அதிமேதைக் குழந்தை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஆசார்யாள் குழந்தையாக வளர்ந்தார்.

குழந்தையாயிருந்தபோதே மஹாமேதையாக இருந்தார். மூன்றாவது வயஸு வரையில் அவர் தேச பாஷைகளைக் கற்றுக்கொண்டார். ஐந்தாவது வயஸு வரையில் ஸம்ஸ்க்ருத பாஷையை அப்யாஸம் செய்து தேர்ச்சி பெற்றாரென்று சொல்லியிருக்கிறது. மூன்றாவது வயஸு வரையில், ஐந்தாவது வயஸு வரையில் என்றால், அந்த வயஸுகள் முடிவதற்குள்ளேயே அந்த பாஷைகளை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டார். தேச பாஷைகள் என்பதில் முக்யமாகத் தமிழ்தான் இருந்திருக்கவேண்டும். மூன்று வயஸில்தான் ஞான ஸம்பந்தர் தமிழ் மறை என்கிற தேவாரம் பாட ஆரம்பித்தது.

இதெல்லாம் கட்டுக்கதை என்று சொல்லிவிடலாமா என்றால், கதையைவிட ஆச்சர்யமாக இப்போதும் அங்கங்கே கேள்விப் படுகிறோமே! சின்னக் குழந்தைகள் பத்து ஸ்தானம் பதினைந்து ஸ்தானம் இருக்கிற பெருக்கல் கணக்குகளை நிமிஷத்தில் போட்டுவிடுகிறதுகள்! ஸ்லேட்-கீட், பலப்பம், பென்ஸில் இல்லாமல் போட்டுவிடுகிறதுகள்! ஸ்கூல்களில் இந்தக் குழந்தைகளை வரவழைத்து டெமான்ஸ்ட்ரேஷன் காட்டுகிறார்கள். ஜன்மாந்தர வாஸனை என்று சொல்கிறோம். அதைத் தவிர என்ன காரணம் சொல்வது? ஜன்மாந்தரங்களையே வேறே சில குழந்தைகள் சொல்கிறதுகள்! முந்தின ஜன்மாவில் இன்ன ஊர், இன்னார் பந்துக்கள் என்று சொல்கிறதுகள். அழைத்துக் கொண்டு போய்க் காட்டினால் அப்படியே இருக்கிறது! Para-psychology என்று சொல்லி இதைப்பற்றி இப்போது ஸயன்ஸ் முறையிலேயே ஆராய்ச்சி பண்ணுகிறார்கள்.

அவைதிகமான ஜைன-பௌத்த மதங்களில்கூட ஜன்மாந்தர நம்பிக்கையுண்டு. புத்தரே ‘ஜாதகக் கதை’கள் என்பதாக தம்முடைய அநேகப் பூர்வ ஜன்ம வரலாறுகளைச் சொல்லியிருக்கிறார்.

ஆசார்யாளுக்கும் ஸம்பந்தருக்கும் ஜன்மாந்தரம் சொல்வது அஸம்பாவிதம். ஆனால், மநுஷர்களாகப் பூர்வ ஜன்மத்தில் அடைந்த புத்தி வளர்ச்சியே அடுத்த ஜன்மத்தில் ஒரு குழந்தையை ‘ப்ராடிஜி’ என்று ப்ரமிக்கும்படியான மேதையாகக் முடிக்கிறதென்றால், ஸர்வஜ்ஞனான ஈச்வரனின் அநுக்ரஹத்திலிருந்தே தோன்றிய அவதாரக் குழந்தைகளுக்கு ஏன் அதிசயமான மேதாவிலாஸமிருக்க முடியாது?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 26. பௌத்த-ஜைன நூல்களின் அத்தாட்சி
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பால்ய உபநயன சிறப்பு
Next