அனைத்து சாஸ்திர அறிவும், அனைத்தும் அடங்கும் அத்வைதமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மூன்று வருஷத்துக்குள் ஸாங்கோபாங்கம் வித்யாப்யாஸம் பூர்த்தி பண்ணிவிட்டார். உபவேதங்கள், இன்னும் பாக்கியுள்ள எல்லா சாஸ்த்ரங்களும் படித்துவிட்டார்!1 ஆசார்யாள் அதி விரைவில் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுத் தேர்ந்ததைப் பற்றி ஒரு ச்லோகம் இருக்கிறது:

ஆந்வீக்ஷிக்யைக்ஷி தந்த்ரே பரிசிதிரதுலா காபிலே கா(அ)பி லேபே

பீதம் பாதாஞ்ஜலாம்ப: பரமபி விதிதம் பாட்ட கட்டார்த்த-தத்த்வம் |

யத்-தை: ஸெளக்யம் ததஸ்யாந்தரபவத்-அமலாத்வைத-

வித்யா ஸுகே(அ)ஸ்மிந் கூபே யோ(அ)ர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே ஹந்த நாந்தர்-பவேத்-கிம் 2 ||

ஆன்வீக்ஷிகி என்பது ராஜய நிர்வாஹத்தைச் சொல்லும் சாஸ்த்ரம்3. ‘ஆன்வீக்ஷிகி-ஐக்ஷி’ என்பதற்கு அந்த சாஸ்த்ரத்தைக் கண்ணால் பார்த்த மாத்ரத்தில் தமதாக்கிக் கொண்டுவிட்டாரென்று அர்த்தம். ‘ஈக்ஷ்’ என்றால் பார்ப்பது. ‘ஐக்ஷி’: பார்ப்பதினால், பார்த்த மாத்ரத்தில்.

அப்புறம் கபிலர் செய்த சாஸ்த்ரம். ‘காபிலே தந்த்ரே’ என்று வருவது. அதுதான் ஸாங்க்ய சாஸ்த்ரம். அதிலும் ஈடிணையில்லாத பரி(ச்)சயம் பெற்றார்: ‘பரிசிதி: அதுலா லேபே’. பாஷ்யத்தில் மீமாம்ஸைக்கு அடுத்தபடியாக ஆசார்யாள் திட்டியது அதைத்தான்! மாற்று ஸித்தாந்தங்களையும் கசடறக் கற்றே கண்டனம் பண்ண வேண்டுமாதலால் அப்படிப்பட்டவற்றையும் ஆசார்யாள் போன்றவர்கள் deep-ஆகப் படித்திருக்கிறார்கள். அதுவுமன்னியில் மாற்று ஸித்தாந்தம் என்பவற்றிலும்கூட எல்லாமே கண்டனத்துக்குரியது என்று வைத்துவிடாமல் நல்லதை நல்லதென்று ஒப்புக்கொண்டு பெரியவர்கள் எடுத்துக்கொள்வார்கள். இப்படி ஸாங்க்யம், மீமாம்ஸை எல்லாவற்றிலும் உண்டு. அதற்காகவும் ஆழப் படிப்பது. வித்யா ஸம்பாதனம் என்று வரும்போது bias (பக்ஷபாதம்) இல்லாமல், “களவும் கற்று மற” என்றபடி எல்லாம் தெரிந்து கொள்வதே நம் பூர்விகர் வழி.

இதனால்தான் அத்தனை ஒதுக்குப்புறத்தில் வைதிக ஸம்ப்ரதாயத்தையே அநுஸரித்துவந்த மலையாளத்திலும் இந்த சாஸ்த்ரங்கள் தெரிய வந்து குருகுலத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்! அடியோடு தெரிய வேண்டாத எதிர்க்கட்சி என்று எதையும் வைத்துவிடாமல் திறந்த மனப்பான்மையோடு வித்யையை அணுகியது நம் புராதனப் பண்பாட்டில் மிகவும் பெருமைக்குரிய ஒரு அம்சம்… ஆசார்யாள் ஸகல சாஸ்த்ரங்களையும் கற்றுக்கொண்டதில் பாக்கி பார்க்கலாம்.

“பீதம் பாதஞ்ஜலாம்ப:” என்றால் பதஞ்ஜலியின் யோக சாஸ்த்ரத்தை தீர்த்தம் குடிக்கிறதுபோல அத்தனை ‘ஈஸி’யாக தமக்குள்ளே அனுப்பிவிட்டார் என்று அர்த்தம்.

“பாட்ட கட்டார்த்த-தத்த்வம்”: குமாரில பட்டர் செய்ததான “பாட்ட சாஸ்த்ரம்” என்னும் பூர்வ மீமாம்ஸை. அதையும் ஒரு தீர்த்த கட்டத்தை லேசாகத் தாண்டிப் போகிற மாதிரி- ஆஞ்ஜநேயர் ஸமுத்ரம் தாண்டின மாதிரி-தாண்டிவிட்டார். ‘தரோ’வாகத் தெரிந்துகொண்டு விட்டார்: “பரமபி விதிதம்”.

ஆசார்ய பாஷ்யங்களைப் பார்த்து அறிஞருலகமெல்லாம், “அதெப்படி இத்தனை சாஸ்த்ரங்களில் பாரங்கதராக இருந்திருக்கிறார்! இத்தனை ‘கொடேஷன்’ எந்தெந்தப் புஸ்தகங்களிலிருந்தோ கொடுத்திருக்கிறாரே!” என்று ஆச்சர்யப்படுகிறது. இங்கே சொல்லியிருப்பது அதிசயோக்தியே இல்லை. எந்த மதஸ்தரானாலும் தத்வத்தை ஆராய்கிறவர்கள், பின்னாலே ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, ஆசார்யாளின் புஸ்தகங்களைத்தான் எடுத்துப் போட்டுக்கொண்டு பார்க்கிறார்கள். இன்றைக்கும் லோகம் முழுவதும் ஃபிலாஃஸபர்கள் நம்முடைய ஆத்ம சாஸ்த்ரமென்றால் ஆசார்யாளைத்தான் முதலில் பார்ப்பது, ஆழ்ந்து பார்ப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அஹிம்ஸை, கருணை, ஸமத்வம் எல்லாம் பௌத்தம் முதலிய மதங்களில் தான் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவற்றைத் தழுவியவர்களில்கூட மஹா மேதாவிகளாக இருப்பவர்கள் தத்வம் என்று வந்தால் ஆசார்யாளின் க்ரந்தங்களைப் பார்த்தே தலைமேல் வைத்துக்கொண்டு ஸந்தோஷப்படுகிறார்கள். ஆகையினால் அவருடைய கூர்ந்த அறிவை, பரந்த அறிவைப் பற்றி எத்தனை சொன்னாலும் யதார்த்தமன்றி வேறில்லை.

இப்படி ஆசார்யாள் ஆன்வீக்ஷிகீ, ஸாங்க்யம், யோகம், மீமாம்ஸை — இந்த நாலு மட்டுமில்லை, ‘இவை முதலான ஸகல சாஸ்த்ரங்களையும்’ என்று அர்த்தம் – இப்படி எல்லா ஸித்தாந்தங்களையும் கற்றுக்கொண்டு விட்டாரானாலும், இவை அவருடைய ஆத்மார்த்தமான இஷ்ட சாஸ்த்ரங்களாக இல்லை. இவற்றின் கொள்கைகளை அந்தரங்க பூர்வமாக அவர் அங்கீகரித்துவிடவில்லை. ‘எல்லாம் தெரிந்த ஸர்வஜ்ஞனாக இருந்து கொண்டு, அத்வைதத்தைச் சொன்னாலே அதை லோகம் ஏற்றுக்கொள்ளும். இல்லாவிட்டால் தனக்குத் தெரிந்த ஒரு ஸித்தாந்தத்தை மட்டும் அதுவே ஸத்யம் என்று வீம்பாக ஸ்தாபிக்கப் பார்ப்பதாகத் தோன்றும். அதற்காகவே மற்ற சாஸ்த்ரங்களையும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்’ என்பதற்காகத்தான் அவர் இதர ஸித்தாந்தங்களையும் படித்தது. அவச்யம் நேர்ந்ததாலேயே படித்தாரேயன்றி, அவற்றில் பற்று வைத்து இல்லை. பின் அவருக்கு எதில் ஆத்மார்த்தமான பற்றுதல் இருந்தது?

யத்தை: ஸெளக்யம் ததஸ்யாந்தர பவதமலாத்வைத வித்யாஸுகே(அ)ஸ்மின்

“அமல அத்வைத ஸுகே”: கொஞ்சங்கூட மலம் – அழுக்கு, தோஷம், குற்றம் குறை – இல்லாமல் பரம ஸுகமாக, நித்யஸுகமாக இருப்பது எது என்றால் அது அத்வைதம்தான். ஆசைதான் அழுக்கு. மனஸ் உள்ள மட்டும் ஆசை இருக்கத்தான் இருக்கும். உசந்த பக்தியிலுங்கூட, ‘ஸ்வாமியோடு சேரணும், கொஞ்சணும்’ என்று ஆசை இருக்கத்தான் செய்யும். எத்தனை உசந்த பக்தியானாலும் அதைப் பண்ண மனஸ் இருந்துதான் ஆகணும்; ஆனபடியால் ஆசை இருந்துதான் தீரும். ஸத்ய ஸத்யமாக, ‘ஈச்வரன் வேறில்லை, நாம் வேறில்லை’ என்று அத்வைதமாக ஆகிறபோதுதான் மனஸ் இல்லை; ஆசை இல்லை வேறாக எதுவுமில்லாதபோது எதனிடம் ஆசை வைப்பது? அதனால் ஆசை என்ற அழுக்கு, அரிப்பு இல்லாமல், ஸுகம் என்றால் அதுதான் ஸுகம் என்னும்படியாக இருப்பது அத்வைதம் ஒன்றில்தான் – “அமல அத்வைத வித்யா ஸுகே.” “ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” என்று அதனால்தான் திருமூலர் பாடினார்.

மீமாம்ஸையில் கர்மாநுஷ்டானம் செய்யவேண்டுமென்ற ஆசை, ஸ்வர்க்கம் போகணும் என்று ஆசை. இப்படி ஒவ்வொரு தத்வத்திலும் ஏதாவது ஆசை அழுக்கு ஈஷிக் கொள்ளத்தான் செய்யும்.

அந்தத் தத்வங்களை அநுஸந்தானம் பண்ணி அநுபவிப்பதிலும் ஓரொருவிதமான ஸந்தோஷம் இருக்கவே இருக்கும். அப்படி இல்லாமலா ஒவ்வொரு ஸித்தாந்தத்தையும் பல பேர் ஏற்றுக்கொண்டு பின்பற்றியிருப்பது?

விசேஷமென்னவென்றால் அப்படி மற்ற ஸித்தாந்தங்களால் பெறக்கூடிய ஆனந்தங்களெல்லாமும் அத்வைதானந்த்திற்குள்ளேயே அடக்கம்தான்! அத்தனையுமாகத் தோன்றுவது ஒரே ப்ரஹ்மம். அதைத் தவிர வேறில்லை. அப்படியானால் அத்வைதமாக ஒருவன் ப்ரஹமானந்தம் பெறுகிறானென்றால் அத்தனை வித ஆனந்தங்களும் அவனுக்குள் அடங்கிவிடும்தானே?

மற்ற சாஸ்தரங்களினால் கிடைக்கக்கூடிய ஸெளகயங்களையெல்லாம் உள்ளடக்கியதான அமலமான அத்வைத சாஸ்த்ரத்தின் பரம ஸெளக்யத்தையே ஆசார்யாள் தமக்குள்ளே அடக்கிக் கொண்டிருந்தார். தேவையை முன்னிட்டுப் வேறே எத்தனை பாடம் அவர் படித்தாலும் அவருக்கு ஆத்மார்த்தமான இஷ்ட பாடமாயிருந்தது, மற்ற பாடங்களின் லக்ஷ்யங்களையெல்லாமும் தனக்குள் கொண்டதான அத்வைத வித்யைதான்! “யத்-தை: ஸெளக்யம் தத் அஸ்ய அந்தர் அபவத் அமல அத்வைத வித்யா ஸுகே அஸ்மின் .” குருகுலவாஸம் பண்ணி வித்யாப்யாஸம் செய்துகொண்டிருக்கும் குழந்தையாசார்யாளின் ஹ்ருதயத்துக்குள்ளே அந்த அத்வைத ஸுகமே நிறைந்திருந்தது.

இதர வித்யைகளின் ஸுகங்களெல்லாம் அத்வைத ஸுகத்திலேயே கிடைத்துவிடுகிறது என்பதற்கு (ச்லோகத்தின் கடைசி வரியில்) உதாஹரணம் கொடுத்திருக்கிறது: கூபே யோ (அ)ர்த்த: ஸ தீர்த்தே ஸுபயஸி விததே ஹந்த ந (அ)ந்தர்-பவேத் கிம் ?


1 வேதங்கள் நான்கு. அவற்றின் அங்கங்கள் சிக்ஷை (உச்சரிப்பு சாஸ்திரம்), சந்தஸ் (சந்த முறைமைகள்), வியாகரணம், நிருக்தம் (பதங்களின் அர்த்த நிர்ணயம்), ஜ்யோதிஷம், கல்பம் (சடங்குகளின் விவரணம்) எனும் ஆறு, உபாங்கங்கள் மீமாம்ஸை, ந்யாய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், புராணம் எனும் நான்கு. இப்பதிநான்கும் “ஸாங்கோபாங்க வித்யை” என்பதில் அடங்கும். உபவேதங்கள் என்பன ஆயர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம் (இசை-நடன-நாடகம் முதலியன), அர்த்த சாஸ்திரம் (அரசியல்) என்னும் நான்கு. முன்கூறிய பதினான்கோடு இவற்றைச் சேர்த்து இப் பதினெட்டையும் வித்யா ஸ்தானங்கள் என்பர்.

2 மாதவீய சங்கர விஜயம் IV. 20

3 ‘ஆன்வீக்ஷிகி’ என்பது தர்க்கம் அல்லது ஆத்மவித்யை என்று ஆப்தேயின் அகராதி கூறுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பால்ய உபநயன சிறப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  புரியாத ஸ்லோகம் புரிந்தது!
Next