். ஒரு பெரிய அநுக்ரஹ லீலை செய்யவேண்டுமென்று உத்தேசித்திருந்த அம்பாள் பாக்கி வைக்காமல் அந்தப் பால் முழுவதையும் ஸுக்ஷ்மமாக ஸ்வீகரித்துக்கொண்டு விட்டாளாம்! அப்புறம் குழந்தை சேஷ ப்ரஸாதம் வைக்கக் காணோமே என்று வருத்தப்பட்டவுடன் தன் க்ஷீரத்தையே அநுக்ரஹித்தாளாம்.
இப்படி அங்கே ஐதிஹ்யம் இருக்கிறது.
‘ஸெளந்தர்ய லஹரி’யின் ப்ரஸித்த பாஷ்யங்களான ‘லக்ஷ்மீதரா’, ‘ஸெளபாக்ய வர்தநீ’, ‘அருணாமோதிநீ’ ஆகிய புஸ்தகங்களிலும் ‘த்ரவிட சிசு’ என்பதற்கு இப்படித் தான் வ்யாக்யானம் செய்திருக்கிறது. ‘லக்ஷ்மீதரா’வில் ‘த்ராவிட சிசு’ என்பதற்கு ‘த்ராவிட ஜாதியில் அவதாரம் பண்ணிய குழந்தையான இந்த ஸ்தோத்ர கர்த்தா’ என்று மட்டும் சொல்லி, விட்டிருக்கிறது1. மற்ற இரண்டு பாஷ்யங்களிலும் விரிவாகவே (மேலே சொன்ன) கதையைக் கொடுத்திருக்கிறது.
ஆனபடியால், ‘ஞானஸம்பந்தருக்கு அப்புறம்தான்; அதாதவது ஏழாம் நூற்றாண்டுக்கு அப்புறம்தான் ஆசார்யாள்’ என்று சொல்வதற்கில்லை.
1 “த்ரவிட- ஜாதி-சமுத்பவ: பால: எதத் ஸ்தோத்ர கர்த்தா”