“ஸுத த்ரோஹி” என்று ஏழாம் நூற்றாண்டுப் பிள்ளைக்கறிக்காரரைச் சொன்னதற்கு என்ன ஆன்ஸர்?
ஆசார்யாள் பக்தி ஸ்தோத்ரமே பண்ணியிருக்க முடியாது என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லைதான். ஆனாலும் ஆசார்யாள் பேரில் இப்போது வழங்கும் எல்லா ஸ்தோத்ரங்களுமே அவர் பண்ணியதாகத்தான் இருக்குமா என்றும் கொஞ்சம் யோசிக்கும்படியாக இருக்கிறது. ‘ஸெளந்தர்ய லஹரி’, ‘சிவாநந்த லஹரி’, ‘பஜகோவிந்தம்’, ‘ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்’, ‘கநகதாராஸ்தவம்’ போன்றதெல்லாம் அவர்தான் பண்ணியிருப்பார். ஆனாலும் ஒரு சில ஸ்தோத்ரங்களைப் பார்க்கும்போது வேறே விதமாக நினைக்கும்படி அகச்சான்று கிடைக்கிறது. (உதாரணமாக) “தேவி அபராத க்ஷமாபந ஸ்தோத்ரம்” என்று ஆசார்யாள் இயற்றியதாக ஒன்று இருக்கிறது. அதில்தான் “கெட்ட பிள்ளை பிறப்பதுண்டு; ஆனால் கெட்ட அம்மா என்று ஒருத்தி ஒரு நாளும் இருப்பதில்லை……”
குபுத்ரோ ஜாயேத் க்வசிதபி குமாசா ந பவதி
என்று வருவது. அதிலே ஸ்பஷ்டமாக “எண்பத்தைந்து வயஸுக்கு மேலே ஆகிவிட்ட எனக்கு நீ க்ருபை பண்ணாவிட்டால் நான் யாரிடம் அடைக்கலம் புகுவனேம்மா?” என்று வருகிறது1. முப்பத்திரண்டே வயஸு இருந்த ஆசார்யாள் இப்படிச் சொல்லியிருக்க முடியுமா?
1 “மயாபஞ்சாசீதோதிகமபநீதேது வயஸி…”