பால்ய உபநயனச் சிறப்பு : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஐந்து வயஸிலேயே ஆசார்யாளுக்கு உபநயனம் செய்து விட்டார்கள்.

ஸம்பந்தர் கதையைப் பார்க்கும்போது அவருக்கும் மூன்று வயஸில் அவர் பதிகம் பாட ஆரம்பித்து, அப்புறம் சில க்ஷேத்ரங்களுக்கு யாத்ரை பண்ணிவிட்டு வந்தவுடனேயே உபநயனம் செய்துவிட்டாதாகப் பெரிய புராணத்திலிருந்து தெரிகிறது. “உபநயனப் பருவம் எய்த” என்று சொல்லியிருப்பதால் ‘மினிமம்’ எந்த வயஸில் பூணூல் போடலாமோ அப்போதே போட்டுவிட்டார்கள் என்று த்வனிக்கிறது. ‘நித்ய உபநயனம்’ என்பதற்கு மினிமம் எட்டு வயஸு; ‘காம்ய உபநயனம்’ என்பதற்கு அஞ்சே வயஸு…

‘நித்யம், ‘ ‘காம்யம்’ என்று இரண்டு. ‘நித்ய கர்மா’ என்பதற்கு உள்ளூர ஏற்படுகிற ஆத்ம சக்திதான் பலன். வேறு அதனால் எந்த இஷ்ட லாபமும் அடையமுடியாது… உண்மையே சொல்வதால் லாபம் உண்டா? பொய் சொன்னால்தான் கொழுத்த லாபம் ஸம்பாதிக்க முடியுமென்றுதான் பார்க்கிறோம்! ஆனபோதிலும் உண்மை தானே நாம் சொல்லவேண்டியது என்று விதி இருக்கிறது? ஏன் அப்படி இருக்கிறது? பொய் சொல்வதால் பாபம் உண்டாவதால்தான்; அதாவது ஆத்மா அசுத்தியடைவதால்தான். நித்ய கர்மாவும் இப்படித்தான். செய்யாவிட்டால் பாபம். செய்தால், நமக்குத் தெரியாமலே ஆத்மா சுத்தி ஆவது தவிர, தெரியும்படியாக தன லாபம், புத்ர லாபம் என்று எதுவும் காட்ட முடியாது. காம்ய கர்மா என்பது நம்முடைய ஏதோ ஒரு இஷ்ட லாபத்தை உத்தேசித்தே பண்ணுவது. பிள்ளை பிறப்பதற்காக தசரதர் புத்ர காமேஷ்டி பண்ணியது காம்ய கர்மா. ப்ரமோஷன் கிடைக்க வேண்டுமென்று நவக்ரஹத்தைச் சுற்றுவது காம்ய கர்மா. இவற்றைப் பண்ணித்தான் ஆகவேண்டுமென்றில்லை. நித்ய கர்மா பண்ணியே ஆகணும். பண்ணாவிட்டால் பாபம்.

‘நித்ய உபநயனம்’ எட்டு வயஸுக்குப் பண்ண வேண்டும். கர்ப்பத்தைக் கூட்டி எட்டு வயஸு. அதாவது, பிறந்து ஏழு வயஸும் இரண்டு மாஸமும் ஆனவுடன். இது ‘மினிமம்’. ‘மாக்ஸிம’மும் இதுவேதான் என்று சொல்லும் படியாகவே சாஸ்த்ராபிப்ராயம் இருக்கிறது. ஆனாலும், தவிர்க்க முடியாமல் ஏதாவது இடைஞ்சல் ஏற்பட்டால் என்ன பண்ணுவது என்று நினைத்து, போனால் போகிறதென்று இன்னொரு எட்டு வருஷம் கொடுத்துப் பதினாறு வயஸுவரை (பூணூல்) போடலாமென்று சொல்லியிருக்கிறது1. அதற்கு மேல் போகவே படாது. போகவிட்டால் பாபம். ‘நித்யம்’ என்பதைப் பண்ணாவிட்டால் பாபம் என்று பார்த்தோமல்லவா? அப்படி, பதினாறு வயஸுக்குக்கூட ஒரு தகப்பனார்க்காரன் பிள்ளைக்குப் பூணூல் போடாவிட்டால் பாபம். ஒரு காரணமும, நியாயமும் இல்லாமல் தற்போது பெரும்பாலான தகப்பனார்க்காரர்கள் இந்தப் பாபத்தைத்தான் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்!

‘பாயின்ட்’ என்னவென்றால் ஒரு ப்ராம்மணப் பையனுக்குள் காமம் ப்ரவேசிப்பதற்கு முந்தி காயத்ரி ப்ரவேசித்து அவன் தினமும் ஸஹஸ்ராவ்ருத்தி (ஆயிரம் ஆவிருத்தி) அளவுக்கு ஜபித்து மந்த்ர ஸித்தி அடைந்தால்தான் அவன் தனக்கும் சித்த பரிசுத்தி பெறமுடியும்; லோகத்துக்கும் க்ஷேமகரமான ‘வைப்ரேஷன்’களை ‘ரேடியேட்’ செய்யமுடியும் (ஆன்மிய அதிர்வலைகளைப் பரப்பமுடியும்.) இப்படித்தான் தன் புத்ரனுக்கு ஏற்படக்கூடிய ஆத்மக்ஷேமம், அவனால் வெளியில் ஏற்படக்கூடிய லோக க்ஷேமம் இரண்டும் ஏற்படவொட்டாமல் ஒரு பிதா பண்ணுவது பாவமா, இல்லையா?

எட்டு வயஸுதான் ‘முக்ய’காலம் என்பது. ‘முக்யம்’ என்றால் கரெக்டாக விதிப்படி இருப்பது. போனால் போகிறதென்று, ஸெகண்டரியாக விட்டுக்கொடுத்து சாஸ்த்ரங்களிலேயே சொல்லியிருப்பது ‘கௌணம்’. எட்டுக்கு மேல் பதினாறு வரை உபநயனத்திற்கு கௌண காலமாகும். அதுவும் தாண்டிவிட்டால் ஒருவன் ‘வ்ராத்ய’னாகிவிடுவான் என்று மநு ஸ்ம்ருதி முதலானவற்றிலிருக்கிறது. வ்ராத்யன் என்றால் ஜாதிப்ரஷ்டன்.

கவர்மெண்ட் ஸர்வீஸுக்கு இருபத்தைந்து வயஸு ஏஜ் லிமிட் என்றால் பொய் ஸர்ட்டிஃபிகேட், அது, இது கொடுத்தாவது முயற்சி பண்ணத் தோன்றுகிறதோ இல்லையோ? சாஸ்த்ரத்தில் ஏஜ் லிமிட் சொல்லும்போது மட்டும் இஷ்டப்படிப் பண்ணலாம் என்றால் என்ன அர்த்தம்?

யாராவது ஒருத்தர் இரண்டு பேருக்காவது ‘உறைக்காதா’, சுரணை பிறக்காதா என்றுதான் ஓயாமல் சொல்லிப் பார்க்கிறேன்.

இக்காலத்தில் இப்படி இந்த விஷயத்தில் ஒரே அலக்ஷ்யமாயிருக்கிறோமென்றால், பூர்வ காலத்திலோ ரொம்ப புத்தி தீக்ஷண்யமுள்ள குழந்தைகளைப் பெற்றவர்கள் அது நாலு, அஞ்சு வயஸிலிருந்தே சொல்லிக்கொடுப்பதையெல்லாம் நன்றாகப் பிடித்துக் கொள்வதைப் பார்க்கிறபோது, “எட்டு வயஸு வரையிலா பூணூல் போடாமல் வைத்திருப்பது?” என்று நினைத்திருக்கிறார்கள்! இதை உத்தேசித்தே ‘காம்ய’ உபநயனம் என்றும் ஒன்றை சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. அதற்கு மினிமம் ஐந்து வயஸு என்று குறைத்துக் கொடுத்திருக்கிறது.

பொதுவாக, ஸ்வதர்மக் கடமையாக சாஸ்த்ரங்கள் விதித்துள்ள ‘நித்ய’ கர்மாவைவிட நம்முடைய ஸொந்த இஷ்டத்திற்காகச் செய்யும் ‘காம்ய’ கர்மா மட்டந்தான் என்பார்கள். ஆனாலும் உபநயன விஷயத்தில் மட்டும் ‘காம்யம்’ என்னும்போது அந்தக் காமனை எதை உத்தேசித்து? “ப்ரஹ்ம வர்சஸகாமஸ்ய பஞ்சமே” என்று ஸ்ம்ருதிகளில் சொல்லியிருக்கும்படி, குமாரன் ப்ரஹ்ம தேஜஸை ஸம்பாதித்துக்கொண்டு தன்னையும் சுத்தி செய்து கொண்டு, ஊருக்கும் சுத்தி ஏற்படும்படிச் செய்யவேண்டுமென்பதுதானே. உத்தேசம்? இதை எப்படி மற்ற லௌகிகமான ஸொந்த ஆசைகளோடு சேர்க்கமுடியும்?

இயற்கையாக புத்தி தீக்ஷ்ண்யம் உள்ள குழந்தையாயிருந்தால் காயத்ரீ தேவதை உள்ளே போய் அது மழுங்காதபடி வ்ருத்தி பண்ணிக்கொடுப்பாள். அதோடு, புத்தி, சக்தி அதர்மமாகப் போகாமல் தார்மிகமாகவும், ஆத்ம ச்ரேயஸ்கரமாகவுமே போகும்படியும் செய்வாள். மந்தமான, average-ஆன (நடுத்தரமான) குழந்தைகளானாலும் காயத்ரி மந்த்ர ஆவ்ருத்தியே அதுகளின் புத்தியையும் கூர் பண்ணி, ப்ரகாசமுடையதாக்கி, நல்ல வழிகளிலேயே போகும்படிப் பண்ணும். இப்படி எந்த லெவலில் இருப்பவருக்கும் உபகாரம் பண்ணுவதாக அந்த மந்த்ரம் இருக்கிறது.

ஆசார்யாள், ஸம்பந்தர் ஆகியவர்கள் தெய்வ சக்தி வாய்ந்த அவதாரங்கள். ஆனாலும் அப்படி வெளியில் காட்டிக்கொண்டிருக்கவில்லை – ஸதா காலமும் காட்டிக் கொண்டிருக்கவில்லை. அவச்யங்களில் மட்டும் கொஞ்சம் காட்டினார்கள். ‘லீலா மாநுஷ வேஷம்’ என்று லோகத்தில் நாடகம் நடிக்கும்போது அப்படித்தான் ஒளித்து ஒளித்துக் காட்டுவது! அவர்கள் வழிகாட்ட வந்தது ஸாமான்ய மநுஷ்ய ஜீவர்களுக்கு. அதனால் மநுஷ்ய சக்தியையே ஸரியாக, முறையாக ப்ரயோஜனம் செய்துகொண்டால் என்னவெல்லாம் ஸாதிக்க முடியும் என்று ஜனங்களுக்குக் காட்டி அவர்களுக்கும் அப்படி செய்ய உத்ஸாஹம் தரும் வகையிலேயே தங்களுடைய வாழ்க்கையை மாநுஷமாக அமைத்துக்கொண்டார்கள்.

அதோடுகூட ஸ்வாமி ஜனங்கள் தன்னோடு கலந்து பழக வேண்டுமென்றும் ஆசைப்பட்டே அவதாரம் பண்ணுவது. ஒரே தெய்வ சக்தி மயமாயிருந்தால் மற்றவர்கள் கலந்து பழக வருவார்களா? தூரத்தில் நின்று கொண்டுதான் கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். ஆசார்யாள் பரமசிவனாகவே தெரிந்துகொண்டிருந்தால் அப்பா அம்மா எப்படி அவரை வாத்ஸல்யம் காட்டி வளர்ந்திருக்க முடியும்?

எல்லா அவதாரங்களிலும் இப்படித்தான் நிறைய மநுஷரீதி போலவே பண்ணுவது. அத்யாவச்யத்திற்கு மட்டும் தெய்வ சக்தியைக் காட்டுவது, அதையும் தங்களுடன் வாழ்கிறவர்களின் நினைவிலிருந்து மறைந்து போகும்படிப் பண்ணுவது, என்று.

ஆனாலும் லோகம் பாழாய்ப் போய்க் கொண்டிருந்த போது மநுஷ ரீதியில் நிதானமாக அதைப் ஸரிப் பண்ண ஆசார்யாள், ஸம்பந்தர் ஆகியவர்களுடைய அருள் மனஸு அவர்களை விடவில்லை. தேசம் பூராவையும் முப்பத்திரண்டே வருஷத்தில் புனருத்தாரணம் பண்ணிவிட வேண்டுமென்று ஆசார்யாள் பறந்தார்; தமிழ்நாட்டை மட்டும் உத்தரிக்கப் பதினாறு வருஷத்திற்க்கு மேல் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஸம்பந்தர் பறந்தார். அதனால்தான் மநுஷ்யக் குழந்தைகளுக்கு ஸாதாரணமாக இல்லாத மேதையைக் காட்டிக் குழந்தைப் பிராயத்திலேயே அவர்கள் ஸம்பூர்த்தியாக வித்யாப்யாஸம் செய்தது.

ஸொந்த சக்தியால் செய்ததாக இல்லாமல் அருள் சக்தியால் செய்ததாக இருக்கட்டும் என்று ஸம்பந்தர் அம்பாளின் க்ஷீரத்தைப் பானம் பண்ணிய மஹிமையாலேயே ஞானியாக, பாண்டியத்யமுள்ளவராக ஆனார். ஆசார்யாளைப் பற்றியும் இப்படி கதை இருப்பதாக முன்னேயே சொன்னேன். அல்லத, ‘ப்ராடிஜி’ என்று மநுஷக் குழந்தைகளிலேயே எங்கேயாவது அபூர்வமாக இருக்கிறது போலத்தான் அவரும் தெரிந்தார்; அதாவது தெய்வாவதாரந்தான் என்று பெற்றவர்களும் மற்றவர்களும் தெரிந்துகொண்டு தூர நின்று பக்தி பண்ணாமல், அதி புத்திசாலியான மநுஷக் குழந்தை என்றே சீராட்டி ப்ரியம் காட்டும்படியாக இருந்தார்.

தேச பாஷை, ஸம்ஸ்க்ருதம் ஆகியவற்றின் மொழி இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றை அஞ்சு வயஸுக்குள் கரைத்துக் குடித்துவிட்ட ஆசார்யாள் அந்த வயஸில் உபநயனமானவுடன் குருகுலத்துக்குப் போய் வாஸம் பண்ணி எட்டு வயஸுக்குள் அத்யயனம் முடித்து மற்ற எல்லா சாஸ்த்ரஙகளையும் படித்துக் கரை கண்டுவிட்டார்.

ஐந்து வயதில் உபநயனம், எட்டு வயஸுக்குள் சாஸ்த்ரங்கள் எல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணியாயிற்று, அந்த வயஸிலேயே ஸந்நியாஸமும் வாங்கிக்கொண்டாயிற்று, பன்னிரண்டு வயஸில் அத்தனை பாஷ்யமும் எழுதியாச்சு – என்றிப்படி ஆச்சர்யமாக ஆசார்யாள் செய்திருக்கிறார்.

இன்னமும் முந்திக்கூட வித்யாப்யாஸம் முடித்திருப்பார்! ஆனால் பூணூல் போடாமல் வேதாத்யயனம் பண்ண முடியாது; வேதத்தின் ஸாங்க – உபாங்கங்கள் என்னும் சாஸ்த்ரங்களையும் படிக்க முடியாது; காம்யோபநயனம் என்றால்கூட ஐந்து வயஸுக்கு முன்னால் போட முடியாது- என்பதால்தான் சாஸ்த்ரோக்தமாகவே எல்லாம் நடத்திக் காட்ட நினைத்த ஆசார்யாள் ஐந்துக்குள் தேச பாஷை, தேவ பாஷை ஆகியவற்றின் ‘க்ராமர்’, காவ்யம் ஆகியவற்றை மட்டும் படித்து, சாஸ்த்ரங்களை ஐந்துக்கப்புறம் என்று ‘போஸ்ட் போன்’ பண்ணினார்.

‘பூணூல் போடுவதற்கு முந்தியே காவ்ய – நாடகாதிகள் ஸகலமும் படித்து க்ரஹித்துக் கொண்ட பெருமை ஆசார்யாள் ஒருத்தருக்குத்தான் உண்டு’ என்று சொன்னால் தேவலை போல் இருந்தாலும், உள்ளே இன்னொருத்தர் நினைவு நிமிண்டிக்கொண்டே இருக்கிறது! அதனால் அவர் யாரென்று சொல்கிறேன். வேறே யாரோ சொல்லாமல் அந்த ஒருவரே தமக்குப் பூணூல் போடுவதற்கு முன்பே இருந்த புலமையைக் குறிப்பிட்டு எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

அவர் பேர் ராஜசூடாமணி தீக்ஷிதர். முந்நூற்றைம்பது, நானூறு வருஷம் முன்னால் இருந்தவர். அப்பைய தீக்ஷிதரின் மைத்துனர் (மனைவியின் உடன்பிறந்தவர்) . இவர் உபநயனத்திற்கு முந்தியே காவ்யங்கள் படித்தது மட்டுமில்லாமல் படைத்தும் விட்டாரென்று தெரிகிறது! “கமலிநீ கலஹம்ஸம்” என்று அவர் எழுதியுள்ள நாடகத்தில் “ப்ரஹ்மாவின் ஒரு பத்னியான காயத்ரி என்னை வந்தடைவதற்கு முன்னேயே அதாவது, உபநயனம் ஆவதற்கு முற்பட்டே — அவருடைய இன்னொரு பத்னியான ஸரஸ்வதி என்னிடம் வந்து சேர்ந்துவிட்டாள் (காவியப் புலமை ஏற்பட்டுவிட்டது) ” என்று சொல்லியிருக்கிறார்!

அதற்குரிய பாலப்பருவத்திலேயே பூணூல் போட்டுக் கொண்டு காயத்ரி மஹிமையாலேயே கார்யமெல்லாம் செய்ததாகக் காட்டவேண்டுமென்றே ஆசார்யாளும் ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளும், உபநயன ஸம்ஸ்காரமான பிறகுதான் அவதார கார்யங்களை விசேஷமாகப் பண்ணினார்கள். நமக்குப் பாடமாகவே அப்படிப் பண்ணியது. பர மதங்களை நிராகரணம் பண்ணி ஸநாதன தர்மத்தை நிலை நாட்டியதே இருவரும் செய்த அவதாரப்பணி. அதனால் இப்போதும் நாம் ‘கன்வர்ஷன்’ நடக்கிறதே என்று கணடனக் கூட்டம் போடுவது, கான்ஃபரன்ஸ் நடத்துவது, முற்றினால் பதிலுக்கு அடி – உதை என்று கிளம்புவது எல்லாவற்றையும்விட முக்யமாக, முதலாவதாக, நம் பசங்களுக்கெல்லாம் எட்டு வயஸில் தப்பாமல் பூணூலை மாட்டி, தாஜா கீஜா பண்ணியாவது தினம் ஸஹஸ்ராவ்ருத்தி ஜபம் பண்ணவைத்து விட்டால் போதும் – மந்த்ர சக்தியில் மதாந்தரங்கள் எல்லாம் ஓடிப்போய்விடும்! குழந்தைகள் கொஞ்ச நாள் பண்ண ஆரம்பித்துவிட்டால் போதும், காயத்ரி, அவளே, அதுகளைப் பிடித்துக் கொண்டுவிடுவாள். நாம் தாஜா பண்ணாமலும், அல்லது மிரட்டி உருட்டிக் கம்பெல் பண்ணாமலும் அதுகளாகவே ப்ரியமாகப் பண்ண ஆரம்பித்துவிடும்.

தம்மிடமுள்ள ஒரு பெரிய நிதியை ப்ரயோஜனம் பண்ணிக்கொள்ளாமல் வீணாகப் போகிறோமே [‘வீணா ஆஆஆப் போறோமே!’ என்று எல்லையில்லாத அங்கலாய்ப்புடன் கூறுகிறார்கள்] என்பதால்தான் முட்டிக் கொள்வது. ஆசார்யாள் சரித்ரம் கேட்பதற்கு இதைவிட நாம் செய்யக்கூடியது இல்லை.


1 இது பிராமணருக்கான விதி. க்ஷத்ரியருக்கான காலகட்டம் 11-22 ; வைசியருக்கு 12-24.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அதிமேதைக் குழந்தை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அனைத்து சாஸ்திர அறிவும், அனைத்தும் அடங்கும் அத்வைதமும்
Next